Monday, October 24, 2011

நகல் (சவால் சிறுகதை - 2011)

முன்குறிப்பு : இந்தப் பதிவு பரிசல்காரர் அவர்களின் சவால் சிறுகதைப் போட்டிக்கான எனது சிறுகதை.

’படியெடுத்தல்’ என்னும் குளோனிங் உலக நாடுகள் பலவற்றிலும் பரவலாக அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் இந்தியாவில் மட்டும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இருபதாம் நூற்றாண்டிலிருந்து அறிவியல் கண்டுபிடித்த பெரும்பாலானவை ஆக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டதை விட அழிவிற்காகவே பிரயோகிக்கப்பட்டு வந்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வளர ஆரம்பித்த குளோனிங் என்கிற உயிரியல் துறை இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அசுர வளர்ச்சியடைந்து மாபெரும் அழிவு சக்தியாகப் பரிணமிக்கத் தொடங்கியிருந்தது. 

சென்னையின் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளால் வீட்டிலிருந்து கிளம்பிய அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஐ.ஜி அலுவலகம் முன்பாக வந்து நின்றான் விஷ்ணு. அவனது உருவத்தை உள்வாங்கிய அந்தத் தானியங்கிக் கதவு “ வணக்கம் விஷ்ணு! 2040 ஆம் ஆண்டு ஜூன் 29 ம் தேதி தங்களின் வருகை பதிவு செய்யப்பட்டது “ என்று ஒலித்தவாறு தனது வாயைத்திறந்து விஷ்ணுவை விழுங்கிக்கொண்டது. 

விஷ்ணு காவல்துறையின் மிகமுக்கிய உளவாளி. பெரும்பாலான வழக்குகளை மிக எளிதாக முடிப்பதற்கு உதவியிருக்கிறான். அவனது அபாரத் திறமையைக் கண்டு வியந்த ஐ.ஜி சரவணனுக்கு இவன் மீது தனி மரியாதை இருந்தது.

ஐ.ஜி அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எஸ்.பி கோகுல் எதிர்ப்பட்டார்.

“ஹே , கோகுல் ! அந்த பேங்க் கேஸ் என்னாச்சு ? “

” அது பயங்கரக் குழப்பமா இருக்கு. மேனேஜரக் கேட்டா அந்த பணம் ட்ரான்ஸ்பர் ஆன ஏழு நாளும் நான் ஊர்லயே இல்ல. யாரோ கடத்தி வச்சிருந்தாங்கனு சொல்லுறாரு. ஆனா இரண்டு நாள் தான் லீவு எடுத்தாரு , மத்தபடி அவர் தினமும் வந்தார்னு பேங்க் ஸ்டாப்ஸ் சொல்லுறாங்க. அவர் வந்திட்டு போனதுக்கான எல்லா ஆதாரமும் இருக்கு. அவர் நான் வரலைனு சத்தியமே பண்ணுறார். என்ன பண்ணுறதுனே தெரியல! “ அலுப்பாகக் கூறினார் கோகுல்.

" அது பத்தி ஒரு க்ளூ கிடைச்சிருக்கு, இரு தலைய பார்த்துட்டு வந்திடறேன்” என்று கோகுலின் பதிலை எதிர்பாராமல் ஐ.ஜி சரவணனின் அறைக்குச் சென்றான் விஷ்ணு.

விஷ்ணு உள்ளே நுழைந்ததையும் , கோகுலுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்துவிட்டு தன் அறை நோக்கி வருவதையும் வீடியோவில் பார்த்துக்கொண்டிருந்த ஐ.ஜி.சரவணன் புன்னகையுடன் விஷ்ணுவை வரவேற்றார்.

” என்ன விஷ்ணு, கோகுல் என்ன சொல்றான் ? “

“ பேங்க் கேஸ்ல ஒன்னுமே புரியலனு பொலம்பிட்டிருக்கான்! “

“ அந்தக் கேசுல இவன் ரொம்ப குடையுற மாதிரி தெரியுது, கொஞ்சம் குழப்பிவிடேன்! “ என்று மர்மமாய்ப் புன்னகைத்தார் ஐ.ஜி.

