Showing posts with label மரண மொக்கை. Show all posts
Showing posts with label மரண மொக்கை. Show all posts

Thursday, June 19, 2014

கற்பூர வாசனை தெரிந்த கழுதை!


முன்னொரு காலத்தில் சவகர் என்ற குதிரை வியாபாரி வாழ்ந்துவந்தார். அரசன் முதல் ஆண்டி வரை இவரிடம் தான் குதிரைகள் வாங்கிவந்தனர். ஆண்டி எதற்காக குதிரைகளை வாங்குகிறார் என்று நாம் இப்பொழுது ஆராய வேண்டாம். அது நம் கதைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்று. உலகத் தரமான குதிரைகள் இவரிடம் கிடைக்கும் என்பது நமீதா வந்து சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரிந்தது.

சவகர் எப்போதும் சற்று வித்தியாசமாக எதையாவது யோசிக்கும் குணமுடையவர். குதிரை வியாபாரம் மட்டும் செய்துவந்த சவகருக்கு திடீரென ஒருநாள் கழுதை வியாபாரம் செய்யலாம் என்று தோன்றிற்று. அசரீரியெல்லாம் வந்து சொல்லவில்லை. தானாகவே தோன்றியது. கழுதை வியாபாரம் ஒன்றும் குதிரை வியாபாரத்தைப் போல எளிமையானதல்ல. நாட்டில் பாதி பேருக்கு கழுதை என்றாலே சுத்தமாகப் பிடிக்காது. இருந்தாலும் தன் மனதில் ஒரு யோசனை தோன்றிவிட்டால் அவரே அவர் பேச்சைக் கேட்கமாட்டார்.அதனால் எப்படியேனும் கழுதை வியாபாரம் செய்தே தீருவதென முடிவெடுத்தார்.

கழுதை வியாபாரத்தை குதிரைகளை வைத்துச் செய்யமுடியாது. அது என்ன தோசை மாவா ? தோசைக்கு என்று மாவரைத்துவிட்டு இட்லி சுடுவதற்கு ? அதனால் கழுதைகளை வாங்கித்தான் கழுதை வியாபாரம் செய்யமுடியும் என்று நான் சொல்லாமலே அவருக்குத் தெரிந்திருந்தது.உடனேயே கழுதை வாங்குவதற்காகப் புறப்பட்டுவிட்டார். ஊர் ஊராகச் கழுதைகள் எங்கு கிடைக்கும், எப்படிப்பட்ட கழுதைகளை நல்ல விலைக்கு விற்கலாம் என்பதைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஒரு ஊரில் கற்பூர வாசனை தெரிந்த அதிசயக் கழுதை ஒன்றைப் பற்றிய தகவல் கிடைத்தது.உடனடியாக அதை எப்படியாவது வாங்கிவிட வேண்டுமென முடிவெடுத்து அதிக விலை கொடுத்து அந்தக் கழுதையை வாங்கிவந்தார்.

தன் வீட்டிற்கு வந்ததும் அதற்கு கற்பூரம் ஏற்றி திருஷ்டி சுற்றிப்போட்டார். பெரும்பாலும் அவர் வீட்டிற்கு எதை வாங்கிவந்தாலும் இவ்வாறு செய்வது வழக்கம். ஏன் திருஷ்டி பொம்மைக்குக் கூட திருஷ்டி சுற்றிவிட்டுத்தான் வீட்டுக்குள் அனுமதிப்பார்.ஆனால் இந்தமுறை வீட்டிற்கு வந்திருப்பது கற்பூர வாசனை தெரிந்த கழுதையாயிற்றே. மிக்க சந்தோசத்துடனேயே திருஷ்டி சுற்றினார். ஆனால் அவரின் துரதிர்ஷ்டம் கற்பூரத்தைப் பற்றவைத்ததும் அந்தக் கழுதை பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. என்னதான் கற்பூர வாசனையைப் பற்றித் தெரிந்தாலும் அதை எதற்குப் பயன்படுத்துவார்கள் என்றெல்லாம் அதற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லையே!ஓடிய கழுதையை மிகச் சிரமப்பட்டுத்தான் பிடித்துவந்தார்கள். 

அந்தக் கழுதையை வாங்கியதிலிருந்து சவகருக்கு ஒருவித செருக்கு அவன் மனதில் ஏற்பட்டது. ஊரிலேயே ஏன் உலகத்திலேயே யாரிடமும் இல்லாத அதிசயப் பொருள் தன்னிடம் உள்ளது என்று நினைத்து நினைத்துச் சந்தோசப்பட்டான். அவன் சந்தோசம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை.அந்தக் கழுதைக்காக தன்னிடமிருந்த சொத்துக்களை எல்லாம் விற்று அதற்குத் தேவையானவற்றை வாங்கிக்கொடுத்தான். தினமும் காலையில் இட்லி வாங்கிக்கொடுத்தான். அது இட்லியைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. மதியம் பார்சல் சாப்பாடு வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. இரவில் புரோட்டா, பூரி என்று வாங்கிக்கொடுத்தான். அது அதைச் சுற்றியிருந்த காகிதத்தை மட்டும் தின்றது. ஆக மொத்தத்தில் அது காகிதத்தை மட்டுமே தின்றது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக சுவையான உணவுப் பொருட்களை எல்லாம் அது கேட்கவேயில்லை. விடுவானா சவகர் ? உடனே அதை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று “ கற்பூர வாசனை தெரிந்த கழுதை ஒன்று காகிதத்தையே தின்கிறது, அதனைக் காகிதம் தின்னாதவாறு மருந்தொன்று கொடுங்கள்” என்று கேட்டான். மருத்துவருக்கு ஆச்சர்யம்; தனது இருபத்தைந்து கால மருத்துவச் சேவையில் இப்படியொரு கழுதையைப் பார்த்ததேயில்லையே என்றவாரு அதைப் பார்க்கச் சென்றார். உண்மையில் அது கழுதையைப் போலவே இருந்தது. கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்பதற்காக அதற்குக் கொம்பெல்லாம் முளைத்திருக்கவில்லை.

பேப்பர் தின்னாமல் இருப்பதற்காக ஒரு பேப்பரை எடுத்து சில மருந்துகளின் பெயரை எழுதினார். ஆனால் மருத்துவரின் கையிலிருந்த குறிப்பேட்டினைப் பிடுங்கி ஒரு முழுங்காக முழுங்கிவிட்டது கழுதை. மருத்துவர் இஞ்சி தின்ன குரங்கைப் போல முழித்துக்கொண்டிருந்தார். அதென்ன இஞ்சி தின்ன குரங்கு? குரங்குகளைப் பற்றி கழுதைக் கதையில் சொல்லவேண்டாமென்பதால் வேறொரு கதையில் பின்னர் சொல்கிறேன். முதலில் நாம் இந்தக் கதையை முடிப்போம். டாக்டரின் குறிப்பேட்டை முழுங்கியதும் டாக்டருக்கு கடுங்கோபம் ஏற்பட்டது.சவகருக்கும் கடுங்கோபம் ஏற்பட்டது. ஆனால் சவருக்கு டாக்டர் மேல்தான் கோபம் ஏற்பட்டது. ”பேப்பர் தின்பதை நிறுத்துவதற்காக இவரிடம் கூட்டிவந்தால் இவரே பேப்பரைத் தருகிறாரே ?” என்று நினைத்துக்கொண்டு “ நீயெல்லாம் என்னையா பேப்பர் விக்குற ? “ என்று கேட்கவேண்டும் போல இருந்தது. மன்னிக்கவும், பேப்பர் பேப்பர் என்று எழுதி எனக்கே அப்படிக் கேக்கவேண்டும் போலத்தான் உள்ளது. அவன் மட்டும் எம்மாத்திரம் ?

