Showing posts with label செல்வா கதைகள். Show all posts
Showing posts with label செல்வா கதைகள். Show all posts

Monday, February 28, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : அனைவருக்கும் ஒரு நற்செய்தி.  இனிமேல் நீங்க திங்கள் கிழமையை நினைத்து பயப்பட வேண்டாம். கோமாளி ப்ளாக்ல செல்வா கதைகள் கூடிய விரைவில் நிறுத்தப்படும்.

                                      செல்வாவும் பாட்டுப்போட்டியும் 

ஒரு முறை செல்வா ஒரு தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட பாட்டுப் போட்டிக்குச் சென்றிருந்தார். அங்கே ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். நடுவர்களும் அவர்களின் நிறைகுறைகளைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தனர்.

அடுத்து செல்வாவின் முறை. செல்வாவும் தைரியமாக மேடையில் ஏறிப் பாடத்துவங்கினார். செல்வா பாட்டை முடிப்பதற்குள் நடுவர்களில் ஒருவர் போதும் நிறுத்துங்க என்று கூச்சலிட்டார். மேலும் " என்ன பண்ணுறீங்க ? " என்றார் கோபமாக.

" பாட்டுத்தான் பாடுறேங்க ?! "

" இதுக்குப் பேரு பாட்டா ? ஸ்ருதி , டெம்ப்போ , பிட்ச் எதுவுமே வரல , எதுக்கு நீங்க எல்லாம் பாடனும்னு விரும்புறீங்க ? " என்றார்.

" சாரி மேடம் , பிரிப்பர் பண்ணாம வந்திட்டேன் , ஒரு மணிநேரம் கழிச்சு பாடலாமா. ? " என்றார்.

நடுவர்களும் ஒப்புக்கொள்ள செல்வா மேடையிலிருந்து கிளம்பினார்.

சரியாக ஒரு மணிநேரத்திற்குப் பிறகு செல்வா மேடைக்கு வந்தார். கூடவே ஒரு பெண்ணும் வந்தார். 

செல்வாவைப் பார்த்த நடுவர் , " இது ஒருத்தர் மட்டுமே பாடுற போட்டி , எதுக்கு ரண்டு பேரு வந்திருக்கீங்க ? "

" மேடம் இவுங்க பேரு ஸ்ருதி , நீங்க தானே கொஞ்ச நேரம் முன்னாடி ஸ்ருதி வரலைன்னு சொன்னீங்க., அதான் கூட்டிட்டு வந்தேன். "

நடுவர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு செல்வாவை கோபத்துடன் பார்த்தனர்.

அவர்களின் கோபத்தைப் புரிந்து கொண்ட செல்வா " டெம்போ வரலைன்னு கோபப்படுறாங்க போல " என்று தனக்குள்ள பேசிக்கொண்டு , " மேடம் , டெம்போ வெளிய நிக்குது., அப்புறம் பிட்ச் கேட்டீங்க , நேரு ஸ்டேடியம கேட்டிருக்கேன், நல்ல வேலைக்கு முடிஞ்சதும் சைக்கிள்ள கட்டியாவது இழுத்துட்டு வந்திடுவேன் " என்றார் பெருமை பொங்க.

இதைப் பார்த்த நடுவர்களில் ஒருவர் " இனிமேல் சத்தியமா எந்த போட்டிக்கும் நடுவரா போகவே மாட்டேன் " என்று சத்தியம் செய்துவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தபோதிலும் மனதிற்குள் நினைத்துகொண்டார் தன்னைத் தேர்வு செய்யும் அளவிற்கு அவருக்கு திறமை பத்தாது போலும் என்று! ஆனால் அவரைப் பாடுவதற்கு அந்தத் தொலைக்காட்சி நிலையம் இன்றுவரை அனுமதிக்கவில்லை என்பது சற்றே வேதனையான செய்தி!!


                                               OMR தாள் 


செல்வா பள்ளியில் படித்துகொண்டிருந்த போது அவரது தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் செல்வா எந்தப் பரீட்சைக்கும் பயந்தவரல்ல என்பது அவரது அறிவுத்திறமையால் நாம் அறிந்ததே!

இன்னும் சொல்லப் போனால் செல்வா எந்தப் பரீட்சை எழுதப் போகிறார் என்றே அவருக்குத் தெரியாது. சில மாணவர்கள் அப்படி இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கேள்வித்தாளை வாங்கினால் அது என்ன பாடம் என்பது தெரிந்துவிடும்.

ஆனால் செல்வாவோ கேள்வித்தாளை வாங்கினாலும் அவர் என்ன பரீட்சை எழுதிகிறார் என்பது அவருக்கோ அல்லது அவரது விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியருக்கோ ஏன் அந்தக் கடவுளுக்கோ கூடத் தெரியாது. ஆனால் கூடுதல் விடைத்தாள்கள் வாங்குவதில் செல்வாவை இதுவரை யாரும் மிஞ்சியதில்லை. ஒவ்வொரு பரீட்சைக்கும் குறைந்தது 30 கூடுதல் விடைத்தாள்கள் வாங்குவார்.

அதுமட்டும் அல்ல. ஒரு சமயம் அவர் எட்டாம் வகுப்புப் படித்துகொண்டிருந்தார். ஆனால் அவர் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் மாணவர்களுடன் சேர்ந்து ஒன்பதாம் வகுப்புத் தேர்வு எழுதினார் என்பதே அவரது அறிவுத்திறமையை நமக்கு உணர்த்தும்.

இப்படி இருந்த செல்வாவிடம் ஒருநாள் OMR (Optical Mark Reader) தாள் ஒன்றினைக் கொடுத்து தேர்வு ஒன்று வைக்கப்பட்டது. இதில் கொள்குறி வகையிலான கேள்விகளே இருக்கும் என்பது நீங்கள் அறிந்ததே.

அந்தத் தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில் செல்வா கூடுதல் விடைத்தாள் கேட்டார்.

இதைப் பார்த்த ஆசிரியர் " OMR சீட் எக்ஸாம்ல எதுக்கு உனக்கு அடிசனல் சீட் ? "

" சார் , அதனால ஒன்னும் பிரச்சினை இல்லை , நான் எழுதிடுவேன் , நீங்க அடிசனல் குடுங்க " என்றார்.

" என்னையப் பார்த்தா உனக்கு நக்கலாத் தெரியுதா ? ஒழுங்கா உட்கார். " என்று எரிச்சல் பட்ட ஆசிரியரைப் பார்த்த செல்வா சற்றே அச்சத்துடன் சோகமாக அமர்ந்தார்.

நீதி : மேற்கண்ட கதைகளால் செல்வா போன்ற அறிவாளிகள் தங்களது அறிவுத்திறமையை வெளிப்படுத்த முடியாமல் போகிறது என்பது நமக்குத் தெளிவாக விளங்குகிறது.. நிச்சயம் உலகம் மாற வேண்டும்!!

