Saturday, December 31, 2011

நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும் ( பகுதி - 5)

முன்குறிப்பு : சில நாட்களுக்கு முன்னாடி , இல்ல சில மாதங்களுக்கு முன்னாடி நாட்டாமையும் தமிழ்ப்படம் நாட்டாமையும்னு சில பதிவுகள் எழுதினேன். அதன் தொடர்ச்சியாக இது. 

பசுபதி வேகவேகமாக நாட்டாமை பட நாட்டாமையின் வீட்டற்குள் நுழைகிறார். கூடவே மற்றொருவரை இழுத்துக்கொண்டு வருகிறார். அவர் வேறு யாருமல்ல நான் தான்!

நா.நாட்டாமை : ”தென்றா பசுபதி? தெதுக்கு இப்படி ஓடியாற?தெவன்டா இவன்? “

பசுபதி : ”ஐயா, தீர்ப்புச் சொல்லுறதுக்கு நீங்க இருக்குறபோது வேற யாரவோ தீர்ப்புச் சொல்ல கூப்பிட்டிருக்காங்க!”

நா. நாட்டாமை : ”ஆர்றா அது? (செல்வாவைப் பார்த்து ) தேன்டா நீ ஏதாச்சும் பிரச்சனை பண்ணிப்போட்டியா ?“

பசுபதி : ஐயா, இவன் பிரச்சினை பண்ணலீங்க, இவுங்க ( டெரர் கும்மி ) ஒரு போட்டி நடத்துறாங்க. அதுக்கு உங்கள நடுவரா கூப்பிடாம வேற யாரவோ கூப்பிட்டிருக்காங்க ? “

நா. நாட்டாமை : “ தென்றா பேசற நீயி ? அண்ணனா இருந்தாலும், தம்பியா இருந்தாலும் தீர்ப்பு நான் தாண்டா சொல்லுவேன்”

பசுபதி : ஐயா, எனக்கென்னமோ இவுங்க அவர ( தமிழ்ப்படம் நாட்டாமைய) தீர்ப்புச் சொல்ல கூப்பிட்டிருப்பாங்களோன்னு தோணுது.

நா. நாட்டாமை : “ பசுபதி, வண்டியக் கட்றா அவனூட்டுக்கு, தீர்ப்பு நான்தான் சொல்லுவேன்”

(பசுபதியும், நா.நாட்டாமையும் வண்டியில் ஏறிக்கொள்ள செல்வாவை குண்டுக்கட்டாகத் தூக்கி வண்டிக்குள் எறிகிறார்கள் )

வண்டியில் ஏறியதும் நா. நாட்டாமை : “பசுபதி!  அடிச்சோட்றா ”

பசுபதி : ஐயா, அடிச்சோட்றதுக்கு இது மாட்டுவண்டி இல்லீங்! காருங்க“

தமிழ்ப்படம் நாட்டாமையின் வீட்டை மூவரும் அடைகிறார்கள். வண்டியிலிருந்து ஒரே தம்மாக தமிழ்ப்படம் நாட்டாமையின் வீட்டிற்குள் குதிக்கிறார் நா. நாட்டாமை. உள்ளே தமிழ்ப்படம் நாட்டாமை இரண்டு எறும்புகளை ஒரு டேபிளின் மீது வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த தனது அடியாளிடம் “ இந்த எறும்ப பத்து வருசம் ஊரவிட்டுத் தள்ளி வெக்கறன்டா! ஆரும் இதுக்கூட தண்ணி பொழங்கக்கூடாது“ என்று தீர்ப்பினைச் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த சொம்பினை எடுத்துக் கொண்டு ”அடுத்து எங்கடா பிரச்சினை ?” என்று கேட்கிறார். அப்பொழுது

நா. நாட்டாமை : ” தேன்றா ? என்ன தகிரியம் இருந்தா என்னைய கேக்காம நீ மட்டும் தீர்ப்புச் சொல்லுவ ? அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் நான்தான்டா தீர்ப்புச் சொல்லுவேன்!“

த. நாட்டாமை :” நீதிடா, நேர்மடா, நியாயம்டா”

செல்வா : மனதிற்குள் (என்ன எழவுடா ? )

நா. நாட்டாமை : ”நிறுத்துடா! (செல்வாவைப் பார்த்து ) தென்றா தம்பி, இவனவிட நானும் நல்லா தீர்ப்புச் சொல்லுவேன். என்னைய சேர்த்துக்களைனா நானே என்னைய ஊரவிட்டுத் தள்ளிவச்சுக்குவேன்.”

பசுபதி : ”ஐயா, இப்படி ஒவ்வொரு ஊரிலையும் போயி உங்கள நீங்களே தள்ளிவச்சு தள்ளிவச்சு கர்நாடகா பார்டருக்கு வந்துட்டோம். இனியும் தள்ளிவச்சா கர்நாடகாதான் போகனும். அங்க ஒருத்தருக்கும் தமிழ் தெரியாது. எதுக்கும் பார்த்துச் செய்யுங்க! “

த. நாட்டாமை : (செல்வாவைப் பார்த்து ) ”நீ ஆர்றா ? இங்கெதுக்கு நிக்கற ? இவன கள்ளிபால ஊத்திக் கொல்லுங்கடா!“

நா. நாட்டாமை : (த. நாட்டாமையைப் பார்த்து ) ”தென்றா பேசற, இவன உனக்கு முன்ன பின்ன தெரியாதா ? “

த. நாட்டாமை : “ நானெதுக்குடா இவனப் பத்தித் தெரிஞ்சிக்கணும் ? தேன்டா பிராது எதாச்சும் வச்சிருக்கிறியா ? நாந்தான் தீர்ப்புச் சொல்லுவேன்! “

செல்வா : “ உங்களுக்கு என்னதான்யா வேணும் ? “

பசுபதி : ”நீங்க நடத்தப்போற போட்டியில எங்க நாட்டாமைதான் தீர்ப்புச் சொல்லுவாரு! “

செல்வா : ஐயா, நாங்க ஏற்கெனவே நல்லா படிச்ச, திறமையான நடுவர்களை தேர்ந்தெடுத்துட்டோம். நீங்க யாரும் தீர்ப்புச் சொல்ல வேண்டாம். என்னை விட்டுறுங்க.

நா. நாட்டாமை : ” டேய், டேய்! என்னையும் சேர்த்திக்கோங்கடா. இவன (த. நாட்டாமை) வேணா ஊர உட்டு தள்ளி வச்சிடலாம்”

த. நாட்டாமை : இவன ( நா. நாட்டாமை ) கள்ளிப்பால ஊத்திக் கொல்லுங்கடா, அண்ணனா இருந்தாலும் தம்பியா இருந்தாலும் தீர்ப்பு நாந்தான்டா சொல்லுவேன்! “

செல்வா : ”ஆள விடுங்கடா! “ என்று சொன்னவாரு தெரித்து ஓடுகிறார்.

பின்குறிப்பு : டெரர்கும்மி விருதுகள்- 2011 பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்னு நினைக்கிறேன். தெரியாதவங்க டெரர்கும்மி விருதுகள் - 10,000 / - பரிசு அப்படிங்கிற இந்தப் பதிவைப் படிச்சுப் பாருங்க. உங்களின் பதிவுகளையும் இணையுங்கள். உங்கள் பதிவுகளை இணைக்க இந்தச் சுட்டியைப் பயன்படுத்துங்கள். பங்குபெறப்போகும் அனைவருக்கும் டெரர்கும்மியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்!




Tuesday, December 13, 2011

டெரர் கும்மி விருதுகள் 2011 - மொத்தப் பரிசு 10,000/-

நண்பர்கள் அனைவரும் டெரர்கும்மி என்ற எங்கள் குழுவை அறிந்திருப்பீர்கள். இணையத்தில் பதிவர்களாக அறிமுகமாகி, பழகி, நட்பால் இணைந்து உருவான குழு அது. டெரர்கும்மி குழுவின் வலைப்பூ தொடங்கப்பட்டு நண்பர்கள், வாசகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஒரு ஆண்டினை நிறைவு செய்ததைக் கொண்டாடும் முகமாக இந்த வருடத்தில் வந்த சிறந்த பதிவுகளைக் கண்டறிந்து ஊக்குவித்து பரிசு வழங்குவதாக முடிவு செய்திருக்கிறோம். 

பதிவுகளை பத்து பிரிவுகளாக வகைப்படுத்தி இருக்கிறோம்.. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.. இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் இருந்து டிசம்பர் இறுதி வரை பதிவிடப்பட்ட/பதிவிடப்போகும்  உங்களுடைய பதிவுகளில் சிறந்த பதிவு எந்த பிரிவின் கீழ் வருகிறது என்று பார்த்து தேர்ந்தெடுத்து வையுங்கள். எப்படி எங்களுக்கு அனுப்புவது என்று அறிவிப்பு வந்தவுடன் அதன்படி அனுப்புங்கள். 

ஒவ்வொரு பிரிவிற்கும் இரண்டு நடுவர்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்  அவர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த இரண்டு இடுகைகளுக்கு (ஒவ்வொரு பிரிவிலும்) டெரர் கும்மி விருதுடன் முதல் பரிசும் இரண்டாம் பரிசும் வழங்கப்படும்! அனைத்துப் பிரிவுகளுக்கும் சேர்த்து மொத்த பரிசுத்தொகை  RS 10000/-




1 . நகைச்சுவைப்  பதிவுகள்.
2 . கவிதைகள்
3 . விழிப்புணர்வு
4 . கதைகள்
5 . அனுபவம்/பயணக்கட்டுரை
6 . அரசியல் கட்டுரை
7 . திரை விமர்சனம்
8 . தொழில்நுட்பம்
9 . சிறந்த புதுமுக பதிவர்கள்
10 . ஹால் ஆஃப் ஃபேம் பதிவர்.

மேலே குறிப்பிட்ட பிரிவுகளில் 10 வது பிரிவான ஹால் ஆஃப் ஃபேம் பதிவரை தேர்ந்தெடுப்பது மட்டுமே டெரர் கும்மி உறுப்பினர்கள். மீதமுள்ள ஒன்பது பிரிவுகளும் டெரர் கும்மியில் உறுப்பினர் அல்லாத நடுவர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படும்... மேலும் எந்த ஒரு பிரிவிலும் டெரர்கும்மி உறுப்பினர்கள் யாரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறோம். இது வரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவை இனிமேலும் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு உங்களிடம் இருந்து இப்போது விடைபெறுகிறோம்!

நன்றியுடன்
டெரர் கும்மிக்காக,
உங்கள் கோமாளி செல்வா.

நன்றி : கோமாளி செல்வா

பின்குறிப்பு : எதுக்கு நன்றி கோமாளி செல்வானு போட்டிருக்கேன்னு பாக்குறீங்களா ? இந்தப் பதிவ நான் எழுதல. இவர் எழுதின பதிவு இது. அவருக்கு நன்றி சொன்னேன். அவர் வேண்டாம்னு சொன்னதால எனக்கு வேற வழி தெரியல. இந்த நன்றிய ஏற்கெனவே கடைல வாங்கிட்டு வந்திட்டேனா, அத யாருக்காச்சும் சொல்லலைனா அழுகிப்போயிடும்கிறதால எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். நன்றி வணக்கம்.

Friday, November 11, 2011

ங்கொய்யால - ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை

அறிமுகம் :

  ”ங்கொய்யால“ இந்த வார்த்தையைக் கேட்டிறாத, அறிந்திறாத மக்கள் தமிழ்நாட்டில் இருந்தால் அவர்கள் இறந்துபோன அல்லது இன்னும் பிறக்காதவர்களாகத்தான் இருக்கவேண்டும். அவ்வளவு பிரசித்திபெற்ற வார்த்தையாக வலம்வருகிறது இந்த வார்த்தை. சிறியவர் முதல் பெரியவர் வரை, குழந்தைகள் முதல் கிழவர் வரை, ஆசிரியர் முதல் மாணவர் வரை,  ஆண் பெண் என்கிற பால் வேறுபாடுகள் இன்றி அனைவராலும் பேசப்பட்டு வருவதே இவ்வார்த்தையின் புகழுக்குச் சான்றாகும். சில வார்த்தைகளை துன்பத்தில்தான் பயன்படுத்த முடியும். கோபத்தை வெளிப்படுத்தச் சில வார்த்தைகள் உள்ளன. ஆனால் இன்பம், துன்பம், கோபம், பயம்,வெட்கம்,  இப்படி எல்லா நேரங்களிலும் பயன்படுத்தப்படும் ஒரே வார்த்தை ‘ங்கொய்யால’ என்றால் அது மிகையாகாது. இப்படிப்பட்ட தெய்வீக வார்த்தையின் வரலாற்றைப் பற்றி எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லிக்கொடுக்காமல் போய்விட்டால் கடவுள் நம்மை மன்னிக்கமாட்டார். எனவேதான் மிகச் சிரமப்பட்டு , பொருட்செலவுகளைத் துச்சமெனக் கருதியதால் எத்தனையோ இன்னல்களுக்கு ஆளாகியிருப்பினும், இந்த ஆய்வுக்கட்டுரையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

தோற்றம்

  சில ஆண்டுகளுக்கு முன்னர் இன்னும் கொஞ்சம் தெளிவாகக் குழப்புவதானால் நாட்டாமை என்கிற தமிழ்ப்படம் வெளிவந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘ங்கொக்கமக்கா’ என்றொரு கிராமத்தில்தான் இந்த வார்த்தை பிறந்திருக்க வேண்டுமென வரலாறுகள் நமக்குச் சுட்டுகின்றன. அதற்கான அனேக ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இந்தத் தகவலை அறிந்ததும் நாம் எமது ஆய்வுக்குழுவினருடன் ‘ங்கொக்கமக்கா’ கிராமத்திற்கு விரைந்தோம். முதலில் இந்த வார்த்தை எந்த அர்த்ததில் சொல்லப்பட்டது என்கிற மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலைப் பார்ப்போம்.

’ங்கொக்கமக்கா’ என்கிற இந்தக் கிராமத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளவேண்டுமானால் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரையிலெல்லாம் போக வேண்டியதில்லை. அப்படி போகவேண்டுமென்றாலும் நாம் இன்னும் கால இயந்திரத்தைக் கண்டுபிடிக்கவில்லை. எனவே வேறுவழியில்லாம் அதன் பரிணாம வளர்ச்சியல் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் நாட்டாமை படத்தைப் பற்றி மட்டும் தெரிந்துகொள்வோம். ஏற்கெனவே எனக்கு நாட்டாமை படம் பற்றித் தெரியும் என்றால் இந்த இரண்டு வரிகளையும் படிக்காமல் விட்டுவிடுங்கள். இங்கே SKIP என்ற பட்டனையெல்லாம் என்னால் தரமுடியாது. உண்மையில் நாட்டாமை படம் அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் மிகமுக்கியப் பங்காற்றியிருக்கிறது. நாட்டாமை படத்திற்கு முன் , நாட்டாமை படத்திற்குப் பின் என்று அவ்வூரின் வளர்ச்சியைப் பிரித்தறியமுடிகிறது. நாட்டாமை படம் வெளியான சில வாரங்களுக்குப் பிறகு அமைதியின் உருவமாக இருந்த அக்கிராமத்தில் நாட்டாமை என்கிற பதவிக்குப் போட்டிகள் எழுந்துள்ளன. நாட்டாமைப் பதவியின் அருமை , பெருமைகளைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டிய நாட்டாமை என்னும் திரைக்காவியம் தமிழர்கள் ஓயாது பயன்படுத்தும்படியான ஒரு சொல்லையும் ஏற்படுத்தித் தந்திருப்பது பெருமைப்பட வேண்டிய விசயமாகும்.

அதுவரையில் நாட்டாமையாக இருந்த ‘சண்முகம்’ திடீரென இறந்துபோய்விட அவரின் இருமகன்களுக்குமிடையே பதவியாசை கொழுந்துவிட்டெரிய ஆரம்பித்தது. அந்தக் கொழுந்து நன்றாக வளர்ந்ததோ இல்லையோ, ஆனால் அவர்களின் பையன்களுக்கிடையேயும் சண்டை நடக்க ஆரம்பித்தது. அதாவது சண்முகத்தின் பேரன்களுக்கிடையிலும் சண்டை நடந்ததென்று ஔவையாரின் பாடல் ஒன்றின் மூலமாக அறிகிறோம். 