“ கண்டிப்பா பாஸ்! அதுக்குத்தான் க்ளூ கிடைச்சிருக்குனு சொல்லிட்டு வந்திருக்கேன். இப்பப் பண்ணப்போற குழப்பத்துல அந்தக் கேஸ் பக்கமே தல வச்சுப் படுக்க மாட்டான்! “ என்று கண்ணைச் சிமிட்டியவாறே விடைபெற்றான் விஷ்ணு.

ஐ.ஜி அறையிலிருந்து வெளியேறி தனது அறையை அடைந்து கோகுலை எப்படிக் குழப்பலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த போது எதிரிலிருந்த குளிர்பதனப் பெட்டி கண்களில் பட்டது. அதன் பெயரான Swathika என்பதை முதலில் எழுதிக்கொண்டான்.  தொடர்ந்து அதன் மாடல் எழுத்தான W என்பதையும் எழுதிக்கொண்டான். பின்னர் உள்ளிருந்த குளிர்பானமான HUSK (2030 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட குளிர்பானம்) என்பதின் முதல் எழுத்தையும் அதன் எண்ணிக்கையையும் சேர்த்து H2 என்று எழுதினான். பிறகு இரண்டாவது வரிசையில் இருந்த Fanta பாட்டில்களையும் அதன் எண்ணிக்கையையும் சேர்த்து 6F என்றும் எழுதிக்கொண்டு பிரிண்டரின் வாய்ஸ் சென்சாரில் அந்த இரு வாசகங்களையும் கூறினான். மறுநொடி இரு துண்டுச் சீட்டுகளை வெளியில் துப்பியது. ஒன்றில் “ Mr.கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு “ என்றும் மற்றொன்றில் “ Sir, எஸ்.பி கோகுலிடன் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு” என்றும் வந்திருந்தது.

இரு துண்டுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டு தன் அறையிலிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தான். “ இது சரியா இருக்காதே! “ என்று தனக்குள்ளே பேசிக்கொண்டு அறையின் மத்தியிலிருந்த மற்றொரு இருக்கைக்குச் சென்றான். எதிரில் இருந்த டேபிளில் இரு துண்டுச்சீட்டுக்களையும் எடுத்து வைத்தப் பார்த்துக்கொண்டிருந்தபோது அவனது iPhone  “ Vishnu Informer " காலிங் என்றது.

“ இதென்னடா இது, நம்ம போன்ல இருந்து நம்மளுக்கே கால் வருது! “என்று நினைத்தவாறே அழைப்பை ரிசீவினான். எதிர்முனையில் கோகுல்.

“ யோவ், என்னோட போன எடுத்துட்டுப் போயிட்ட. உன் போன் இங்க இருக்கு. இதுக்குத்தான் ஒரே மாடல் போன் வாங்கக் கூடாதுங்கிறது! “ 

“ இரு வரேன். உன் க்ளூவும் எடுத்துட்டு வரேன்! “ என்றாவாரே கிளம்பளானான் விஷ்ணு. இவை எல்லாவற்றையும் விஷ்ணுவின் தலைக்கு மேலிருந்த கேமரா இந்தக் கண்ணில் வாங்கி அந்தப் பக்கமிருந்த ஹார்ட் டிஸ்கில் சேமித்துக்கொண்டிருந்தது.

எஸ்.பி கோகுலிடம் அவனது போனையும், க்ளூவையும் கொடுத்துவிட்டு “ இதுதான் எனக்குக் கிடைச்ச க்ளூ, எப்படியாவது ட்ரை பண்ணு. எனக்கு அவரசமா ஒரு வேலை இருக்கு! “ என்று கூறிவிட்டு மீண்டும் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான் விஷ்ணு.

”அப்பாடா! எப்படியோ ஒரு தொல்லை தொலைஞ்சது! “ என்றவாரே ஆயாசமாய் இருக்கையில் அமர்ந்து டையைக் கொஞ்சம் இறக்கிவிட்டுக்கொண்டே மேலே நிமிர்ந்ததும் அதிர்ந்தான்.