பின்குறிப்பு : முன்குறிப்பால் மகிழ்ச்சி அடைந்தோருக்கு ஒரு சோகமான செய்தி. செல்வா கதைகளுக்கு என்று தனி வலைப்பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதும் அதன் முகவரி http://www.selvakathaikal.blogspot.com/ இது எனபதையும் தெரிவிக்கக் கடமைப் பட்டுள்ளேன்.

Monday, February 21, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : முன்குறிப்பு வெள்ளைக் கலர்ல இருக்கு பாருங்க! 

                         செல்வாவும் தேங்காயின் வாழ்நாளும் 

ஒரு முறை செல்வாவும் அவரது சகோதரரும் அவர்களது தோட்டத்தில் உலாவிக்கொண்டிருன்தனர்.

அப்பொழுது ஒரு தென்னை மரம் பாளை(பூ) விட்டிருந்தது. இதைப் பார்த்த அவரது சகோதரர் இது காயா மாறி பறிக்கிற அளவு வரதுக்கு  இன்னும் ஒரு வருசம் ஆகும் என்றார்.

இதைகேட்ட செல்வா அவ்ளோ நாள் எல்லாம் ஆகாது , ஒரு ஆறு மாசத்துல முத்திடும் என்றார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் இருவரும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

அதன்படி அந்தக் குலையை அடையாளமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதனை ஒரு வருடம் கண்காணிக்க வேண்டும் என்றும் , தினமும் ஒருவர் மாற்றி ஒருவர் வந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

ஒப்பந்தம் செய்து அடுத்த நாள் அவரது சகோதரர் வந்து பார்த்துச்  சென்றுவிட்டார். அடுத்த நாள் செல்வாவின் முறை. அதற்கு அடுத்த நாள் சென்ற அவரது சகோதரர் அந்தக் குலை காணாமல் போனதால் சற்றே அதிர்ச்சியுற்றார்.

செல்வாவிடம் விசாரித்த போது தினமும் தோட்டம் சென்று வருவது சிரமமாக உள்ளது , அதனால் அந்தக் குலையை வெட்டி எடுத்து வந்து வீட்டில் வைத்திருப்பதாகவும் இனிமேல் தோட்டம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதைக்கேட்ட அவரது சகோதரர் " லூசா நீ ? இனிமேல் அது எப்படி வளரும் ?" என்றார் கோபமாக.

" தேங்காய் கூடத்தான் நாம வீட்டுல வச்சிருக்கோம் , அது கொஞ்ச நாளுக்கு அப்புறம் கொண்டுபோய் மண்ணுல போட்டாலும் வருதில்ல , அதுமாதிரி வளராதா ? " என்றார் அப்பாவியாக.



                       செல்வாவும் கைத்தொழிலும் 

செல்வா தனது படிப்பினை முடித்துவிட்டு வேலை தேடலாம் என்று முயற்சித்துக்  கொண்டிருந்தார். 

ஒரு நாள் அவரது மாமா செல்வாவின் வீட்டிற்கு வந்தார். செல்வாவிடம் என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்றார். அதற்கு செல்வா வேலை தேடிக்கொண்டிருப்பத்தாகக் கூறினார். இதைக்கேட்ட அவரது மாமா வேலை கிடைக்கும் வரையில் கையில் இருப்பதைக் கொண்டு சுயதொழில் ஒன்று செய்  என்று அறிவுரை கூறிச்சென்றார்.  

சிறிது நாட்களுக்குப் பிறகு செல்வா அவரது மாமாவைச் சந்திக்கச் சென்றார். மாமாவிடம் தான் புதிதாக தொழில் தொடங்கியிருப்பதாகவும் அதற்கு அவர் வாழ்த்தி முதலில் துவங்கி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பின்னர் இருவரும் செல்வா தொழில் துவங்கியுள்ளதாகக் கூறிய கடைக்குச் சென்றனர். அங்கே முன்னால் ஒரு பெரிய போர்டில் " உங்கள் பல் சிறந்த முறையில் சுத்தம் செய்து தரப்படும் , சொத்தைப் பல்லா , இல்லை பீடிக்கறை உள்ள பல்லா? கவலை வேண்டாம். எங்களிடம் கழட்டிக் கொடுங்கள். விரைவில் சுத்தம் செய்து தருகிறோம்! என்ற அறிவிப்பு இருந்தது.

இதைப் பார்த்த அவரது மாமா சற்றே வித்தியாசமாக " இது என்ன ? எனக்கு ஒண்ணும் புரியலை " என்றார் .

" மாமா நீங்கதானே அன்னிக்கு கைல இருக்குறத வச்சு ஒரு தொழில் தொடங்கு அப்படின்னு சொன்னீங்க ,அதான் இந்த மாதிரி தொழில் தொங்கினேன் " என்றார் .

இதைக்கேட்ட அவரது மாமா " நான் சொன்னதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?! " என்றார்.

" நீங்க அன்னிக்கு சொல்லும்போது நான் பல்லு விளக்கிட்டு இருந்தேன் , அப்போ என் கைல TOOTHBRUSH இருந்துச்சு , நீங்க கைல இருக்குறத வச்சு தொழில் தொடங்க சொன்னீங்க. அப்படின்னா அத வச்சு இந்தத் தொழில்தானே பண்ண முடியும் , அதனால உங்க பல்ல கழட்டிக்குடுங்க , முதல் போனி உங்ககைல இல்ல இல்ல உங்க வாய்ல இருந்துதான்!! "

" கைல இருக்குறத வச்சு பண்ணு அப்படின்னா ? ( எதையோ சொல்ல வந்தவர் ) வேண்டாம் சாமி , நான் ஒண்ணும் சொல்லல , ஆள விடு " என்று புலம்பியவாறே சென்றுவிட்டார்.

செல்வாவிற்கு பெரும் குழப்பம் , அவர் சொன்னதைத் தானே செய்தோம் ஏன் திட்டுகிறார் என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்தார். பாவம் அறிவாளிகளை உலகம் ஒருபோதும் முதல் முயற்சியில் ஏற்றுக்கொள்வதே இல்லை.

நீதி : நீதி வெள்ளைக் கலர்ல இருக்கு பாருங்க 

பின்குறிப்பு : என்னடா நாம வெட்டியா கிரிக்கெட் மட்டுமே பார்த்துட்டு இருக்கோமே , இதனால உருப்படியா ஒன்னும் இல்லையே அப்படின்னு பீல் பண்ணாதீங்க ,  உலகக்கோப்பை சவால் பரிசுப்போட்டி எங்க தலைவர் கோகுலத்தில் சூரியன் ல நடக்குது .நீங்களும் கலந்துட்டு பரிசினை வெல்லுங்கள்.

Monday, February 14, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : சிலருக்கு என்றே சில கிழமைகள் படைக்கப்பட்டிருக்கும். அதுபோலவே செல்வா கதைகளுக்காகப் படைக்கப்பட்டதே திங்கள் கிழமை!

                          லேண்ட்மார்க்கும் செல்வாவும்

  ஒரு முறை செல்வா அவரது நண்பரைக் காண நண்பரின் ஊருக்குச் சென்றிருந்தார். அப்பொழுது செல்வாவிற்கு நண்பரின் வீடு தெரியாது என்பதால் செல்வாவை பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அழைக்குமாறு கூறியிருந்தார். செல்வாவும் நண்பர் கூறியது  போல பேருந்து நிலையத்தில் இறங்கியதும் அவருக்கு அழைத்தார்.

