Sunday, January 3, 2016

இறக்கை

இப்படியெல்லாம் நடக்குமா என்ன? சாதாரணமாகச் சொல்லப்போனால் முடியை வளரவைப்பதற்கே ஒவ்வொருவரும் எத்தனையோ பிரயாசைகளைச் செய்துவரும் சூழலில் வெட்டித்தனமாகக் கற்பனை செய்ததற்கே இப்படி நேர்ந்துவிடுமா? நேர்ந்துவிட்டதே! இதைத் தலையெழுத்து என்று சொல்லி விலக்கிவிடமுடியுமா என்ன? விலக்கிவிடுவதானால் விலகிவிடலாமே? இப்படியெல்லாம் நடக்குமென்று முன்பே தெரிந்திருந்தால் இப்படியொரு கற்பனையை நான் ஏன் செய்யப்போகிறேன்? கற்பனைகள் நம் கட்டுப்பாட்டில் நிகழ்வதில்லை என்றாலும் ஒரு முயற்சியாவது செய்து கவனத்தைத் திருப்பியிருக்கமாட்டேனா? ஒரு நிமிடக் கற்பனை என் வாழ்க்கையையே பணயமாய்க் கேட்கிறதே?

அப்படியென்ன நிகழ்ந்துவிட்டது எனக்கு? ஒன்றுமில்லை. ஆனால் என் வாழ்க்கையே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. சொல்கிறேன் கேளுங்கள். அதற்கு முன்னர் நீங்களும் ஒரு கற்பனைக்குள் வரவேண்டும்.

பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகக் காத்திருக்கிறீர்கள். பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காகத்தானே காத்திருப்பார்கள் என்று கேட்கலாம். எல்லோரும் அப்படியல்ல. சரி விடுங்கள். அந்தப் பேருந்து நிறுத்தத்திலேயே உங்களுக்கு மிக அருகிலேயே ஒரு அழகான பெண்ணும் நிற்கிறார். அழகென்றால் நீங்கள் கதைகளிலும், வர்ணனைகளிலும் படித்த அந்த அழகான பெண். இப்போது உங்கள் உடலில் உயிரியல் மாற்றங்கள் ஏற்பட்டு, அந்த உந்துதலினால் என்னென்னவோ கற்பனைகளைச் செய்கிறீர்கள். என்னென்ன கற்பனைகள் என்று என்னைக் கேட்டால்? உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதையெல்லாம் கற்பனை செய்கிறீர்கள். சமூக ரீதியாக மறுக்கப்பட்டவைகளையும், நமக்கு நாமே போட்டுக்கொண்ட கட்டுப்பாடுகளாலும் நாம் விரும்பியதை அடையமுடியாத நிலையில் நமது ஆசைகளைக் கற்பனைகளின் வழியாகத்தானே நிறைவேற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. கற்பனைகளிலும் ஒரு வசதியிருக்கிறது. உண்மையில் நடப்பவைகளினால் ஏற்படும் பின்விளைவுகள் கற்பனையில் ஏற்படவாய்ப்பில்லை. இதைத்தான் கற்பனையின் பலமென்று நான் நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். ஆனால் இப்படி நடக்குமென்று நானா கண்டேன்? 

பேருந்து நிறுத்தத்தில் நீங்கள் கண்ட பெண் சில மாதங்களுக்குப் பின்னர் உங்களைத் தேடி வந்து, நீங்கள் அன்று செய்த கற்பனையினால் தான் கருவுற்றிருப்பதாகக் கூறினால் அப்போது என்ன செய்வீர்கள்? “எனக்கொரு மகன் பிறப்பான், அவன் என்னைப் போலவே இருப்பான்” என்று பாடிக்கொண்டு, ஆரஞ்சு மிட்டாயும், கல்கண்டும் வாங்கி வருவோர் போவோரிடம் கொடுப்பீர்களா ? அப்படி ஒரு நிலை உங்களுக்கு வந்தால் என்ன செய்வீர்கள்? இதனைக் கற்பனை செய்யவும் முடியுமா? நான் ஏன் அப்படிக் கற்பனை செய்யப்போகிறேன்? நான் ஒழுக்கமானவன் என்றுதானே இப்போது சிந்திக்கிறீர்கள்? நானும் கூடத்தான் ஒழுக்கமானவன்.

