Friday, February 12, 2016

சிமோனிலா கிரஸ்த்ரா

சிமோனிலா கிரஸ்தா வாசித்தேன். வளரும் அல்லது வளர்ந்துவிட்ட எழுத்தாளர் மாதவன் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. இணைய இதழ்களில் வெளிவந்த மாதவனின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார்கள். பெயரிடப்படாத சிறுகதை என்கிற கதை மட்டும் சிறுகதைத் தொகுப்பிற்காகப் புதிதாக எழுதியிருப்பார் போலும். பார்வதி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இரண்டாவது படைப்பான இந்தச் சிறுகதைத் தொகுப்பு நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.

மாதவனின் எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடித்தது அவர் மொழியைக் கையாளும் விதம். மிக இயல்பாகவும், எளிமையாகவும் அதே சமயம் ஆர்வமூட்டும் விதமாகவும் இருக்கும் அவரது மொழிநடை அடிக்கடி என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒன்றிரண்டு கதைகளை நான் ஏற்கெனவே வாசித்திருந்தாலும் மொத்தமுள்ள 15 கதைகளில் 13 கதைகள் எனக்குப் புதியவை. ஏற்கெனவே வாசித்த இரண்டு கதைகளையும் மறுபடியும் படித்துப்பார்த்தேன். அதே சுவாரஸ்யம். முடிவு தெரிந்தும் திரும்பவும் பார்க்கும் படத்தினைப் போல அதே வசீகரத்துடன் இழுத்துச் செல்லும் அந்த மொழிநடைக்காகவே மறுபடியும் படித்தேன்.

சிறுகதைகள் பல்வேறு தளங்களில், வகைமைகளில் எழுதப்படுகின்றன. முன்னுரையில் வா.மு.கோமு குறிப்பிட்டிருந்ததைப் போலவே கிட்டத்தட்ட பதினைந்து கதைகளுமே வெவ்வேறு தளங்களை மையமாகக் கொண்டவையாக எனக்குத் தோன்றியது. ஒவ்வொரு வகையிலுமே நிச்சயம் பாராட்டத்தக்க கதையாக அந்தக் கதைகள் அமைந்திருப்பதாகவே தோன்றியது.

ஒரு பழங்கதை, கருக்கல், பெயரிடப்படாத சிறுகதை, சிமோனிலா கிரஸ்த்ரா, ஜெமியின் காதலன் ஆகிய கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். நிச்சயம் சலிப்பினைத் தராதவையாக இருக்கும். என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சிறுகதைகளில் ஒரு பழங்கதையும், பெயரிடப்படாத கதையும் எப்பொழுதும் நினைவிலிருக்கும்.

கருக்கல் கதையில் வரும் எளிய மனிதர்களும், அவர்களின் அன்றாடத் தேவைகளுக்கான பிரச்சினைகளும், சட்டென வெளியேற முடியாத இயல் வாழ்க்கையின் கிடுக்கிப் பிடியும், அதனை எதிர்கொள்ளும் மனிதர்களின் கையறு மனநிலையும், அதில் மாட்டிக் கொண்டாலும் அன்பானவர்களுக்காக எத்தகைய துன்பத்தையும் தாங்கிக் கொள்ளலாம் என்கிற செல்வியின் மன நிலையும் அன்பாலான உலகத்தைக் காட்டுகிறது.

சம்சாரி மற்றும் கலந்துரையாடல் ஆகிய கதைகள் கதைத் தொகுப்பிற்கான திருஷ்டிக் கழிப்பிற்காக சேர்க்கப்பட்டிருக்கலாம் என்பது என் அனுமானம். மீதமுள்ள 13 கதைகளும் நிச்சயம் ஒரு அட்டகாசமான வாசிப்பிற்கானவை என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக கதை சொல்லல் முறையில் புதுப்புது வடிவங்களை முயற்சித்து, அதில் வாசிப்பாளர்களை ’அட’ போட வைக்கும் மாதவனின் எழுத்து பாராட்டப்பட வேண்டியது.

ஏற்கெனவே படிக்காதவர்கள் இந்த (சிமோனிலா கிரஸ்த்ரா ) இணைப்பில்  புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம். ஏற்கெனவே படித்தவர்கள் மறுபடியும் வாங்கிப் படிக்கலாம். அல்லது உங்களது நண்பர்களுக்குப் பரிசாக அனுப்பலாம். ஒரு நல்ல எழுத்தாளரை உங்களின் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்திய மகிழ்ச்சி உங்களுக்கும், ஒரு நல்ல எழுத்தைப் படித்த மகிழ்ச்சி உங்கள் நண்பர்களுக்கும் ஏற்படும் என்பதை மிகத் தைரியமாகவே, மிகு மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன்.