செல்வா : நான் பஸ் ஸ்டாண்ட் வந்திட்டேன்

நண்பர் : அங்கேயே இரு , வந்திடறேன் . நீ  எந்த இடத்துல நிக்கிறனு சரியா சொல்லு.?

செல்வா : அதான் பஸ் ஸ்டாண்ட்ல..

நண்பர் : அது தெரியுது , பஸ் ஸ்டாண்ட்ல எங்கனு சொல்லு , எதாச்சும் லேண்ட்மார்க் சொல்லு.

செல்வா : இரு கேட்டு சொல்லுறேன் ., அருகில் இருந்தவரிடம் இங்க லேண்ட்மார்க் விக்கும்களா ?

அவர் : லேண்ட்மார்க் எல்லாம் விக்காது ,  தொண்டைலதான் விக்கும்!!
( அவரும் செல்வா போன்ற அறிவாளி போலும் )

செல்வா : இங்க விக்காதுன்னு சொல்லுராங்கடா..!!

நண்பர் : உஸ் , லேண்ட்மார்க் அப்படின்னு பக்கத்துல இருக்குற பெரிய கட்டிடமோ , இல்ல எதாச்சும் அடையாளம் சொல்லு.. அது எங்கயும் விக்க மாட்டாங்க!!

செல்வா : இங்க ஒரு பெரிய கட்டிடம் இருக்கு , அதுல கூட பஸ் எல்லாம் வந்து நிக்குது.

நண்பர் : பஸ் ஸ்டாண்ட்னா பஸ் வந்து நிக்கத்தான் செய்யும். வேற எதாச்சும் சொல்லித்தொலை , உசுர வாங்காத.!

செல்வா : இங்க BSNL BROADBAND @ 225 PM அப்படின்னு எழுதிருக்கு.!

நண்பர் : அது நிறைய இடத்துல இருக்கும் , வேற எதாச்சும் சொல்லு.

செல்வா : இங்க ஒரு நோட்டீஸ் ஒட்டிருக்காங்க , NO SALES , NO RISK , NO MARKETING @ 15000 PM அப்படின்னு இருக்கு. இது போதுமா ?

நண்பர் : நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம் , நான் உன்னப் பார்த்திட்டேன்.

செல்வா : சரி வா.அருகில் வந்த நண்பரிடம் நான் எப்படி கரட்டா லேண்ட்மார்க் சொன்னேன் பார்த்தியா ?

நண்பர் : நீ சொன்ன லேண்ட்மார்க வச்சு நாலு நாள் ஆனாலும் கண்டு பிடிக்க முடியாது . அங்க ஒருத்தர் அழுதுட்டே போனாரு , என்னனு கேட்டதுக்கு லேண்ட்மார்க் எங்க விக்கும் அப்படின்னு ஒருத்தன் என்னைய கேட்டு கேட்டு தொந்தரவு செஞ்சான் அவன் தொந்தரவு தாங்காம தான் இங்க வந்தேன் அப்படின்னு சொன்னார். அதான் உன்ன கண்டுபிடிச்சேன்.

செல்வா : சரி நீ சொல்லு லேண்ட்மார்க் எங்க இருக்கு ?

நண்பர் : இனிமேல் உன் வாயத்தொறந்து எதாச்சும் கேட்டா கண்டிப்பா எனக்கு நான் அப்படியே போய்டுவேன்..!!!

                                                     செல்வாவும் வரட்டீயும் 


   ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் ஒருவரும் பேக்கரி ஒன்றிக்கு டீ சாப்பிடலாம் என்று சென்றனர். அப்பொழுது செல்வா நண்பரிடம் " நீங்க டீ குடிப்பீங்கதானே , எனக்கு பால் " என்றார்.

நண்பர் : எனக்கு வரட்டீ ..

செல்வா : அது இங்க கிடைக்குமா ?

நண்பர் : எல்லா டீ கடைலயும் கிடைக்கும்..

செல்வா : ஆனா அது எப்படி தயாரிப்பாங்க..?

நண்பர் : எப்பவும் போலதான் ..

செல்வா : ஆனா குடிக்கும்போது பேட் ஸ்மெல் வராதா ?

நண்பர் : டீ மனம் தானே வரும், பேட் ஸ்மெல் எதுக்கு வருது ?

செல்வா : டீ மனம் தான். ஆனா வரட்டி ( கவனிக்க செல்வா வரட்டீ என்ற சொல்லை வரட்டி என்று புரிந்துகொண்டுள்ளார் ) எப்படி மனம் அடிக்கும் ?

நண்பர் : நீ சொல்லுறது எனக்குப் புரியலை.

செல்வா : வரட்டி அப்படின்னா சாணி எடுத்து செவுத்துல ரவுண்டா அடிச்சு வச்சிருப்பாங்களே அதுதானே , படத்துல பார்த்திருக்கேன்..

நண்பர் : அது வரட்டி , இது வரட்டீ!! ஏன்டா இப்படி உயிரை வாங்குற ? உன்கூட டீ குடிக்க வந்தது தப்பா ? இனிமேல் எப்பவாச்சும் என்ன டீ குடிக்க கூப்பிட்டுறாத ? என்று புலம்பியவாறே அவர் செல்வாவை முறைத்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டார்.

நீதி : அம்மா என் கால் சைக்கிள்ள மேல இருந்து கீழ வரை ஏன் எட்ட மாட்டேங்குது ? மரத்துல தொங்குற மாங்காய் என்ன ஏன் கிண்டல் பண்ணுது ? எனக்கு வயசு தான் ஆகுது , நான் எப்ப உயரமாவேன் ?

பின்குறிப்பு : செல்வா கதைகள் வருவதால் திங்கள் கிழமை என்பது கொண்டாடப் படவேண்டிய ஒன்று.!

Monday, February 7, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : பூமி சூரியனை சுற்றி வருது அப்படின்னு சொன்னா கலீலியோவ கல்லால அடிச்சுக் கொன்றது அன்றைய உலகம்.பின்னர்தான் உண்மையை உணர்ந்து கொண்டது.

                                        அருண் + அருண் + செல்வா

  சென்ற சனிக்கிழமை தினத்தன்று மொரீசியசில் இருந்து இந்தியா வந்திருக்கும் செல்வாவின் நண்பர் அருண் அவர்ளை சந்திக்கலாம் என்று சுற்றுலா விரும்பி அருண் , கார்த்திக்குமார் மற்றும் செல்வா ஆகியோர் முடிவு செய்தனர். சில பல காரணங்களால் கார்த்திக் வர இயலாமல் போனது. சரி என்று அருண் மற்றும் சுற்றுலா விரும்பி அருண் ஆகியோர் செல்வாவை கோவை வருமாறு அழைத்தனர்.