இந்தியக் கலாச்சாரத்தில் ஒழுக்கமானவன் என்பதற்கு ஒரே ஒரு அர்த்தம்தானே உள்ளது? ஆணோ பெண்ணோ திருமணம் வரையிலும் கன்னித்தன்மையுடன் இருப்பது மட்டும்தானே நமக்குக் கூறப்படும், போதிக்கப்படும் ஒழுக்கவியல் நெறிமுறைகள்? காமம் குறித்துப் பேசக்கூடாது, அது தவறென்று சொல்லவேண்டும், உள்ளூர விரும்பினாலும் வெளி உலகில் காமத்தில் எனக்கு ஈடுபாடில்லை என்று கூறிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதானே? இதெல்லாம் இருந்தாலே ஒழுக்கமானவன்/ள் என்ற முத்திரைக்குத் தகுதியாகிவிடுகிறோம் இல்லையா? மற்றபடி பொது இடங்களில் எச்சில் துப்பலாம், மலக் கழிக்கலாம், குப்பைகளைக் கண்ட இடத்திலும் வீசி எறியலாம், பொதுச் சுவர்களில் கிறுக்கி வைக்கலாம், பூசணிக்காய்களையும், மதுக்குடுவைகளையும் நடு ரோட்டில் உடைத்துவைக்கலாம். இதெல்லாம் ஒழுக்கமானவன் என்கிற எனது முத்திரைக்கு எந்தவிதத்திலும் பங்கம் விளைவிக்காது. இதுதானே நமது கலாச்சாரம்? இதிலும் காதலர்களை முறைத்துப்பார்ப்பதும், வீட்டிலிருந்து தள்ளிவைப்பதும், அவர்களது உரிமைகளைப் பறிப்பதும், சாதி மாறியோ மதம் மாறியோ திருமணம் செய்துகொண்டவர்களை கொன்றுவிடுவதும் கூட அதி உயர் ஒழுக்கசீலர்கள் அல்லது கலாச்சாரக் காவலர்கள் என்ற முத்திரையைப் பெறத்தானே? இந்தியாவில் இதைவிடவும் ஒருத்தன் ஒழுக்கமானவனாக இருந்துவிடமுடியுமா? இதையெல்லாம் பின்பற்றும் நானும் ஒழுக்கமானவன்தான். இப்பொழுது எதற்கு ஒழுக்கத்தைப் பற்றிய பேச்செல்லாம். நான் ஒழுக்கமானவனாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் ஒரு சிறு கற்பனையால் என் வாழ்க்கைதான் நரகமாகப் போகிறதே?

ஏன் எனக்கு மட்டும் இவ்விதம் நேர்ந்தது? இது எல்லோருமே கற்பனை செய்து பார்க்கிற ஒன்றுதான். கற்பனை செய்கையில் வானம் ஒரு புண்ணியதேசமாகத் தோன்றியது. ஆனால் கற்பனை உண்மையான போது மொத்த உலகமும் எனக்கு அந்நியமாகப் போய்விட்டதே? எப்படி இந்த உலகத்தினை எதிர்கொள்ளப்போகிறேன்?

ஆமாம். எனக்கு இறக்கை முளைத்துவிட்டது. 

இது ஏதோ உவமையென்று நினைத்துவிடவேண்டாம். உவமைகளிலும், உருவகங்களிலும் மட்டுமே படிக்கிற இந்த வாக்கியம் இப்பொழுது என் வாழ்க்கையில் உண்மையாகிவிட்டது. உண்மையிலேயே எனக்கு இறக்கை முளைத்துவிட்டது. இதுதான் என் சோகத்திற்கும் இந்தப் புலம்பல்களுக்கும் காரணம்.

இறக்கை முளைத்தால் பறக்க வேண்டியதுதானே, எதற்காகப் புலம்பித் திரிகிறான் என்றா நினைக்கிறீர்கள்? கற்பனை செய்துகொண்டிருக்கையில் இறக்கை இருந்தால் எப்படியெல்லாம் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று உங்களைப் போலத்தான் நானும் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையாக முளைத்துவிட்ட பிறகு இது பெரும் சுமையாக அல்லவா தெரிகிறது. இறக்கைகள் சுமையென்று கூறவில்லை. இறக்கை முளைத்ததால் என் வாழ்க்கையே சுமையாகப் போனதாகக் கூறுகிறேன்.