“அடச்சே! இத எப்படி மறந்தேன்? “ என்றவாரே ஆத்திரத்தில் ஒரு சுத்தியலை எடுத்து மேலே சுற்றிக்கொண்டிருந்த கேமராவின் கண்களைக் குருடாக்கினான்.

சட்டென கணினையை ஆன் செய்து மெயின் சர்வரிலிருந்து காவல்துறை உயரதிகாரிகளைப் பற்றிய தகவல்களை டவுன்லோடினான். தரவிறக்கும்போதே நேரடியாகத் தனது தொலைபேசியிலிருந்த மெமரிக்கார்டிற்கும் தகவல்களைப் பறிமாற்றிக்கொண்டு “ BOSS " என்றா எண்ணிற்கு அழைத்தான். எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும் கான்பிரன்ஸ் மூலம் ஐ.ஜி.சரவணனையும் தொடர்புகொண்டு

“Boss, எனக்குக் கொஞ்சம் ஆபத்து. எஸ்.பி.கோகுல குழப்ப நினைச்சு நான் எடுத்த பிரிண்டவுட் எங்க கேமராவுல பதிவாகிருச்சு. என்ன செய்யட்டும்? “

“ உடனே புறப்பட்டு நம்ம லேபுக்கு வந்துடு, ஐ.ஜி க்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே ? “

“ இல்ல சார், நோ ப்ராப்ளம்! “ 

“ சரி வா “ என்று இணைப்பைத் துண்டித்தார் டாக்டர் ரஃபி.

சரியாக அரைமணி நேரத்தில் விஷ்ணு ரஃபியின் லேபுக்கு வந்துசேர்ந்தான்.

“ என்ன விஷ்ணு ? ஒன்னும் பிரச்சினை இல்லையே ? “

“ இல்ல பாஸ். போலீஸ் கண்ணுல மண்ணைத் தூவிட்டு வந்துட்டேன்! “

“ எங்க மண்ணத் தூவுனீங்க ? நாங்கதான் வந்துட்டோமே! “ என்றவாறு துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்தார் எஸ்.பி.கோகுல்.

” கோகுல், கிட்ட வராதீங்க. நான் நினைச்சா இந்தக் கட்டிடத்த இப்பவே தரை மட்டமாக்கிடுவேன். இந்த லேபோட நாலு மூலைலையும் நியூக்ளியர் வெப்பன்ஸ் இருக்கு. எல்லாமே சக்தி வாய்ந்த புளூட்டேனியம் - 239 குண்டுகள். உங்களால இந்த சிட்டியே நாசமா போகனுமா ? “ என்று மிரட்டினார் டாக்டர் ரஃபி.

“அது முடியாது பாஸ், எல்லாத்தையும் புடுங்கிட்டேன்! ( கொஞ்சம் லோக்கல் தமிழில் பேச நினைத்து புடுங்கிட்டேன் என்றான்) “ என்றான் விஷ்ணு.

“ விஷ்ணு! என்ன சொல்ற ? “

“ ஆமா பாஸ், சாரி இனி எதுக்கு பாஸ்னு நடிச்சிட்டு ? உங்க லேபோட டோட்டல் கண்ட்ரோல் என் கைல. இனி நீங்க நேரா ஜெயிலுக்குப் போலாம்”

” நீங்களும்தான் மிஸ்டர் விஷ்ணு! “ என்றார் எஸ்.பி.கோகுல்.

” நான் எதுக்கு ? “

” உங்களுக்கும் ஐ.ஜி. சரவணனுக்கும் , டாக்டர் ரஃபிக்கும் இருந்த தொடர்ப நாங்க கண்டுபிடிச்சிட்டோம். ஐ.ஜி ய அரெஸ்ட் பண்ணியாச்சு. இந்த போட்டோல

இருக்கிறது கூட என்னை டைவர்ட் பண்ண நீங்க போட்ட ப்ளான்னு ஐ.ஜி எங்கிட்ட சொல்லிட்டார்”

” நீங்க அரெஸ்ட் பண்ணினது ஐ.ஜி னா இங்க இருக்கிறது யாரு ? “ அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அறையைக் காட்டிக் கேட்டான் விஷ்ணு.