  செல்வாவும் காலை 10 மணிக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். ஆனால் செல்வா கோவை சென்ற நேரம் 11.௦30. பின்னர் அவர்களிடையே நடந்து உரையாடல்கள்.

அருண் ( சீனியர் ) : ஏன் டா இவ்ளோ நேரம் ? 

செல்வா : தலை சீவ மறந்திட்டேன் , அதான் பாதிவரைக்கும் வந்திட்டு மறுபடியும் வீட்டுக்குப் போய் தலை சீவிட்டு வந்தேன்.

அருண் (ஜூனியர் ): உனக்கென்ன பொண்ணா பாக்குறோம் , இதெல்லாம் ரொம்ப அதிகம்டா. என்று கூறிவிட்டு மூவரும் ஒரு ஐஸ் கிரீம் கடைக்குள் சென்று ஐஸ் கிரீம் சாப்பிட்டனர்.அப்பொழுது அருண் ( சீனியர் ) அவர்கள் "வரும்போது ஏன் கால நொடிச்சு நொடிச்சு நடந்து வந்த "? 

செல்வா : காலுல முள் ஏறிடுச்சு, அதான் அண்ணா! "

அருண் : இதுதான் உங்களோட கேட்ட பழக்கம் , இதுவே ஒரு வெள்ளைகாரனுக்கு முள் ஏறினா காலுல முள்ள எத்திக்கிட்டேன் அப்படின்னு சொல்லுவான் , ஆனா நம்ம ஆளுக மட்டும் முள்வந்து இவுங்க மேல ஏறிடுச்சு அப்படின்னு சொல்லுவாங்க.

செல்வா : அவுங்க முள் ஏத்திக்கிட்டேன் அப்படின்னு தமிழ்ல சொல்லுவாங்களா ?

அருண் (ஜூனியர் ): நீ இப்பத்தான் இப்படியா ? இல்ல எப்பவுமே இப்படியா ? .. என்று கூறிவிட்டு மூவரும் சாப்பிட அஞ்சப்பர் உணவகம் செல்லலாம் என்று முடிவு செய்து அருண் ( ஜூனியர் ) அவர்களது வண்டியில் முதலில் செல்வாவை அழைத்துக்கொண்டு அஞ்சப்பர் உணவகம் இருந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்று விட்டுவிட்டு," இப்படியே நேரா போனீனா அஞ்சப்பர் வரும் , அங்க இரு , நான் போய் அண்ணன கூட்டிட்டு வந்திடறேன் " என்றவாறு கிளம்பினார். சிறிது நேரம் கழித்து வந்த இருவரும் செல்வாவை அஞ்சப்பர் உணவகத்தில் இல்லாததைக் கண்டு அவருக்கு அழைத்தனர். 

அருண் : செல்வா , எங்க இருக்க ? 

செல்வா : அங்கேதான் இருக்கேன் .

அருண் : அதான் எங்க ?

செல்வா : நீங்க இறக்கிவிட்ட இடத்துல .

அருண் : அங்க ஏன் நிக்குற , நான்தான் அஞ்சப்பருக்கு வர சொன்னேன்ல ..

செல்வா : நீங்கதானே , அஞ்சப்பர் வரும்னு சொன்னீங்க , அதான் நாம ஏன் வீணா நடக்கனும்னு இங்கே நின்னுட்டேன் , அஞ்சப்பர இன்னும் காணோம் ?!!!

அருண் : ஐயா சாமி , அப்படி சொன்னது தப்புத்தான் , அப்படியே நேரா வா .. ( இவனெல்லாம் வச்சிட்டு எப்படித்தான் )

பின்னர் மூவரும் அஞ்சப்பர் உணவகத்தில் உணவு வகைகளை ஆர்டர் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது செல்வாவிடம் என்ன வேண்டும் என்று கேட்ட உணவாக ஊழியர் செல்வா சொன்ன பதிலைக்கேட்டு சற்றே அதிர்ச்சியுற்றார். செல்வா தனக்கு நேராக இருந்த மீன்தொட்டியில் வளர்க்கப்பட்ட மீன் ஒன்றை வேண்டும் என்று கேட்டதுதான் இந்த அதிர்சிக்குக் காரணம்.

அருண் : மானத்த வாங்காத , அது அழகுக்காக வளர்க்குறது..

செல்வா : சரி வேற எதாச்சும் கொடுங்க .. அதே தொட்டியில் இருந்த வேறு கலர் மீனைக் காட்டினார்.

அருண் : ஐயோ , அந்த தொட்டில இருக்குறது எல்லாமே அழகுக்காக வளர்க்குரதுதான்.

செல்வா : அது யாரு அழகு , இந்த ஓட்டல் முதலாளியா ? 

அருண் : இனிமேல் எதாச்சும் பேசினா கண்டிப்பா நான் இப்படியே கிளம்பிப் போய்டுவேன்.. உன்னப் பார்ப்பேன் அப்படின் நினைச்சிருந்தா கண்டிப்பா நான் மொரீசியசுலையே இருந்திருப்பேன். உன்னயெல்லாம் வச்சு எப்படித்தான் சமாளிக்கிறாங்க ?

செல்வாவிற்கு புகழ் அதிகமாக பிடிக்காது என்பதால் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.

நீதி : முன்குறிப்புக்கும் செல்வா கதைகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பின்குறிப்பு : வார வாரம் இரண்டு கதை எழுதுவேன் , ஆனா நேரப் பற்றாக்குறை காரணாமாக ஒரே கதை மட்டுமே இந்தவாரம். அதுவும் இல்லாம இதுல இருக்குற எழுத்துப் பிழைகளுக்கு மன்னிக்கவும்.





Monday, January 31, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : சென்ற பதிவின் முன்குறிப்பையே  இந்தப் பதிவின் முன்குறிப்பாக எடுத்துக்கொள்ளவும்.

                                செல்போன் டவரும் செல்வாவும் 

  கடந்த வருடம் செல்வாவின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருகை புரிந்திருந்தார். அப்பொழுது சிறிது நேரம் அவருடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் வெளியில் கிளம்பலாம் என்று கிளம்பியபொழுது அவரது உறவினர் " இங்க இந்த போன் டவரே கிடைக்கல , வெளிய கொண்டுபோய் கிடைக்குதான்னு பாரு "என்றார்.

  வெளியில் சென்ற செல்வா நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அவரது வீட்டில் இருந்து அவரை அழைத்தனர். அப்பொழுது செல்வா " ஒரு சைடு இருக்குற போல்ட் எல்லாம் கழட்டிட்டேன் , இன்னும் இரண்டு சைடு தான் , சீக்கிரமா வந்திடுவேன் " என்றார். 
   
 இதைக்கேட்ட அவரது தந்தை " என்ன சொல்லுற ஒண்ணும் புரியலையே ? "

மாமா மொபைலுக்கு டவர் கிடைக்குதான்னு பார்க்கச் சொன்னார் , நானும் எல்லா கடைலயும் கேட்டேன் , எங்கயும் கிடைக்காதுன்னு சொன்னாங்க ,  அதான் இங்க ( எட்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி  ) ஒரு டவர் இருந்துச்சு , அத கழட்டிட்டு வந்திடலாம்னு தான் கழட்டிட்டு இருக்கேன் , ஆனா இது கொஞ்சம் வெய்ட்டா  இருக்கும் போல " என்று முடித்தார். 