இவர்கள் இப்படிக் கோபப்பட்டுக்கொண்டிருந்த போது கழுதை மறுபடியும் பிடுங்கிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. ஆனால் இந்த முறை அது யார் கையிலும் சிக்கவில்லை. ஒருவேளை கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்ற பெருமை அதற்கும் வந்துவிட்டதோ என்னவோ ? சவகர் இத்தனை நாட்களாகக் காட்டிய கருணையை சிறிதும் மதிக்காமல் சென்றுவிட்டது இந்த எருமை. கழுதையைக் கழுதை என்று எப்படித் திட்டுவது? அதனால்தான் எருமை என்று திட்டுகிறேன்.

இப்படிப் பிடுங்கிக்கொண்டு ஓடிய கழுதை ஒரு அழகான காட்டில் நுழைந்தது. அதென்ன அழகான காடு, அசிங்கமான காடு ? காடுகளுக்கிடையில் அழகிப்போட்டியா நடக்கிறது ? சரி விடுங்கள், இதிகாச காலத்திலிருந்து இதையே எழுதிப்பழகிவிட்டோம்.

அப்படி அழகான காட்டுக்குள் நுழைந்த நமது நாயகனான கற்பூர வாசனை தெரிந்த கழுதை ( வெறும் கழுதை என்று எழுதினால் எங்கே மறந்துவிடுவோமோ என்பதற்காக ஒவ்வொருமுறையும் கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்றே எழுதித் தொலைக்கவேண்டியுள்ளது ) முதலில் அங்கிருந்த ஒரு ஆட்டிடம் சென்று தான் அதிசயமான விலங்கு என்றும் தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்றும் கூறிக்கொண்டது. ஆனால் ஆடோ கழுதையை ஏறெடுத்தும் பார்க்காமல் அங்கிருந்த சில நுனிப்புல்லை மட்டும் ”வரக் வரக் “ என்று கடித்துக்கொண்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் போய்விட்டது. ஒருவேளை ஆட்டிற்கு காதில் ஏதேனும் கோளாறோ என்னவோ ?

ஆட்டின் இந்தச் செயலால் மனம் நொந்த கழுதை அடுத்து மானிடம் சென்று தனக்குக் கற்பூர வாசனை தெரியும் என்று கூறிக்கொண்டது. மானிற்கும் கற்பூரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இங்கேயும் அசிங்கப்பட்டது கழுதை. அடுத்து யானையிடம். அதற்கும் தெரியவில்லை.

இறுதியாகச் சிங்கத்திடம் சென்று தனக்கு கற்பூர வாசனை தெரியும் என்றும் எனவே தான் ஒரு அற்புத விலங்கென்றும் தான் தான் இனிமேல் இந்தக் காட்டிற்கே ராஜா என்றும் கூறியது. சிறிது நேரம் உட்கார்ந்து யோசித்தது சிங்கம். உண்மையில் அதற்கு ராஜா என்பதின் அர்த்தமே தெரியாது. சில நாட்கள் மனிதர்களுக்கு மத்தியில் வாழ்ந்ததால் கழுதைக்கு மட்டும் ராஜா என்பதின் அர்த்தம் தெரிந்திருந்தது. அதுமட்டுமல்லாமல் காட்டின் ராஜா சிங்கம் என்பதால்தான் சில மனிதர்கள் தங்களை “நான் சிங்கம்டா” என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்று அதற்கு ஞாபகத்தில் வந்தது. எனவே தான் காட்டிற்கு ராஜாவாகிவிட்டால் அதே மனிதர்கள் “ நான் கழுதைடா” என்று சொல்லிக்கொள்வார்களல்லவா ? அதற்காகத்தான் இத்தனை போராட்டங்கள்!

சிங்கம் யோசித்து முடித்ததும் தனக்கு இந்தக் காட்டை ஆளும் பாக்கியம் கிடைக்கும் என்றும், ரஜினியே கூட “ பன்னிங்கதான் கூட்டமா வரும் , கழுதை கண்ணமூடிட்டுத்தான் வரும் “ என்று பஞ்ச் வசனம் பேசுவார் என்றும் நினைத்து நினைத்துப் புல்லரித்தது, பேப்பர் அரித்தது. ஆனால் நடந்தததோ வேறு. உண்மையில் சிங்கம் இதுவரையில் யோசிக்கவெல்லாம் இல்லை. அது தூங்கிக்கொண்டிருந்து. அதுமட்டுமல்லாமல் இரண்டு நாட்களாக எந்த இரையும் கிடைக்காமல் கோபத்தில் இருந்தது. கண் விழித்துப்பார்த்தால் எதிரில் கழுதை. அது கற்பூர வாசனை தெரிந்த கழுதை என்று அதற்கு எப்படித்தெரியும்? பாவம்! சடாரென ஓங்கி ஒரு அடி அடித்துக் கழுதையைக் கீழே தள்ளியது. கண்களில் பொறிதட்டக் கீழே விழுந்த கழுதைக்கு ஒன்று மட்டும் புரிந்தது. கழுதைக்கு மட்டுமல்ல வேறு எந்த விலங்கிற்கும் கற்பூர வாசனை தெரியாதென்பது!

Sunday, April 13, 2014

வங்கிகளும் ஏ.டி.எம் களும் தோன்றியது எப்படி? - வரலாற்றுத் தகவல்!

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னர் என்றோ, இரண்டு யுகங்களுக்கு முன்னர் என்றோ ஆரம்பிப்பதற்கு இதொன்றும் கட்டுக்கதை இல்லை. வரலாறு என்றாலே சுமார் என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமென்று யாராவது சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? அப்படிப் போட்டிருந்தால் போட்டுவிட்டுப் போகட்டுமே? நாம் என்றைக்குச் சட்டங்களைச் சட்டை செய்துள்ளோம்? துணியைச் சட்டை செய்வது தானே நமது வழக்கம்?

வரலாற்றுத் தகவல் என்றாலும் இது முற்றிலும் உண்மைக் கதை. வங்கிகளும், ஏ.டி.எம் செண்டர்களும் இல்லாத ஒரு நாட்டை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? முடிந்தால் கற்பனை செய்து பாருங்கள். சிரமம்தானே?

இன்றைய இயந்திர வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாறிவரும் பேங்குகளும், ஏ.டி.எம்களும் முதன் முதலில் எங்கே எப்படித் தோன்றின என்று தெரியுமா? தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள். தெரிந்தவர்களும் தொடர்ந்து படிக்கலாம். ஏனெனில் பேங்க்குகளும் ஏ.டி.எம்களும் உருவான வரலாறென்று நீங்கள் அறிந்திருப்பது அனைத்தும் கற்பனைக் கதைகள். இங்கே சொல்லியிருப்பவை மட்டுமே உண்மை.

