முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி நம்ம இந்திரா அக்கா
இந்தப் பதிவுல ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாங்க. அவர்களின் அழைப்பிற்கு இணங்க இந்த காதல் கடிதம் அப்படிங்கிற தொடர் பதிவிற்கான பதிவு இது.
செல்லத்திற்கு அன்புள்ள ABCD,
எனக்கு இத எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்குற விசயம்தான். நான் இத நேர்லயே சொல்லனும்னு ஆசைதான். ஆனா நேர்ல பார்க்கும் போது உன்ன இம்ப்ரஸ் பண்ணுறேன் பேர்வழி அப்படின்னு கண்டத ஒளறி வழியுரதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது. அதுலயும் இரண்டு மாசத்துக்கு ஒரு தடவதான் பார்க்கிறோம். சத்தியமா இரண்டு மாசத்துக்கு அப்புறம் உன்னப் பார்க்கப் போறோம்னு ஒரு வாரக்கணக்கா உன்னையே நினைச்சிட்டு இருப்பேன், அப்புறம் உன்ன பார்க்கும் போது ஒரு பத்து நிமிஷம் படபடப்புலையே போய்டுது.
அதிலும் அதிக நேரம் உங்கூடப் பேசிட்டு இருந்தா எங்க வழியுறது மாதிரி ஆகிடுமோன்னு ஒரு பக்கம் எச்சரிக்கை மணி ஒலிக்குது. அப்புறம் எப்படி நேர்ல சொல்லுறது. இப்பக்கூட இத எழுதி உன்கிட்ட கொடுக்கிறேனா இல்ல தைரியம் இல்லாம கிழிச்சுப் போட்டுடப்போறேனா அப்படின்னு தெரியல. அப்படி தைரியம் வந்து உங்கிட்ட கொடுத்திட்டேன்னா வடிவேலு கணக்கா நானும் ரவுடிதான்.
இப்ப கூட ஆரம்பிச்சு என்னென்னமோ சொல்லுறேன் , ஆனா மேட்டர் எண்ணனு சொல்லல. ஒரே வரில சொல்லுறதுனா உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம சந்திக்கிற மனிதர்கள் நிறைய இடங்களில் நிறைய பேர நமக்குப் பிடிக்கும். அது வேற விசயம். ஆனா நான் உன்கிட்ட சொல்லுற பிடிச்சிருக்கு அப்படிங்கிற வார்த்தையோட அர்த்தம் வேற.
என்னமோ தெரியல உன்னப் பார்க்கும்போது வர்ற உணர்வு வேற பொண்ணுகளைப் பார்க்கும் போது வர்றதில்லை. அப்படி உங்கிட்ட என்ன பிடிச்சிருக்குன்னு தெரியல. மத்த பொண்ணுகள மாதிரிதான் நீயும் இருக்க. ஆனா உன்னப் பார்க்கும் போது , உன்னப்பத்தி நினைக்கும் போதெல்லாம் எனக்குள்ள ஒரு இனம்புரியாத உணர்வு வருது. அது சந்தோசமா , இல்ல ஏக்கமா இல்ல வேற எதாவதா அப்படின்னு தெரியல. அப்பவெல்லாம் வைரமுத்துவோட " வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருவமும் உருளுதடி " அப்படிங்கிற வரிகள்தான் நியாபகம் வருது.
பஸ்ல போகும்போது சில பொண்ணுக காதுல EAR PHONE மாட்டிக்கிட்டு குசுகுசுனு பேசுறதப் பார்த்தா ஒருவேளை நீயும் நாளைக்கு என்கூட இப்படித்தான் பேசுவியோ அப்படின்னு உன் நியாபகம்தான் வருது. நான் தினமும் சாமி கும்பிடும்போதெல்லாம் உனக்கு என்மேல காதல் வரணும் , நீ எனக்கானவளா இருக்கணும் அப்படிங்கிறதையும் சேர்த்தே வேண்டிக்கிறேன்.
எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் சாதரணமா பேசுற நான் உன்கிட்ட மட்டும் என்னமோ கடன் வாங்கிப் பேசுறது மாதிரி பேசுறேன். ஏன்னா அதிகமா பேசினா எங்க லூசு அப்படின்னு நினைச்சிடுவியோ அப்படிங்கிற ஒரு பயம்தான். அத விட உன்னப் பார்க்க வரதுக்கு முன்னாடி நிறைய ஒத்திகை பார்த்துட்டு வருவேன் , ஆனா உன்னப் பார்த்ததுமே எல்லாமே மறந்து போகும். இது வரைக்கும் ஒரு தடவ கூட உன்ன இம்ப்ரெஸ் பண்ணலாம் அப்படின்னு நான் பார்த்த ஒத்திகை எல்லாமே வீண்தான்.
நானும் எங்க வீட்டுல எதாச்சும் பேசிட்டிருக்கும் போது அடிக்கடி எல்லோரையும் கிண்டல் பண்ணி பேசிட்டிருப்பேன். அப்பவெல்லாம் எங்க அம்மா வர்ற மகராசியும் இப்படியே வந்திட்டா போதும் அப்படின்னு சொல்லுவாங்க , நான் மனசுக்குள்ள நினைச்சுக்குவேன் அவளும் ( நீ ) அப்படித்தான் நிறைய பேசுவா அப்படின்னு. இன்னும் என்ன என்னமோ உன்னப் பத்தி சொல்லனும்னு தோணுது , ஆனா உனக்கு இதெல்லாம் பிடிக்குமோ பிடிக்காதோன்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஒன்னே ஒண்ணு சொல்லுறேன் , நான் உன்ன அவ்ளோ நேசிக்கிறேன்.
அதே மாதிரி இப்போதைக்கு நான் ஒரு சின்ன கம்பனிலதான் வேலை பார்க்கிறேன். ஆனா சீக்கிரமே பெரிய ஆளா வருவேன். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் இருக்கு. இத ஏன் சொல்லுறேன்னா கொஞ்ச நாளுக்கு அப்புறம் நீ என்னப் பத்தி உங்க வீட்டுல சொல்லும்போது ஒரு பெருமையா சொல்லிக்கிற அளவுக்கு உயர்ந்திடுவேன்.
நான் இப்படி சொல்லுறதால நீ என்னைய உனக்குப் பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்ல வேண்டாம். உனக்கு என்னைப் பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிடு , நல்ல நன்பர்களாவே இருப்போம். எனக்கு சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன். உண்மைலேயே உனக்கு என் மேல காதல் இல்லைன்னு சொன்னா கொஞ்சம் பீல் பண்ணுவேன் ஆனா சீக்கிரமே அதிலிருந்து மீண்டு வந்திருவேன். இத ஏன் சொல்லுறேன்ன எங்கிட்ட இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு ப்ரொபோஸ் பண்ணிருக்கு. அப்போ எனக்கு அப்படி ஒரு பீலிங் இல்ல , அதனால நண்பர்களா இருப்போமே அப்படின்னு கேட்டுகிட்டேன். இப்பத் தான் எனக்குப் புரியுது, நான் அப்படி சொன்னபோது அந்தப் பொண்ணு எவ்ளோ பீல் பண்ணிருக்கும்னு. உன்ன செல்லமா கூப்பிடனும் , உன்கூடவே இருக்கணும்னு ஆசைதான் , ஆனா முடிவுகள் எல்லாமே உன்னோட கைலதான்.
என்றும் நட்புடன்
XYZ.
--------------------------------------------------------------------------------------------------------------------------
தொடர் பதிவுக்கான விசயங்கள் அந்த கோட்டுக்கு மேலேயே முடிஞ்சு போச்சு. இப்போ காதல் பத்தி என்னோட அபிப்பிராயம் அதாவது தற்காலிகக் காதல் பற்றி என்னோட கருத்து அல்லது பயம் பத்தி சொல்லியே ஆகணும். இப்பவெல்லாம் காதல் அப்படின்னு சொல்ல கேட்டாலே பயமா இருக்கு ., துஷ்டரைக் கண்டால் தூர விலகு அப்படிங்கிற மாதிரி தோணுது. உண்மைதாங்க இப்ப அதிகமா நடந்துட்டு இருக்குற விசயங்கள பார்க்கும் போது காதல் அப்படின்னா ஒரு மாயத் தோற்றம் ஏற்ப்பட்டிருக்கு அப்படிங்கிறது ரொம்ப தெளிவா தெரியுது.