இதைக்கேட்டுக் கொண்டிருந்து அவரது உறவினர் " தெய்வமே , நீ ஒன்னையும் புடுங்க வேண்டாம் , ஒழுங்கா வீடு வந்து சேரு " என்றார் கோபமாக.


                              கார்த்திக் , அருண் மற்றும் செல்வா 

   சென்ற ஞாயிறு அன்று செல்வா அவரது நண்பர்களான கார்த்திக் மற்றும் அருணை சந்திக்கலாம் என்று திருப்பூர் சென்றார். மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அருண் தமிழராகப் பிறந்த அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்.

   அருகில் இருந்த கார்த்திக் இப்பவே மணி 11 ஆச்சு , இப்ப போனா நாளைக்கு ஷோக்கு தான் டிக்கெட் கிடைக்கும் என்றார். அப்பொழுது நடந்து சுவாரஸ்யமான உரையாடல்கள்.  

அருண் : இல்ல ப்ளாக்ல வாங்கிக்கலாம்.

செல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ?

கார்த்திக் : ஏன்டா , உனக்கு ப்ளாக் டிக்கெட் கூட தெரியாதா, அது கருப்பு கலர்ல இருக்கும் , ஆனா அது அந்த தியேட்டர்ல கொடுக்க மாட்டாங்க.

அருண் : அடேய் , நான் சொன்னா ப்ளாக் கருப்பு இல்ல,"யாருக்கும் தெரியாம வாங்கறது!" 

செல்வா : யாருக்கும் தெரியதுனா , நமக்கு மட்டும் எப்படித் தெரியும் ? 

அருண் : படம் பார்க்கப் போற விசயத்த இத்தோட நிறுத்திக்குவோம் , இனிமேல் அதப் பத்தி பேசவேண்டாம் , என்னால முடியாது.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்ற முடிவிற்கு வந்தவர்கள் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு விரைந்தனர். அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த ஒரு படத்தினைப் பார்த்த அருண் " அது பிக்காசோ படம் " என்றார்.

செல்வா : அது என்ன பழம் ? 

அருண் : பிக்காசோ பழம் இல்லை , அவர் ஒரு டிராயர்!

செல்வா : எங்க தாத்தா போட்டிருக்காரே , அதுவா ? 

அருண் : இனிமே ஒரு வார்த்தை பேசினா கூட நான் அப்படியே எந்திரிச்சு ஓடிருவேன். கார்த்தியை நோக்கியவாறு இவனெல்லாம் எதுக்கு கூப்பிட்ட ? உசுர வாங்குறான்!!

அதற்குப் பின்னர் கிளம்பும் வரையிலும் செல்வா தனது வாயைத் திறக்காமல் மௌனம் காத்தார்.

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே!

பின்குறிப்பு : போன பதிவுல இருக்குற பின்குறிப்புதான் இதுக்கும். 

Monday, January 24, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : இது பாவங்கள் போக்கும் இடம் , செல்வா கதைகள் படிப்பதால் பாவங்கள் குறைவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. அது உண்மையா ? நீதி வரை காத்திருங்கள்!

                                எலிபோனும் செல்வாவும் 

   சில நாட்களுக்கு முன்பு செல்வாவின் வீட்டில் எலித் தொல்லை இருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அவரது வீட்டில் எலிபோன் ( கூண்டு போன்ற ஒன்று , எலிபோன் என்பது பேச்சு வழக்கு) வாங்கி வந்தனர். ஆனாலும் எலித்தொல்லை தீர்ந்தபாடில்லை.

  சில வாரங்களுக்குப் பிறகு எலி மருந்து வாங்கி எலித்தொல்லையை குறைக்கலாம் என்று வீட்டில் எலிமருந்து வாங்கி வைத்தனர். அதனைப் பார்த்த செல்வா "எலி மருந்துனா எலிக்கு உடம்பு சரியில்லாத போது வாங்கி தரதா?" என்றார். "அப்படியெல்லாம் இல்ல , இது விஷம் . எலிபோன்ல அது விழ மாட்டேங்குதுல அதான் இத வச்சா தின்னுட்டு செத்திடும்" என்று விளக்கினார் அவரது தாயார்.

  அடுத்த நாள் காலையில் செல்வா அவரது தாயாரிடம் " அந்த எலி நம்மல ஏமாத்தப் பார்த்துச்சு , நான் அத ஏமாத்திட்டேன் " என்றார். ஏற்கெனவே பல இடங்களில் செல்வாவின் புத்திக் கூர்மையைப்(?!?) பற்றி அறிந்த அவரது தாயார் கொஞ்சம் அதிர்ச்சியாக " என்ன பண்ணின ? " என்றார்.

" நாம எலிக்கு மருந்து வச்சோம்ல , அத திங்காம எலி அந்த எலிபோனுக்குள்ள போய் ஒளிஞ்சிகிச்சு , ஆனா நாம தான் அதுக்கு எலி மருந்து வச்சிருக்கோம்ல , அதான் திறந்து விட்டுட்டேன் இப்ப அத தின்னுட்டு செத்திடும்  எப்படி ஐடியா.? " என்றார் எதையோ சாதித்தவராக!

                                 ஐம்பது ரூபாயும் ஜெராக்சும்

   ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் சுரேசும் படம் பார்க்கலாம் என்று ஒரு திரையரங்கிற்குச் சென்றனர். ஆனால் இவர்களிடம் இருந்தது வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே. ஒரு டிக்கெட் விலை நாற்பது ரூபாய் என்றதும் எப்படி இருவரும் படம் பார்ப்பது  என்று சிந்தித்தனர். உடனே செல்வா " இந்த டிக்கெட்ட ஜெராக்ஸ் எடுத்தா இரண்டு டிக்கெட் ஆகிடும்ல , வா போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு வரலாம்" என்றார்.

  இதைக் கேட்ட சுரேஷ் ஆவலாக " சரி வா போலாம் " என்றார். உண்மையில் சுரேசும் செல்வா போன்ற ஒரு அதிபுத்திசாலி(?!). அதனால் ஒரே கோடி இவர்களை அடித்தாலும் இவர்களது அறிவுத் திறமையை இவர்கள் மெச்சிக்கொள்வர். இருவரும் ஜெராக்ஸ் எடுக்கலாம் என்று ஜெராக்ஸ் கடையை நோக்கிச் சென்றனர். ஆனால் கடைக்குச் செல்வதற்கு முன்னர் சுரேஷ் " டேய் , டிக்கெட் ஜெராக்ஸ் எடுக்கறதுக்குப் பதில் நம்ம கிட்ட இருக்குற ஐம்பது ரூபாய ஜெராக்ஸ் எடுத்தா இரண்டு டிக்கெட் விலை போக இருபது ரூபாய் மிச்சம் ஆகும்ல " என்றார்.

