Monday, January 31, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : சென்ற பதிவின் முன்குறிப்பையே  இந்தப் பதிவின் முன்குறிப்பாக எடுத்துக்கொள்ளவும்.

                                செல்போன் டவரும் செல்வாவும் 

  கடந்த வருடம் செல்வாவின் வீட்டிற்கு விருந்தினர் ஒருவர் வருகை புரிந்திருந்தார். அப்பொழுது சிறிது நேரம் அவருடன் உரையாடிக்கொண்டிருந்துவிட்டு பின்னர் வெளியில் கிளம்பலாம் என்று கிளம்பியபொழுது அவரது உறவினர் " இங்க இந்த போன் டவரே கிடைக்கல , வெளிய கொண்டுபோய் கிடைக்குதான்னு பாரு "என்றார்.

  வெளியில் சென்ற செல்வா நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் அவரது வீட்டில் இருந்து அவரை அழைத்தனர். அப்பொழுது செல்வா " ஒரு சைடு இருக்குற போல்ட் எல்லாம் கழட்டிட்டேன் , இன்னும் இரண்டு சைடு தான் , சீக்கிரமா வந்திடுவேன் " என்றார். 
   
 இதைக்கேட்ட அவரது தந்தை " என்ன சொல்லுற ஒண்ணும் புரியலையே ? "

மாமா மொபைலுக்கு டவர் கிடைக்குதான்னு பார்க்கச் சொன்னார் , நானும் எல்லா கடைலயும் கேட்டேன் , எங்கயும் கிடைக்காதுன்னு சொன்னாங்க ,  அதான் இங்க ( எட்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஊரின் பெயரைச் சொல்லி  ) ஒரு டவர் இருந்துச்சு , அத கழட்டிட்டு வந்திடலாம்னு தான் கழட்டிட்டு இருக்கேன் , ஆனா இது கொஞ்சம் வெய்ட்டா  இருக்கும் போல " என்று முடித்தார். 

இதைக்கேட்டுக் கொண்டிருந்து அவரது உறவினர் " தெய்வமே , நீ ஒன்னையும் புடுங்க வேண்டாம் , ஒழுங்கா வீடு வந்து சேரு " என்றார் கோபமாக.


                              கார்த்திக் , அருண் மற்றும் செல்வா 

   சென்ற ஞாயிறு அன்று செல்வா அவரது நண்பர்களான கார்த்திக் மற்றும் அருணை சந்திக்கலாம் என்று திருப்பூர் சென்றார். மூவரும் திருப்பூரில் உள்ள ஒரு பழரசக் கடையில் ஆரஞ்சுப் பழரசம் பருகிக்கொண்டே அடுத்து என்ன செய்யலாம் என்ற ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பொழுது அருண் தமிழராகப் பிறந்த அனைவரும் பார்த்தே ஆகவேண்டிய காவியப் படமான கலைஞ்சரின் கலைஞரின் இளைஞ்சன் இளைஞன் பார்க்கலாம் என்றார்.

   அருகில் இருந்த கார்த்திக் இப்பவே மணி 11 ஆச்சு , இப்ப போனா நாளைக்கு ஷோக்கு தான் டிக்கெட் கிடைக்கும் என்றார். அப்பொழுது நடந்து சுவாரஸ்யமான உரையாடல்கள்.  

அருண் : இல்ல ப்ளாக்ல வாங்கிக்கலாம்.

செல்வா : யார் ப்ளாக்ல , ரமேஷ் அண்ணன் ப்ளாக்கா ?

கார்த்திக் : ஏன்டா , உனக்கு ப்ளாக் டிக்கெட் கூட தெரியாதா, அது கருப்பு கலர்ல இருக்கும் , ஆனா அது அந்த தியேட்டர்ல கொடுக்க மாட்டாங்க.

அருண் : அடேய் , நான் சொன்னா ப்ளாக் கருப்பு இல்ல,"யாருக்கும் தெரியாம வாங்கறது!" 