சண்முகத்தின் முதல் மகனின் மகனும், இரண்டாவது மகனின் மகனும் ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுதுதான் தமிழ்நாட்டையே கட்டிப்போட்டிருக்கிற இந்தச் சொல்லின் பிறப்பு நிகழ்ந்தது என்று அமெரிக்காவில் வெளியாகும் ஒரு ஆங்கில நாளேடு கட்டுரை வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

பெரிய மகனின் மகனான சின்னச்சாமி , சிறிய மகனின் மகனான பெரியசாமியிடம் “ டேய் , எங்க அய்யாதான் ( அப்பா என்பதை அய்யா என்று அழைப்பர் ) முதல் பையன், அதனால அவருக்குத்தான் நாட்டாமை பதவி கிடைக்கும்! “ என்று தனது கருத்தினை எடுத்தியம்பியிருக்கிறான்.

”ங்கொய்யா ஆள எங்கைய்யா பார்த்துட்டு இருப்பாரா ?“ என்று பதிலுக்குச் சண்டையிழுக்க அது பெரிய சண்டையாகி பின் அந்த ஊரின் அழிவுக்குக் காரணமானதென்று சில கல்வெட்டுக்கள் நமக்கு அறிவிக்கின்றன. இந்த இடத்தில்தான் நண்பர்களே தமிழர்களின் இதயத்துடிப்பான சொல் பிறந்திருக்கிறது. ஆம் “ ங்கொய்யா ஆள “ என்ற சொல்லை வேக வேகமாகச் சொல்லிப்பாருங்கள். இதோ வந்துவிட்டதே நமது “ங்கொய்யால!” இப்படியாகத்தான் இந்தச் சொல் பிறந்திருக்கிறது. ஆறுச்சாமி வேண்டுமானால் பிறப்பதற்கு முன்னால் ஐந்து பேரைக் கொன்றுவிட்டு ஆறாவதாகப் பிறந்து, பீரில் முகம் கழுவி, திருநெல்வேலியின் பிச்சைப் பெருமாளைக் கொன்றிருக்கலாம். ஆனால் பிறக்கும்போதே ஒரு ஊரினையே அழித்துக்கொண்டு பிறந்த பெருமை ‘ங்கொய்யால’வையே சாரும் என்று ஜேம்ஸ் கேமரூன் ‘ அவதார்’ படத்தின் மூலம் அடித்துச் சொல்லுகிறார். 


இக்கட்டுரையின் சிறப்புகள்

  ’ங்கொய்யால' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தைப் பற்றி உலக மொழிகளில் முதன் முதலாக வந்தது இந்தக் கட்டுரையே. அது மட்டுமல்லாமல் இக்கட்டுரை உலக மொழிகளான “ ஜெர்மன், லத்தீன், பிரஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம்,உருது, கிரேக்கம், கொரிய மொழி மற்றும் இன்னும் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளது. ஆனால் யாராலும் முழுமையாகத் தமிழில் இருந்து பெயர்த்தெடுக்க முடியவில்லை. இதைவிட வேடிக்கை என்னவென்றால் இந்தக் கட்டுரை இப்பொழுதுதான் தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் இதன் முழிபெயர்ப்புகள் ஏற்கெனவே வந்துவிட்டது ஆச்சர்யமூட்டுவதாகவும் நம் அனைவருக்கும் ஒருவித நம்பிக்கை ஊட்டுவதாகவும் , சோறூட்டுவதாகவும் , மட்டன், சிக்கன் ஊட்டுவதாகவும் அமைந்துள்ளது.

முப்பரிமாணத் தன்மை

  ’ங்கொய்யால’ என்ற வார்த்தை முப்பரிமாணத்தை உடையது. ஆம்! இதனை ஒருசிலர் ‘ங்கொய்யால’ என்றும் , வேறுசிலர் ‘ங்ஙொய்யால என்றும் இன்னும் சிலர் ’கொய்யால’ என்றும் உச்சரிக்கின்றனர். ஒரே சொல்லின் இத்தகைய முப்பரிமாணத் தோற்றம் அறிவியல் அறிஞர்களிடையே பெரும் ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது தமிழின் புகழுக்கு ஓர் சான்றாகும். ’ங்கொய்யால’ என்கிற ஒரு வார்த்தையால் உலக விஞ்ஞானிகளில் பலரும் தமிழ் மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டுவர் என்று காக்கைப் பாடினியாரும், எரிபத்த நாயனாரும் தமது பாடல்களில் அன்றே சொன்னது இப்பொழுது மெய்யாகிக்கொண்டிருக்கிறது.


நமது கடமை

  'ங்கொய்யால’ என்ற வார்த்தை தமிழ் மொழிக்கே உரித்தான ஒன்றாகும். இதன் அருமை பெருமைகளையும், இதன் வரலாற்றைப் பற்றியும் எதிர்வரும் சந்ததிகளுக்குச் சொல்லித்தரவேண்டியது நமது கடமையாகிறது. அதற்காகவே இக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரையை பிரிண்ட் எடுத்து வீட்டில் ப்ரேம் பண்ணி வைத்துக்கொள்வது, துண்டுச் சீட்டுகளில் அச்சடித்து வெளியிடுவது,செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் வெளியிடச் செய்வது, இணையத்தில் வெளியிடுவது , புத்தகங்களின் மூலம் விளம்பரப்படுத்துவது , புறாவின் காலில் கட்டிவிட்டு வேறு நாடுகளுக்குத் தூதனுப்புவது போன்றவற்றின் மூலம் ‘ங்கொய்யால’வை நாம் தலைமுறை தாண்டியும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

முடிவுரை 

  இக்கட்டுரையின் மூலம் தமிழில் ஆயிரமாயிரம் சொற்கள் இருந்தாலும் ‘ங்கொய்யால’ என்கிற இச்சொல்லைப் பயன்படுத்தாதவர் தமிழராகவோ, இந்தியராகவோ,ஆசியக்கண்டத்தைச் சேர்ந்தவராகவோ, பூமியைச் சேர்ந்தவராகவோ ஏன் மனிதராகக் கூடக் கருதப்படமாட்டார் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது. எனவே இந்தக் கட்டுரையை சமச்சீர் கல்வியில் சேர்ப்பதன் மூலமும், கல்லூரியில் பாடத்திட்டமாக அமல்படுத்துவதன் மூலமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தலாமென்றும் கூறிக்கொள்கிறேன். மேலும் ’ங்கொய்யால’ பற்றி ஆய்வுசெய்யும் ஆய்வு மாணவர்களுக்கு இக்கட்டுரை பலவிதத்தில் உதவிபுரியும் என்பதும் திண்ணம்.






Monday, October 24, 2011

நகல் (சவால் சிறுகதை - 2011)

முன்குறிப்பு : இந்தப் பதிவு பரிசல்காரர் அவர்களின் சவால் சிறுகதைப் போட்டிக்கான எனது சிறுகதை.

’படியெடுத்தல்’ என்னும் குளோனிங் உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் இந்தியாவில் மட்டும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அறிவியல் கண்டுபிடித்த பெரும்பாலானவை ஆக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதை விட அழிவிற்காகவே பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வளர ஆரம்பித்த குளோனிங் என்கிற உயிரியல் துறை இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அசுர வளர்ச்சியடைந்து மாபெரும் அழிவு சக்தியாகப் பரிணமிக்கத் தொடங்கியிருந்தது. 

சென்னையின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளால் வீட்டிலிருந்து கிளம்பிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஐ.ஜி அலுவலகம் முன்பாக வந்து நின்றான் விஷ்ணு. அவனது உருவத்தை உள்வாங்கிய அந்தத் தானியங்கிக் கதவு “ வணக்கம் விஷ்ணு! 2040 ஆம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி தங்களின் வருகை பதிவு செய்யப்பட்டது “ என்று ஒலித்தவாறு தனது வாயைத்திறந்து விஷ்ணுவை விழுங்கிக்கொண்டது. 

விஷ்ணு காவல்துறையின் மிகமுக்கிய உளவாளி. பெரும்பாலான வழக்குகளை மிக எளிதாக முடிப்பதற்கு உதவியிருக்கிறான். அவனது அபாரத் திறமையைக் கண்டு வியந்த ஐ.ஜி சரவணனுக்கு இவன் மீது தனி மரியாதை இருந்தது.

ஐ.ஜி அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எஸ்.பி கோகுல் எதிர்ப்பட்டார்.

“ஹே , கோகுல் ! அந்த பேங்க் கேஸ் என்னாச்சு ? “

” அது பயங்கரக் குழப்பமா இருக்கு. மேனேஜரக் கேட்டா அந்த பணம் ட்ரான்ஸ்பர் ஆன ஏழு நாளும் நான் ஊர்லயே இல்ல. யாரோ கடத்தி வச்சிருந்தாங்கனு சொல்லுறாரு. ஆனா இரண்டு நாள் தான் லீவு எடுத்தாரு , மத்தபடி அவர் தினமும் வந்தார்னு பேங்க் ஸ்டாப்ஸ் சொல்லுறாங்க. அவர் வந்திட்டு போனதுக்கான எல்லா ஆதாரமும் இருக்கு. அவர் நான் வரலைனு சத்தியமே பண்ணுறார். என்ன பண்ணுறதுனே தெரியல! “ அலுப்பாகக் கூறினார் கோகுல்.

" அது பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு, இரு தலைய பார்த்துட்டு வந்திடறேன்” என்று கோகுலின் பதிலை எதிர்பாராமல் ஐ.ஜி சரவணனின் அறைக்குச் சென்றான் விஷ்ணு.

விஷ்ணு உள்ளே நுழைந்ததையும் , கோகுலுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு தன் அறை நோக்கி வருவதையும் வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்த ஐ.ஜி.சரவணன் புன்னகையுடன் விஷ்ணுவை வரவேற்றார்.

” என்ன விஷ்ணு, கோகுல் என்ன சொல்றான் ? “

“ பேங்க் கேஸ்ல ஒன்னுமே புரியலனு பொலம்பிட்டிருக்கான்! “

“ அந்தக் கேசுல இவன் ரொம்ப குடையுற மாதிரி தெரியுது, கொஞ்சம் குழப்பிவிடேன்! “ என்று மர்மமாய்ப் புன்னகைத்தார் ஐ.ஜி.

“ கண்டிப்பா பாஸ்! அதுக்குத்தான் க்ளூ கிடைச்சிருக்குனு சொல்லிட்டு வந்திருக்கேன். இப்பப் பண்ணப்போற குழப்பத்துல அந்தக் கேஸ் பக்கமே தல வச்சுப் படுக்க மாட்டான்! “ என்று கண்ணைச் சிமிட்டியவாறே விடைபெற்றான் விஷ்ணு.

ஐ.ஜி அறையிலிருந்து வெளியேறி தனது அறையை அடைந்து கோகுலை எப்படிக் குழப்பலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது எதிரிலிருந்த குளிர்பதனப் பெட்டி கண்களில் பட்டது. அதன் பெயரான Swathika என்பதை முதலில் எழுதிக்கொண்டான்.  தொடர்ந்து அதன் மாடல் எழுத்தான W என்பதையும் எழுதிக்கொண்டான். பின்னர் உள்ளிருந்த குளிர்பானமான HUSK (2030 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட குளிர்பானம்) என்பதின் முதல் எழுத்தையும் அதன் எண்ணிக்கையையும் சேர்த்து H2 என்று எழுதினான். பிறகு இரண்டாவது வரிசையில் இருந்த Fanta பாட்டில்களையும் அதன் எண்ணிக்கையையும் சேர்த்து 6F என்றும் எழுதிக்கொண்டு பிரிண்டரின் வாய்ஸ் சென்சாரில் அந்த இரு வாசகங்களையும் கூறினான். மறுநொடி இரு துண்டுச் சீட்டுகளை வெளியில் துப்பியது. ஒன்றில் “ Mr.கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு “ என்றும் மற்றொன்றில் “ Sir, எஸ்.பி கோகுலிடன் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு” என்றும் வந்திருந்தது.

இரு துண்டுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டு தன் அறையிலிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். “ இது சரியா இருக்காதே! “ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு அறையின் மத்தியிலிருந்த மற்றொரு இருக்கைக்குச் சென்றான். எதிரில் இருந்த டேபிளில் இரு துண்டுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்தப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவனது iPhone  “ Vishnu Informer " காலிங் என்றது.

“ இதென்னடா இது, நம்ம போன்ல இருந்து நம்மளுக்கே கால் வருது! “என்று நினைத்தவாறே அழைப்பை ரிசீவினான். எதிர்முனையில் கோகுல்.

“ யோவ், என்னோட போன எடுத்துட்டுப் போயிட்ட. உன் போன் இங்க இருக்கு. இதுக்குத்தான் ஒரே மாடல் போன் வாங்கக் கூடாதுங்கிறது! “ 

“ இரு வரேன். உன் க்ளூவும் எடுத்துட்டு வரேன்! “ என்றாவாரே கிளம்பளானான் விஷ்ணு. இவை எல்லாவற்றையும் விஷ்ணுவின் தலைக்கு மேலிருந்த கேமரா இந்தக் கண்ணில் வாங்கி அந்தப் பக்கமிருந்த ஹார்ட் டிஸ்கில் சேமித்துக்கொண்டிருந்தது.

எஸ்.பி கோகுலிடம் அவனது போனையும், க்ளூவையும் கொடுத்துவிட்டு “ இதுதான் எனக்குக் கிடைச்ச க்ளூ, எப்படியாவது ட்ரை பண்ணு. எனக்கு அவரசமா ஒரு வேலை இருக்கு! “ என்று கூறிவிட்டு மீண்டும் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான் விஷ்ணு.

”அப்பாடா! எப்படியோ ஒரு தொல்லை தொலைஞ்சது! “ என்றவாரே ஆயாசமாய் இருக்கையில் அமர்ந்து டையைக் கொஞ்சம் இறக்கிவிட்டுக்கொண்டே மேலே நிமிர்ந்ததும் அதிர்ந்தான்.

“அடச்சே! இத எப்படி மறந்தேன்? “ என்றவாரே ஆத்திரத்தில் ஒரு சுத்தியலை எடுத்து மேலே சுற்றிக்கொண்டிருந்த கேமராவின் கண்களைக் குருடாக்கினான்.

சட்டென கணினையை ஆன் செய்து மெயின் சர்வரிலிருந்து காவல்துறை உயரதிகாரிகளைப் பற்றிய தகவல்களை டவுன்லோடினான். தரவிறக்கும்போதே நேரடியாகத் தனது தொலைபேசியிலிருந்த மெமரிக்கார்டிற்கும் தகவல்களைப் பறிமாற்றிக்கொண்டு “ BOSS " என்றா எண்ணிற்கு அழைத்தான். எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும் கான்பிரன்ஸ் மூலம் ஐ.ஜி.சரவணனையும் தொடர்புகொண்டு

“Boss, எனக்குக் கொஞ்சம் ஆபத்து. எஸ்.பி.கோகுல குழப்ப நினைச்சு நான் எடுத்த பிரிண்டவுட் எங்க கேமராவுல பதிவாகிருச்சு. என்ன செய்யட்டும்? “

“ உடனே புறப்பட்டு நம்ம லேபுக்கு வந்துடு, ஐ.ஜி க்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே ? “

“ இல்ல சார், நோ ப்ராப்ளம்! “ 

“ சரி வா “ என்று இணைப்பைத் துண்டித்தார் டாக்டர் ரஃபி.

சரியாக அரைமணி நேரத்தில் விஷ்ணு ரஃபியின் லேபுக்கு வந்துசேர்ந்தான்.

“ என்ன விஷ்ணு ? ஒன்னும் பிரச்சினை இல்லையே ? “

“ இல்ல பாஸ். போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு வந்துட்டேன்! “

“ எங்க மண்ணத் தூவுனீங்க ? நாங்கதான் வந்துட்டோமே! “ என்றவாறு துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார் எஸ்.பி.கோகுல்.