கி.பி.1885 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 30 ஆம் நாள் நான், கமல் மற்றும் ரஜினி ( சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கமல், ரஜினி என்ற பெயரில் உங்கள் சித்தப்பாவோ, பெரியப்பாவோ இருந்தால் இவை அவர்களைக் குறிப்பன அல்ல) ஆகிய மூவரின் தவத்தினை மெச்சி இறைவன் எங்கள் கண் முன்னால் தோன்றினார். ஒவ்வொருவரையும் நலம் விசாரித்துவிட்டு வேண்டும் வரங்களைக் கேட்கச் சொன்னார்.

முதலில் கமலின் முறை. “எனக்கு ஒளிமயமான எதிர்காலம் வேண்டும்” என்று கேட்டார். உடனேயே அங்கொரு குண்டு பல்பு தோன்றியது. கமலைக் காணவில்லை.

ஓரிரு நொடிகளுக்குப் பின்னர்தான் எனக்கு விபரீதம் புரிந்தது. கடவுளை நோக்கி “ யோவ், என்னய்யா பண்ணிவச்சிருக்க?” என்று பல்பைச் சுட்டிக் கேட்டேன்.

தனக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பைப் பார்த்த கடவுளுக்கும் அதிர்ச்சி. தவறிழைத்தவர் போல நாக்கைக் கடித்துக் கொண்டு “ மந்திரத்த மாத்திச் சொல்லிட்டேன் போல” என்று கூறி மீண்டும் வேறொரு மந்திரத்தை உச்சரித்தார். இப்பொழுது குண்டு பல்பு, சி.எப்.எல் பல்பாக மாறியிருந்தது. ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது “குண்டு பல்பு அதிகமா கரண்ட இழுக்கும்னு பேசிக்கிறாங்க” என்றார் கடவுள். கொஞ்சம் தலை சுற்றுவது போலிருந்ததால் நான் எதுவும் பேசவில்லை. 

அடுத்து ரஜினியின் முறை. தன்னிடம் எந்நேரமும் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டுமென்று தனது வரத்தினைக் கேட்டார். உடனே எங்களைச் சுற்றிலும் சுவரும், ஒரு ஏ.டி.எம்.மெஷினும் தோன்றின. கடவுளுக்கும் சென்றாயனுக்கும் வித்தியாசம் இருக்க முடியாதென்று தோன்றியது. ஏ.டி.எம் மெஷினாக ரஜினி மாறியது குறித்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் கூடவே ஒரு குறும்புச் சிரிப்பும் ஏற்பட்டது. எவனோ ஒருவன் வந்து இந்த மெஷினில் இருக்கும் பணம் அத்தனையையும் எடுத்துவிடப் போகிறான், பிறகு அந்த மெஷினில் பணம் இல்லாமல் போய், கடவுளின் வரம் கேலிக்கூத்தாகப் போகிறதென்று நினைத்தேன். நான் நினைத்ததைக் கடவுளும் புரிந்து கொண்டிருப்பார் போலும். அவருக்கும் அதே குறும்புச் சிரிப்பு வந்தது. அதே சமயம் மண்டையோட்டுச் சின்னத்துடன் “மெஷின் ரிப்பேர், பணம் வராது” என்று எழுதப்பட்ட அட்டை எங்கிருந்தோ வந்து ஏ.டி.எம் மெஷினின் ஸ்கிரீனினை மூடியது.

இப்பொழுது கடவுள் என் பக்கமாகத் திரும்பினார். அடுத்த வரத்தினை நான் தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் என்னையும் கடவுளையும் தவிர அந்த அறையில் வேறு யாருமில்லை. என் நண்பர்களுக்கு நேர்ந்த கதியைக் கண்டு கதிகலங்கிப் போயிருந்த நானோ வரம் கேட்கும் ஆசையிலிருந்து முற்றிலும் மாறிப்போயிருந்தேன். கடவுள் இங்கிருந்து மறைந்தால் போதுமென்று தோன்றினாலும், எனது நண்பர்களுக்கு ஏற்பட்ட சோதனையை நினைத்துக் கண் கலங்கிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் தொண்டையைச் செருமியவாரே வேண்டும் வரத்தைக் கேட்கச் சொன்னார். ஏதோ பிளானிங்கில் இருப்பதாகவே தோன்றியது.

“இல்ல எனக்கு வரம் எதுவும் வேண்டாம்”

“நேரில் வந்துவிட்ட பிறகு வரம் கொடுக்காமல் போவது என் குல வழக்கத்திற்கு மாறானது. வேண்டும் வரத்தினைக் கேள் “

மேலும் மறுத்தால் கடவுள் கெட்ட வார்த்தைகளில் என்னை வசைபாடக் கூடுமோ என்ற அச்சத்தில் சிறிது யோசித்து “ அவுங்க ரண்டு பேருக்கும் கொடுத்த வரத்த திரும்ப எடுத்துட்டு அவுங்கள பழையபடி மாத்திடுங்க “ என்று எனது வரத்தினைக் கேட்டேன்.

கையோடு கொண்டுவந்திருந்த பில் (சைனா கம்பெனி) ஒன்றில் இருந்த “ ஒருமுறை விற்கப்பட்ட பொருள் திரும்ப ஏற்கப்படாது. வாங்கும் போதே பொருட்களைச் சோதனை செய்து வாங்கிச் செல்லவும்” என்பதைக் காட்டினார். எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். புரியாவிட்டாலும் ஒன்றும் பிரச்னையில்லை. இதை வைத்து டாக்டர் பட்டமா வாங்கப் போகிறீர்கள்?

எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. பின்னே, ஹோட்டலுக்குச் சென்று இட்லி இருக்குதா என்ற கேள்விக்கு தோசை, பூரி, புரோட்டா எல்லாம் இருக்குது சார். அதுவும் சாப்பிடற பொருள்தான் சார் என்றால் உங்களுக்குச் சிரிப்பா வரும் ? எனக்குக் கோபம்தான் வரும்.

கோபத்தைத் தாருமாறாகக் காட்டியிருக்கலாம்தான். ஆனால் என் நண்பர்களுக்காகப் பொறுமை காக்க வேண்டியிருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பின்னர் “அந்த மெஷின்ல இருக்கிற பணம் எனக்கு வேணும்” என்றேன். இப்படிக் கேட்டால் ரஜினியின் “எந்நேரமும் எங்கிட்ட பணம் இருந்துட்டே இருக்கனும்” என்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரம் ஓவர் ரூலாகி கடவுள் குழம்பிவிடுவார் என்று நினைத்தேன். அப்படி நேர்ந்தால் ஒருவேளை ரஜினியையும், கமலையும் அவர் பழைய நிலைக்கே மாற்றிவிடலாம் என்பது எனது எண்ணம்.

எனது நோக்கம் கடவுளுக்குப் புரிந்திருக்க வேண்டும்.  இந்தப் பத்தியிலிருந்து மேலாக எண்ணிக் கொண்டே போனால் சரியாக எட்டாவது பத்தியில் கடவுளுக்குத் தோன்றிய குறும்புச் சிரிப்பு இப்பொழுதும் தோன்றியது. உங்களுக்கு எட்டு ராசியான நம்பராக இல்லாவிட்டால் எண்ணிக்கையை ஒன்று என ஆரம்பிக்காமல் வேறு எண்ணில் ஆரம்பிக்கலாம்.