செல்வா : யாருக்கும் தெரியதுனா , நமக்கு மட்டும் எப்படித் தெரியும் ? 

அருண் : படம் பார்க்கப் போற விசயத்த இத்தோட நிறுத்திக்குவோம் , இனிமேல் அதப் பத்தி பேசவேண்டாம் , என்னால முடியாது.

பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்ற முடிவிற்கு வந்தவர்கள் அருகில் இருந்த ஐஸ் கிரீம் கடைக்கு விரைந்தனர். அங்கே சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த போது சுவற்றில் இருந்த ஒரு படத்தினைப் பார்த்த அருண் " அது பிக்காசோ படம் " என்றார்.

செல்வா : அது என்ன பழம் ? 

அருண் : பிக்காசோ பழம் இல்லை , அவர் ஒரு டிராயர்!

செல்வா : எங்க தாத்தா போட்டிருக்காரே , அதுவா ? 

அருண் : இனிமே ஒரு வார்த்தை பேசினா கூட நான் அப்படியே எந்திரிச்சு ஓடிருவேன். கார்த்தியை நோக்கியவாறு இவனெல்லாம் எதுக்கு கூப்பிட்ட ? உசுர வாங்குறான்!!

அதற்குப் பின்னர் கிளம்பும் வரையிலும் செல்வா தனது வாயைத் திறக்காமல் மௌனம் காத்தார்.

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை மதிக்காத உலகம் நீடிப்பது சிரமமே!

பின்குறிப்பு : போன பதிவுல இருக்குற பின்குறிப்புதான் இதுக்கும். 

Monday, January 24, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : இது பாவங்கள் போக்கும் இடம் , செல்வா கதைகள் படிப்பதால் பாவங்கள் குறைவதாக ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. அது உண்மையா ? நீதி வரை காத்திருங்கள்!

                                எலிபோனும் செல்வாவும் 

   சில நாட்களுக்கு முன்பு செல்வாவின் வீட்டில் எலித் தொல்லை இருந்தது. அதனைக் கட்டுப்படுத்த அவரது வீட்டில் எலிபோன் ( கூண்டு போன்ற ஒன்று , எலிபோன் என்பது பேச்சு வழக்கு) வாங்கி வந்தனர். ஆனாலும் எலித்தொல்லை தீர்ந்தபாடில்லை.

  சில வாரங்களுக்குப் பிறகு எலி மருந்து வாங்கி எலித்தொல்லையை குறைக்கலாம் என்று வீட்டில் எலிமருந்து வாங்கி வைத்தனர். அதனைப் பார்த்த செல்வா "எலி மருந்துனா எலிக்கு உடம்பு சரியில்லாத போது வாங்கி தரதா?" என்றார். "அப்படியெல்லாம் இல்ல , இது விஷம் . எலிபோன்ல அது விழ மாட்டேங்குதுல அதான் இத வச்சா தின்னுட்டு செத்திடும்" என்று விளக்கினார் அவரது தாயார்.

  அடுத்த நாள் காலையில் செல்வா அவரது தாயாரிடம் " அந்த எலி நம்மல ஏமாத்தப் பார்த்துச்சு , நான் அத ஏமாத்திட்டேன் " என்றார். ஏற்கெனவே பல இடங்களில் செல்வாவின் புத்திக் கூர்மையைப்(?!?) பற்றி அறிந்த அவரது தாயார் கொஞ்சம் அதிர்ச்சியாக " என்ன பண்ணின ? " என்றார்.

" நாம எலிக்கு மருந்து வச்சோம்ல , அத திங்காம எலி அந்த எலிபோனுக்குள்ள போய் ஒளிஞ்சிகிச்சு , ஆனா நாம தான் அதுக்கு எலி மருந்து வச்சிருக்கோம்ல , அதான் திறந்து விட்டுட்டேன் இப்ப அத தின்னுட்டு செத்திடும்  எப்படி ஐடியா.? " என்றார் எதையோ சாதித்தவராக!