அறையைத் திறந்து பார்த்த எஸ்.பி.கோகுல் சற்றே அதிர்ந்தார். அறைக்குள்ளே ஐ.ஜி சரவணனைப் போல ஒருவரும் விஷ்ணுவைப் போல ஒருவரும் இருந்தனர்.

“ இங்க என்ன நடக்குது ? இவுங்க யாரு ? அச்சு அசலா ஐ.ஜி மாதிரியே இருக்கார் ? “ கேள்விகளை அடுக்கினார் கோகுல்.

” இவர்தான் உண்மை. நீங்க அரெஸ்ட் பண்ணியிருக்கிறதுதான் மாதிரி! “ விஷ்ணு பதிலளித்தான்.

“ ஒன்னும் புரில! தயவுசெஞ்சு விளக்கமா சொல்லுங்க“

” நான் சொல்லுறத விட டாக்டர் ரஃபி சொன்னா புரியும்னு நினைக்கிறேன்! “

டாக்டர் ரஃபி தொடரலானார். ” க்ளோனிங் துறைல எனக்கு 2030ல நோபல் பரிசு கிடைச்சது. அதாவது ஒரு மனிதனோட உயிருள்ள ஒரு செல்லை மட்டுமே வச்சுட்டு செல்களின் வளர்ச்சிய துரிதப்படுத்தினா வெறும் 7 நாள்ல அவர மாதிரியே அச்சு அசலான இன்னொரு மனிதனை உருவாக்கிடலாம்கிறதுதான் அந்த ஆராய்ச்சி.குளோனிங் முறை ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் ஏழு நாள்ல ஒரு மனிதனை உருவாக்கலாம்கிற என்னோட ஆராய்ச்சிக்காகத்தான் நோபல் பரிசு குடுத்தாங்க. ஆனா இந்தியாவுல க்ளோனிங் செய்யக்கூடாதுனு தடை இருந்ததால அரசாங்கத்துக்குத் தெரியாமதான் இந்த லேபக் கட்டினேன். என்னோட கடந்த பத்து வருட ஆராய்ச்சியின் பயனா வெறும் இரண்டே நாள்ல ஒரு க்ளோன் மனிதனை உருவாக்குற அளவுக்கு வளர்ந்திட்டேன். அதே சமயத்துல அந்த மனிதனோட சிந்திக்கும் ஆற்றல கட்டுப்படுத்தி நாம சொல்லுற வேலைய செய்ய வைக்க திட்டம் போட்டேன். அதையும் கண்டுபிடிச்சேன். அத டெஸ்ட் பண்ணிப்பார்க்கத்தான் அந்த பேங்க் மேனேஜரக் கடத்தி அவர் மாதிரியே ஒரு க்ளோன் உருவாக்கி அந்த க்ளோன் மூலமா அந்த பேங்க்ல இருந்த பணத்த கொள்ளையடிச்சேன். அது வெற்றிகரமா முடிஞ்சதால இன்னும் கொஞ்சம் பணம் சம்பாதிக்கலாம்னு ஆசைப்பட்டேன். ஆனா அதுக்கு போலீஸ் நம்ம கைல இருந்தா வசதியா இருக்கும்னு நினைச்சு போலீஸ் ஐ.ஜி. சரவணனை கடத்தி அவரோட க்ளோன போலீஸ் ஐ.ஜி யா மாத்தினேன். அதே சமயத்துல விஷ்ணு வும் என் கைல மாட்டினார். ஒருவேளை இவர் உண்மையைக் கண்டுபிடிச்சிடுவாரோன்னு பயந்து இவரோட க்ளோனையும் உருவாக்கி அந்த க்ளோன் மூலமா எல்லோரையும் கவனிச்சுட்டு வந்தேன். ஆனா நான் உருவாக்கின விஷ்ணுவோட க்ளோன் எப்படி எனக்கு எதிரா மாறிச்சுனுதான் தெரியல? “ சோகமாய் முடித்தார் ரஃபி.