" இது நல்ல ஐடியாவா இருக்கே , ஆனா நம்ம பணத்த ஜெராக்ஸ் எடுக்கும் போது ஜெராக்ஸ் கடைக்காரர் நமக்குத் தெரியாம நம்ம பணத்த அதிகமா ஒரு ஜெராக்ஸ் எடுத்து ஒளிச்சு வச்சிட்டா நமக்கு ஐம்பது ரூபாய் நஷ்டம் ஆகிடும்ல அதனால தெரிஞ்ச கடைல போய்த் தான் எடுக்கணும்."

" அப்படின்னா எங்க மாமா கோபில கடை வச்சிருக்கார் , வா போய் எடுத்திட்டு வரலாம் " என்று கிளம்பியவர்கள் கோபி போவதற்கு இருவருக்கும் டிக்கெட் எடுக்க நாற்பது ரூபாய் செலவு ஆனதால் வீடு வருவதற்கு பணம் இல்லாமல் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

நீதி : முன்குரிப்புல சொன்னது இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா செல்வா கதைகள் படிப்பதை விட பெரிய தண்டனை எந்த இடத்திலும் ( நரகத்திலும் கூட ) கொடுக்க முடியாது. அதனால உங்க பாவங்கள் குறைவது உண்மைதானே!!

பின்குறிப்பு : இதுவரைக்கும் ஆயுள்காப்பீடு இல்லாதவங்க இரண்டு நாளைக்குள்ள பண்ணிகோங்க , ஏன்னா எனது அடுத்த பதிவு ஆன்மா! ( தேவா ஸ்டைல்).

Monday, January 17, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா முன்குறிப்பு இருக்கும்க.

                    மாட்டுப் பொங்கலும் செல்வாவும் 

    கடந்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று செல்வா அவரது மாடுகளை குளிப்பாட்டி விடும்படி அவரது தந்தையாரால் பணிக்கப்பட்டார். செல்வாவும் சரி என்று மாடுகளைக் குளிப்பாட்டி விட்டு தந்தையிடம் அடுத்து என்ன செய்வது என்று கேட்டார்.

    அவற்றைக் கொண்டு சென்று தோட்டத்தில் கட்டிவிட்டு அவற்றின் கொம்புகளில் இந்த பெயிண்டினைப் பூசிவிடு என்று கூறி அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்ட செல்வா மாடுகளை காட்டிற்கு ஓட்டிச்சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு மிகத் துள்ளலுடன் மகிழ்ச்சி பொங்க வந்தார். வீட்டிற்குள் நுழையும் முன்ன்பே அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே வந்தார்.

"ஏன்டா, இப்படி கத்துற ? "

" அன்னிக்கு எதிர்த்த வீட்டுக் காரங்க நம்ம மாட்டுக்கு வச்சிருந்த தீன எடுத்து அவுங்க மாட்டுக்குப் போட்டு நம்மல ஏமாத்தினாங்கல்ல , அதே மாதிரி இன்னிக்கு நான் அவுங்கள ஏமாத்திட்டேன் ? " என்றார் மகிழ்ச்சியாக.

செல்வாவின் அறிவு ஜீவித்தனத்தை உணர்ந்த அவரது தந்தை "என்ன பண்ணித் தொலைச்ச ? " என்றார் கோபமாக.

"நம்ம மாட்டுக்கு வச்சிருந்த பெயிண்ட் எடுத்து அவுங்க மாட்டுக்கு அடிச்சு விட்டுட்டேன் , இப்ப அவுங்க வச்சிருக்கிற பெயிண்ட் வேஸ்ட் ஆகிடும்ல , எப்படி ஐடியா ? அவுங்களுக்கு அப்படித்தான் வேணும்!" என்று மகிழ்ச்சிப் பூரிப்பில் இருந்தார்.

இதைக் கேட்ட அவரது தந்தை " நீ திருந்தவே மாட்டியா ? " என்றார் எரிச்சலுடன்.


                        FANCY நம்பரும் செல்வாவும்

    ஒரு முறை செல்வாவின் நண்பர் செல்வாவிடம் தனக்கு ஒரு சிம் கார்டு வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். செல்வாவும் சரி நான் நம்பியூர் செல்லும் போது வாங்கி வருகிறேன் என்று கூறியிருந்தார். பின்னர் நம்பியூர் செல்கையில் செல்வா அந்த நண்பருக்கு அழைத்து தான் நம்பியூர் செல்ல இருப்பதாக கூறினார்.

   உடனே அவரது நண்பரும் சிம் வாங்குவதற்குத் தேவையான ஆவணங்களை  எடுத்துக்கொண்டு செல்வாவிடம் கொடுத்தார். மேலும் செல்வாவிடம் "நல்ல பேன்சி நம்பரா பார்த்து வாங்கிட்டு வா" என்று கூறினார். சரி என்று கூறிவிட்டு செல்வாவும் கிளம்பினார்.

   இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்த செல்வாவிடம் அவரது நண்பர் " சிம் என்ன ஆச்சு ? " என்று ஆவலாக கேட்டார். அதற்கு செல்வா " நானும் நம்பியூர்ல இருக்குற எல்லா பேன்சிலயும் போய் கேட்டேன் , அவுங்க அவுங்களோட போன் நம்பர தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க! " என்றார் வெகுளியாக. இதைகேட்ட அவரது நண்பர் " உன்கிட்டப் போய் உதவி கேட்டேன் பாரு ? " என்று புலம்பியபடியே சென்றுவிட்டார்.

நீதி : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா நீதி இருக்கும்க.

பின்குறிப்பு : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா பின்குறிப்பு இருக்கும்க.

Monday, January 10, 2011

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : திங்கள் கிழமை வந்தா செல்வா கதைகள் வந்தே தீரும் , அவன ( திங்கள் கிழமைய ) நிறுத்த சொல்லுங்க , நான் நிறுத்துறேன்!

                                       செல்போனும் செல்வாவும் 

    ஒரு முறை செல்வாவும் அவரது நண்பரும் விடுமுறை நாள் ஒன்றில் பூங்காவிற்கு சென்றிருந்தனர். சிறிது நேரம் சுற்றிப்பர்த்தவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

    அப்பொழுது நண்பரின் தொலைபேசி ஒலித்தது. இவர்களின் மற்றும் ஒரு நண்பர் அழைத்திருந்தார். இதைப்பார்த்த அவரது நண்பர் " ஐயோ இவன் கூப்பிடுறானே , நாம் பார்க் வந்தோம்னு சொன்னா என்னைய ஏன் கூப்பிடலைன்னு கேப்பானே ? " என்றவாறு அழைப்பினை தவறவிட்டார். "ஆனா இப்ப போன எடுக்காட்டியும் ஏன்டா போன எடுக்கலைன்னு கேப்பான் ,என்ன பண்ணலாம்.? " என்று செல்வாவிடம் கேட்டார். 