நான் கேட்ட வரத்தினை எனக்கு அளித்ததாகக் கூறிவிட்டுக் கையில் ஒரு ஏ.டி.எம்.கார்டினைக் கொடுத்து “இத வச்சு அந்த மெஷின்ல இருக்கிற பணத்த எடுத்துக்க” என்று கூறி அதிலிருந்து எப்படிப் பணமெடுப்பது என்பதையும் விளக்கிவிட்டு கிளம்புவதற்குத் தயாரானார்.

“ஒரு நிமிஷம் நில்லுங்க, நான் ஒருதடவ ட்ரையல் பார்த்துக்கறேன்” - மெஷினிலிருக்கும் எல்லாப் பணத்தையும் எடுத்துவிட்டு மீண்டும் கடவுளின் வரத்தை பொய்யாக்கும் எனது நோக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

நின்றார். 

அவர் கூறியபடியே ஏ.டி.எம்.கார்டினை மெஷினில் தேய்த்து எடுத்துவிட்டு, மெஷினில் மொத்தமாக எவ்வளவு பணம் இருக்கிறதென்று தெரிந்துகொண்டேன். ஏனெனில் அப்பொழுது வங்கிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் மெஷினில் எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்க்கும் நடைமுறை இருந்தது. இப்பொழுது அந்த வசதிதான் உங்கள் வங்கிக் கணக்கில் எத்தனை பணம் இருக்கிறதென்று பார்ப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது. அந்த மெஷினில் இருந்த அனைத்துப் பணத்தையும் எடுப்பதற்கான எனது எண்ட்ரியை அழுத்தினேன். உள்ளே “ச்சுர் ச்சுர் ச்சுர்” என்று சக்கரம் சுழல ஆரம்பித்தது. கடவுளுக்கு வயிற்றைக் கலக்கியிருக்க வேண்டும். அவரது முதல் வரம் தனது சாவினை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

அதுவரையிலும் குறும்புச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த கடவுள் திடீரென ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தார். அடுத்த கணமே மெஷின் தனது வேலையை நிறுத்திக் கொண்டு, பத்தாயிரம் ரூபாய் பணத்தினை மட்டும் வெளியே நீட்டியது. மறுமுறை நான் முயற்சித்த போது ” அடுத்த 24 மணி நேரத்திற்கு நீங்கள் பணம் எடுக்க முடியாது” என்ற சீட்டினைத் துப்பியது. நான் கடவுளைப் பார்த்தேன். அவர் எங்கள் ரூமுக்கு வெளியே புதிதாக முளைத்திருந்த வங்கிக் கிளையைப் பார்த்தார்.

”நான் கேட்டபடி எனக்கு அந்த மெஷின்ல இருக்கிற பணம் வேணும். நீங்க கொடுத்த வரம் என்னாச்சு?”

“உன் கைல இருக்கிற பணம் அந்த மெஷின்ல இருந்து வந்ததுதானே?”

“எனக்கு எல்லாப் பணமும் வேணும்”

“அத நீ பேங்க்ல தான் கேக்கணும். ஒரு நாளைக்கு இவ்ளோதான் எடுக்கனும்னு ரூல் வச்சிருப்பாங்க போல; எனக்கும் அவுங்களுக்கும் சம்பந்தம் இல்லை”

அவர் ஜெயித்துவிட்டதாகத் தோன்றியது. வெளியில் கிளம்பியவரிடம் கேட்பதற்கு மேலும் ஒரு கேள்வி பாக்கியிருந்தது.

“அது சரி, இப்போ நான் தினமும் வந்து பணத்த எடுத்துட்டுப் போயிட்டா கடைசில ஒரு நாள் இந்த மெஷின்ல இருக்கிற பணமெல்லாம் தீர்ந்திடுமே. அப்போ ரஜினிக்கு நீங்க கொடுத்த வரம் பொய்யாகாதா?”

“ அதுக்குத்தானே பேங்க்க உருவாக்கியிருக்கேன். இனி அவுங்க இந்த மெஷின்ல பணம் தீராம பார்த்துக்குவாங்க. இந்த மெஷின்ல தீர்ந்தாலும் இதே மாதிரி ஆயிரம் பேங்க்குகள், ஏ.டி.எம்னு ஜெராக்ஸ் எடுத்தாச்சு. அதனால அந்த வரத்துக்கு இனி சாவே கிடையாது. ” என்று கூறிவிட்டு மறைந்திருக்க வேண்டும். ஆனால் அன்று ஏனோ மறையவில்லை. நடந்தேதான் சென்றார்.

இப்படியாகத்தான் பேங்க்குகளும் ஏ.டி.எம்.களும் தோன்றின. எப்பொழுதேனும் நீங்கள் ஏ.டி.எம்.ற்குப் பணம் எடுப்பதற்காகச் சென்றால் என்னையும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரஜினி மற்றும் கமலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். அதுவே நீங்கள் எங்கள் தியாகத்திற்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.

Tuesday, December 17, 2013

இட்லியின் கதை!



சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருநூறு என்பது மிகச் சமீபமாக இருப்பதால் நானூறு என்று வைத்துக்கொள்வோம்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையின் வடக்குப் பக்கத்தில், இல்லை சென்னையின் வடக்குப் பக்கம் என்றால் இட்லியைக் கண்டுபிடித்தது ஆந்திராகாரர்கள் என்ற காப்பி ரைட் பிரச்சினை வரலாம். அதனால் மதுரையின் வடக்கே என்று வைத்துக்கொள்வோம். மதுரையின் வடக்கே சரியாக எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியாக இருக்கக் கூடிய ஒரு இடத்தில் இரண்டு குறுநில மன்னர்களுக்கிடையே ஒரு மாபெரும் யுத்தம் நடந்தது. இருவரின் படைகளும் சம பலம் வாய்ந்தவையாக இருந்தன.

யுத்தத்தில் மிகைப்படுத்தப்பட்ட தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்றால் அது மிகையல்ல. யானைப் படை, குதிரைப் படை , கப்பல் படை என அனைத்துப் படைகளும் போரில் பங்கெடுத்துக்கொண்டன. அந்த நட்ட நடுக்காட்டில் கப்பல் படை எங்கே வந்தது என்ற கேள்வி எழுப்புவோருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் நீங்கள் அறிவாளி என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனாலும் ஒன்றை மறந்துவிட்டீர்கள் நான் அது காடு என்று எங்கேயும் சொல்லவேயில்லை.

முதல் நாள் போரின் முடிவில் இரண்டு படை வீரர்களும் மிகச் சோர்வுடன் காணப்பட்டனர்.எந்தப் பக்கத்திற்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ கிடைக்குமென கணிக்கமுடியவில்லை. இரண்டு எதிரி மன்னர்களும் கலந்தாலோசித்தனர் என்பது சற்றே உங்களைக் குழப்பலாம். இருந்தாலும் உண்மையைச் சொல்லியாகவேண்டுமல்லவா?

நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரண்டு மன்னர்களும் ஒரு முடிவிற்கு வந்தவர்களாய் அவரவர்களின் படை வீரர்களை மாற்றிக்கொண்டு அதாவது இந்த நாட்டிலிருந்து நூறு படை வீரர்களை எதிரி நாட்டிற்கும் எதிரி நாட்டிலிருந்து நூறு படைவீரர்களை தங்கள் படைக்கும் மாற்றிக்கொண்டனர். அப்போதேனும் ஏதேனும் மாற்றம் நிகழும் என்றெண்ணியே இதைச் செய்தனர். இந்த யுக்தி வேறெந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. ஏன் உலகத்தையே தனது போர் முறையினால் அச்சுறுத்திய ஜெர்மனி கூட இதைச் செய்திருக்கவில்லை என்ற உதாரணமே இதன் சிறப்பை உணர்த்தப் போதுமானது!

ஆனாலும் அவர்களின் எண்ணம் தோல்வியுற்றது. வழக்கம்போல இரண்டாம் நாளிலும் எந்த நாட்டிற்கும் வெற்றியோ தோல்வியோ கிடைத்திருக்கவில்லை. அடுத்த நாளும் வந்தது என்றாலும் இதற்கு மேல் இட்லியின் கதையில் போர் பற்றியே சொல்லிக்கொண்டிருந்தால் அலுப்புத்தட்டிவிடும் என்பதால் அன்றைய தினத்திலேயே இட்லியைக் கண்டறிச் சொல்லியிருந்தேன்.

அன்றைய தினம் இரவு சரியாக 8 மணியளவில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, மன்னிக்கவும் வேறு ஏதோ ஞாபகத்தில் இந்தப் பத்தியை எழுதிவிட்டேன்.

அன்றைய தினம் சரியாக இரவு 8 மணியளவில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் சரியாக இரவு 8 மணி என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அப்பொழுது டைட்டன் வாட்சுகள் இந்தியாவில் காலும் பதித்திருக்கவில்லை கையும் பதித்திருக்கவில்லை. அதனால் அமீர்கானும் அந்த விளம்பரங்களில் நடிக்கவில்லை. சரி விடுங்கள்;நமது வேலையைப் பார்ப்போம். 

அன்று இரவு மன்னர் கடுங்கோபத்தில் இருந்தார். எந்த மன்னர் என்று கேக்காதீர்கள் இந்தக் கதையில் முதல் சில பத்திகளில் ஒரு மன்னரைப் பத்திப் பார்த்துக்கொண்டிருந்தோம் அல்லவா அவரேதான். அவரை மறந்திருந்தால் மறுபடியும் அதே போன்றதொரு முகத்தைக் கற்பனை செய்யவேண்டிய அவசியமில்லை. எதோ ஒரு கன்றாவி முகத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள் போதும்.

கடுங்கோபத்தில் இருந்த மன்னருக்குத் திடீரென்று அகோரப் பசி ஏற்பட்டது. சமையல்கட்டிற்குள் நுழைந்த மன்னர் ஏதேனும் தின்பதற்கு கிடைக்கிறதாவெனப் பார்த்தார். ஒன்றுமில்லை. யாரங்கே எனக் கூப்பிட நினைத்தவர் வருகிறவனும் பசியில் வந்தால் என்ன செய்வதென்று பயந்து எதையும் சொல்லாமலேயே தேட ஆரம்பித்தார். அவரது தேடல் மிகக் கொடூரமாய் இருந்தது. போர்க்களத்தில் கூட இப்படி ஒரு தேடல் அவரிடம் இருந்திருக்கவில்லை. அப்பொழுது திடீரென்று வெற்றுப் பாத்திரம் ஒன்றைக் கீழே தள்ளிவிட்டார். ”தடால் தடால்” என்ற பெரும் சப்தத்துடன் விழுந்தது அந்தப் பாத்திரம். ஆனால் உண்மையில் அது துல்லியமான ”தடால்” என்ற சப்தம் அல்ல. ஏனெனில் அதற்குத்தான் வாய் இல்லையே.

வெளியில் அரைத்தூக்கத்திலிருந்த காவலனின் காதுகளில் இந்தச் சத்தம் சரியாக விழுந்தது. ஏதோ திருட்டுப் பூனைதான் உருட்டுகிறதென்று நினைத்த அந்த வீரன் கையில் வைத்திருந்த கட்டையை எடுத்து உள்ளே சப்தம் வந்த இடத்திற்கு வீசினான்.சரியாக மன்னரின் தலையில் விழுந்த அந்தக் கட்டை மன்னரை மூர்ச்சையாக்கியது. காவலனும் அப்படியே தூங்கிப் போனான்.

ஆனால் இங்கே சரியாகக் கவனியுங்கள். இட்லி உருவான கதையின் மிகமுக்கியக் கட்டம் இதுதான். ஆனால் கட்டம் போட்டு எழுத முடியாதென்பதால் வழக்கம்போலவே எழுதுகிறேன். 

அப்படிக் கீழே விழுந்த மன்னரின் கேடயம் அங்கிருந்த அடுப்பின் மீது வைத்திருந்த வெண்ணீர் தயாரிக்கும் பாத்திரத்தின் மீது விழுந்தது. அந்தச் சமயம் மன்னர் சாப்பாட்டைத் தேடிக்கொண்டிருந்த போது கோபத்தில் மேலே தேக்கி வைத்திருந்த அரிசி மூட்டையை குத்தியதால் அந்த அரிசி முழுவதும் அரைக்கப்பட்ட மாவு போல ஆகியிருந்தது.அந்த அரிசிமாவு அப்படியே கேடயத்தில் நிரம்பியது.

சில மணிநேரத்தில் மன்னருக்கு சுய நினைவு திரும்பியது. அப்பொழுதும் அவருக்கு உணவின் மீதிருந்த தேடல் குறைந்திருக்கவில்லை. அப்பொழுதுதான் அவர் தான் கீழே கிடப்பதையும் அருகிலேயே கேடயமும் கிடப்பதையும் கேடயத்தில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதையும் பார்க்க நேரிட்டது. உணவுத் தேடலில் இருந்த மன்னர் அது என்னவென்று கூட யோசிக்காமல் அப்படியே எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். 

இதோ நாம் எதிர்பார்த்த அந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துவிட்டது. ஆம் இட்லி என்ற மிகச் சிறந்த உணவு வகை நமக்குக் கிடைத்துவிட்டது. ஆனால் அதற்கு யார் இட்லி எனப் பெயரிட்டது என்ற உங்களின் கேள்வியை விரைவில் வேறொரு கதையின் மூலமாகத் தீர்க்கிறேன். ஆனால் உங்களில் யாரும் அந்தப் போர் என்னவாயிற்று என்று கேட்கமாட்டீர்களென்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்!

Wednesday, March 21, 2012

கோழிக்கிறுக்கல் - தமிழர்கள் மறந்துவிட்ட ஒரு வரலாறு!