அது எப்படினு நான் சொல்லுறேன் என்றவாரு ஆரம்பித்தான் அசல் விஷ்ணு. ”உங்க முன்னாடி இப்ப நின்னுட்டிருக்கிறது நீங்க தயாரிச்ச V1 (விஷ்ணு 1 ) க்ளோன் இல்ல. உங்க பாசைல சொல்லப்போனா இது V ஜீரோ. அதாவது நீங்க தயாரிக்கிறதுக்கு முன்னாடியே நான் தயாரிச்ச என்னோட க்ளோன் இது. எனக்கு அந்த பேங்க் கேஸ்ல கிடைச்ச கொஞ்ச தகவல்களை வச்சு சில விசயங்களைக் கண்டுபிடிச்சேன். அதே சமயம் ஐ.ஜி யும் ஒரு ரண்டு நாள் லீவு போட்டார். ஆனா எனக்குத் தெரியாம அவர் லீவு போட்டு நான் பார்த்ததில்ல. சோ அவர் லீவு முடிஞ்சு ஆபீசுக்கு வந்ததும் அவர பாலோ பண்ண ஆரம்பிச்சேன். அவர் ஆபீஸ் முடிஞ்சதும் நேரா உங்க லேபுக்குத்தான் வந்தார். உங்க லேபுக்கு முன்னாடி இருந்த உங்க பேர பத்தின செய்திகளைத் தேடினபோதுதான் நீங்க ஒரு க்ளோனிங் எக்ஸ்பர்ட்னு தெரிஞ்சிக்கிட்டேன். உடனே அந்த பேங்க் மேனேஜரப் போய்ப் பார்த்தேன். அவரும் தன்னை திடீர்னு ஒருநாள் கடத்திட்டுப் போய் உடம்புல இருந்து கொஞ்சம் சதைய வெட்டிட்டு ஒரு ரூம்ல போட்டு அடைச்சு வச்சிருந்ததாவும் , ஏழு நாளுக்கு அப்புறம் திறந்துவிட்டுட்டதாகவும் சொன்னார். அப்பவே நான் இது கண்டிப்பா க்ளோனிங் மேட்டராத்தான் இருக்கும்னு சந்தேகப்பட்டேன். ஆனா அதுக்கு முன்னாடியே நான் என்னோட க்ளோன தயாரிச்சிருந்தேன். உங்க க்ளோன்ஸ் மாதிரி சிந்திக்கத் தெரியாத க்ளோன் இல்ல இது. என்னை மாதிரியே ரொம்ப நல்லா சிந்திக்கும் திறன் வாய்ந்த க்ளோன். என்னோட க்ளோனான இப்ப உங்க முன்னாடி நின்னுட்டிருக்கிற விஷ்ணுவ ஆபீசுக்குப் போகச் சொல்லிட்டு நானா ப்ளான் பண்ணி உங்க கைல சிக்கினேன்” என்று முடித்தார் விஷ்ணு.

“ ஆனா நான் உங்கள கடத்தின ரண்டு நாள்ல உங்களோட க்ளோன தயாரிச்சு உங்க ஆபீசுக்கு அனுப்பி வச்சேனே ? “ குழப்பமாகக் கேட்டார் ரஃபி.

“ அந்தக் குளோனப் பிடிக்கிறதுக்குத்தான் இத்தன ட்ரிக்ஸ் பண்ணினேன். நீங்க என்னைக் கடத்தின இரண்டு நாள்ல என்னை மாதிரியே ஒரு க்ளோன் தயாரிச்சு எங்க ஆபீசுக்கு அனுப்புவீங்கனு தெரியும். அது ஆபீஸ் டைம் போக மிச்ச நேரம் இங்க தான் இருக்கும்னு தெரியும். சோ நீங்க தயாரிச்ச V1-அ கடத்தி என்னோட வீட்டுல அடைச்சு வச்சிட்டுத்தான் என்னோட க்ளோன் அதாவது இப்ப உங்க முன்னாடி நிக்கிறானே இவன் இந்த ஏழு நாளா இங்க வந்திட்டு இருந்தான். உங்க லேப்ல இருக்கிற எல்லா ரோபோட்ஸ் அப்புறம் தற்காப்பு பொருட்கள் எல்லாத்தையும் உங்களுக்குத் தெரியாமயே அப்புறப் படுத்திட்டான்”

” ஆனா நீங்க எதுக்காக எனக்கு தப்பான ஒரு க்ளூ ( S W H2 6F) குடுத்துட்டு கேமராவையும் உடைச்சீங்க ? “ எஸ்.பி கோகுல் ஆர்வமாகக் கேட்டார்.