எங்க ஊருக்குப் பக்கத்து ஊருல ஒரு பொண்ணு +1 படிச்சிட்டு இருந்துச்சு. அந்தப் பொண்ணு அதே பள்ளிக்கூடத்துல படிக்கிற இன்னொரு பையன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுவும் ஓடிப்போய். இதப் பத்தி நான் ஏன் சொல்லுறேன் அப்படின்னா இவுங்களோட எதிர்காலம் பத்தி நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு. நினைச்சுப் பாருங்களேன் , ஒரு பதினாறு பதினேழு வயசு இருக்குற பசங்க எப்படி ஒரு குடும்பத்த கொண்டுபோகப்போறாங்க? இப்படி நிறைய காதலர்கள் இருக்காங்க. இந்த வயசுல வர்ற ஈர்ப்ப காதல் அப்படிங்கிற பேர்ல இவுங்க வாழ்க்கையவே தொலைச்சிக்கிறாங்க..
இந்த காதலால தான் ஏழைகள் அப்படின்னு ஒரு வர்க்கம் மேலும் உருவாகிடுமோ அப்படின்னு நினைக்கத் தோணுது. அப்படின்னா எல்லா காதலர்களுமே உருப்படாதவங்க அப்படின்னு சொல்ல வரல , மொதல்ல எதிர்காலம் பற்றி ஒரு ஸ்டாண்ட் பண்ணிட்டு காதல் பண்ணுங்க. அது எப்படி அப்படியெல்லாம் காதல் வருமா ? அது வருபோதுதான் வரும் , நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் வராது அப்படின்னு சொல்லுவீங்க.
பொதுவாவே காதல் அப்படிங்கிற விசயம் பெரும்பாலும் அழக பார்த்து வரதுதானே. ஏன் சொல்லுறேன்னா இது வரைக்கும் யாருக்காச்சும் தெருவுல குப்பை பொறுக்குற பொண்ணப் பார்த்து லவ் வந்திருக்கா? மொத்ததுல காதலிக்க நினைக்குறவங்க உங்க வாழ்க்கைல ஸ்டாண்ட் பண்ணிக்கோங்க. அப்பத்தான் உங்க காதலும் இனிக்கும்கறது என்னோட கருத்து. மறுபடியும் வைரமுத்துவோட வரிகள்தான் " காதல் ஒன்னியும் கடவுள் இல்லையாட , அந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா!! "
ஒரு அறிவிப்பு : சொல்லப்போனா இன்னிக்கு இந்த மேட்டர சொல்லனும்னுதான் இந்தப் பதிவே. அதாங்க நம்ம கலைஞ்சர் அடச்சே கலைஞர் டிவி ல தினமும் இரவு 10௦ மணிக்கு " வெற்றிச் சரித்திரம் " அப்படின்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. அத எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா பாருங்க. அதாவது உலகப் போர்கள் பற்றியும் அந்த காலத்துல எடுக்கப்பட்ட வீடியோக்களும் போடுறாங்க. கண்டிப்பா இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்னு நினைக்கிறேன். இத எதுக்காக சொல்லுறேன்னா மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்கள் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாங்க. அத எழுத முடியல , அதனாலதான் அவுங்களுக்குப் பயன்படுமே அப்படின்னு இந்த நிகழ்ச்சி பத்தி சொல்லிருக்கேன். ஹி ஹி
என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : வந்தியா செல்வா கதைகள் எழுதி நாலு பேர குழப்புனியானு இல்லாம உனக்கு எதுக்கு சமுதாய அக்கறை எல்லாம் ?
பின்குறிப்பு : இதுல காதல் பத்தி சொன்னது எல்லாமே என்னோட கருத்துக்கள் தாங்க. அது தவறா கூட இருக்கலாம்.