வரலாற்றினை மறந்துவிடுவது தமிழர்களாகிய நமக்கொன்றும் புதிதில்லை. போற்றி வளர்க்க வேண்டிய வரலாறுகளைக் கேலிக்குரியதாக்கி, வரலாறு படிப்பவர்களைக் கண்டால், "வரலாறு படிப்பதை விட்டுவிட்டு வரலாறு படைக்கக் கற்றுக்கொள்" என்றவொரு இலவச அறிவுரையை வழங்கிவிட்டுப் பரிகசித்துச் செல்லக்கூடிய ஒரு சூழலில், எந்த ஒரு வரலாற்றுத் தகவலும் அழிந்து போவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. 

ராஜ ராஜ சோழனையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் மதிப்பெண்களாக்கி பாடப்புத்தங்களில் உறங்க வைத்துவிட்டோம். எமி ஜேக்சன்கள் வந்து “மறண்டுட்டியா?” என்று கேட்காமலோ, நமீதாக்கள் வந்து தங்களின் திரையுல அனுபவத்தை மச்சான்களிடம் சொல்லாமலிருந்தாலோ சுதந்திர தினத்தைக் கூட மறந்துவிடும் நிலையில்தான் இருக்கிறோம். சரி போனது போகட்டும். கோழிக் கிறுக்கல் என்றவொரு பதத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள நெடும் வரலாற்றுத் தகவலை உங்களிடம் சேர்ப்பிக்கவே இவ்வளவு பீடிகை போட வேண்டியிருந்தது.

கோழிக் கிறுக்கல் என்றால் கிறுக்கர்கள் கிறுக்குத்தனமாய் எழுதுவது என்பதே பலரது எண்ணமாயிருக்கிறது. உண்மையில் கோழிக் கிறுக்கலுக்கும் கிறுக்குத் தனத்திற்கும் அணுவளவு கூட, ஏன் அணுக்கரு அளவிற்குக் கூடச் சம்பந்தம் இல்லை. இனி வரலாற்றுக்குள்...

பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்னர் உலகைக் கோழிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. கோழிகளே மன்னர்களாக உலகை ஆண்டுவந்தன. அந்தக் காலகட்டங்களில் கோழிகள் பேசும் திறமையுடையவையாகவும், பாடும் திறமையுடையவையாகவும் திகழ்ந்து வந்தன. மனிதர்கள் அவர்களுக்கு அதாவது அவைகளுக்குச் சேவகம் செய்யும் அடிமைகளாக வாழ்ந்துவந்தனர்.
பல நூறு ஆண்டுகள் கோழிகளின் அரசாட்சியே நடைபெற்று வந்தது. கோழிகளும், அவற்றின் அடிமைகளான மனிதர்களும் இன்புற்று வாழ்ந்துவந்தனர். வானம் பெய்யெனப் பெய்தது என்பதைக் காட்டிலும் கோழி கொக்கரித்தாலே பெய்தது என்று சொல்வது சரியாக இருக்கும். தற்பொழுது வாழும் கோழிகளின் வாழ்க்கையைப் பார்த்தால் இவைகளா ஒரு ராஜ்ஜியத்தைக் கட்டிக் காத்து ஆண்டுவந்தன என்று நம்புவதற்கு சற்றுச் சிரமமாகவே இருக்கும். இருந்தாலும் வரலாறு என்ற ஒன்று நமக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால்... மன்னிக்கவும்; அது என்ன கற்றுக் கொடுத்ததென்று நான் மறந்துவிட்டேன்.

இப்படியொரு பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேதான் அந்த பானம் அறிமுகமாகியிருந்தது. அந்தப் பானத்திற்கு நாடு நகரத்தில் இருந்த அனைத்து ஜீவ ராசிகளும் அடிமைப்பட்டுப் போயிருந்தன. மனிதர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்த கோழிகளும் கூட அப்பானத்திற்கு அடிமையானதென்று தெரிகிறது. கோழியும் இதற்கு விதிவிலக்கல்ல. விதியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இந்தவரி. கோழியும் இதற்கு அடிமையாகிவிட்டது. 

சில வாரங்களுக்குப் பிறகு கோழி அரசன் அலுவலக நேரத்திலே கூட சோமபானம் செய்யத் தொடங்கிவிட்டான். நாடு நகரமெல்லாம் இதே பேச்சாயிருந்தது. சோமபானத்திற்கு அடிமைப்பட்டிருந்த கோழியின் ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் மக்களும், கோழிகளும் சோமபானத்திற்கு அடிமையாக இருந்தபடியால் யாருக்கும் மன்னரை எதிர்த்துப் போரிட விருப்பமில்லை. இந்தச் சமயத்தில்தான் கடவுள் தான் படைத்த கோழியூர் அரசாட்சியைப் பார்வையிட தமது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.

அந்தச் சமயத்தில் ஆட்சியிலிருந்த கோழியானது அதிகப்படியாக சோமபானம் செய்ததால் அரியணையிலிருந்து மேலே எழ முடியாமல் மயங்கி விழுந்தது. ஆனால் இந்த இடத்தில் விழுந்தான் என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவைகள் அப்பொழுதெல்லாம் ஆறறிவு கொண்டு உயர்திணை உயிர்களாக வாழ்ந்துவந்தன.

கடவுளும் நேராக அரச தர்பாருக்கு வந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. ஆனால் அரசரோ சோமபானத்தால் மயங்கிக் கிடக்கிறார். இப்படியொரு அரசரைப் பார்த்தால் கடவுள் உடனே சிரச்சேதம் செய்யச் சொல்லிவிடுவாரே என்று பயந்த கோழி தமக்குப் பதிலாக சிறிது நேரம் யாரையேனும் அரியணையில் அமர்த்திவிட எத்தனித்தது. அந்த நேரம் பார்த்து அரசவையில் எந்த ஒரு கோழியும் இருக்கவில்லை. ஆனால் கடவுள் நெருங்கிவிட்டார். இந்தச் சமயத்தில்தான் அந்தப் புத்திசாலிக் கோழி ஒரு முட்டாள் தனத்தைச் செய்தது. ஆம்; அப்பொழுது தனது அடிமைகளில் இருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து, கடவுள் அரசவையிலிருந்து வெளியேறும் வரையில் அரியணையில் அமர்ந்து தன்னைப் போல் நடிக்குமாறு கூறி, தன் தலையில் இருந்த கிரீடத்தையும், சில கோழிப் பொங்குகளையும் அணிவித்துவிட்டு அரியணையிலிருந்து எழுந்து.., இல்லை விழுந்து வழிவிட்டு அருகில் இருந்த அறையில் சென்று ஒளிந்து கொண்டது.

கடவுளும் வந்தார். சிறிது நேரம் மனித அடிமையும் கோழியைப் போல நடித்தது. இறுதியில் கடவுள் விடைபெறும் தருணத்தில், நாட்டில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை ஒரு ஓலையில் எழுதித் தன்னிடம் கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அரசனாக நடித்துக் கொண்டிருந்த மனித அடிமையும் ஏற்கெனவே கோழி சொன்னதைப் போல ஒரு ஓலையினை எடுத்துக் குறைகள் எதுவுமில்லையென்று எழுதிக் கடவுளிடம் நீட்டினான். ஆனால் கையெழுத்து அழகாயிருந்தால் எங்கே தன்னை ஒரு மனிதன் என்று கண்டுபிடித்துவிடுவாரோ என்றஞ்சி கோழியின் கையெழுத்தைப் போல கிறுக்கிக் கிறுக்கி எழுதிக் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த கடவுள் ” என்ன கோழி கிறுக்கினாப்ல இருக்கு? “ என்றாராம். 