விஷ்ணுவின் முதல் க்ளோன் பேச ஆரம்பித்தான். ” உண்மைல நம்ம ஆபீஸ்ல யாரெல்லாம் க்ளோன்னு தெரியல. கூடவே யாரெல்லாம் டாக்டர் ரஃபியோட ஆளுங்கன்னு தெரியல. சோ ஒருவேளை நான் போய் இந்த மாதிரி ஐ.ஜி ய கடத்தி வச்சிருக்காங்கனு சொல்லி அவுங்க டாக்டரோட ஆளுங்களா இருந்து இவர் தப்பிச்சிட்டா என்ன பண்ணுறதுனு பயமா இருந்துச்சு. அதனால என் மேல சந்தேகம் வரவைக்கணும்னுதான் அந்த மாதிரி துண்டுச்சீட்டுல ரண்டு வாசகங்கள பிரிண்ட் எடுத்து கேமராவுல படுற மாதிரி வச்சிட்டு , அப்புறம் டென்சனாகி கேமராவ உடைக்கிறமாதிரி உடைச்சேன். ஒருவேளை ரஃபியோட ஆளுங்க அதப் பார்த்தா ஒன்னும் கண்டுக்க மாட்டாங்க. உண்மையான போலீஸ் ஆளுங்க பார்த்தா என்னை பாலோவ் பண்ணுவாங்கனு ப்ளான் பண்ணினேன்.அதோட என்னோட மொபைல நீங்க ஒட்டுக்கேக்கனும்னு நினைச்சேன். அதுக்காகத்தான் போலீஸ் ஆபீசர்ஸ்சோட இம்பார்ட்டண்ட் பைல்கள மெயின் சர்வர்ல இருந்து என்னோட் யூசர்நேம் குடுத்து டவுன்லோட் பண்ணினேன். அப்படி பண்ணினா என்னோட மொபைல் ஒட்டுக்கேக்கப்படும்னு எனக்குத் தெரியும். அதோட அதே சமயத்துல அங்க இருக்கிற ஐ.ஜி க்கும் இதுல தொடர்பு இருக்குனு தெரியப்படுத்த அவருக்கு கான்பரன்ஸ் போட்டேன். எல்லாமே நான் நினைச்ச மாதிரி ஜெயமா முடிஞ்சது” என்று சிரித்தான் வி-ஜீரோ என்னும் விஷ்ணு.

26 comments:

சி.பி.செந்தில்குமார் said...

அசல்

சி.பி.செந்தில்குமார் said...

கதையை அனைவரும் எளிதாக வாசிக்க பெரிய பேராக்களை சின்னதாக்கவும்.

வாழ்த்துக்கள், ஒரு பரிசு நிச்சயம்

வெளங்காதவன்™ said...

தம்ப்ரி!

சான்ஸ் லெஸ்....

சத்தியமா மொதல் பாரா, சுஜாதாவைப் படிப்பது போல இருந்தது...

கீப் ராக்கிங்....

சி.பி.செந்தில்குமார் said...

பட்டுக்கோட்டை பிரபாகரின் எள்ளல் நடை, சுபாவின் சம்பவக்கோர்வை ஸ்டைல் எல்லாம் கலந்து இருக்கு.. குட் ஒன்..

செல்வா said...

@ வெளங்காதவன் :

ஐயோ! ரொம்ப நன்றினா :)) ரொம்ம சந்தோசமா இருக்கு!

செல்வா said...

@CPS :

சின்னச் சின்ன பேராவா எழுதனும்னுதான் நினைச்சேன். அது ஒருத்தர் தொடர்ச்சியா பேசுறார் அப்படிங்கிறதால அப்படி எழுதிட்டேன்ணா. ஆனா நன்றி.