நேற்று இரவு தூங்கப் போகும்போதுதான் இந்தக் கற்பனை எனக்குள் உதித்தது. எனக்கும் குருவிகளுக்கு இருப்பதைப் போல இறக்கைகள் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்குமென்று நினைத்துக் கற்பனை செய்து கொண்டிருந்தேன். வானத்தில் பறப்பது என்பது எத்தனை இனிமையானதாக இருக்க வேண்டும்? பேருந்திற்காகக் காத்திருக்க வேண்டாம்; ஏன் என் இறக்கைகளை முதலீடாகக் கொண்டு நானே கூட ஒரு அதி விரைவுத் தபால் துறையினைத் துவங்கி என் வாழ்க்கையினை ஓட்டிவிடலாம் என்றுகூட நினைத்தேன். இதற்காகவே தூங்கும்போது வழக்கமாகக் கடவுளிடம் கேட்கும் சாதாரண வரங்களை ஒதுக்கிவைத்துவிட்டு “எனக்குக் குருவிகளுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகள் வேண்டும்” என்று கும்பிட்டுக் கொண்டு தூங்கச் சென்றேன். 

என் வாழ்க்கையில் கடவுளிடம் கேட்ட எதுவுமே நிறைவேறியதில்லை. நானும் பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள்  வேண்டும் என்ற வரத்தினைத் தவிர வேறெந்த வரத்தையும் கேட்டதில்லை. அது ஒருபோதும் நிறைவேறியதும் இல்லை. ஒருவேளை கடவுளே கூட பரீட்சையில் மதிப்பெண் பெறாததால் அவரது பெற்றோர்களுக்குப் பயந்து, உலக வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கடவுளாக மாறியிருக்கலாம் என்று நினைத்துக் கொள்வேன். 

இறக்கை வேண்டுமென்று கேட்டதெல்லாம் ஏதோ ஒரு மயக்கநிலையில்தான். தினமும் சாமி கும்பிடவேண்டுமென்பது அம்மாவின் அறிவுரை. “ என்னனு சாமி கும்பிடறது?” என்று என் சின்ன வயதில் நான் கேட்ட கேள்விக்கு “ நல்லாப் படிக்கணும்னு கும்பிடு” என்ற பதில் கிடைத்தது. அதையே கடந்த பதினேழு வருடங்களாக இன்றுவரையிலும்... இல்லை நேற்றுவரையிலும் கடைப்பிடித்துவந்தேன். கடவுள் மீது எனக்கு அவ்வளவு பெரிய மரியாதையோ நம்பிக்கையோ இல்லை. இருந்தாலும் அம்மாவின் அறிவுரைக்காக இதனைச் செய்துவந்தேன். நல்லாப் படிக்கணும் என்று இத்தனை நாட்களாக நான் கேட்ட வரத்திற்கு எந்தப் பதிலும் இல்லாமல், நேற்றுப் புதிதாகக் கேட்ட வரத்தினை உடனே கொடுத்திருப்பதன் நோக்கம்தான் என்ன? ஒருவேளை சுயமாகக் கேட்கும் வரங்களை மட்டும் கொடுப்பதென்பது கடவுள் உலகின் கொள்கைகளா?

ஆனாலும் இந்தக் கடவுள் செய்திருக்கும் செயல் நகைக்கத்தக்க செயலாகவல்லவா இருக்கிறது? ஒரு கணிப்பொறியைப் போலவோ இல்லை எந்திரத்தைப் போலவோதானே இப்பொழுது செய்திருக்கிறார். அவருக்கு உண்மையில் மூளையில் ஏதேனும் கோளாறா அல்லது கடவுள் என்பதே ஒருவித இயற்கை எந்திரமா? பின்னே, குருவிகளுக்கு இருப்பதைப் போன்ற இறக்கைகள் வேண்டுமென்றால் அதே அளவில் இரண்டு இறக்கைகளை என் தோள்பட்டையில் முளைக்கவைத்திருப்பதன் நோக்கம் என்ன?