கோழியாக நடித்துக் கொண்டிருந்த மனித அடிமைக்குத் தூக்கிவாரிப்போட்டது. கடவுள் எப்படி தான் ஒரு கோழி அல்ல என்பதைக் கண்டுபிடித்தார் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே சோமபான மயக்கத்திலிருந்த கோழியானது ஓடோடி, பறந்தோடி, உருண்டோடி வந்து கடவுள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி “ மகா பிரபோ! என்னை மன்னித்தருளுங்கள்! சோமபான மயக்கத்தில் செய்யக்கூடாதது செய்தேன். என்னைக் காத்தருளுங்கள்” என்றவாறு கதறத் தொடங்கியது. அதன் கதறலில் அண்ட சராசரங்கள் நடுநடுங்கின. கேலக்சிகள் எனப்படும் பெருவெடிப்புகள் வெடித்தன. எரிமலைகள் வெடித்தன. தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த கொள்ளுப்பட்டாசுகள் வெடித்தன. 

சாந்தமே உருவான கடவுளுக்கு எல்லாம் விளங்கியது. அவர்தானே இந்தத் திருவிளையாடைலை நிகழ்த்தியது. சிவாஜியோ, தனுசோ இல்லாததால்தான் கடவுளே திருவிளையாடல் நிகழ்த்தினார் என்று நீங்கள் இப்பொழுது எண்ணினால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு நேரமில்லை. 

அதே சமயம் கடவுள் பெருங்கோபம் கொண்டெழுந்தார். கோழி எத்தனையோ பிரயாசைப்பட்டும் அவரின் கோபத்தை அடக்கமுடியவில்லை. இறுதியாக அவரின் சாபத்திற்கு ஆளானது கோழி. அவரின் சாபத்தினாலேதான் இப்பொழுது கோழிகள் மனிதனின் அடிமைகளாகவும், அல்லது வளர்ப்புப் பிராணிகளாகவும் வாழ்ந்துவருகின்றன. 

இந்த வரலாற்றினைச் சிலர் நம்ப மறுக்கின்றனர். ஆயினும் இதுவே உண்மை என்பதற்குச் சில உதாரணங்களை என்னால் சொல்லமுடியும்.

*.பண்டைய மன்னர்கள் தங்கள் தலைகளில் கோழிப் பொங்கினை வைத்துக் கொண்டிருப்பதைப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அந்த வழக்கம் இந்த நிகழ்வுக்குப் பிறகே வந்தது.

*.கோழிகளின் கால் விரல்கள் இப்பொழுதும் நமது கை விரல்களைப் போலவே, அதாவது நமது உள்ளங்கைகளைப் போலவே காணப்படுகின்றன.

*. கோழிகள் எதையாவது , எப்போதும் தனது கால்களால் கிளறிக் கொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றின் மரபணுவில் பதிந்துள்ள எழுதும் கலையே.

*.பண்டைய காலத்துத் தலைவர்களும் கோழிப் பொங்கினை தலையில் சூடியிருப்பது போன்ற சித்திரங்களும், திரைப்படங்களும் இந்த வரலாற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.

வரலாறுகளை மறவாதீர். வரலாறுகளே நாம் கடந்து வந்த பாதையைக் காட்டுகின்றன. எனவே வரலாறுகளைப் படியுங்கள். படிக்க விருப்பமில்லாதவர்கள் இதுபோன்ற வரலாறுகளைக் கற்பனையாகவாவது படைத்து அடுத்தவரின் கண்களையும், நேரத்தையும் வீணடியுங்கள். நன்றி.

இந்த வரலாற்றின் நீதி : பணியின் போது சோமபானம் செய்வதைத் தவிர்ப்பீர்!

Wednesday, February 22, 2012

அவ்வ்வ்வ் - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை


முன்னுரை

   சிறிது நாட்களுக்கு முன்னர் “ங்கொய்யால” என்னுமோர் தெய்வீகச் சொல்லுக்கான ஒர் ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தது நாடறிந்ததே. நீங்களும் அறிந்திருப்பீர். அந்தக் கட்டுரையை எழுதுவதற்கு நான் பட்ட இன்னல்கள் கொஞ்ச, நஞ்சமல்ல. ஆனாலும் அந்தக் கட்டுரையை மக்கள் கொண்டாடிய விதம் என்னை மீண்டும் அதே போன்றதொரு அற்புதக் கட்டுரையைப் படைப்பதற்கான ஆவலைத் தூண்டியது. அந்தக் கட்டுரையைப் பற்றி திருவள்ளுவர் உள்பட பல சமகால இலக்கியவாதிகள் தத்தமது இணைய தளங்களில் பாராட்டியிருந்தது மகிழ்வளிப்பதாக இருந்தது. அதே சமயம் சிலர் அந்தக் கட்டுரையில் உண்மை இல்லையென்றும் , அது வெறும் கட்டுக்கதை என்றும் கூறியிருந்ததிலிருந்து அவர்களின் பொறாமையை என்னால் அறிய முடிந்தது. ஏனெனில் அந்தக் கட்டுரை வெளியான பின்பு அச்சொல்லின் மீதான தமது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அந்தச் சொல்லைக் கற்றுக் கொண்டதாக ரஷிய இலக்கியவாதியான தஸ்தாயெவ்ஸ்கி கூறியிருந்ததே இதற்குச் சான்றாகும்.

”அவ்வ்வ்வ்”வின் தோற்றம்

   “அவ்வ்வ்வ்”.... என்னே ஒரு அழகான சொல்! எத்தனை முறை உச்சரித்தாலும் புல்லரிக்க வைக்கும் ஒரே சொல் ”அவ்வ்வ்” மட்டுமே என்பதில் தினையளவும் சந்தேகமில்லை.தினை என்பது என்னவென்று உங்களுக்குச் சந்தேகம் இருக்கலாம். எனவே தினையளவு என்பதை அரிசியளவு என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். சரி விசயத்திற்கு வருவோம். ”அவ்வ்வ்வ்” என்ற சொல்லினைத் தோற்றுவித்தது, அதனை அனைவரும் பயன்படுத்தும்படி செய்தது நகைச்சுவை நடிகர் வடிவேலு என்கிற கருத்து நிலவிவருகிறது. ஆனால் உண்மையில் “அவ்வ்வ்வ்” என்ற சொல் சங்ககாலம் தொட்டே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. ஆனால் ”அவ்வ்வ்வ்” என்ற சொல்லின் பொருளைப் பற்றி அறியாமல் அதனைப் பயன்படுத்தி வருவது சற்று வருந்தத்தக்கதே! 