” கோகுல், கிட்ட வராதீங்க. நான் நினைச்சா இந்தக் கட்டிடத்த இப்பவே தரை மட்டமாக்கிடுவேன். இந்த லேபோட நாலு மூலைலையும் நியூக்ளியர் வெப்பன்ஸ் இருக்கு. எல்லாமே சக்தி வாய்ந்த புளூட்டேனியம் - 239 குண்டுகள். உங்களால இந்த சிட்டியே நாசமா போகனுமா ? “ என்று மிரட்டினார் டாக்டர் ரஃபி.

“அது முடியாது பாஸ், எல்லாத்தையும் புடுங்கிட்டேன்! ( கொஞ்சம் லோக்கல் தமிழில் பேச நினைத்து புடுங்கிட்டேன் என்றான்) “ என்றான் விஷ்ணு.

“ விஷ்ணு! என்ன சொல்ற ? “

“ ஆமா பாஸ், சாரி இனி எதுக்கு பாஸ்னு நடிச்சிட்டு ? உங்க லேபோட டோட்டல் கண்ட்ரோல் என் கைல. இனி நீங்க நேரா ஜெயிலுக்குப் போலாம்”

” நீங்களும்தான் மிஸ்டர் விஷ்ணு! “ என்றார் எஸ்.பி.கோகுல்.

” நான் எதுக்கு ? “

” உங்களுக்கும் ஐ.ஜி. சரவணனுக்கும் , டாக்டர் ரஃபிக்கும் இருந்த தொடர்ப நாங்க கண்டுபிடிச்சிட்டோம். ஐ.ஜி ய அரெஸ்ட் பண்ணியாச்சு. இந்த போட்டோல

இருக்கிறது கூட என்னை டைவர்ட் பண்ண நீங்க போட்ட ப்ளான்னு ஐ.ஜி எங்கிட்ட சொல்லிட்டார்”

” நீங்க அரெஸ்ட் பண்ணினது ஐ.ஜி னா இங்க இருக்கிறது யாரு ? “ அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அறையைக் காட்டிக் கேட்டான் விஷ்ணு.

அறையைத் திறந்து பார்த்த எஸ்.பி.கோகுல் சற்றே அதிர்ந்தார். அறைக்குள்ளே ஐ.ஜி சரவணனைப் போல ஒருவரும் விஷ்ணுவைப் போல ஒருவரும் இருந்தனர்.

“ இங்க என்ன நடக்குது ? இவுங்க யாரு ? அச்சு அசலா ஐ.ஜி மாதிரியே இருக்கார் ? “ கேள்விகளை அடுக்கினார் கோகுல்.

” இவர்தான் உண்மை. நீங்க அரெஸ்ட் பண்ணியிருக்கிறதுதான் மாதிரி! “ விஷ்ணு பதிலளித்தான்.

“ ஒன்னும் புரில! தயவுசெஞ்சு விளக்கமா சொல்லுங்க“

” நான் சொல்லுறத விட டாக்டர் ரஃபி சொன்னா புரியும்னு நினைக்கிறேன்! “

டாக்டர் ரஃபி தொடரலானார். ” க்ளோனிங் துறைல எனக்கு 2030ல நோபல் பரிசு கிடைச்சது. அதாவது ஒரு மனிதனோட உயிருள்ள ஒரு செல்லை மட்டுமே வச்சுட்டு செல்களின் வளர்ச்சிய துரிதப்படுத்தினா வெறும் 7 நாள்ல அவர மாதிரியே அச்சு அசலான இன்னொரு மனிதனை உருவாக்கிடலாம்கிறதுதான் அந்த ஆராய்ச்சி.குளோனிங் முறை ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஏழு நாள்ல ஒரு மனிதனை உருவாக்கலாம்கிற என்னோட ஆராய்ச்சிக்காகத்தான் நோபல் பரிசு குடுத்தாங்க. ஆனா இந்தியாவுல க்ளோனிங் செய்யக்கூடாதுனு தடை இருந்ததால அரசாங்கத்துக்குத் தெரியாமதான் இந்த லேபக் கட்டினேன். என்னோட கடந்த பத்து வருட ஆராய்ச்சியின் பயனா வெறும் இரண்டே நாள்ல ஒரு க்ளோன் மனிதனை உருவாக்குற அளவுக்கு வளர்ந்திட்டேன். அதே சமயத்துல அந்த மனிதனோட சிந்திக்கும் ஆற்றல கட்டுப்படுத்தி நாம சொல்லுற வேலைய செய்ய வைக்க திட்டம் போட்டேன். அதையும் கண்டுபிடிச்சேன். அத டெஸ்ட் பண்ணிப்பார்க்கத்தான் அந்த பேங்க் மேனேஜரக் கடத்தி அவர் மாதிரியே ஒரு க்ளோன் உருவாக்கி அந்த க்ளோன் மூலமா அந்த பேங்க்ல இருந்த பணத்த கொள்ளையடிச்சேன். அது வெற்றிகரமா முடிஞ்சதால இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கு போலீஸ் நம்ம கைல இருந்தா வசதியா இருக்கும்னு நினைச்சு போலீஸ் ஐ.ஜி. சரவணனை கடத்தி அவரோட க்ளோன போலீஸ் ஐ.ஜி யா மாத்தினேன். அதே சமயத்துல விஷ்ணு வும் என் கைல மாட்டினார். ஒருவேளை இவர் உண்மையைக் கண்டுபிடிச்சிடுவாரோன்னு பயந்து இவரோட க்ளோனையும் உருவாக்கி அந்த க்ளோன் மூலமா எல்லோரையும் கவனிச்சுட்டு வந்தேன். ஆனா நான் உருவாக்கின விஷ்ணுவோட க்ளோன் எப்படி எனக்கு எதிரா மாறிச்சுனுதான் தெரியல? “ சோகமாய் முடித்தார் ரஃபி.

அது எப்படினு நான் சொல்லுறேன் என்றவாரு ஆரம்பித்தான் அசல் விஷ்ணு. ”உங்க முன்னாடி இப்ப நின்னுட்டிருக்கிறது நீங்க தயாரிச்ச V1 (விஷ்ணு 1 ) க்ளோன் இல்ல. உங்க பாசைல சொல்லப்போனா இது V ஜீரோ. அதாவது நீங்க தயாரிக்கிறதுக்கு முன்னாடியே நான் தயாரிச்ச என்னோட க்ளோன் இது. எனக்கு அந்த பேங்க் கேஸ்ல கிடைச்ச கொஞ்ச தகவல்களை வச்சு சில விசயங்களைக் கண்டுபிடிச்சேன். அதே சமயம் ஐ.ஜி யும் ஒரு ரண்டு நாள் லீவு போட்டார். ஆனா எனக்குத் தெரியாம அவர் லீவு போட்டு நான் பார்த்ததில்ல. சோ அவர் லீவு முடிஞ்சு ஆபீசுக்கு வந்ததும் அவர பாலோ பண்ண ஆரம்பிச்சேன். அவர் ஆபீஸ் முடிஞ்சதும் நேரா உங்க லேபுக்குத்தான் வந்தார். உங்க லேபுக்கு முன்னாடி இருந்த உங்க பேர பத்தின செய்திகளைத் தேடினபோதுதான் நீங்க ஒரு க்ளோனிங் எக்ஸ்பர்ட்னு தெரிஞ்சிக்கிட்டேன். உடனே அந்த பேங்க் மேனேஜரப் போய்ப் பார்த்தேன். அவரும் தன்னை திடீர்னு ஒருநாள் கடத்திட்டுப் போய் உடம்புல இருந்து கொஞ்சம் சதைய வெட்டிட்டு ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வச்சிருந்ததாவும் , ஏழு நாளுக்கு அப்புறம் திறந்துவிட்டுட்டதாகவும் சொன்னார். அப்பவே நான் இது கண்டிப்பா க்ளோனிங் மேட்டராத்தான் இருக்கும்னு சந்தேகப்பட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே நான் என்னோட க்ளோன தயாரிச்சிருந்தேன். உங்க க்ளோன்ஸ் மாதிரி சிந்திக்கத் தெரியாத க்ளோன் இல்ல இது. என்னை மாதிரியே ரொம்ப நல்லா சிந்திக்கும் திறன் வாய்ந்த க்ளோன். என்னோட க்ளோனான இப்ப உங்க முன்னாடி நின்னுட்டிருக்கிற விஷ்ணுவ ஆபீசுக்குப் போகச் சொல்லிட்டு நானா ப்ளான் பண்ணி உங்க கைல சிக்கினேன்” என்று முடித்தார் விஷ்ணு.

“ ஆனா நான் உங்கள கடத்தின ரண்டு நாள்ல உங்களோட க்ளோன தயாரிச்சு உங்க ஆபீசுக்கு அனுப்பி வச்சேனே ? “ குழப்பமாகக் கேட்டார் ரஃபி.

“ அந்தக் குளோனப் பிடிக்கிறதுக்குத்தான் இத்தன ட்ரிக்ஸ் பண்ணினேன். நீங்க என்னைக் கடத்தின இரண்டு நாள்ல என்னை மாதிரியே ஒரு க்ளோன் தயாரிச்சு எங்க ஆபீசுக்கு அனுப்புவீங்கனு தெரியும். அது ஆபீஸ் டைம் போக மிச்ச நேரம் இங்க தான் இருக்கும்னு தெரியும். சோ நீங்க தயாரிச்ச V1-அ கடத்தி என்னோட வீட்டுல அடைச்சு வச்சிட்டுத்தான் என்னோட க்ளோன் அதாவது இப்ப உங்க முன்னாடி நிக்கிறானே இவன் இந்த ஏழு நாளா இங்க வந்திட்டு இருந்தான். உங்க லேப்ல இருக்கிற எல்லா ரோபோட்ஸ் அப்புறம் தற்காப்பு பொருட்கள் எல்லாத்தையும் உங்களுக்குத் தெரியாமயே அப்புறப் படுத்திட்டான்”

” ஆனா நீங்க எதுக்காக எனக்கு தப்பான ஒரு க்ளூ ( S W H2 6F) குடுத்துட்டு கேமராவையும் உடைச்சீங்க ? “ எஸ்.பி கோகுல் ஆர்வமாகக் கேட்டார்.

விஷ்ணுவின் முதல் க்ளோன் பேச ஆரம்பித்தான். ” உண்மைல நம்ம ஆபீஸ்ல யாரெல்லாம் க்ளோன்னு தெரியல. கூடவே யாரெல்லாம் டாக்டர் ரஃபியோட ஆளுங்கன்னு தெரியல. சோ ஒருவேளை நான் போய் இந்த மாதிரி ஐ.ஜி ய கடத்தி வச்சிருக்காங்கனு சொல்லி அவுங்க டாக்டரோட ஆளுங்களா இருந்து இவர் தப்பிச்சிட்டா என்ன பண்ணுறதுனு பயமா இருந்துச்சு. அதனால என் மேல சந்தேகம் வரவைக்கணும்னுதான் அந்த மாதிரி துண்டுச்சீட்டுல ரண்டு வாசகங்கள பிரிண்ட் எடுத்து கேமராவுல படுற மாதிரி வச்சிட்டு , அப்புறம் டென்சனாகி கேமராவ உடைக்கிறமாதிரி உடைச்சேன். ஒருவேளை ரஃபியோட ஆளுங்க அதப் பார்த்தா ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க. உண்மையான போலீஸ் ஆளுங்க பார்த்தா என்னை பாலோவ் பண்ணுவாங்கனு ப்ளான் பண்ணினேன்.அதோட என்னோட மொபைல நீங்க ஒட்டுக்கேக்கனும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் போலீஸ் ஆபீசர்ஸ்சோட இம்பார்ட்டண்ட் பைல்கள மெயின் சர்வர்ல இருந்து என்னோட் யூசர்நேம் குடுத்து டவுன்லோட் பண்ணினேன். அப்படி பண்ணினா என்னோட மொபைல் ஒட்டுக்கேக்கப்படும்னு எனக்குத் தெரியும். அதோட அதே சமயத்துல அங்க இருக்கிற ஐ.ஜி க்கும் இதுல தொடர்பு இருக்குனு தெரியப்படுத்த அவருக்கு கான்பரன்ஸ் போட்டேன். எல்லாமே நான் நினைச்ச மாதிரி ஜெயமா முடிஞ்சது” என்று சிரித்தான் வி-ஜீரோ என்னும் விஷ்ணு.





Tuesday, September 27, 2011

மறுபிறவி

முன்குறிப்பு : அதீதம் இதழில் வெளிவந்த எனது சிறுகதை இது.

எமனுக்குக் கொஞ்சம் கூடக் கருணை என்பதே கிடையாது. எத்தனை எத்தனை உயிர்களை எடுக்கிறான்? எவ்வளவு முக்கியமான நேரத்திலெல்லாம் எள்ளவும் கருணையில்லாம் அமாவாசை இருட்டில் மின்சாரத்தைப் பிடுங்கியதுபோல உயிரைப் பிடுங்குவதில் அப்படியென்ன சந்தோசமோ தெரியவில்லை. இதற்கு விதியின் விளையாட்டு என்று பெயர் வேறு. மூடர்கள். எமலோகத்திற்குச் செல்லும் எவரேனும் இதைப்பற்றிப் பேசியிருந்தால் இப்படியெல்லாம் நிகழுமா என்ன?

இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்னர் ராமசாமியின் உயிரையும் எடுத்துகொண்டுவிட்டான் அந்தப் படுபாதகன். ராமசாமி அப்படியென்ன தவறு செய்தார்? அட போன் மாதம்தானே தனக்கு 92 வயது பிறந்துவிட்டதென்று வெள்ளைப் பனியனும், பச்சைக் கோமணுமுமாக தட்டில் மிட்டாயுடன் ஊரெல்லம் கொடுத்துக்கொண்டிருந்தார். அதற்குள் இந்தப் பாவியின் பார்வை பட்டுத் தொலைந்துவிட்டது. எல்லாம் விதியென்று சொல்லியே சமாளித்துக் கொள்ளவேண்டியுள்ளது.

நம்பியூரில் ராமசாமியைப் பற்றி தெரியாதவறே இருக்க முடியாது. மிகவும் நல்லவர். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டுமே பக்கத்துவீட்டுக் கோழிகளை லபக் என்று பிடித்துக் குழம்பு வைப்பார். அந்தப் பாவத்தை அடுத்தவருக்குத் தரக்கூடாதென திருடிய கோழி முழுவதையும் தானே தின்று தீர்ப்பார். அட குழம்பு வெந்துவிட்டதா என்று சோதனை கூட அவரேதான் செய்வார். ஒருமுறை தவறுதலாக அவரது மனைவி ஒரு துண்டினை எடுத்து வாயில் போடும்போது பார்த்துவிட்டார். அன்றிலிருந்து திருட்டுக்கோழி சமைப்பதற்கென்றே தனியொரு அறையை ஏற்படுத்திக்கொண்டுவிட்டார்.

சில சமயங்களில் ஆடுகளையும் திருடுவார். ஆனால் ஏழ்மையான கன்னங்கள், உடல்கள் ஒட்டிப்போய் எலும்பும் தோலுமாய் இருக்கும் ஆடுகளென்றால் இவருக்குத் தனிக் கருணையுண்டு. அவற்றை உயிரே போகும் நிலையிலும் திருட நினைக்க மாட்டார்.வாஞ்சையுடன் தடவிக்கொடுப்பார். அந்தத் தடவலில் சீக்கிரமே கொழுப்பேறி பெரிதாக வளர்ந்து தன் கைக்கு அகப்பட வேண்டும் என்ற கருணை இருக்கும். நல்ல கொழுத்த ஆடுகளென்றால் உடனே அதற்கென நாட்களைக் குறித்துவிடுவார். அதன் கொட்டத்தை அடக்கப்போவதாக இவருக்கு நினைப்பு. அதிலும் அடுத்தவர் வீட்டு ஆட்டின் கொட்டத்தை அடக்குவது அவர்களை அடுக்குவதாகவே எண்ணிக்கொள்வார்.

