Tuesday, December 17, 2013

இட்லியின் கதை!சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருநூறு என்பது மிகச் சமீபமாக இருப்பதால் நானூறு என்று வைத்துக்கொள்வோம்.

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையின் வடக்குப் பக்கத்தில், இல்லை சென்னையின் வடக்குப் பக்கம் என்றால் இட்லியைக் கண்டுபிடித்தது ஆந்திராகாரர்கள் என்ற காப்பி ரைட் பிரச்சினை வரலாம். அதனால் மதுரையின் வடக்கே என்று வைத்துக்கொள்வோம். மதுரையின் வடக்கே சரியாக எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டின் மத்தியப் பகுதியாக இருக்கக் கூடிய ஒரு இடத்தில் இரண்டு குறுநில மன்னர்களுக்கிடையே ஒரு மாபெரும் யுத்தம் நடந்தது. இருவரின் படைகளும் சம பலம் வாய்ந்தவையாக இருந்தன.

யுத்தத்தில் மிகைப்படுத்தப்பட்ட தந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன என்றால் அது மிகையல்ல. யானைப் படை, குதிரைப் படை , கப்பல் படை என அனைத்துப் படைகளும் போரில் பங்கெடுத்துக்கொண்டன. அந்த நட்ட நடுக்காட்டில் கப்பல் படை எங்கே வந்தது என்ற கேள்வி எழுப்புவோருக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன் நீங்கள் அறிவாளி என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனாலும் ஒன்றை மறந்துவிட்டீர்கள் நான் அது காடு என்று எங்கேயும் சொல்லவேயில்லை.

முதல் நாள் போரின் முடிவில் இரண்டு படை வீரர்களும் மிகச் சோர்வுடன் காணப்பட்டனர்.எந்தப் பக்கத்திற்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ கிடைக்குமென கணிக்கமுடியவில்லை. இரண்டு எதிரி மன்னர்களும் கலந்தாலோசித்தனர் என்பது சற்றே உங்களைக் குழப்பலாம். இருந்தாலும் உண்மையைச் சொல்லியாகவேண்டுமல்லவா?

நீண்ட பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரண்டு மன்னர்களும் ஒரு முடிவிற்கு வந்தவர்களாய் அவரவர்களின் படை வீரர்களை மாற்றிக்கொண்டு அதாவது இந்த நாட்டிலிருந்து நூறு படை வீரர்களை எதிரி நாட்டிற்கும் எதிரி நாட்டிலிருந்து நூறு படைவீரர்களை தங்கள் படைக்கும் மாற்றிக்கொண்டனர். அப்போதேனும் ஏதேனும் மாற்றம் நிகழும் என்றெண்ணியே இதைச் செய்தனர். இந்த யுக்தி வேறெந்தப் போரிலும் பயன்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. ஏன் உலகத்தையே தனது போர் முறையினால் அச்சுறுத்திய ஜெர்மனி கூட இதைச் செய்திருக்கவில்லை என்ற உதாரணமே இதன் சிறப்பை உணர்த்தப் போதுமானது!

ஆனாலும் அவர்களின் எண்ணம் தோல்வியுற்றது. வழக்கம்போல இரண்டாம் நாளிலும் எந்த நாட்டிற்கும் வெற்றியோ தோல்வியோ கிடைத்திருக்கவில்லை. அடுத்த நாளும் வந்தது என்றாலும் இதற்கு மேல் இட்லியின் கதையில் போர் பற்றியே சொல்லிக்கொண்டிருந்தால் அலுப்புத்தட்டிவிடும் என்பதால் அன்றைய தினத்திலேயே இட்லியைக் கண்டறிச் சொல்லியிருந்தேன்.

அன்றைய தினம் இரவு சரியாக 8 மணியளவில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, மன்னிக்கவும் வேறு ஏதோ ஞாபகத்தில் இந்தப் பத்தியை எழுதிவிட்டேன்.

அன்றைய தினம் சரியாக இரவு 8 மணியளவில்தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஆனால் சரியாக இரவு 8 மணி என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் அப்பொழுது டைட்டன் வாட்சுகள் இந்தியாவில் காலும் பதித்திருக்கவில்லை கையும் பதித்திருக்கவில்லை. அதனால் அமீர்கானும் அந்த விளம்பரங்களில் நடிக்கவில்லை. சரி விடுங்கள்;நமது வேலையைப் பார்ப்போம். 