”அவ்வ்வ்வ்”வின் பொருள்

   ”அவ்வ்வ்” என்ற சொல்லிற்கு என்ன பொருள் இருந்துவிட முடியுமென்று பலரும் ஏளனம் செய்து சிரிக்கின்றனர். உண்மையில் ”அவ்வ்வ்” என்ற சொல்லின் பொருள் “அண்டா” என்று எங்களுரில் ஒரு தமிழிலக்கியவாதி தெரிவித்திருக்கிறார். அது எப்படி “அண்டா “ என்ற பொருள் வருமென்று உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். அவர் வாங்கிய அண்டா ஒன்றிற்கான  பெயர் எழுதிக் கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவரது தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்ததாகவும், அப்பொழுது இவர் “அவ்வ்வ்” என்று கத்தியவாறே அந்த அழைப்பினை ஏற்றதாகவும், அப்பொழுது அண்டாவிற்குப் பெயர் எழுதுபவர் அண்டாவின் பெயரை “அவ்வ்வ்” என்று எழுதிவிட்டதாகவும் கூறினார். இப்பொழுது சொல்லுங்கள், அந்த அண்டாவில் யாருடைய பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அது அவர்களுடைய பொருளாகும். இந்த அண்டாவில் விதி வசத்தால் “அவ்வ்வ்” என்று எழுதப்பட்டிருக்கிறது. எனவே “அவ்வ்வ்”வின் பொருள் அண்டாதானே? 

”அவ்வ்வ்”வும் ஔவையாரும்

    தமிழ் கூறும் நல்லுலகில் சிலர் “அவ்வ்வ்” என்ற சொல்லிற்கும் ஔவைக் கிழவிக்கும் தொடர்பிருப்பதாகக் கூறிவருகின்றனர். அவர்களின் கூற்றுப்படி ”அவ்வ்வ்” என்ற சொல்லினைக் கண்டுபிடித்ததே ஔவையார்தான் என்கிறார்கள். அதாவது ”அவ்வ்வ்”வை யார் கண்டுபிடித்தது?” என்ற சொல்லிற்கு விடையாக ஔவைப் பாட்டியின் பெயரைச் சொல்லி வந்ததாகவும், பின் அவரது பெயருக்குப் பதிலாக “அவ்வ்வ்”வை யார்” என்ற கேள்வியையே பயன்படுத்திப் பின்னர் “அவ்வையார் - ஔவையார்” என்று மாறியதாகச் சிலர் ஐயுறுகின்றனர். ஆனாலும் “அவ்வ்வ்”வை யார் கண்டுபிடித்தார்கள் என்கிற வரலாறு நமக்குக் கிடைக்காமலே போனது தமிழ்மொழியின் மிகப் பெரும் துரதிருஷ்டமாகக் கருதப்படுகிறது.

”அவ்வ்வ்”வும் தமிழக அரசும்

   “அவ்வ்வ்” என்ற சொல்லின் அருமை பெருமைகளை அறிந்த தமிழக அரசு இந்தச் சொல்லின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் இந்தச் சொல்லினை உரக்கக் கத்தி இன்புற வேண்டுமென்றே தற்பொழுது முக்கால் மணிக்கொருதரம் மின்சாரத்தை நிறுத்தும் திட்டத்தினைக் கொண்டுவந்திருப்பது பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழக அரசின் இந்தத் திட்டம் பெருவெற்றி பெற்றிருப்பது நாமறிந்ததே. ஒவ்வொரு முறை மின்சாரம் நிறுத்தப்படும்போதும் எல்லா கிராமம் மற்றும் நகரங்களிலிருந்து “அவ்வ்வ்” என்ற இந்தச் சொல்லின் சப்தம் நம் காதுகளில் தேனினைப் பாயச் செய்கிறது என்றால் அது மிகையாகாது. அதிகப்படியான தேன் என் காதுகளில் பாய்ந்துவிட்டதால் நேற்றுத்தான் காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் எனது பற்களைச் சோதனை செய்துகொண்டேன். தமிழ்மொழியின் தன்னிகறற்ற சொல்லான “அவ்வ்வ்”வினை நாடெங்கும் ஒலிக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த மின்சாரத்தடைத் திட்டத்திற்கு ஒவ்வொரு தமிழரும் நன்றி கூற வேண்டியது அவசியமாகிறது.

இணையத்தில் ”அவ்வ்வ்”வின் பங்கு

   பெரும்பாலும் தமிழ் மொழியின் புகழ் பெற்ற எல்லாச் சொற்களுமே இணையத்தில் அதிக மதிப்பைப் பெறுவது வழமையானதே. அதே போல நமது இந்த உலகப் புகழ் பெற்ற “அவ்வ்வ்” என்ற சொல்லும் இணையத்தளங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சொல் பெரிதளவில் பயன்படுத்தப்படுவதாக கி.மு.2400 ஆம் ஆண்டில் பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு அறிவிக்கிறது. மேலும் ஒரு இது போன்ற சமூக வலைத்தளங்களில் இந்தச் சொல் நொடிக்கொருமுறையேனும் பயன்படுத்தப்படுமென திட்டவட்டமாகச் சொல்கிறது. தமிழ் இணையவெளியில் புழங்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தச் சொல்லினைப் பயன்படுத்தாமல் இருக்கமுடியாதென்றும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பயன்கள்

   “அவ்வ்வ்” என்ற இந்தச் சொல் பல விதங்களில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இந்தச் சொல்லினைக் கூட்டாக, பத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்து உச்சரிக்கும்போது நாய்கள் பயந்து ஓடுவதைப் பார்க்க முடிகிறது. ஏதேனும் கேள்விக்குப் பதிலளிக்க முடியாதவர்களுக்கு இந்தச் உடுக்கை இழந்தவன் கை போலப் பேருதவி புரிவதைக் கண்கூடாகக் காணமுடிகிறது. மேலும் ஏதேனும் கோபமான பொழுதுகளில் இந்தச் சொல்லினைப் பயன்படுத்துவது எதிராளியினைப் பெருமிதப்படுத்துவதோடு, அவரது கோபத்தினையும் சற்று குறைப்பதாக மனநல ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் “அவ்வ்வ்” என்ற இதன் பயன்களை யாராலும், எந்தக் காலத்திலும் முழுமையாகச் சொல்லிவிட இயலாதென்பது மட்டும் திண்ணம்.

முடிவுரை

   தமிழ்மொழியில் மிக முக்கியச் சொல்லாக வலம்வரும் இந்த “அவ்வ்வ்” வின் தோற்றம் மற்றும் பயன்களை இந்தக் கட்டுரையின் மூலமாக நம்மால் தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்ளமுடிந்தது. மேலும் இந்தச் சொல்லினைக் கேட்கக் கேட்க அடுத்து இந்தச் சொல்லினை எப்பொழுது யார் வாயால் கேட்போமோ என்கிற ஏக்கம் நமக்கு வராமலிருப்பதில்லை. இந்தச் சொல்லின் பெருமைகளைப் பற்றித் தெரிந்து கொண்டுள்ள ஆங்கிலேயர்கள் “அவ்வ்வ்” என்ற சொல் ஆங்கில மொழிக்குச் சொந்தமானது என்று போராடத் துவங்கியுள்ளாதாகச் சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன. எனவே நமது தமிழ் மொழியின் மிக முக்கியச் சொல்லான “அவ்வ்வ்”வினைப் பாதுகாக்கும் பொருட்டும், அதனை பிறர் கவர்ந்து கொள்ளக் கூடாததன் பொருட்டுமே இந்தக் கட்டுரையை அவசரகதியில் எழுதநேர்ந்தது. எனவே எல்லோரும் சேர்ந்து போராடுவோம் “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”!