ஆனாலும் மிகவும் நல்லவர். திங்கள் , சனிக்கிழமைகளில் யாரைப் பற்றியும் அடுத்தவரிடம் புறம் பேசமாட்டார். மற்ற நாட்களில் மட்டும் தான் கேட்ட செய்தியைப் பற்றி கொஞ்சம் கற்பனை செய்து அடுத்தவர் காதுகளில் போட்டு வைப்பார். அதிலும் அடுத்தவருக்குத் தீங்கு செய்யும் நோக்கம் இருக்காது. நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்திலேயே இது போன்ற செய்திகளைப் பரப்புவார். உதாரணத்திற்கு யாரேனும் ஒரு ஆணும் பெண்ணும் பொது இடத்தில் நின்று பேசிக்கொண்டால் “ அவுங்க ரண்டு பேரும் கூட்டிட்டு ஓடிப் போயிட்டாங்க!” என்று கொஞ்சம் மட்டும் கற்பனை கலந்து சொல்வார். கேட்டால் கற்பனை செய்வது நல்லதென்பார். இப்படி அருமையான மனிதரையும் விட்டுவைக்கப் பொறுக்கவில்லை அந்த எமனுக்கு.

மூக்குப்பொடி என்றால் கொள்ளைப் பிரியம் ராமசாமிக்கு. ஒருமுறை உள்ளூர் மளிகைக் கடையில் கடைக்காரன் ஏமாந்த சமயமாகப் பார்த்து ஒரு டஜன் மூக்குப்பொடி டப்பாக்களை அபேஸ் செய்திருக்கிறார். பீடி , மூக்குப் பொடிக்கெல்லாம் செலவு செய்யக்கூடாதென்பதும் அவரது கொள்கைகளில் முக்கியமான ஒன்று. யாரேனும் தெரிந்தவரை வழியில் பார்த்தால் அப்படியே நலம் விசாரிக்கும் சாக்கில் நான்கைந்து பீடிகளை இனாமாக வாங்கி வைத்துக்கொள்வார்.பீடிக்கு அடிமையொன்றும் இல்லை. யாருமே வரவில்லையென்றாலும் கடைக்குப் போய் பீடியெல்லாம் வாங்கிவிடமாட்டார். ஆனால் இதுவரையிலும் அப்படியொரு துர்ப்பாக்கிய நிலை வந்ததில்லை. யாரேனும் ஒருவர் ராமசாமி குடிக்க வேண்டிய பீடிகளை வாங்கிக் கொண்டுதானிருக்கின்றனர்.

வீரத்திலும் ஊர் மெச்சும் வீரர்தான். செத்த பாம்புகளை இரண்டடி தூரத்திலிருந்தே கல்லால் அடித்தே கொன்றுவிடுவார். இதுவரை இப்படி எத்தனையோ பாம்புகளைக் கொன்றிருக்கிறார். பாம்புகள் மட்டுமா என்ன? ஒரு முறை வெறி பிடித்த நாயைத் துரத்தியடித்ததே இவரது வீரத்தை இன்னும் பத்துத் தலைமுறைகளுக்குச் சுமந்து செல்லும். அப்பொழுது இவர் ஒரு அரசுப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார் அவ்வளவுதான். நூறடி தூரத்தில் வந்த இந்த நாயைக் கண்டு இவர் அலறிய அலறலில் மிரண்டு போய் அந்த பேருந்தின் ஓட்டுனர் தாறுமாறாக வண்டியைச் செலுத்தி அந்த நாய் மீது விட்டுவிட்டார். இவரது சாதுர்யத்தை ஊரே கொண்டாடியது. அவர் புகழ் பாட ஆரம்பித்தால் நொடிகள் மணிக்கணக்கில் உருளும்!

உயிரை எடுத்ததுதான் எடுத்தான், ஒரு பத்து நிமிடம் கழித்தாவது எடுத்துத் தொலைத்திருக்கலாம். சரியாக புதையலப் பற்றிச் சொல்லிமுடிக்கும் முன்பா பெட்ரோல் தீர்ந்து நின்று போன வண்டியைப் போல உயிரைப் பிடுங்கவேண்டும்? எமனுக்குக் கொஞ்சமும் அறிவே கிடையாது. ஒரு பத்து நிமிடம் விட்டிருந்தால் அவனுக்கு என்ன குறைந்துவிடப் போகிறது? எல்லாம் கலிகாலம்.

ராமசாமியின் உடலிலிருந்து உயிர் பிரிந்ததும் அவருக்கு அவரது நினைவுகள் அப்படியே இருந்ததுதான் ஆச்சர்யம்.அவர் இறந்துவிட்டதை அவரால் உணர்வதற்கே சில நிமிடங்கள் பிடித்தது. படங்களில் காட்டுவது போல தன்னை யாரோ இரு கொம்பு முளைத்த அரக்கர்கள் வந்து அழைத்துச் சென்று எமனிடம் விடுவார்கள் என்று நினைத்தார். ஆனால் அப்படியொன்றும் நிகழவில்லை. சரி ஒருவேளை இன்று அவர்கள் விடுப்பில் சென்றிருக்கலாம் என்று நினைத்தவாரே எங்கோ பயணிப்பது போலக் கற்பனை செய்துகொண்டார். எப்படியும் எமலோகம் என்பது நிச்சயமாக புகை மூட்டத்துடன் இருக்கும் என்பது அவரது கற்பனை. அதுவரை தூங்கலாம் என்றெல்லாம் கற்பனை செய்துகொண்டிருந்த போது திடீரென ஒரு குரல். திகைத்துப் போய்விட்டார் ராமசாமி. ” இது எந்த இடம் ? “

” எந்த இடம்னா ? “ குரலின் கேள்வி

“ இல்ல நான் செத்துப் போயிட்டேன். அதான் இது எமலோகமா இல்ல சொர்க்கமா, நரகமா ? “ ஆச்சர்யம் அகலாமல் கேட்டார் ராமசாமி.

” எமலோகம் , சொர்க்கம் , நரகம்னுலாம் ஒன்னுமே இல்ல”

“ அப்ப சொர்க்கத்துல ஊர்வசி, ரம்பை , மேனகை எல்லாம் நடனமாடுவாங்கனு சொல்லுறது ? “ எப்போது எந்தக் கேள்வியைக் கேட்பது என்ற விவஸ்தை இல்லாமல் கேட்டுத் தொலைத்துவிட்டார் ராமசாமி.

“ காலம் காலமாக பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் உங்கள் ஆணாதிக்க சிந்தனையில் உதித்த மிக மோசமான கற்பனை. அவர்கள் எதற்காக நடனமாட வேண்டும்? இங்கே ஆண், பெண் என்ற பேதமெல்லாம் இல்லை! “

நீண்ட நேர உரையாடலுக்குப் பிறகு ராமசாமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க புதையலைப் பற்றி அவரது குடும்பத்திற்கு அறிவிக்கும் வரையில் பூமியில் வாழ அனுமதியளிக்கப்பட்டது.

அன்றைய தினத்தின் எல்லா உயிர்களும் பிறந்திருந்தன. ஒரே ஒரு ஆட்டைத் தவிர!

அன்று இரவு நம்பியூருக்கு அருகில் இருந்த மற்றொரு ஊரான செவியூரில் ஒரு வளமான குடும்பத்தில் வாழ்ந்து வந்த ஆடொன்று மூன்று குட்டிகளை ஈன்றெடுத்தது. அதில் ஒரு குட்டியாக நமது ராமசாமி பிறந்திருந்தார். என்னதான் ஆட்டுக் குட்டியாகப் பிறந்திருந்தாலும் ராமசாமிக்கு அவரது பழைய நினைவுகள் அழிக்கப்படாமலும் தான் புதையலைப் பற்றிய செய்தியை தனது குடும்பத்திற்கு எடுத்துக் கூறாவே வந்திருப்பதும் ஞாபகத்தில் இருந்தது. தனது சகோதரர்களான மற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும் பார்த்தார். ஒருவேளை அவர்களும் மறு ஜென்மமோ என்று நினைத்தவர் சரி போகப் போகப் பேசிப் பழகிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டு எழுந்து நிற்க முயன்றது அந்த ஆட்டுக்குட்டி.

நாட்கள் நகர்ந்தன. ராமசாமி என்ற மனிதர் ஆட்டுக்குட்டியாக மறுபிறவி எடுத்திருப்பதை யாருமே கண்டுகொண்டதாகவோ அல்லது அதை நினைத்து ஆச்சர்யப்பட்டதாகவோ தெரியவில்லை. ராமசாமிக்கு நம்பிக்கை இருந்தது. யாரேனும் ஒருவருக்காவது தான் தான் ராமசாமியின் மறுபிறவி என்று தெரிவிக்கவேண்டும் என்று பலவாறு சிந்திக்கலானார். என்னதான் ஆட்டுக்குட்டியாகப் பிறந்திருந்தாலும் அவரது மனம் மனித மனமல்லவா ? அவரால் ஆட்டுக்குட்டியின் அன்றாட நடவடிக்கைகளைச் சரியாகச் செய்யமுடியவில்லை. ஒரே இடத்தில் மலம்,ஜலம் கழிப்பது அவருக்குப் பெரிய அருவருப்பை உண்டாக்கியது. ஆட்டுப் புழுக்கை அவ்வளவு துர்நாற்றம் இல்லாவிட்டாலும் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டார். பின்னர் புல்லை மேய்வது , ஓய்வு நேரத்தில் அதை லாவகமாக வாய்க்குக் கொண்டுவந்து அசை போடுவது என்று பல வேலைகளைக் கற்றுக்கொள்ள மிகச் சிரமப்பட வேண்டியிருந்தது. இவர் மனிதனாக இருந்தபோது ஆடுகளைப் பார்த்து “ இதுகளுக்கு என்ன திங்க வேண்டியது, தூங்க வேண்டியது. வேற என்ன வேலை இருக்குது?” என்று திட்டியது ஞாபகம் வரவே அதைத் தவறென உணர்ந்து கன்னத்தில் போட்டுக்கொள்ள நினைத்து கைகளைத் தூக்கினார். முன்னிரு கால்களும் நிலத்தில் டொம் என்று அடித்து வலியை உண்டாக்கியது.

எத்தனையோ முயற்சிகளைச் செய்துபார்த்தார் ஆடாகிப்போன ராமசாமி. ஒன்றும் பலிக்கவில்லை. கடைசிக் கட்ட நடவடிக்கையாகத்தான் இந்த முயற்சியை மேற்கொண்டார். இருந்தும் ஒருவகையில் பயமாக இருந்தது. ஒருவேளை தான் வாயைத் திறந்து பேசி, பேசும் ஆடென்று யாரேனும் சர்க்கசுக்கு அழைத்துச் சென்றுவிட்டால் என்ன செய்வதென்றும் ஒரு புறம் பயமாக இருந்தது. அந்த பயத்தினால்தான் இத்தனை நாட்களாகப் பேசமால் வேறு வழிகளில் முயன்று கொண்டிருந்தார். என்ன செய்வது ? வேறு வழியில்லையே! எனவே வாயைத்திறந்து தான் யாரென்பதையும் எதற்காக பூமிக்கு வந்திருக்கிறேன் என்பதையும் சொல்லிவிடவேண்டுமென நினைத்தார்.

அன்று விடிந்ததும் ராமசாமி தான் பேச வேண்டியதை மீண்டும் மீண்டும் மனதிற்குள் சொல்லி மனப்பாடம் செய்துகொண்டார். என்ன ஆபத்து வந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே இந்த முடிவிற்கு வந்திருந்தார். ஆனால் தான் பேசுவதால் தன் கொம்பை முறிக்கும் அளவுக்கு இப்படியொரு ஆபத்து வருமென்று கருதவில்லை. காலையில் வழக்கம்போல ஆட்டுப்புழுக்கைகளை அள்ளுவதற்காக ஆட்டின் சொந்தக்காரர் வந்திருந்தார். அவரிடம் நைசாக காதுகளில் சொல்லிவிடலாம் என்று நினைத்த ராமசாமி அவரின் காதருகில் சென்று “ என் பேரு ராம்சாமி , நான் போன ஜென்மத்துல நம்பியூர்ல இருந்தேன். ஒரு புதையல் பத்தி சொல்லுறதுக்காகத்தான் மறுபடி பொறந்து வந்திருக்கேன். நீ மட்டும் என்ன அங்க கொண்டுபோய் விட்டா உனக்கும் புதையல்ல பாதி குடுக்கச் சொல்லுறேன்! “ என்று சொன்னார். ஆனால் வெளியில் “ மேஏஏஏஏ” என்ற சத்தம்தான் வந்தது. ஆடு வளர்ப்பவரின் காது ஜவ்வு பிய்ந்து போனது போல ஆகிப்போனது. பக்கத்திலிருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தன்னால் முடிந்த மட்டும் ராமசாமியாகிய ஆட்டை அது ராமசாமி என்ற தெரிந்துகொள்ளும் ஆர்வமின்றி அடிக்கலானார். அந்த அடியில் ராமசாமியின் முன்பிறவியில் இல்லாத வசதியான கொம்புகளில் ஒன்று முறிந்து போயிற்று.

ஆனால் அந்தக் கத்தலில் ராமசாமிக்கு அவருக்கே தெரியாத நன்மை வரும் என்று அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. அவரது காட்டுக்கத்தலில் காது ஜவ்வு கிழிந்துபோன ராமசாமியின் முதலாளி அவரை விற்றுவிடுவதென்று முடிவுக்கு வந்திருந்தார். அந்த வாரத்தில் ஒருநாள் ராமசாமி சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ராமசாமியின் போன ஜென்ம ஞாபகத்தின்படி இது ஆட்டுச் சந்தை என்பதை அறிந்து கொண்டார். ராமசாமிக்குத் திடீரென ஒரு பயம் வந்தது. ஒருவேளை தன்னை யாரேனும் கசாப்புக் கடைக்கு வாங்கிச் சென்றுவிட்டால் தான் வந்த லட்சியம் என்னாவது என்று கண்ணீர்வடித்தார். ராமசாமிக்கு நொடிக்கு நொடி பயமாக இருந்தது. அப்பொழுதுதான் ராமசாமியின் ஊரில் கசாப்புக்கடை வைத்திருக்கும் ஒரு வியாபாரி வந்து ராமசாமியின் விலையைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

ராமசாமி முற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டார். எப்படியும் தன்னை அந்த கசாப்புக்கடைக்காரன் வாங்கிச் சென்றுவிடுவான் என்று பயந்து நடுங்கினார். போன ஜென்மத்தில் திருடித் தின்ற ஆடுகள் , கோழிகள் எல்லாம் நினைவுக்கு வந்தன. இருந்தாலும் கடைசியாக ஒருமுறை முயற்சித்துப் பார்க்கலாம் என்று பேசுவதற்காக முயற்சித்தார். இந்த முறையும் ”மேஏஏஏஏ” தான். ஒரு ”ஜூன்” கூட வரவில்லை. ராமசாமியின் கடைசி முயற்சியும் தோல்வி. ஆனால் கடவுள் அவரைக் கைவிடவில்லை. கசாப்புக்கடைக்காரன் விலை படியாமல் போய்விட்டான். பெருமூச்சு விட்டுக்கொண்டார் ராமசாமி. அப்போது அவருக்கு இன்னொரு ஆச்சர்யம் நடந்தது. ராமசாமியின் போன ஜென்மத்து மகன் அங்கே வந்துகொண்டிருந்தான். சொல்லிவைத்தாற்போல அவரசர அவசரமாக ராமசாமியை விலைக்கு வாங்கிக்கொண்டு அவரின் புது ஓனராகிக்கொண்டான்.

ராமசாமிக்கு சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. கடவுளுக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரியாமல் தனது மகனைப் பாசத்துடன் தழுவிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து அது முடியாமல் போகவே அவனது கால்களை லேசாக நக்கினார். ஆட்டின் வடிவில் இருப்பது தன் தந்தை என்று அறியும் ஆர்வமில்லாத அந்த முட்டாள் மகன் அவரை கயிற்றில் கட்டி இழுத்துச் செல்ல ஆரம்பித்தான்.என்னதான் ஆடென்றாலும் தன்னைத் தன் மகனே கயிற்றில் கட்டி இழுத்துச் செல்வதை நினைத்து வெட்கப்பட்டார் ராமசாமி. அதை விட வேறென்ன செய்யமுடியும் அவரால் ? இருந்தாலும் வீட்டிற்குச் சென்றதும் எப்பாடு பட்டேனும் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டிவிட வேண்டுமெனத் தீர்மானித்துக் கொண்டார்.