அன்று இரவு மன்னர் கடுங்கோபத்தில் இருந்தார். எந்த மன்னர் என்று கேக்காதீர்கள் இந்தக் கதையில் முதல் சில பத்திகளில் ஒரு மன்னரைப் பத்திப் பார்த்துக்கொண்டிருந்தோம் அல்லவா அவரேதான். அவரை மறந்திருந்தால் மறுபடியும் அதே போன்றதொரு முகத்தைக் கற்பனை செய்யவேண்டிய அவசியமில்லை. எதோ ஒரு கன்றாவி முகத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள் போதும்.

கடுங்கோபத்தில் இருந்த மன்னருக்குத் திடீரென்று அகோரப் பசி ஏற்பட்டது. சமையல்கட்டிற்குள் நுழைந்த மன்னர் ஏதேனும் தின்பதற்கு கிடைக்கிறதாவெனப் பார்த்தார். ஒன்றுமில்லை. யாரங்கே எனக் கூப்பிட நினைத்தவர் வருகிறவனும் பசியில் வந்தால் என்ன செய்வதென்று பயந்து எதையும் சொல்லாமலேயே தேட ஆரம்பித்தார். அவரது தேடல் மிகக் கொடூரமாய் இருந்தது. போர்க்களத்தில் கூட இப்படி ஒரு தேடல் அவரிடம் இருந்திருக்கவில்லை. அப்பொழுது திடீரென்று வெற்றுப் பாத்திரம் ஒன்றைக் கீழே தள்ளிவிட்டார். ”தடால் தடால்” என்ற பெரும் சப்தத்துடன் விழுந்தது அந்தப் பாத்திரம். ஆனால் உண்மையில் அது துல்லியமான ”தடால்” என்ற சப்தம் அல்ல. ஏனெனில் அதற்குத்தான் வாய் இல்லையே.

வெளியில் அரைத்தூக்கத்திலிருந்த காவலனின் காதுகளில் இந்தச் சத்தம் சரியாக விழுந்தது. ஏதோ திருட்டுப் பூனைதான் உருட்டுகிறதென்று நினைத்த அந்த வீரன் கையில் வைத்திருந்த கட்டையை எடுத்து உள்ளே சப்தம் வந்த இடத்திற்கு வீசினான்.சரியாக மன்னரின் தலையில் விழுந்த அந்தக் கட்டை மன்னரை மூர்ச்சையாக்கியது. காவலனும் அப்படியே தூங்கிப் போனான்.

ஆனால் இங்கே சரியாகக் கவனியுங்கள். இட்லி உருவான கதையின் மிகமுக்கியக் கட்டம் இதுதான். ஆனால் கட்டம் போட்டு எழுத முடியாதென்பதால் வழக்கம்போலவே எழுதுகிறேன். 

அப்படிக் கீழே விழுந்த மன்னரின் கேடயம் அங்கிருந்த அடுப்பின் மீது வைத்திருந்த வெண்ணீர் தயாரிக்கும் பாத்திரத்தின் மீது விழுந்தது. அந்தச் சமயம் மன்னர் சாப்பாட்டைத் தேடிக்கொண்டிருந்த போது கோபத்தில் மேலே தேக்கி வைத்திருந்த அரிசி மூட்டையை குத்தியதால் அந்த அரிசி முழுவதும் அரைக்கப்பட்ட மாவு போல ஆகியிருந்தது.அந்த அரிசிமாவு அப்படியே கேடயத்தில் நிரம்பியது.

சில மணிநேரத்தில் மன்னருக்கு சுய நினைவு திரும்பியது. அப்பொழுதும் அவருக்கு உணவின் மீதிருந்த தேடல் குறைந்திருக்கவில்லை. அப்பொழுதுதான் அவர் தான் கீழே கிடப்பதையும் அருகிலேயே கேடயமும் கிடப்பதையும் கேடயத்தில் வித்தியாசமான ஒரு பொருள் இருப்பதையும் பார்க்க நேரிட்டது. உணவுத் தேடலில் இருந்த மன்னர் அது என்னவென்று கூட யோசிக்காமல் அப்படியே எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தார். 

இதோ நாம் எதிர்பார்த்த அந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்துவிட்டது. ஆம் இட்லி என்ற மிகச் சிறந்த உணவு வகை நமக்குக் கிடைத்துவிட்டது. ஆனால் அதற்கு யார் இட்லி எனப் பெயரிட்டது என்ற உங்களின் கேள்வியை விரைவில் வேறொரு கதையின் மூலமாகத் தீர்க்கிறேன். ஆனால் உங்களில் யாரும் அந்தப் போர் என்னவாயிற்று என்று கேட்கமாட்டீர்களென்பதால் இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி வணக்கம்!