குருவிகளைப் போன்ற இறக்கை வேண்டுமென்றால் நீங்கள் என்னவென்று புரிந்துகொள்வீர்கள்? குருவிகளைப் போலப் பறப்பதற்கு இறக்கை வேண்டுமென்று கேட்பதாகத்தானே புரிந்துகொள்வீர்கள்? ஆனால் கடவுள் செய்திருக்கும் இந்தக் கூத்தை என்னவென்பது? என் இரண்டு தோள்பட்டைகளிலும் சிட்டுக்குருவிக்கு இருக்கிற இறக்கையின் அளவிற்கு இரண்டு இறைக்கைகள் முளைத்துள்ளன. தூரத்திலிருந்து பார்த்தால் என் தோளில் இரண்டு பல்லிகள் எட்டிக் குதிப்பதற்காக காத்திருப்பதைப் போலத் தோன்றும். அட, பறப்பதற்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இன்னும் கொஞ்சம் பெரிதாக இருந்திருந்தால் வெயில் காலங்களில் இதை விசிறியாகவாவது பயன்படுத்தியிருப்பேனே? இப்போது முளைத்திருக்கும் இந்த இறக்கையால் எனக்கு என்ன பயன்? பயன் இல்லாவிட்டாலும் தொலைகிறது. இதனால் எனக்கு ஏற்படப்போகும் தொல்லைகளைக் கேட்டால் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும்.

இப்பொழுது அதிகாலை ஐந்து மணியாகிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் எனது அன்றாட வேலைகளைத் துவங்கியாகவேண்டும். அன்றாட வேலைகளென்றால் படிப்பது, குளிப்பது, பள்ளிக்குக் கிளம்புவது இவைதான். ஆனால் இப்பொழுது எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலையை நான் யாரிடம் போய்ச் சொல்லுவேன்? யாருக்கு இது புரியப்போகிறது?

அம்மாவிடமோ அப்பாவிடமோ சொன்னால் என்ன செய்வார்கள்? அழுவார்கள். குழம்பிப்போவார்கள். மருத்துவரிடம் கூட்டிச் செல்வார்கள். மருத்துவருக்கு என்ன தெரியும்? அவர் என்னிடம் என்னவெல்லாம் கேட்பார்? காய்ச்சலடிக்கையில் எப்படி இருக்கிறதென்பதைக் கூட என் அப்பாதான் மருத்துவரிடம் சொல்லுவார். இப்பொழுது கேட்கப்போகும் கேள்விகளுக்கு என் அப்பாவுக்கும் கூட பதில் தெரியாதே? பின்னே, அவருக்குத்தான் இறக்கை முளைத்ததில்லையே? அப்பாவை விடுங்கள்; மருத்துவருக்கு மட்டும் இறக்கை முளைத்திருப்பது குறித்து என்ன தெரிந்திருக்கப் போகிறது? கால்நடை மருத்துவர் என்றால் கூட இறக்கைகளைப் பற்றி எதையேனும் படித்திருப்பார். இவருக்கு எப்படித் தெரியும்? ஒருவேளை இறக்கைகளை வெட்டிவிட முயற்சிக்கலாம். ஆனால் இறக்கையை வெட்டினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்? இது உடனடியாகச் செய்கிற காரியமும் இல்லவே?

மருத்துவரிடம் போவது மட்டுமல்ல எனது பிரச்சினை. அத்துடன் முடிந்துவிடுமானால் விட்டுவிடலாம். அதனையடுத்து இந்தச் செய்தி அதிவிரைவாகப் பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையம் என்று உலகெங்கிலும் பரவிவிடுமே? உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்து பத்திரிக்கையாளர்கள் கையில் காகிதத்தையும், ஒலிவாங்கியையும் எடுத்துக் கொண்டு “ உங்களுக்கு இறக்கை முளைச்சதப் பத்தி என்ன நினைக்கிறீங்க? “ என்ற ஒரே கேள்வியை ஓராயிரம் வகைகளில் கேட்டுக் கொண்டு என் வீட்டு வாசலில் வந்து நிற்பார்களே, அவர்களுக்கு என்ன பதிலைச் சொல்லுவேன்? ஏற்கெனவே படித்ததை மனப்பாடம் செய்து கொண்டுபோய் பரீட்சையில் எழுதமுடியாத என்னிடம் புத்தகத்தையே கொடுக்காமல் கேள்வியைக் கேட்டால் என்ன செய்வேன்?