ராமசாமியைக் கூட்டிக்கொண்டு நேராக புதையல் இருக்கும் இடத்திற்குச் சென்றார் அவரது மகன். ராமசாமிக்கு ஆச்சர்யம். எப்படி நாம் நினைப்பது போலவே இவன் நடந்துகொள்கிறான்.? ஒரு வேளை நாம் மறுபிறவி என்பதை இவன் அறிந்துகொண்டானோ என நினைத்து மறுபடியும் அவனது காலை நக்கினார். இந்த முறை ஒங்கி அறைந்து விட்டான் அவரது மகன். ராமசாமிக்கு மறுபடியும் குழப்பம். சரி ஆனது ஆகட்டும் என நினைத்துக் கொண்டு அவனது பின்னே ஆடாகவே சென்றுகொண்டிருந்தார் ராமசாமி.

புதையில் இருக்கும் இடத்தை அடைந்ததும் அங்கே சிலர் குழி தோண்டிக்கொண்டிருப்பதைப் பார்த்ததும் ராமசாமிக்கு அதிர்ச்சி. எப்படி தனக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் இவர்களுக்குத் தெரிந்தது? அதையெல்லாம் விடுத்து இதை எடுப்பதற்கு எதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறார்கள்? குழப்பத்தில் இருந்த ராமசாமிக்கு “ ஏன்டா ஆடு வாங்கிட்டு வரதுக்கு இவ்ளோ நேரமா ? சீக்கிரமா வெட்டி தலைய உள்ள போடுங்க. பலி குடுத்துட்டுத்தான் புதையல வெளிய எடுக்கனும்! “ என்ற அவரது மற்றொரு மகனின் குரலைக் கேட்டுப் பதறிப்போனார். உடல் தானாகவே நடுங்க ஆரம்பித்தது. இப்போது பதறி என்ன செய்வது ? ஆடாக இருந்தாலும் உயிர் பயம் இல்லாமலா இருக்கும் ? எப்படித் தப்பிப்பது என்று சிந்திப்பதற்குள் அவரது ஆட்டுருவத்தின் தலை தனியாக குழிக்குள் வீசப்பட்டது.

இந்த முறையும் ராமசாமியின் உயிர் பறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் ஒன்றை மட்டும் அவர் புரிந்துகொண்டார். ஆடுகள் ஆடுகளாகவே பார்க்கப்படுகின்றன. ஆடுகள் தாத்தாக்களாகப் பார்க்கப்படுவதில்லை!

Monday, September 19, 2011

நேர்த்திக் கடன்

இப்படியொரு வினோதமான வேண்டுதலை திட்டமலை முருகப்பெருமான் அவர் பிறந்ததிலிருந்து கண்டிருக்க மாட்டார். எங்களூருக்குப் பக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம்தான் இந்த முருகன் கோவில். அதிக உயரம் என்றும் சொல்ல முடியாது, குட்டை என்றும் சொல்லிவிட முடியாது. அளவான 90 படிகள் மட்டுமே கொண்ட மலை. நெட்டை, குட்டை என்றதும் அடுத்து ஒல்லியா, குண்டா என்று கேட்காதீர்கள். ஒல்லியாக இருப்பதற்கு அது என்ன ஏணியா ?  அதெல்லாம் குண்டுதான். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. ராமாயண காலத்தில் அனுமன் சிரஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோனபோது சிதறி விழுந்த துண்டுதான் இந்த மலை என்று பேசிக்கொள்கிறார்கள். அது உண்மையா இல்லை யாரேனும் புழுகினிச்சித்தர் திரித்துவிட்ட கட்டுக்கதையா என்று தெரியவில்லை. ராமன், ராவணன், அனுமன் சண்டை ஒருபுறமிருக்க முருகன் எப்படி இதன் மேல் ஏறிச் சொந்தம் கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. எப்படியோ நில அபகரிப்புப் புகார் எழாமல் இருந்தால் சரிதான்.

அனேகமாக இந்தக் கோவிலுக்கு முருகன் வந்தது திருவிளையாடல் நடந்த காலத்திலாகத்தான் இருக்க வேண்டும். திருவிளையாடல் என்றதும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்த ஸ்ரேயாவைப் பற்றி கற்பனை செய்துகொண்டிருக்காதீர்கள். நான் சொல்லவந்த திருவிளையாடல் ஞானப்பழத்தால் பரமசிவன் குடும்பம் பிரிந்து முருகன் பழநிமலைக்குக் குடிவந்தாரல்லவா அந்தக் காலம். அப்பொழுதுதானே குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்ற வரம் கொடுக்கப்பட்டது. உண்மையில் அப்படி ஒரு சண்டை அவர்கள் குடும்பத்தில் வராமலிருந்து இந்த மலையில் முருகன் எழுந்தருளாமல் இருந்திருந்தால் இப்பொழுது நான் இப்படிப் புலம்பியிருக்கத் தேவையிருந்திருக்காது. யார் கண்டார்கள்? இது இல்லாமலிருந்தால் என் விதி வேறு வழியில் விளையாடியிருக்கும். என் போன்ற இளிச்சவாயர்கள் வாழ்க்கையில் விளையாடுவதில் இந்த விதிக்கு அப்படி என்ன சந்தோசமோ தெரியவில்லை. இங்கிலாந்து சென்ற நமது இந்திய கிரிக்கெட் அணிக்குத் துணையாக விளையாடியிருந்தாலாவது ஏதோ ஒரு போட்டியிலாவது ஜெயித்திருப்பார்கள், முட்டாள் விதிக்கு அதெல்லாம் எங்கே தெரிகிறது?

எங்கள் ஊரில் எல்லோருக்குமே இந்தக் கோவிலின் மீது அளவுகடந்த பக்தி. நானும் பக்தியுடன்தான் இருந்திருப்பேன் என் வாழ்வில் அப்படியொரு சதி நடந்திருக்காவிட்டால்! அந்தக் கோவிலின் பேச்சை எடுத்தாலே கோபம் கோபமாக வருகிறது. முருகன் மீது மட்டுமல்ல அனுமார் மீதும் கோபம்தான். ஒரு வேலையைக் கொடுத்தால் ஒழுங்காகச் செய்யாமல் இப்படியா ஊரெல்லாம் ஒழுக விடுவது? இருந்தாலும் வாராவாரம் சனிக்கிழமை கிடைக்கும் ஆஞ்சனேயர் கோவில் பிரசாதம் அமிர்தமாக இருக்கும். அது என்னவோ தெரியவில்லை இந்தக் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம் போல் உலகமெங்கும் சுற்றினாலும் கிடைக்காது. சீச்சீ.. இதென்ன ? எதிரி வீட்டுச் சாப்பாட்டைப் புகழ்ந்து பேச ஆரம்பித்துவிட்டேன். முதலில் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். சாப்பாடாம் பெரிய சாப்பாடு. இந்தக் கடவுளர்கள் செய்த துரோகத்துக்கு ஏழு ஜென்மம் உட்கார வைத்து உபசரித்தாலும் ஈடாகாது.

108 முறை மொட்டை அடிக்கவேண்டுமென்பது அவ்வளவு எளிதா என்ன? வருடம் ஒரு மொட்டை என்று கணக்கிட்டாலும் 108 வருடங்கள் ஆகிவிடுமே? வருடம் ஒரு முறை வரும் தை மாதத் தேர்த்திருவிழாவில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டுமாம். ஒரு முறை மொட்டையடித்துவிட்டால் மீண்டும் பழைய நிலையை அடைய எப்படியும் 6 மாதம் பிடிக்கிறது.வருடம் இரண்டுமுறை மொட்டை அடித்தாலும் 54 வருடங்கள் ஆகுமே! 54 வயதுவரை மொட்டையாகவே வாழவேண்டுமா? அறிவியல் வளர்ந்தென்ன பயன்?மொட்டையடித்தவுடன் முடி வளர்ந்துவிடும் அளவுகூட நாம் இன்னும் முன்னேரவில்லையே ? இந்த லட்சணத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் எங்கே செவ்வாய்க்கெல்லாம் போகப்போகிறார்கள்?

பள்ளிப்பருவம் வரை எனக்கு இதொன்றும் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. என் நண்பர்கள் மட்டும் கிண்டல் செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் அழகழகான பட்டப்பெயர்கள். எனக்கு மட்டும் மொட்டத்தலையன் என்ற பெயரே எப்பொழுதும். இருந்தாலும் இதுவும் நன்றாகவே இருந்தது. ஒரே ஒருமுறை மட்டும் உள்ளூர்ப் பிரச்சினை காரணமாக இரண்டுவருடம் தேர்த்திருவிழாவை நிறுத்திவைத்துவிட்டார்கள். அப்பொழுதெல்லாம் மிக்க அவமானமாயிருந்தது. பெண்களைப் போல ஜடை போட்டுக்கொண்டு , ஐயையோ! அதை நினைக்கவே வெட்கமாயிருக்கிறது. சில சமயம் நண்பர்கள் அதில் பூவை வேறு வைத்துவிடுவார்கள். நான் ஆணா இல்லை பெண்ணா என்று ஆசிரியரே ஒரு முறை குழம்பிப்போனார். அந்தச் சமயத்திலெல்லாம் ஊர்த்தலைவரின் மீது கடுங்கோபமாக இருந்தேன். ஒருமுறை கல்லைக்கொண்டு அவரது மண்டையை உடைத்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம் வழக்கம்போல வருடா வருடம் திருவிழா நடக்கிறது. நானும் வருடாவருடம் மொட்டை அடித்துக்கொண்டுதானிருக்கிறேன்.

நாட்கள் மொட்டையாகவே நகர்ந்தன. மீசை அரும்பத் தொடங்கியிருந்த காலத்தில் இது மிகக் கஷ்டமென்றும் சாபமென்றும் எண்ணத் தொடங்கினேன். என் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட என் நண்பன் வசந்து ஒரு யோசனை சொன்னான். “ 108 மொட்டை நீ அடிக்கனும் , அவ்ளோதானே? பேசாம மலையடிவாரத்துல ஒரு சலூன் கடை ஆரம்பிச்சு மொட்டையடிப்பதற்கு இலவசம்னு போர்டு போட்டுட்டா எப்படியும் ஒரு வாரத்துல முடிச்சிடலாம்” என்றான். எனக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது.

முருகக்கடவுளும் அவ்வளவு பெரிய அறிவாளியொன்றும் கிடையாது. போனவாரம் ராமசாமி மொட்டையடிப்பதாக வேண்டிக்கொண்டதை நம்பி அவனது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். போயும் போயும் முழுச்சொட்டையான அவனது வேண்டுதலை எப்படி நம்பினார். அவன் மொட்டையடிப்பதற்கு அவன் தலையில் அப்படி என்னதான் இருக்கிறது? கடவுள் இவ்வளவு முட்டாளாகவா இருப்பது? சரி எப்படியோ அவர் முட்டாளாக இருப்பது எனக்கும் நல்லதென்றே பட்டது.

ஒரு நல்ல நாளாகப் பார்த்து எங்கள் வீட்டில் இதைப்பற்றிச் சொன்னேன். பதறிப்போனார் எனது தாயார். “ மனுசன ஏமாத்தறதே தப்பு சாமி, இதுல சாமிய ஏமாத்துனா என்னாகுறது ? உனக்கு மொட்டையடிக்கிறதாதான் நேந்துக்கிட்டென், நீ மொட்டையடிக்கிறதா இல்ல!அப்படியேதும் குத்தம் நடந்தா அந்தக் கொறையப் போக்க மறுப்டி எத்தன மொட்டையடிக்கிறது?“ என்று புலம்பியழத்தொடங்கினார்.

அவளின் அழுகை கூட என்னைப் பாதிக்கவில்லை. ஒருவேளை இப்படி ஆரம்பித்து இது தெய்வகுத்தம் என்று சொல்லி மீண்டும் முதலிலிருந்து 108 மொட்டைகள் அடிக்கவேண்டுமென்று சொல்லிவிட்டால் ? நினைக்கும்போதே உடல் நடுங்குகிறது. பின் அந்த ஆசையைக் கைவிட்டுவிட்டேன்.

இந்த மொட்டையடிக்கும் வேண்டுதலில் கடவுளை மட்டும் திட்டிப் பயனில்லை. ஏன் கடவுளைத் திட்டுவதே தவறு. இதற்கெல்லாம் காரணம் என் அம்மாவும் அப்பாவுந்தான். மணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தையே இல்லையாம் இவர்களுக்கு. எத்தனையோ கோவில் குளமென்று சுற்றியும் பயனில்லையாம். மிக மனவருத்தமடைந்து தங்களுக்குக் குழந்தை பிறந்தால் இந்தக் கோவிலில் 108 மொட்டைகள் அடிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டார்களாம். அடுத்த பத்தாவது மாதத்தில் மொட்டையடிக்கச்சொல்லி தலையை நீட்டிகொண்டே நான் பிறந்துதொலைத்துவிட்டேன் போலும். என்ன அராஜகம் இது ? என் அனுமதியில்லாமல் இப்படியொரு வேண்டுதலா ? கடவுளின் பெயரை வைப்பது, மணி வாங்கிக்கொடுப்பது, படி கட்டுவதென்று வேண்டித் தொலைக்கவேண்டியதுதானே ?  அட இதை விடுங்கள். இவர்களுக்குத்தான் புத்தியில்லை.இந்தக் கடவுளுக்குமா புத்தியில்லை. 108 மொட்டையென்றதுமே பல்லை இளித்துக்கொண்டு என்னை இங்கே பிறப்பித்துவிட்டார் போலும். முடியாசை பிடித்த கடவுள்!

கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மொட்டையடிப்பதின் கொடுமையை முழுமையாக உணர்ந்தேன். எப்பொழுதும் மொட்டையாகவே இருப்பதால் ஏனோ வில்லன்களைப் பார்ப்பது போலவே என்னையும் பார்த்தனர். கருமம் பிடித்த திரைப்பட இயக்குனர்கள் வேறு வில்லன்களை மொட்டையாகவே காட்டித்தொலைக்கின்றனர். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. பெரும்பாலான வில்லன்கள் ஜடையுடன் திரிகிறார்கள். இதுமட்டுமா இந்தக் கல்லூரிப் பையன்கள் வேறு விதவிதமாக கட்டிங் செய்வதும் கலரடிப்பதுமாக வெறுப்பேற்றுகின்றனர். நான் எங்கே கலரடிப்பது? அட இதைக் கூட விட்டுவிடலாம். இந்தக் கணக்கு விரிவுரையாளரெல்லாம் பாக்கெட்டில் சீப்புடன் திரிவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவருக்குத் தலையில் வெறும் நாற்பத்தியிரண்டே முடிகள் தான். தோரயக்கணக்கெல்லாம் இல்லை. துல்லியமான எண்ணிக்கைதான். இரண்டு நாடகளுக்கு முன்னர் எண்ணிவிட்டேன். இன்று ஒன்றிரண்டு குறைந்திருக்கலாம். பஸ் ஸ்டாண்டில் சீப்பு விற்கும் பையன் கூட என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதாகவே தோன்றுகிறது. எனக்கும் ஒரு நாள் முடிவளரும் என்று அவன் சட்டையைப் பிடித்துக் கத்தவேண்டும் போலத் தோன்றும்.

நான் பெற்ற இந்த அவமானங்கள் என் எதிரிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. என் குழந்தைகளுக்கு முழம் முழமாக முடிவளர்த்து அழகு பார்க்கவேண்டுமென்று தோன்றியது. அப்பொழுதுதான் பகீரென்று ஒரு பயம். ஒருவேளை என் வாழ்நாள் முழுவதும் கூடி இந்த 108 மொட்டைகளை அடிக்கமுடியாமல் போயிவிட்டால்? எனது மிச்ச மொட்டைகள் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்குச் சென்றுவிட்டால் ? ஆண் குழந்தையென்றால் பரவாயில்லை. பெண் குழந்தையென்றால் நினைத்துப்பார்க்கவே கூசுகிறது. சொத்துச் சேர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை மொட்டைகளையா சேர்த்துவைத்துவிட்டுப் போவது?

இந்த எண்ணம் வந்தவுடனே இதோ முருகனைப் பார்க்க ஓடோடி வந்துவிட்டேன். இன்று இந்த நேர்த்திக்கடனுக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் என் சந்தததியே மொட்டையாக அலைய வேண்டியதுதான்.