   அதற்கு செல்வா " போன கொடு ஒரு ஐடியா இருக்கு! " என்று அவரது தொலைபேசியை வாங்கி , அதே நண்பருக்கு அழைத்தார். அந்த நண்பரிடம் " நீங்கள் அழைக்கும் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது , தயவு செய்து சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தவர் " ஹா ஹா , நல்லா ஏமாந்திட்டான்! " என்றார். இதைப் பார்த்த அவரது நண்பர் " நமக்குன்னு வந்து வாய்க்குதுக பாரு " என்றவாறே தலையில் அடித்துக்கொண்டார். 


                                         எண்ணெய் வாங்கச்சென்ற செல்வா 

    ஒரு முறை செல்வாவின் தாயார் அவரிடம் கேன் ஒன்றினைக்கொடுத்து அருகில் இருக்கும் மளிகைக்கடையில் கடலை எண்ணெய் வாங்கி வருமாறு அனுப்பினார்.செல்வாவும் கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்பொழு அவரது தாயார் "ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கிக்க , அப்புறம் அரை லிட்டர் தேன்  வாங்கிட்டு வந்திடு" என்றார்.

   கடைக்கு சென்ற செல்வா தான் கொண்டு வந்திருந்த கேனை கடைக்காரரிடம் கொடுத்து " ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கொடுங்க " என்றார். ஒரு லிட்டர் கடலை எண்ணெயை வாங்கியவர் அந்த கேனை வாங்கி அருகில் இருந்த சாக்கட்டியை எடுத்து எண்ணெய் இருந்த அளவிற்கு ஒரு கோடு போட்டார். பின்னர் கடைக்காரரிடம் அதே கேனைக்கொடுத்து " அரை லிட்டர் தேன் , கொடுங்க" என்றார்.

    இதைப் பார்த்த கடைக்காரர் இரண்டும் கலங்கிடும் என்றார். அதெல்லாம் கலங்காது , அதுக்குத்தான் கோடு போட்டிருக்கேன் , நீங்க குடுங்க " என்று அவரிடம் சண்டை போட்டு வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்ததும் கடையில் நடந்தவற்றை விளக்கினார். அதற்கு அவரது தாயார் " ஏன்டா , இப்படி பண்ற , ஒண்ணு கூட உருப்பிடியா பண்ண மாட்டியா ? " என்றார் கோபமாக. இதைக்கேட்ட செல்வா நான் கோடு போட்டுத்தானே வாங்கிட்டு வந்தேன் , அந்தக் கோட்டுக்கு மேல இருக்குறது தேன் , கீழ இருக்குறது கடலை எண்ணெய் " என்றார் அப்பாவியாக.

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை!

பின்குறிப்பு : இத படிச்சுட்டு சந்தோசத்துல வாரம் முழுக்க திங்கள் கிழமை வரணும்னு நீங்க வேண்டுறது தெரியது. ஆனா ஒரு வாரத்துல ஒரு தடவைக்கு மேல செல்வா கதைகள் போட்டா உலகம் தாங்காது. உலக நலன் கருதி வாரத்துல ஒரு தடவயோட இத நிறுத்திக்கிறேன்.

Monday, January 3, 2011

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : எதாவது முன்குறிப்பு எழுதனுமே.? என்ன எழுதலாம் .? சரி இந்தப் பதிவுல பின்குறிப்பு இருக்கு.!

                                           புத்தாண்டு தினத்தில் செல்வா 

    கடந்த சனிக்கிழமை புத்தாண்டு தினத்தன்று காலை 10 மணியளவில் செல்வா தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பர் ரமேஷ் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக தொலைபேசி வழியே அழைத்தார்.

"செல்வா!, HAPPY NEW YEAR! "

"Thanks anna!, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.!

அப்பொழுது அவரது பின்னால் வந்த வண்டி ஒன்று பெரிய ஒலியுடன் விலகிச்சென்றது, அப்பொழுது இணைப்பில் இருந்த ரமேஷ் சொன்னது இவருக்கு சரியாக கேட்கவில்லை . இருந்தாலும் செல்வா அவர் புத்தாண்டு வாழ்த்துகள்தான் சொல்லி இருப்பார் என்று மீண்டும் " உங்களுக்கும்!" என்றார்.

இதைக்கேட்ட ரமேஷ் , " எனக்கு எதுக்குடா சொல்லுற , ரேடியோ ஜாக்கி ஆக வாழ்த்துக்கள்னு சொன்னா திருப்பி உங்களுக்கும்னு சொல்லுற.? " என்றார்.

இதைக்கேட்டவுடன் செல்வா "ஹி ஹி ஹி! THANKS அண்ணா , கண்டிப்பா இந்த வருடம் ரேடியோ ஜாக்கி ஆகிடுவேன் என்று கூறி இளித்துக்கொண்டே சமாளித்தார்.!

                                             திருமணப் பரிசு 

   ஒரு முறை செல்வாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அதற்க்கு செல்வாவும் அழைக்கப்பட்டிருந்தார். திருமணத்திற்கு செல்லும்போது அவர்களின் தொழிலுக்கு உதவுவது போல எதாவது பரிசுப்பொருளை வாங்கிச்செல்வது அவரது வழக்கம்.

   திருமணத்திற்கு சென்றுவிட்டு முகம் வாடியவாறு வீட்டிற்குள் நுழையும் செல்வாவைப் பார்த்து அவரது தந்தை " ஏன்டா , என்ன ஆச்சு.? " என்றார்.

    " நான் கல்யாணத்துக்குப் போகும்போது அவனுக்கு ஒரு பரிசு வாங்கிட்டுப் போனேனா , அந்தப் பரிசு பிடிக்கலைன்னு என்னைய அடிச்சு தொரத்திட்டாங்க!" என்றார் சோகமாக.

" அப்படி என்ன பரிசு வாங்கிட்டு போன .? "

" அவன் போலீசுதானே , அதான் அவன் திருடனைப் பிடிக்கும்போகும் போது பயன்படுமேனு வலை வாங்கிட்டுப் போனேன்!. திருடனை வலை வீசிப்பிடிக்கும் போது பயன்படும்ல!" என்றார் அப்பாவியாக.

நீதி : இதுல முதல் கதை முற்றிலும் உண்மை , இரண்டாவது கதை முற்றிலும் கற்பனை.!

பின்குறிப்பு : பின்குறிப்பு எதாச்சும் எழுதனுமே, சரி இந்தப்பதிவுல முன்குறிப்பு இருக்கு.

Monday, December 27, 2010

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன் ., அத கேட்டா நீங்க எல்லாம் தலைதெறிக்க ஓடுவீங்க.! ஆமா , இனிமேல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் செல்வா கதைகள எழுதலாம் அப்படின்னு இருக்கேன்.! அட விடுங்க ,எத்தனையோ பார்த்துடீங்க இத பாக்க மாட்டீங்களா.?

                                       பதிவர் சந்திப்பில் செல்வா 

  நேற்று ஈரோடு பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட செல்வா மத்திய உணவு இடைவேளையின் போது உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு சென்றார். இவர் சைவம் என்பதால் சைவ உணவு வழங்கப்பட்ட பந்திக்கு சென்று அமர்து கொண்டார்.