                                 ஐம்பது ரூபாயும் ஜெராக்சும்

   ஒரு முறை செல்வாவும் அவரது நண்பர் சுரேசும் படம் பார்க்கலாம் என்று ஒரு திரையரங்கிற்குச் சென்றனர். ஆனால் இவர்களிடம் இருந்தது வெறும் ஐம்பது ரூபாய் மட்டுமே. ஒரு டிக்கெட் விலை நாற்பது ரூபாய் என்றதும் எப்படி இருவரும் படம் பார்ப்பது  என்று சிந்தித்தனர். உடனே செல்வா " இந்த டிக்கெட்ட ஜெராக்ஸ் எடுத்தா இரண்டு டிக்கெட் ஆகிடும்ல , வா போய் ஜெராக்ஸ் எடுத்துட்டு வரலாம்" என்றார்.

  இதைக் கேட்ட சுரேஷ் ஆவலாக " சரி வா போலாம் " என்றார். உண்மையில் சுரேசும் செல்வா போன்ற ஒரு அதிபுத்திசாலி(?!). அதனால் ஒரே கோடி இவர்களை அடித்தாலும் இவர்களது அறிவுத் திறமையை இவர்கள் மெச்சிக்கொள்வர். இருவரும் ஜெராக்ஸ் எடுக்கலாம் என்று ஜெராக்ஸ் கடையை நோக்கிச் சென்றனர். ஆனால் கடைக்குச் செல்வதற்கு முன்னர் சுரேஷ் " டேய் , டிக்கெட் ஜெராக்ஸ் எடுக்கறதுக்குப் பதில் நம்ம கிட்ட இருக்குற ஐம்பது ரூபாய ஜெராக்ஸ் எடுத்தா இரண்டு டிக்கெட் விலை போக இருபது ரூபாய் மிச்சம் ஆகும்ல " என்றார்.

" இது நல்ல ஐடியாவா இருக்கே , ஆனா நம்ம பணத்த ஜெராக்ஸ் எடுக்கும் போது ஜெராக்ஸ் கடைக்காரர் நமக்குத் தெரியாம நம்ம பணத்த அதிகமா ஒரு ஜெராக்ஸ் எடுத்து ஒளிச்சு வச்சிட்டா நமக்கு ஐம்பது ரூபாய் நஷ்டம் ஆகிடும்ல அதனால தெரிஞ்ச கடைல போய்த் தான் எடுக்கணும்."

" அப்படின்னா எங்க மாமா கோபில கடை வச்சிருக்கார் , வா போய் எடுத்திட்டு வரலாம் " என்று கிளம்பியவர்கள் கோபி போவதற்கு இருவருக்கும் டிக்கெட் எடுக்க நாற்பது ரூபாய் செலவு ஆனதால் வீடு வருவதற்கு பணம் இல்லாமல் பேருந்து நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

நீதி : முன்குரிப்புல சொன்னது இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். ஏன்னா செல்வா கதைகள் படிப்பதை விட பெரிய தண்டனை எந்த இடத்திலும் ( நரகத்திலும் கூட ) கொடுக்க முடியாது. அதனால உங்க பாவங்கள் குறைவது உண்மைதானே!!

பின்குறிப்பு : இதுவரைக்கும் ஆயுள்காப்பீடு இல்லாதவங்க இரண்டு நாளைக்குள்ள பண்ணிகோங்க , ஏன்னா எனது அடுத்த பதிவு ஆன்மா! ( தேவா ஸ்டைல்).

Wednesday, January 19, 2011

செல்லத்திற்கு ஒரு கடிதம்

 முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி நம்ம இந்திரா அக்கா இந்தப் பதிவுல ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாங்க. அவர்களின் அழைப்பிற்கு இணங்க இந்த காதல் கடிதம் அப்படிங்கிற தொடர் பதிவிற்கான பதிவு இது.