இங்கே நிற்பவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல். ஒருவருக்கு வேலை வேண்டுமாம், இன்னொருவருக்கும் கல்யாணம் வேண்டுமாம், இன்னொருவருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு வேலைவாய்ப்பு அலுவலகம் , ஒரு கல்யாண புரோக்கிங் அலுவலகம் என்று முருகனுக்குக் கீழ் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அலுவல்கள் நடந்துகொண்டிருக்கிறது. என் வயதுப் பையன்கள் எல்லோரும் ஒரு நல்ல காதலி வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் அந்த வேலையை ஆரம்பித்தது போல எதிரில் நிற்கும் பெண்களை சைட் அடித்துக்கொண்டிருந்தனர். எனக்கு இதிலெல்லாம் ஆசையே இல்லை. என் சிந்தனை , செயல் லட்சியம் எல்லாமே இந்த மொட்டைகளை எப்படியாவது என் வாழ்க்கை முடிவதற்குள் அடித்து முடித்துவிடவேண்டுமென்பதே.

என் வேண்டுதல் உண்மையில் வினோதமானதுதான். எல்லோருமே தங்களுக்கு இது நடந்தால் இதைச் செய்கிறேன் என்றே வேண்டிக்கொண்டிருந்தனர். எனது வேண்டுதல்களெல்லாம் ஏற்கெனவே வேண்டிக்கொண்டதை திருப்பி வாங்கிக்கொள்ளச் சொல்லி வந்திருக்கிறேன். ஆம் 108 மொட்டைகள் என்ற நேர்த்திக்கடனிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லியே வந்திருக்கிறேன். இதற்கு எப்படி வேண்டுவதென்று தெரியவில்லை. இதற்கு என்னவென்று நேர்ந்துகொள்வது ? எல்லாவற்றிற்குமே நேர்ந்துகொண்டால்தான் வரம் கொடுத்துத் தொலைகிறார்கள் இந்தக் கடவுளர்கள். முதலில் வரம் கொடுக்கும் அதிகாரத்தை அவர்கள் கையில் இருந்து புடுங்கி ஏதேனும் பொது மனிதனிடம் கொடுக்கவேண்டும். வேண்டாம் வேண்டாம். அவர்கள் எல்லா வரத்தையும் எடுத்து சுவிஸ் வங்கிகளில் போட்டாலும் போட்டுத் தொலைத்துவிடுவார்கள்.

மொத்தத்தில் நான் இதுவரை 18 மொட்டைகளை அடித்துவிட்டேன். இதை வைத்துக்கொண்டு அந்த மிச்சமுள்ள 90 மொட்டைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுதல். இதற்கு பதிலாக நான் என்ன செய்வது ? காவடி எடுக்கலாமென்றால் ஒருவாரத்திற்கு பட்டினி இருக்கவேண்டுமாம். அது என்னால் முடியும் காரியமில்லை. சரி ஏதாச்சும் வேல் வாங்கிக் கொடுக்கலாமென்றால் உலோகப் பொருட்களின் விலை வேறு தாறுமாறாக ஏறிக்கொண்டுள்ளது. இந்தச் அரைக்காசு பெறாத வரத்திற்கு எதற்கு அத்தனை செலவு செய்யவேண்டும்.

ஆனால் முருகன் ஒன்றும் அவ்வளவு அறிவாளி இல்லையென்றாலும் முருகன் இப்போதுள்ள வேலைப்பளுவில் எனது வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாரா என்று தெரியவில்லை. அதனால்தான் இதோ இப்பொழுது முருகனிடமிருந்து அவரின் அண்ணன் விநாயகரிடம் வந்துவிட்டேன். இவரிடம் தான் எனது குறையை சொல்லி அந்தப் பிரச்சினையிலிருந்து விடுதலை பெற்றுத்தரச் சொல்ல வேண்டும். அண்ணனும் தம்பியுமென்றாலும் இவருக்கு யாருமே மொட்டையடிப்பதில்லை என்ற கவலை இல்லாமலா இருக்கும். அதனால்தான் இவரிடம் இப்படி வேண்டிக்கொள்ளப்போகிறேன். “ முருகனுக்கு அடிக்கிற 90 மொட்டைல இருந்து என்னைய காப்பாத்தினா அடுத்தவருச தேர்த்திருவிழாவுல உனக்கு ஒரு மொட்டை அடிச்சிக்கிறேன்” இப்பொழுது பாருங்கள் முருகனை எப்படியாவது இவர் ஏமாற்றித்தான் விடுவார். ஞானப்பழத்தைப் பெருவதற்காக இவர் செய்த தந்திரம்தான் நமக்கு முன்னரே தெரியுமல்லவா?


பின்குறிப்பு : இலக்கியத்தின் மீதுள்ள ஆசையால் எனது முதல் முயற்சி இது. குறையிருப்பின் தவறாமல் சுட்டுங்கள்.




Thursday, August 11, 2011

10,000 பரிசுப் போட்டி!

முன்குறிப்பு : 10,000 ரூபாய் பரிசுப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது! அறிவுசார் விளையாட்டுப்போட்டி :)

டெரர்கும்மி நண்பர்களின் சார்பில் 10,000 ரூபாய் அளவிலான HUNT FOR HINT என்ற பெயரில் பரிசுப்போட்டி ஒன்று 17.08.2011 அன்று துவங்கவுள்ளது.

முதல் பரிசாக 5,000 ரூபாய் ஒருவருக்கும்,

இரண்டாம் பரிசாக 3,000 ரூபாய் ஒருவருக்கும்,

மூன்றாம் பரிசாக 1,000 ரூபாய் ஒருவருக்கும்

மேலும் இரண்டு ஆறுதல் பரிசுகள் தலா 500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் விபரங்கள் அறிய இந்தச் சுட்டியைச் சொடுக்கவும்.

தங்களின் பேராதரவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்! 



Tuesday, August 9, 2011

3

முன்குறிப்பு : என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த வெறும்பய அவர்களை மன்னிக்கிறேன்!

1.விரும்பும் 3 விசயங்கள் : 

அ). முதல்ல நான் RJ ஆகனும்.
ஆ). இரண்டாவதும் நான் RJ ஆகனும்
இ). மூனாவதும் நான் RJ ஆகனும்.

2.விரும்பாத 3 விசயங்கள் :

அ). சண்டை போடுறது.
ஆ). கேக்காமயே அறிவுரை சொல்லுறது.
இ). எங்கிட்ட கேக்காமலே தேர்தல் வைக்கிறது.

3.பயப்படும் 3 விசயங்கள் :

அ). கொஞ்ச நாள் முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு :(
ஆ). அடுத்து இதுக்கு இன்னொரு பாயிண்ட் எழுதனும்னு பயமா இருக்கு.
இ). முதல்ல நான் எதுக்கு பயந்தேனோ அந்த பயத்துல இது மறந்துபோச்சு.

4.புரியாத 3 விசயங்கள் :

அ). ஒரு தடவ நான் பள்ளிகூடம் போயிட்டிருக்கும்போது 
ஆ). பாபு அண்ணன் எழுதுறது தமிழா ?
இ). முதல்ல நான் என்ன சொல்லவந்தேன்னு புரில.

5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :

அ). நான் இப்ப ஆபீசுல இருக்கேனா, இது ஆபீஸ் மேசைதானே, அதனால இது என்னோடது ஆகாதுல.அதனால எங்க வீட்டுல இருக்கிற மேசை மேல என்ன இருக்குனு தெரியல.
ஆ). இதுக்கும் பதில் சொல்லனுமா?
இ). வேண்டாம்னா விடுங்க.

6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :

அ). கவுண்டமனி, வடிவேலு நகைச்சுவைகள்.
ஆ). கும்மி மக்களின் பின்னூட்டங்கள்.
இ).  ரமேஷ் அண்ணன் பதிவு எழுதாம இருக்கிறது. 

7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :

அ). ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறேங்க.
ஆ). அடுத்த வருசம் பிறந்தநாள் வரதுக்காக இப்ப இருந்தே தினமும் ஒவ்வொரு நாளா காலண்டர்ல தேதி கிழிக்கிறேன்.
இ). கோமாளினு ஒரு ப்ளாக் இருக்குனு சொன்னதால அத தேடிட்டு இருக்கேன்.

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :

அ). எப்படியாவது ஒரு சிறந்த முழு நீள நகைச்சுவைப் புதினம் எழுதிடனும்.
ஆ).செல்வா கதைகளை முல்லா கதைகள் அளவுக்கு பிரபலப்படுத்தனும்.
இ). எப்பவுமே சந்தோசமா இருக்க கத்துக்கனும்.

9.உங்களால் செய்து முடிக்கக் கூடிய 3 விசயங்கள் :

அ). 8(அ)
ஆ). மொக்கை போடுவது.
இ). செல்வா கதை எழுதுவது.


10.கற்றுக்கொள்ள விரும்பும் 3 விசயங்கள் :

அ). எப்பவும் மொக்கை போட்டு சிரிக்க வைக்கனும்.
ஆ). தமிழ் இலக்கியம்.
இ). இன்னும் கொஞ்சம் தூயதமிழில் எழுத.

11.பிடித்த 3 விசயங்கள் :

அ). காலை உணவு
ஆ).மதிய உணவு.
இ). இரவு உணவு.

12.கேட்க விரும்பாத மூன்று விசயங்கள் : 

அ). இந்தமாதிரி நிறைய கேள்விகள் குடுத்து யாரோ உன்ன தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க அப்படின்னு.
ஆ). நம்பிக்கைத் துரோகம்.
இ). கார்த்தி இந்த தொடர் பதிவு எழுதிட்டான்னு.

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :

அ). அன்பே அன்பே கொல்லாதே ( ஜீன்ஸ்)
ஆ). யாரோ என் நெஞ்சைக் கீறியது ( குட்டி)
இ). சிறகுகள் வந்தது ( சர்வம்)

14.பிடித்த 3 படங்கள் :

அ). அன்பே சிவம்.
ஆ). பசங்க.
இ). இங்கிலீசு படம் எதாச்சும் சொல்லனும்களா ? ( அட இதுக்கு ஒன்னு வெட்டியாப்போச்சே )

15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :

அ). பூமி.
ஆ). சூரியன்
இ). நான்.

16.இதை எழுத அழைக்கப்போகும் 3 நபர்கள் :

அ). அதான் அன்னிக்கு ஒருநாள் செத்துப்போச்சுல அந்த எறும்பு. ( பாவம் இதையாச்சும் செய்யலாம்னுதான். )
ஆ). நேத்திக்கு எனக்கு 50 பைசா கொடுக்காத கண்டக்டர்.
இ). உங்க சொந்தக்காரங்க யாராச்சும் இருந்தா சொல்லி எழுத சொல்லுறீங்களா?

பின்குறிப்பு : உங்களுக்கு ஒன்னு தெரியுமா நான் முதல்ல பின்குறிப்புதான் எழுதினேன். அப்புறம்தான் முன்குறிப்பெல்லாம் எழுதினேன். ஆனா நீங்க முதல்ல இருந்து படிச்சிட்டு வந்து நான் முதல்ல எழுதினத கடைசியா படிக்கிறீங்க :)


Saturday, June 25, 2011

#JUNE26CANDLE

சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். 

சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.

ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


இது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு! மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி! நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!




                                                மெல்லிதயம் கொண்டோரே
                                                      மெழுகுதிரி ஏந்த
                                                மெரினாவிற்கு வாரீர்.

சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.

மதுரையில்,தமிழ் அன்னை சிலைதமுக்கம் அருகில் ,மதுரைஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .

கோவையில்,
இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!நன்றி!

(நன்றி : பன்னிகுட்டி ராமசாமி அவர்கள் )

Wednesday, May 25, 2011

ஒன் லைன் திரு!

முன்குறிப்பு : இந்தப் பதிவு நான் ரேடியோ ஜாக்கி ஆகணும்ற ஆசைய , கனவ எனக்குள்ள விதைச்ச மா.கா.பா ஆனந்த் ( சென்னை ரேடியோ மிர்ச்சி RJ ) அண்ணாவுக்கு சமர்ப்பிக்கிறேன்!

 இப்போதைக்கு நம்மல்ல எத்தன பேர் ரேடியோ கேக்குறோம் ? இணையம் , I-PAD , மெமரி கார்ட் அப்படி இப்படின்னு நிறைய சாதனங்கள் நம்மளோட இசை, பாடல் கேக்குற ஆர்வத்த ரேடியோ , டிவி பக்கம் போக விடாம இழுத்து வச்சிருக்குன்னு சொல்லலாம்! ஆனா கூட இப்பவும் FM கேக்குறவங்க நிறைய பேர் இருக்காங்க! நானும் கூட அந்த லிஸ்ட்ல வருவேன் :-)

 ஆனந்த் அண்ணனோட  முதல் வானொலி நிகழ்ச்சி பத்தி சொல்லியே ஆகணும். எனக்குத் தெரிஞ்ச அளவுல ஆனந்த் அண்ணாவோட முதல் நிகழ்ச்சி எதுன்னு சரியா தெரியல. ஆனா நான் கேட்ட அவரோட முதல் நிகழ்ச்சி கோவை சூரியன் FM ல இரவு 9 லிருந்து 10 மணி வரைக்கும் ஒலிபரப்பாயிட்டு இருந்த  " ஹலோ சூரியன் FM " தான். ஆனா அப்போ அந்த நிகழ்ச்சிய கலக்கலா பண்ணிட்டு இருந்தவர் குமார்தான்.

 வழக்கம்போல குமார்தான் வருவார்னு எதிர்பார்த்தா அன்னிக்கு ஆனந்த் அண்ணன் வந்தார். உண்மைலேயே அவருக்கு முதல் நிகழ்ச்சில சரியாப் பேச வரல. யோசிச்சு யோசிச்சு கேப் விட்டு கேப் விட்டுத்தான் பேசினார். குமார் வராம அவர் ஏன் இந்த ப்ரோக்ராம் பண்ண வந்தார்னு கொஞ்சம் கோபமாத்தான் இருந்துச்சு!

  அடுத்த நாளும் ஆனந்த் அண்ணாவேதான் வந்தார். அப்பாவும் கொஞ்சம் சுமாராதான் பேசினார். அப்போ ஒரு நேயர் கால் பண்ணி பேசிட்டிருக்கும்போது " உங்க குரலும் , குமார் குரலும் ஒரே மாதிரி இருக்கே ! " அப்படின்னு கேட்டார். அதுக்கு ஆனந்த் அண்ணா " அது வந்து நாங்க ரண்டுபேரும் ஒரே கடைல டீ குடிக்கிறோம் " அப்படின்னு சொன்னார். எனக்கு ஆனந்த் அண்ணனைப் பிடிக்க அதுதான் முதல் காரணம்.

  அப்புறம் அவர் BLADE NO .1 நிகழ்ச்சிக்கு வந்தார். நான் எதிர்பார்த்த மாதிரியே ரொம்ப அருமையா அந்த நிகழ்ச்சியைக் கொண்டுபோனார். யாரவது ஜோக் சொல்லி முடிச்சதும் " அப்படியா " அப்படின்னு குரலை கொஞ்சம் ஒரு மாதிரி இழுத்து சொல்லுறது ரொம்பப் பிடிச்சிருந்தது. அப்புறம் அதவிட ரொம்ப முக்கியமா படத்துல வர்ற காமெடி கிளிப்ல இருந்து கட் பண்ணி ஜோக் சொல்லி முடிச்சதும் அத பிளே பண்ணுவார். உண்மைலேயே அதுக்கு அப்புறம் நான் அவரோட தீவிர ரசிகர் ஆகிட்டேன்னு சொல்லலாம். அவர் அந்த மாதிரி ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிச்சபோது நானும் பள்ளிக்கூட விடுமுறைல இருந்தேன். தினமும் அவரோட BLADE NO .1 கேட்டிருவேன். ஆனந்த் அண்ணா வராத அன்னிக்கு எனக்கு FM கேக்கவே பிடிக்காது!