செல்வா said...

//பட்டுக்கோட்டை பிரபாகரின் எள்ளல் நடை, சுபாவின் சம்பவக்கோர்வை ஸ்டைல் எல்லாம் கலந்து இருக்கு.. குட் ஒன்..//

ஐ! ரொம்ப ரொம்ப நன்றி.

Vijayashankar said...

கொஞ்சம் கொழப்பமா தான் இருக்கு. 2030 வருட வர்ணனைகள் மிஸ்ஸிங்.

Kousalya Raj said...

கிரைம் நாவலை படிக்க ஆரம்பிச்சா முடிக்கிற வரை கீழே வைக்க மாட்டேன். ..அது மாதிரி இந்த கதையும் விறுவிறுப்பாக இருக்கிறது.

மனமார பாராட்டுகிறேன் செல்வா ஒரு சிறந்த எழுத்தாளன் ஆகிட்டீங்க.

கதை எழுதுவதால் சொல்லவில்லை, வாசகர்களை கவரும் விதமாக/பிடிக்கும் விதமாக எழுதுவது எல்லோருக்கும் அமைவதில்லை. என்ன எழுதுகிறோம் என்பதை விட அது படிப்பவர்களின் மனதை தொட வேண்டும். இந்த கதை கண்டிப்பாக அனைவரையும் தொடும்.

வெற்றி நிச்சயம். இன்னும் பல சிகரங்களை எட்ட என் வாழ்த்துக்கள்.

Prabu Krishna said...

ஒரு சில இடங்களில் ஏன் என்ற கேள்வி இருந்தாலும் கதை நல்லா இருக்கு.

ப.கந்தசாமி said...

சார், செல்வா சார், நீங்க என்ன சொல்றீங்க, நீங்க யாரு, நான் யாரு, இது என்னா ஊரு, என்ன சார் எல்லாம் ஒரே கொழப்பமா இருக்கு.

asksukumar said...

சூப்பர், அறிவியல் கதை சொல்லி நீங்கள்! வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள்.

தம்பி said...

நன்றாக உள்ளது... வெற்றி பெற வாழ்த்துக்கள்...

அனு said...

ரொம்ப நல்லா இருக்கு செல்வா.. வெற்றி பெற வாழ்த்துக்கள்.. :)

இராஜராஜேஸ்வரி said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்...

TERROR-PANDIYAN(VAS) said...

ஒன்னுமே புரியலை உலகத்திலே!
என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது!
ஒன்னுமே புரியலை உலகத்திலே

ஆமாம் நீ செல்வா V1 இல்லை செல்வா V0 இல்லை செல்வா அசலா... :)

Mohamed Faaique said...

சூப்பரா இருக்கு... முதலில் கேரக்டர்கள் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. கடைசியில் எல்லாம் சுபம்..

Madhavan Srinivasagopalan said...

கவலைப் படாத.. உனக்கு கண்டிப்பா பரிசு கெடைக்கும்..
ஏன்னா, நா போட்டில கலந்துக்க வேணாம்னு நெனைக்குறேன். .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வெரிகுட் செல்வா நல்ல எழுத்து நடை, அருமையான கதைக்களம்..... வாழ்த்துக்கள்

ராஜி said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

middleclassmadhavi said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

வெற்றி பெற வாழ்த்துக்கள்!(கீழே இருப்பது க்ளோன்!)

நம்பிக்கைபாண்டியன் said...

நல்ல சயின்ஸ் பிக்ஸன் கதை.

" யோவ், என்னோட போன எடுத்துட்டுப் போயிட்ட. உன் போன் இங்க இருக்கு. இதுக்குத்தான் ஒரே மாடல் போன் வாங்கக் கூடாதுங்கிறது! “

இந்த இடம் சிரிக்கவைத்தது.

Unknown said...

நம்ம ஊர்க்காரர்... நானும் கோபிதான்...
வெற்றி பெற வாழ்த்துக்கள்
UDANZ -1

Unknown said...

நல்லா இருக்கு....வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நம்பிக்கைபாண்டியன் said...

போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!