இப்படிக் கேள்விகேட்பதைத் தாண்டியும் மேலும் எண்ணற்ற பிரச்சினைகளை நான் எதிர்கொண்டாக வேண்டுமென்றுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. முதலில் என்னை வீட்டில் இருப்பதற்கு அனுமதிப்பார்களா என்பது முதலில் நான் எதிர்கொள்ளப்போகிற பிரச்சினை. சாதாரணமாக மரபணுக் குறைபாட்டினால் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இல்லாமல் மூன்றாம் பாலினமாக மனித இனத்தில் பிறந்தவர்களையே வீட்டில் வைத்துக் கொள்ளாமல் வீட்டைவிட்டு விரட்டும் இந்த உலகத்தில் நான் வேறொரு உயிராகவல்லாமா மதிக்கப்படுவேன்? பிறகெப்படி என்னை வீட்டில் வைத்துக் கொண்டிருப்பார்கள்? என்னை மனித இனத்திலிருந்தே கூடத் தள்ளிவைக்கலாம். எனக்குப் புதுப் பெயர் ஒன்றினை வைக்கலாம். மிருகக்காட்சி சாலையில் கொண்டுபோய் கூண்டுக்குள் அடைத்துவைத்து பொதுமக்களுக்கு என்னை அதிசய விலங்கென்று காட்சிப்படுத்துவார்கள். அதைவிடக் கொடுமை அங்கே வரும் குழந்தைகள் செய்யும் அட்டூழியங்களும், அதற்குப் பெற்றோர் தரும் பதில்களுமாகத்தான் இருக்கும்.

“ அம்மா, இதென்ன?”

“ இதுதான் இறக்கை மனிதன்”

“ கடிக்குமா?”

“ கிட்டப்போனா கடிச்சுவச்சிடும், இங்க இருந்தே பாரு”

“ இந்த முறுக்கைக் குடுத்தா திங்குமா? “

“வீசிப்பாரு. தின்னாலும் திங்கும்”

இதுவரையிலும் அவன் இவன் என்று அழைக்கப்பட்ட என்னை, அது இது என்று அழைக்கப்படப்போவது எத்தனை கொடுமையானதாக இருக்குமென்று நினைத்தாலே தற்கொலை எண்ணம் வந்துதொலைக்கிறது. இதைவிடவும் கொடுமை அங்கே மிருகக்காட்சிச் சாலையில் எனக்குத் துணியெல்லாம் கொடுத்து அடைத்துவைப்பார்களா இல்லை மற்ற மிருகங்களைப் போலவே... கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. இந்தக் கற்பனைதானே எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்?

இதுமட்டுமல்ல; இன்னும் எத்தனையோ பிரச்சினைகளை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்னும் சிறிது நேரம்தான். ஆறுமணிக்கெல்லாம் நான் கதவைத்திறந்தாக வேண்டும். பின்னர் நான் மனித இனத்திலிருந்து புதிதான ஒரு இனத்திற்கு மாற்றப்படலாம். நானும் மனிதன் தானென்றால் ஏற்றுக்கொள்ளவா போகிறீர்கள்? நீங்களாவது பிற உயிர்களுக்கு இருப்பது போன்று நமக்கும் இருந்தால் வசதியாக வாழலாமென்று கற்பனை செய்யாமல் இருங்கள். இந்தத் துன்பம் என்னோடு போகட்டும். இன்று மாலைக்குள் நான் மிருகக்காட்சிச் சாலைக்கோ அல்லது அருங்காட்சியகத்திற்கோ மாற்றப்படலாம். வந்துபாருங்கள். முறுக்கு, லட்டுக்களை எடுத்துவந்தால் தருவதைப் போல கையைப் பாசாங்கு செய்து கொண்டு திரும்பவும் கூண்டுக்கு வெளியே இழுத்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் போன்ற மனிதர்களுக்கு இது விளையாட்டு. என் போன்ற விலங்குகளுக்கு இது விளையாட்டென அறிந்துகொள்ள ஆறாவது அறிவுகூடக் கிடையாது.

1 comment:

Unknown said...

Humorous and funny. @ the end the message was good.