  சிறிது நேரத்தில் பந்தி பரிமாறுபவர் கையில் உணவுடன் வந்தார். செல்வாவின் அருகில் வந்த அவர் " கையை எடுங்க " என்றார். 

அதற்கு செல்வா " கையை எடுத்தா சாப்பிட முடியாதுங்க " என்றார் அப்பாவியாக.

" இலைல இருந்து கையை எடுங்க , சாப்பாடு வைக்கணும்.! "

" சூரியன்ல கையை வச்சதுக்கே நிறைய சூடு , இதுல மறுபடியும் அதுல இருந்து எடுத்து இலைல வைக்கணுமா .? " என்றார் செல்வா.

" ஐயோ , சாப்பாடு போடுற இலை மேல கைய வச்சு மறைசிருக்கீங்களே , அத எடுங்க " என்றதும் அசடு வழிந்து கொண்டே கையை எடுத்தார்.! 

                                       கணிப்பொறி கற்றுக்கொண்ட செல்வா 

      ஒரு முறை செல்வாவின் வீட்டில் அவரது பெற்றோர் அவரை கணிப்பொறி கற்றுக்கொள் என்று கூறி அவரை ஒரு கணினி மையத்தில் சேர்த்தனர். அதற்கு முன்னர் அவருக்கு கணிப்பொறியில் சில விசயங்கள் தெரியும் என்று அங்கே பெருமையாக கூறிக்கொண்டார்.

  கணிப்பொறி கற்றுக்கொடுக்க வந்தவர் அவரிடம் சில விசயங்களை கூறிவிட்டு இத சேவ் பண்ணிடுங்க என்று கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். செல்வாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிறிதுநேரம் சமாளித்து விட்டு தனக்கு உடம்பு சரியில்லை என்று கூறிவிட்டு பாதியிலேயே கிளம்பிவிட்டார்.

  வீட்டில் சென்றதும் அவரது பெற்றோர் ஏன் நேரத்திலேயே வந்துட்ட என்று கேட்டனர். அதற்கு செல்வா அங்க என்னைய சேவ் பண்ண சொன்னாங்க , நான் ஷேவிங் ரேசர் எடுக்காம போயிட்டேன் , அதான் உடம்பு சரியில்லைன்னு வந்திட்டேன் என்றார் பெருமை பொங்க.!

நீதி : கதைகள் இரண்டும் மொக்கை , ஒன்று மொக்கை ஒன்று சிரிப்பு , இரண்டும் சிரிப்பு ( உங்கள் விருப்பத்தில் நீதி )

நன்றி : ஈரோடு வலைப்பதிவர் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பை சிறந்த முறையில் நடத்திய குழும உறுப்பினர்களுக்கு நன்றி .!


பின்குறிப்பு : நான் தான் சைடுல வடிவேலு படம் போட்டு ஒண்ணு சொல்லிருக்கேனே , அத படிக்காம இத படிச்சிட்டு அழுதா நான் என்னங்க பண்ண முடியும் .?

Monday, December 20, 2010

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : போன வாரத்துல முல்லா கதைகள் சில படிக்க நேர்ந்தது. சில இல்ல , ஒண்ணு தான். அதுவும் வலைச்சரத்துல நம்ம எஸ்.கே அண்ணன் போட்டது. அவர்கிட்ட கேட்டு முல்லா கதைகள் இருக்குற ப்ளாக் அட்ரஸ் வாங்கினேன். ஆனா ஆணித் தொல்லை காரணமா படிக்க முடியல. இருந்தா கூட அதுக்கு முன்னாடி சில முல்லா கதைகள் , ஜென் கதைகள் படிச்சிருக்கேன். ரொம்ப சிறுசா , ரசிக்கும் படியா இருக்கும். நானும் ரோசிச்சேன் , எத்துன நாளைக்கு முல்லா கதைகள் படிக்கிறது ,அதனால என்னோட மொக்கைகள் சிலத பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்தி முல்லா கதைகள் மாதிரி சிறுசா ரசிக்கும் படியா ( அங்க என்ன சிரிப்பு ) நவீன காலத்துக்கு தகுந்த மாதிரி எழுதப் போறேன். அதோட முதல் இரண்டு கதைகள் தான் இங்க இருக்குறது.

                                                  அறிவாளி செல்வா

 ஒரு நாள் செல்வா தனது வீட்டுத்திண்ணையில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 

   சிறிது நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு  போனை கட் செய்தவர் முகத்தில் சந்தோஷ அலை வீசியது. தன் வீட்டில் இருந்து மின்சார வயர்களை எடுத்து தன்மீது போட்டுகொண்டு மின்சாரத்தைப் பாய்ச்சினார். 

   மறு வினாடியே மின்சாரத்தால் தாக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டார். இதையறிந்த உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நண்பருக்கும் தகவல் சொல்லப்பட்டது.

    அவரைக்காண வந்த அந்த நண்பர் என்ன ஆனது என்று விசாரித்தார். அதற்கு செல்வா " நீதான நேத்து போன் பண்ணும் போது நான் சரியான டியூப் லைட் அப்படின்னு சொன்ன , அதான் வெளிச்சம் வருதா அப்படின்னு டெஸ்ட் பண்ணலாம்னு கரென்ட் கொடுத்தேன். வெளிச்சம் வரவே இல்ல " என்றார் சந்தோசமாக.!

**********************************************************************************************

                                           கடல் மீன் 

ஒரு நாள் செல்வா தன் வீட்டு மாடியில் எதையோ பறிகொடுத்தது போல அமர்ந்திருந்தார் . அங்கே வந்த அவரது தாயார் " என்ன ஆச்சு , ஏன் சோகமா இருக்க..? " என்றார்.

  அதற்கு செல்வா நேத்து கடல் மீன் வாங்கிட்டு வந்து தொட்டிக்குள்ள விட்டிருந்தேன்ல அது ...!! " 

"ஆமா , அத வளர்க்கலாம்னு சொன்னே , அதான் கொழம்பு வைக்கல , ஏன் கொழம்பு வைக்கணுமா..?" என்றார்.

" இல்ல அது கடல் மீன் தான , அதனால அதுக்கு தொட்டில நீச்சல் தெரியாதுல , நீச்சல் தெரியாம தண்ணில மூழ்கி செத்துடுட்சுனா என்ன பண்ணுறது அப்படின்னு நான் நீச்சல் பழகும் போது வாங்கின டியூப் எடுத்து அது நீச்சல் பழக வரைக்கும் இருக்கட்டும் அப்படின்னு அதோட முதுகுல கட்டி வச்சேன் .! ஆனா கூட அது செத்துப் போச்சு ..! " என்றார் மிகவும் சோகமாக.

நீதி : என்னத்த சொல்லுறது , கலிகாலம்.! 

பின்குறிப்பு : இனிமேல் நான் சிறுகதை எழுதுறேன் அப்படின்னு சொல்லி நாவல் மாதிரி பெருங்கதைகள எழுதி உங்க உயிரை வாங்குவது கொஞ்சம் குறையலாம். ஏன்னா இந்த மாதிரி கதைகள் அதிகமா எழுதலாம்னு இருக்கேன்.