 BLADE NO .1 முடிஞ்ச பிறகு 12 மணிக்கு " ஊர் சுத்தலாம் வாங்க " நிகழ்ச்சிக்கு வருவார். ஒரு சமயம் எங்க ஊருக்குப் பக்கத்துல இருக்குற கெட்டிச்செவியூருக்கு வந்திருந்தாங்க. அன்னிக்கு எங்க ஊருல கரண்ட் ஆப் ஆகிருந்தது. 12 .30 க்குத்தான் கரண்ட் வந்துச்சு. அப்போதான் அவர் அங்க ஊர் சுத்தலாம் வாங்க நிகழ்ச்சிக்காக வந்திருக்கார் அப்படின்னு தெரிஞ்சது. உடனே அவசர அவசரமா குளிச்சிட்டு ( அப்ப எங்க வீட்டுல சைக்கிள்தான் இருந்துச்சு ) சைக்கிள எடுத்துட்டு 8 கி.மீ தூரத்துல இருந்த செவியூருக்குப் போனேன். ஆனா அதுக்குள்ளே நிகழ்ச்சி முடிச்சிட்டு கிளம்பிப்போய்ட்டாங்க :-(

 தினமும் அவர் வர்ற நிகழ்சிகள கண்டிப்பா கேட்டிருவேன். எந்த நிகழ்ச்சி பண்ணினாலும் அதுல காமெடி இருக்கும். கோவை சூரியன் FM ல சின்னத் தம்பி ,பெரிய தம்பினு ஒரு நிகழ்ச்சி வரும். அதுல அந்த நிகழ்ச்சி வழக்கமா பண்ணுறவங்க வரலைனா ஆனந்த் அண்ணன் செங்கல்பட்டு சென்னி அப்படிங்கிற பேர்ல வருவார். அதுவும் ரொம்ப அருமையா இருக்கும். இப்படி ஒவ்வொரு நிகழ்ச்சியும் என்னை அவரோட தீவிர ரசிகரா மாத்திருச்சு! நான் அவருக்கு தனியா ஒரு கடிதம் எழுதி சூரியன் FM க்கு அனுப்பிருந்தேன். ஆனா அது அவருக்குக் கிடைக்கலைன்னு பின்னாடி தெரிஞ்சிக்கிட்டேன்.

 கோவை சூரியன் FM ல அவர் கடைசியா பண்ணின நிகழ்ச்சி உங்களுக்காகனு நினைக்கிறேன். அதுக்கு அப்புறம் அவர் கோவை சூரியன் FM ல வரல. ஏன் , என்னாச்சு அப்படின்னு எந்தத் தகவலும் இல்ல. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சொல்லப்போனா நான் அதுக்கு அப்புறம் FM கேக்கிறதையே விட்டுட்டேன்!

 ஒரு ரண்டு வருசத்துக்கு அப்புறம் ஒருநாள் நான் ரேடியோல சும்மா வேற வேற STATIONS க்கு மாத்தி மாத்திக் கேட்டுட்டு இருந்தபோதுதான் எனக்கு RADIO MIRCHI கிடைச்சது. உண்மைலேயே கோயம்புத்தூர்ல ரேடியோ மிர்ச்சி வந்தது எனக்கு அப்போதான் தெரியும். அதுல எந்த மாதிரி நிகழ்ச்சிகள் வருதுன்னு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டுட்டிருந்தேன். பாட்டு முடிஞ்சதுக்கு அப்புறம் ப்ரோக்ராம் பத்தின PROMO போடுவாங்க. அப்ப கேட்ட PROMO என்னை அப்படியே இன்ப அதிர்ச்சில தள்ளிடுச்சுனுதான் சொல்லணும். 2 வருசமா நான் தேடிட்டு இருந்த ஆனந்த் அண்ணாவோட குரல்தான் அது. ( 2 வருசமா நான் எப்படி தேடினேன்னா எங்க ஊர்ல இருந்து சென்னைல படிச்சிட்டு இருந்த என்னோட நண்பர்கள் கிட்ட கேப்பேன். ஒரு வேலை ஆனந்த் அண்ணன் சென்னைக்கு போயிருப்பாரோனு தெரிஞ்சிக்க. ஆனா அவுங்களுக்கு FM கேக்குற பழக்கமே இல்ல )

 அப்புறம் தொடர்ச்சியா ரேடியோ மிர்ச்சி கேட்க ஆரம்பிச்சு அதுல அவர் ஃப்ரீயா விடு நிகழ்ச்சி பண்ணிட்டிருக்கார்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா என்னால அதிகமா கேட்க முடியல. காரணம் என்னோட ஆபீஸ் டைமிங் அப்படி. ஆனாலும் வண்டில வரும்போதும், வீட்டுக்கு வந்ததும்னு எப்படியாவது கொஞ்சமாச்சும் அவரோட நிகழ்ச்சி ketru வேன்.அவரோட நகைச்சுவையான பேச்சுக்கு உதாரணம் வேணும்னா, ஒரு தடவ கரண்ட் கம்பிய திருடப்போனவர் கரண்ட் தாக்கி இறந்தார் அப்படிங்கிற செய்தியைச் சொல்லிட்டு " இதுக்குத்தான் திருடப் போகும்போது டெஸ்டர் , கட்டர் எல்லாம் கரக்டா எடுத்துட்டுப் போகணும்கிறது! " அப்படின்னு கமென்ட் அடிச்சது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அவரோட நிகழ்ச்சிகளைக் கேக்க முடியலையேனு வருத்தப்பட்டுட்டு இருந்தபோது அவர் மறுபடியும் கோவை ரேடியோ மிர்ச்சில இருந்து காணாம போய்ட்டார். ஆனா இந்த தடவ அவர் சென்னை ரேடியோ மிர்ச்சிக்கு போயிருக்கார்னு பேஸ்புக் மூலமா தெரிஞ்சிக்கிட்டேன்!

 மறுபடியும் அதே வேதனை. என்னடா மறுபடியும் அவரோட நிகழ்சிகள மிஸ் பண்ணிட்டோமேன்னு வருத்தமா இருந்துச்சு. ஆனாலும் அவரோட குரல எதாச்சும் நிகழ்ச்சியோட ப்ரோமோல அடிக்கடி கேக்கும்போது கொஞ்சம் சந்தோசமா இருக்கும். அப்புறம் தான் என்ன ரொம்ப ரொம்ப சந்தோசமாக்க வந்திச்சு ஒன் லைன் திரு. ஆமாங்க முழுக்க முழுக்க ஆனந்த் அண்ணனோட குரல்ல, அதே நக்கலான , நகைச்சுவையான அவரோட கற்பனைல இப்ப அடிக்கடி ரேடியோ மிர்ச்சில ஒன் லைன் திரு வந்திட்டு இருக்கு. உண்மைலேயே அவர் இங்க இல்லையே அப்படிங்கிற குறைய இந்த ஒரு நிமிச ப்ரோமோ தீர்த்துருது! கண்டிப்பா ஒன் லைன் திரு கேட்டா நீங்களும் அவரோட ரசிகரா மாறிடுவீங்க! இப்ப கூட நீங்க ரேடியோ மிர்ச்சி வெப்சைட்ல ஒன் லைன் திரு கேக்க முடியும் :-)

 இந்தப் பதிவ அவரோட பிறந்தநாளான MAY 20 ல பதிவிடணும்னு நினைச்சேன். ஆனா என்னோட வேலை காரணமாக முடியாமல் போய்விட்டது:-(

 என்னோட ஆசையெல்லாம் நானும் சீக்கிரமா RJ ஆகி ஒரு நிகழ்ச்சியாவது ஆனந்த் அண்ணன் கூட சேர்ந்து பண்ணனும் அப்படிங்கிறதுதான்! எப்போ நிறைவேறும் ? :-)

Monday, April 11, 2011

அம்மா.!

முன்குறிப்பு : கொஞ்ச நாளுக்கு முன்னாடி அப்பா.! அப்படின்னு ஒரு பதிவுல அப்பா பற்றி எழுதிருப்பேன். இன்னிக்கு அம்மா பற்றி எழுதிருக்கேன். கண்டிப்பா ஒரு நிமிடமாவது உங்கள் அம்மாவைப் பற்றிய நினைவுகள் உங்களுக்கு வரும்! ஒரு சிறுகதைல இருக்கக் கூடிய திடீர் திருப்பங்களோ விறுவிறுப்போ இருக்காது :-)


கால் மேலாகவும் தலை கீழாகவும் வைத்து சோபாவில் படுத்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்தான் ராகுல். உள்ளிருந்து அவனது அம்மாவின் குரல் கேட்டது.

" வெங்காயம் வாங்கிட்டு வச்சொன்னேனே வாங்கிட்டு வந்தியா ? "

" ஐயோ மறந்திட்டேன் ..! "

" ஆமா நான் சொன்னா இனி மறந்துதான் போகும் ,எல்லாம் சொல்லுறவ வந்து சொன்னாத்தான் இனி மறக்காது "

" ஐயோ .. எப்பப்பாரு கல்யாணம் கல்யாணம்னே பேசு! வேற எதுவுமே தெரியாதா ? "

" இனி அதத்தான்டா பேசுவோம் ! " 

" அப்பா எங்க ? " 

" அவர் தோட்டத்துல இருந்தார் ! "

ராகவன் கமலா தம்பதியினரின் ஒரு மகன் ராகுல். இருபத்தி ஏழு வயதான ராகுல் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிகிறான். ராகவன் அரசுப் பணியில் இருந்து இந்த ஆண்டுதான் ஓய்வு பெற்றார்.

தோட்டத்தில் ஒரு ஓரமாக அமர்ந்திருந்த ராகவனைப் பின்னால் இருந்து தொட்ட ராகுல், ராகவனின் கண்கள் கலங்கியிருந்ததைப் பார்த்தான். 

" அப்பா என்னாச்சு ? "

" ஒன்னும் இல்லடா , பாட்டிய நினைச்சாதான் ரொம்ப அழுகையா வருது ! "

எண்பது வயதான ராகவனின் அம்மா உடல்நலம் மோசமடைந்து மருத்துவர்களும் கைவிரித்ததால் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாள்.

"பாட்டிய நினைச்சா எனக்கும் ரொம்ப கஷ்டமாதான் இருக்குப்பா! "

" அவளப்பத்தி சொன்னா சொல்லிட்டே போகலாம்டா , அம்மாங்கிற உறவு எவ்ளோ அழகானதுன்னு யாராலையும் சொல்லிட முடியாது! " என்று கூறியவர் அவரது குழந்தைப் பருவத்திலிருந்து சொல்ல ஆரம்பித்தார்.

" நான் 3 வயசு வரைக்கும் தாய்ப்பால் குடிக்கிறத விடலையாம் . எப்படியாவது மறக்க வைக்கனும்னு என்னைய எங்கம்மா, அவுங்க அம்மா வீட்டுல கொண்டு போய் விட்டுட்டு ஒரு வாரம் என்னப் பாக்கவே வரலையாம். ஒருவாரம் கழிச்சு என்னப் பாக்க வந்தபோது நான் கண்ணுல தண்ணி விட்டுட்டே ஓடி வந்து மறுபடி பால்குடிச்ச்சேனாம். இத அடிக்கடி சொல்லிட்டே இருப்பா!"

நான் முதல் தடவையா குப்புற விழுந்தது , தவழ்ந்தது இப்படி ஒன்னு ஒண்ணா ரசிச்சிருக்கா. தவழ்ந்து பழகி கொஞ்ச நாள்ல நான் அடிக்கடி தவழ்ந்துட்டே வெளில போய்டுவேணாம். இப்படி ஒருநாள் வெளியே போய் வயிறு முட்ட மண்ணத் தின்னுட்டதால வயிறு உப்பிப் போய் மூச்சு வர கஷ்டப்பட்டதால ஹாஸ்பிட்டல் எடுத்துட்டுப் போனாங்களாம். அப்ப இருந்த நிலைல நான் பிழைக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.

நான் பிழைக்கணும்னு எத்தனை வேண்டுதல்கள் , அழுகைகள்னு நிறைய சொல்லிருக்கா. அப்புறம் எப்படியோ பிழைச்சு வந்துட்டேன். அப்புறம் அதே கொஞ்சநாள்ல மறுபடி நான் மண்ணு திண்ணுறதப் பார்த்துட்டு செம அடி விழுந்துச்சு. அப்போ எங்க அப்பா வந்து என்னை தூக்கிட்டார். அப்பலேர்ந்து நான் எங்க அம்மா கிட்ட அதிகமா பேசுறதே இல்ல. அம்மாவப் பார்த்தவே மூஞ்சியத் திருப்பிட்டு எதோ சண்டைக்காரனப் பாக்குறது மாதிரி இருந்திருக்கேன். சொல்லப்போனா அப்பா பையனாவே மாறிட்டேன்.

நான் மூணாவது படிச்சிட்டிருக்கும்போது எங்கப்பாவுக்கும் எங்க அம்மாவுக்கும் பயங்கர சண்டை. அப்போ எங்கம்மா என்னை தூக்கிட்டு அவுங்க அம்மா வீட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு என்னைத் தூக்குறதுக்காக வந்தா, ஆனா நான் எங்கப்பா கிட்டப் போய் ஒளிஞ்சிக்கிட்டேன். அவ்ளோ நேரம் எங்கப்பா கூட சண்டைப்போட்டு கொஞ்சம் கூட அழாதவ நான் வரமாட்டேன்னு சொன்னதும் ஒடஞ்சுபோய் ரொம்ப அழுதா. பாக்க அவ்ளோ பாவமா இருந்துச்சு.

இந்த நேரத்துல மத்த ஆம்பிளையா இருந்திருந்தா கண்டிப்பா சண்டை பெரிசா ஆகிருக்கும். ஆனா எங்கப்பாவுக்கு எங்கம்மா அழறதப் பார்த்ததும் இவ்ளோ நேரம் போட்ட சண்டையெல்லாம் எங்க போச்சுனே தெரில. அப்படியே என்னையும் எங்க அம்மாவையும் சேர்த்து அணைச்சிக்கிட்டார். அப்போ அவரும் ரொம்ப அழுதார். அப்பத்தான் உண்மையான லவ்னா என்னன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.

நான்தான் வளர்ந்தேனே தவிர , அவ வளரவே இல்ல. அவளுக்கு நான் எப்பவுமே குழந்தைதான். அடிக்கடி திட்டுவா , அடிப்பா , கதை சொல்லுவா முக்கியமா முத்தம் கொடுப்பா.! எங்க போனாலும் பார்த்து நிதானமா போன்னு சொல்லுவா., இப்படி சொல்லிட்டே போலாம். ஆனா நான்தான் அவளோட அன்பைப் புரிஞ்சிக்காம நிறைய தடவ அழ வச்சிருக்கேன்.!"

" அப்பா என்னப்பா சொல்லுறீங்க .? நீங்க பாட்டிய நல்லாத்தானே பாத்துக்குறீங்க ?! "

" என்னத்தப் பாத்துக்கிட்டேன்.? எத்தனையோ தடவ வேணும்னே அழ வச்சிருக்கேன். வளர வளர அவளோட பாசத்தையெல்லாம் பைத்தியகாரத்தனமாவே நினைக்க ஆரம்பிச்சிடறோம்.எத்தனையோ தடவ ஊருக்குப் போகும்தும் ,ஹாஸ்டலுக்குப் போகும்போதும் போனதும் போன் பண்ணுனு சொல்லுவா. அப்ப எனக்கு அது லூசுத்தனமாத் தெரிஞ்சது. நீ பிறந்த அப்புறம்தான் எனக்கு புரிய ஆரம்பிச்சது. என்ன இருந்தாலும் பெத்த மனம் பித்து , புள்ள மனம் கல்லுங்றத எல்லோரும் நிரூபிக்கிறோம்.

14 , 15 வயசுல வெயில்ல விளையாடிட்டு வேர்வையோடு வரும்போது " அப்பிடிப் போய் வெளையாடலைனா ஆகாதா ? " அப்படின்னு திட்டிட்டே முந்தானையாள முகத்தைத் தொடச்சு விடும்போதும் , மழைல நனைஞ்சிட்டு வந்தா தலை துவட்டி விடும்போதும் , இன்னும் சின்னக் குழந்தைல மூக்குல ஒழுகுற சலிய அப்படியே மூக்கு வலிக்க அழுத்தி எடுத்து விடும்போதும் உணர்ற ஸ்பரிசம் , பாசம் உலகத்துல யாராலையும் கொடுக்க முடியாது.

" அது உண்மைதான்ப்பா! "

" என்மேல எவ்ளோ பாசம் வச்சிருந்தாளோ அதே மாதிரி உங்க அத்தை பிரியா மேலயும் அவ்ளோ பாசம். பைய்யன் ,பொண்னு அப்படின்னெல்லாம் பிரிச்சுப் பாக்க மாட்டா.

பிரியாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் ஆனதிலிருந்து எங்கம்மா ரொம்பவே சோர்ந்து போயிட்டா. " ஒன்னும் தெரியாத வெளையாட்டுப் புள்ளயா இருக்காளே , போற எடத்துல எப்படி இருப்பாளோ"னு தினமும் பொலம்பிட்டே இருப்பா. கல்யாணம் பண்ணிக்குடுத்து ரண்டு மாசம் அங்கயும் இங்கயும் அலைஞ்சிட்டே இருந்தா. பொண்னு மேல அவ்ளோ பாசமா இருந்ததாலதான் உங்கம்மா கிட்டவும் அவ பொண்னு மாதிரியே நடந்துக்கிட்டா. ஒருநாள் கூட மாமியார் , மருமகள் சண்டை வந்ததே இல்ல.

எப்பவுமே எதுக்குமே அழமாட்டா. தாத்தா இறந்த போது அப்படியே பித்துப் பிடிச்சவளாட்டம் இருந்தா.ரண்டு மூணு நாள் சுயநினைவே இல்ல. அவ்ளோ லவ் பண்ணிருக்கா.அப்புறம் இந்த நாலு வருசத்துல எதுக்குமே அழல.

ஒரு மாசமா சோறு திங்காம கிடக்குறா . பாதிநாள் அவ கூடவேதான் இருந்தேன். வழக்கம் போல அட்வைஸ் பண்ணிட்டுத்தான் இருந்தா. ஆனா இன்னிக்கு காலைல மட்டும் என்னையப் பார்த்ததும் கண்ணுல தண்ணி மொளு மொளுனு போச்சு. எதுவுமே பேசல. கைய கெட்டியா கொஞ்ச நேரம் பிடிச்சிட்டு என்னையவே பார்த்தா , அப்புறம் ஏனோ கைய விட்டுட்டு திரும்பிப் படுத்திட்டா. ஒருவேளை அவளுக்கே பயம் வந்திடுச்சோ.? நம்மல விட்டுப் பிரிஞ்சு போய்டுவோமோன்னு வருத்தம் வந்திடுச்சு போல. எனக்கு என்ன பன்னுறதுனே தெரிலடா" என்றவாறே தனது மகனின் முன்னாலேயே அழத் தொடங்கினார்.

" அப்பா , என்னப்பா இது ? நீங்களே இப்படி அழுதா நாங்க ? "

" நான் உனக்கு அப்பாவா இருந்தாலும் அவளுக்கு மகன் தானேடா? இவ்ளோ வருஷம் என் கூடவே இருந்து அத செய்யாத இத செய்யதனு சொல்லிட்டு இருந்தவ , எங்க போனாலும் நான் எவ்ளோ பெரியவனா இருந்தாலும் ஒரு குழந்தைக்கு சொல்லுற மாதிரி பார்த்துப் போ, பார்த்துப் போ அப்படின்னு சொல்லிட்டே இருந்தவ , இன்னிக்கு ?!! " என்று சத்தமாகவே அழத் தொடங்கினார் ராகவன்.

பின்குறிப்பு : இந்தப் பதிவு உங்க அம்மாவை ஞாபகப் படுத்தியிருந்தால் எனக்கு மிக மகிழ்ச்சி. இந்தப் பதிவினை பற்றிய உங்களது பின்னூட்டங்களை வைத்து அடுத்து இதே மாதிரி குடும்ப உறவுகள மையப்படுத்தி கதைகள் எழுத உதவியா இருக்கும்.!





Thursday, March 17, 2011

மாஸ்ஹீரோவுடன் நேரடி உரையாடல்

முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி கோமாளி ஒரு மாஸ் ஹீரோவுக்கு கதை சொல்லப் போனது உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். தெரியாதவங்க இங்க போய்ப் படிச்சிட்டு வாங்க. அந்தக் கதைய படமா எடுத்து இப்ப தியேட்டர்ல ஓடிட்டு இருக்கு. அதப் பற்றின நேரடி ஒளிபரப்புத்தான் இப்ப நீங்க பாக்கபோறீங்க!

கோமாளி டிவி நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நம்மளோட நிகழ்ச்சில இப்ப திரைக்கு வந்து ஓடிட்டு இருக்குற ----- படத்தோட ஹீரோ மாஸ்ஹீரோ தான் நம்ம கூட இருக்கார். இந்தப் படத்துல நடந்த சுவையான அனுபவங்கள் மற்றும் நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கக் காத்திட்டு இருக்கார். முதல்ல ஒரு கேள்வி 

" சார் இவ்ளோ வித்தியாசமான கதைய நீங்க எப்படி நடிக்க ஒத்துக்கிட்டீங்க ? "

" எனக்கு அப்பவே தெரியும் , கதை சொல்லும்போதே இந்தக் கதை கண்டிப்பா பெரிய வெற்றி அடையும்னு தெரியும். அது மட்டும் இல்லாம எனக்கு அப்போ வேற வேலையும் இல்ல. ஒருத்தரும் எங்கிட்ட வந்து கதை சொல்லல. நானும் எவ்ளோ நாளைக்குத்தான் பிஸியா இருக்குறது மாதிரியே பில்ட் அப் பண்ணுறது ? அதான் ஒத்துக்கிட்டேன்.

" சார் ஒரு காலர் வெய்ட் பண்ணுறார் .. "

" ஹலோ , வணக்கம் இது கோமாளி டிவி. மாஸ்ஹீரோ இருக்கார் , அவர்கிட்ட பேசுங்க. "

" வணக்கம் சார் , நான் கோபில இருந்து பேசுறேன் , உங்களுக்காக ஒரு மணிநேரமா ட்ரை பண்றேன் ..உங்க படம் பார்த்தேன், சான்சே இல்ல சார் .. கொன்னுட்டீங்க ..! "

" நன்றிங்க , உங்களுக்குப் படத்துல எந்த சீன் ரொம்ப பிடிச்சது ? "

" எல்லா சீனுமே கலக்கல் சார் , அதிலும் அந்த விமானத்துல இருந்து கீழ குதிச்சு ஒரு சண்டை போடுவீங்கல்ல , அந்த சீன் கொன்னுட்டீங்க.. "

" அது இந்தப் படத்துல இல்லையே , அது வேற படம்னு நினைக்கிறேன் " 

" ஒ , சரி விடுங்க சார் , எப்படியோ உங்க படம்பார்த்து எனக்கு ஒரு தொல்லை கழிஞ்சது.. "

" என்ன சொல்லுறீங்க ? "

" அதான் சார் , உங்க படம் பார்க்க நானும் என் மனைவியும் போனோம் , கொஞ்ச நேரத்துலையே என் மனைவி செத்துட்டா சார் . அதான் சொன்னேன் , நீங்க எனக்கு தெய்வம் சார் !! "

" ஒ , அப்படிங்களா ? கேக்குறதுக்கே ரொம்ப சந்தோசமா இருக்கு " 

" இணைப்பு கட் ஆகிருச்சு , சார் சொல்லுங்க .. இந்தப் படத்துல நடந்து சுவையான சம்பவம் எதாச்சும் ? "

" இந்தப் படத்துல அந்த மலைமேல நின்னு ஒரு பைட் சீன் பார்த்திருப்பீங்க , வில்லனோட ஆளுக என்னை ஒரு கல்லுமேல நிறுத்தி துப்பாகியால சுடுற சீன் எடுக்கும் போது கீழ இருந்து அப்படியே கம கம்னு வாசம் .. கீழ பார்த்தா சில பேர் கோழிய வறுத்து சாப்பிட்டிட்டு இருந்தாங்க. விடுவேனா நான் ? போய் அவுங்க கிட்ட கேட்டு வாங்கித் தின்னுட்டேன்ல . செம டேஸ்ட் . அதுதான் சுவையான சம்பவம்..!!

" மதுரைல இருந்து பேசுறேன். உங்க படம் வாய்ப்பே இல்ல தல , பிச்சு வீசிட்டீங்க. பாதிப்பேர் தியேட்டர்லையே செத்துட்டாங்க. அங்க ஒரு பேன் பாக்கியில்லை. உங்க FANS எல்லாம் அங்க இருக்குற FAN ல தொங்குறது கண்கொள்ளாக் காட்சி.!! இதோ நானும் போறேன் , எனக்கு தியேட்டர்ல எடம் பத்தல , அதான் எங்க வீட்டுல புளிய மரம் இருக்கு , இதோ இப்ப போய் தொங்குறேன் , இனிமேலும் எனக்கு உயிரோட இருக்கணும்னு விருப்பம் இல்ல , இன்னொரு விஷயம் இங்க பாதிபேர் செத்துட்டாங்க , படத்த தியேட்டர்ல இருந்து எடுக்கலாம்னு பார்த்தா தியேட்டர் ஓனர் ப்ரிவியூ காட்சிலேயே செத்திட்டதா கேள்விப்பட்டோம் , எப்படியோ படம் கொன்னுரிச்சு சார் ,டொக்!! " 

" ரொம்ப நன்றிங்க , உங்களை மாதிரி ரசிகர்களால தான் நான் இருக்கேன். குடும்பத்தோட தியேட்டர்ல போய் தொங்குங்க., வீட்டுல வேண்டாம்! "

" அந்த நேயர் இணைப்பைத் துண்டிச்சிட்டார் , சார் இந்தப் படத்துல உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு எது ? " 

" அதாங்க , அந்த ஒரு ரீமிக்ஸ் பாட்டு ஒன்னு ரொம்ப குளிர் பிரதேசத்துல எடுத்திருப்போமே , ஆனா அங்க கூட ஹீரோயினுக்கு குட்டைப் பாவாடை தான். டான்ஸ் மூவ்மென்ட் எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டோம்!! "

" நம்ம நிகழ்ச்சில அந்தப் பாட்ட இப்ப பாக்கலாம் , ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு "

                                 ------------------------------------------------------

" சார் , நீங்க சொல்லுங்க இந்தப் படம் இவ்ளோ பெரிய சக்சஸ் ஆகும்னு நினைச்சுப் பார்த்தீங்களா ? "

" கண்டிப்பா , எனக்குத் தெரியும் இது எப்படியும் சக்சஸ் ஆகும்னு , எப்படி சொல்லுறேன்னா வேற வழி இல்ல , சக்சஸ் ஆகாதுன்னு எப்படி சொல்லுறது ? எதோ ஒன்னு சொல்லித்தானே ஆகனும்! அதிலும் முதல்லையே இதெல்லாம் எங்க உருப்படப் போகுதுனா சொல்ல முடியும் ? "

" சார் சென்னைல இருந்து காலர் லைன்ல இருக்காங்க , அவுங்க கிட்ட பேசலாம் ., ஹலோ , மாஸ் ஹீரோ கிட்ட பேசுங்க " 

" சார் வணக்கம் நான் சென்னைல இருந்து பேசுறேன் , இங்க நிறைய பேர் போயிட்டு இருக்காங்க , நானும் போகப் போறேன் ! "

" நீங்க இன்னும் படம் பாக்கலையா ? " 

" இல்ல சார் , ட்ரைலர் பார்த்த பல பேர் கேரளாவுக்கு பஸ் ஏறிட்டாங்க , பஸ்ல போன சீக்கிரம் போய் சேர முடியாதுன்னுதான் நான் ஒரு இருபது பேர் ட்ரேவல்ஸ் புக் பண்ணிருக்கோம் , இப்ப வந்திரும் .. அதுக்குள்ள உங்ககிட்ட சொல்லிடலாம்னு தான் போன் பண்ணினேன் ! "

" இங்க டிக்கட் கிடைக்காம கேரளா போய் பாக்கப் போறீங்களா ? கண்டிப்பா இப்படித்தான் இருக்கணும் ? "

" நாங்க படம் பாக்க கேரளாவுக்குப் போகல , அடிமாடா போறோம் .. ஜஸ்ட் உங்க படத்தோட ட்ரைலர் பார்த்ததுமே இததான் தோனுச்சு , இனிமேலும் உயிரோட இருந்தா அந்த ஆண்டவனுக்கே பொறுக்காது , அவரும் உங்க படத்தப் பார்த்திட்டு எங்களுக்கு முன்னாடி கேரளாவுக்கு அடிமாடா போய்டுவார் , அதான் நாங்க முந்திக்கிறோம் , இதோ வண்டி வந்திடுச்சு .. போறேன் சார் " 

" ஜாலியா கொண்டாடுங்க ! "

நிகழ்ச்சித் தொகுப்பாளர் மனதுக்குள் ( யோவ் , அவன் சாகப் போறேன்னு சொல்லுறான் , ஜாலியா கொண்டாடச் சொல்லுற ? ). " சார் இப்ப ஒரு காலர் லைன்ல இருக்கார் , பேசுங்க " 

" வணக்கம் , நான் மாஸ் ஹீரோ பேசுறேன் , சொல்லுங்க படம் பார்த்திங்களா ? பிடிச்சிருந்ததா ? " 

" சார் நான் திருச்சில இருந்து பேசுறேன் , நீண்ட நாளா என் கணவர் எனக்கு டைவர்ஸ் தர மறுத்தார் , கோர்ட்ல கேஸ் போட்டும் சரியான கரணம் இல்லாம டைவர்ஸ் தர மறுத்துட்டாங்க , இப்ப உங்க படம் வந்ததும் எனக்கு டிவர்ஸ் கிடைச்சது , தேங்க்ஸ் சார் , உங்களை என்னால மறக்கவே முடியாது ? "

" ரொம்ப சந்தோசமா இருக்குமா , உங்களுக்கு டைவர்ஸ் கிடைச்சதுக்கும் என் படத்துக்கும் என்ன சம்பந்தம் ? " 

" சார் , உங்க படத்துக்கு என் கணவர் டிக்கெட் வாங்கிருக்கார் அப்படின்னு கோர்ட்ல சொன்னேன் , உடனே கொலை முயற்சின்னு சொல்லி டைவர்ஸ் கொடுத்திட்டாங்க , நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் , சரி சார் வச்சிடறேன் " 

" இவ்ளோ நேரமும் எங்களோட நேயர்கள் கேட்ட கேள்விக்கு அழகாவும் , போருமையவும் பதில் சொன்னீங்க , ரொம்ப நன்றி சார். இன்னொரு நிகழ்ச்சில உங்களை சந்திக்கனும்னு வேண்டிக்கிறேன் "

" நீங்க படம் பார்த்துட்டீங்களா ? " 

" இல்ல சார் , இந்தப் படத்தோட ட்ரைலர் மட்டும் பார்த்தேன் , நான் இப்பவே போய் அருகம்புல்லுல தூக்குப் போட்டு தொங்குறேன் " 

" அருமையான முடிவு , இந்தப் படம் இந்த அளவு பாதிக்கும்னு தெரியல , எல்லோரோட மனதுளையும் ஒரு தாக்கத்த ஏற்படுத்திருக்கு ,எல்லோரும் தியேட்டர்ல போய் படம் பாருங்க , DVD ல பாக்காதீங்க , ஏன் சொல்லுறேன்ன தியேட்டர் போய் பார்த்த உங்க ஒருத்தரோட உயிரோட போயிரும் , DVD ல வீட்டுல பார்த்த உங்க மொத்த குடும்பமும் போயிரும் , முடிவு உங்க கைல !"

இத்துடன் இந்த நிகழ்ச்சி முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியால் ஏற்ப்பட்ட உயிர்ச் சேதங்களுக்கு கோமாளி டிவி எந்த விதத்திலும் பொறுப்பேற்காது!

நீதி : இந்தப் பதிவு முழுக்க முழுக்க நகைச்சுவைக்கே , கண்டிப்பா யாரோட மனதையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை. இதுக்கு மேலயும் அந்த மாஸ் ஹீரோ யார்னு கேக்குறவங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் , அந்த மாஸ் ஹீரோ நான்தான் .. ஹி ஹி ஹி  

பின்குறிப்பு : ஒரு இரண்டு மாதங்களுக்கு உங்களோட பதிவுகளுக்கு அதிகம் வர இயலாது என்பதைத் தெரிவித்துகொள்கிறேன். அப்புறம் செல்வா கதைகளுக்கென தனி வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் தெரிவித்துகொள்கிறேன். அதன் முகவரி : http://www.selvakathaikal.blogspot.com/