செல்லத்திற்கு  அன்புள்ள ABCD,
    எனக்கு இத எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்குற விசயம்தான். நான் இத நேர்லயே சொல்லனும்னு ஆசைதான். ஆனா நேர்ல பார்க்கும் போது உன்ன இம்ப்ரஸ் பண்ணுறேன் பேர்வழி அப்படின்னு கண்டத ஒளறி வழியுரதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது. அதுலயும் இரண்டு மாசத்துக்கு ஒரு தடவதான் பார்க்கிறோம். சத்தியமா இரண்டு மாசத்துக்கு அப்புறம் உன்னப் பார்க்கப் போறோம்னு ஒரு வாரக்கணக்கா உன்னையே நினைச்சிட்டு இருப்பேன், அப்புறம் உன்ன பார்க்கும் போது ஒரு பத்து நிமிஷம் படபடப்புலையே போய்டுது.

   அதிலும் அதிக நேரம் உங்கூடப் பேசிட்டு இருந்தா எங்க வழியுறது மாதிரி ஆகிடுமோன்னு ஒரு பக்கம் எச்சரிக்கை மணி ஒலிக்குது. அப்புறம் எப்படி நேர்ல சொல்லுறது. இப்பக்கூட இத எழுதி உன்கிட்ட கொடுக்கிறேனா இல்ல தைரியம் இல்லாம கிழிச்சுப் போட்டுடப்போறேனா அப்படின்னு தெரியல. அப்படி தைரியம் வந்து உங்கிட்ட கொடுத்திட்டேன்னா வடிவேலு கணக்கா நானும் ரவுடிதான்.

     இப்ப கூட ஆரம்பிச்சு என்னென்னமோ சொல்லுறேன் , ஆனா மேட்டர் எண்ணனு  சொல்லல. ஒரே வரில சொல்லுறதுனா உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம சந்திக்கிற மனிதர்கள் நிறைய இடங்களில் நிறைய பேர நமக்குப் பிடிக்கும். அது வேற விசயம். ஆனா நான் உன்கிட்ட சொல்லுற பிடிச்சிருக்கு அப்படிங்கிற வார்த்தையோட அர்த்தம் வேற.

    என்னமோ தெரியல உன்னப் பார்க்கும்போது வர்ற உணர்வு வேற பொண்ணுகளைப் பார்க்கும் போது வர்றதில்லை. அப்படி உங்கிட்ட என்ன பிடிச்சிருக்குன்னு தெரியல. மத்த பொண்ணுகள மாதிரிதான் நீயும் இருக்க. ஆனா உன்னப் பார்க்கும் போது , உன்னப்பத்தி நினைக்கும் போதெல்லாம் எனக்குள்ள ஒரு இனம்புரியாத உணர்வு வருது. அது சந்தோசமா , இல்ல ஏக்கமா இல்ல வேற எதாவதா அப்படின்னு தெரியல. அப்பவெல்லாம் வைரமுத்துவோட " வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருவமும் உருளுதடி " அப்படிங்கிற வரிகள்தான் நியாபகம் வருது.

    பஸ்ல போகும்போது சில பொண்ணுக காதுல EAR PHONE மாட்டிக்கிட்டு குசுகுசுனு பேசுறதப் பார்த்தா ஒருவேளை நீயும் நாளைக்கு என்கூட இப்படித்தான் பேசுவியோ அப்படின்னு உன் நியாபகம்தான் வருது. நான் தினமும் சாமி கும்பிடும்போதெல்லாம் உனக்கு என்மேல காதல் வரணும் , நீ எனக்கானவளா இருக்கணும் அப்படிங்கிறதையும் சேர்த்தே வேண்டிக்கிறேன்.

   எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் சாதரணமா பேசுற நான் உன்கிட்ட மட்டும் என்னமோ கடன் வாங்கிப் பேசுறது மாதிரி பேசுறேன். ஏன்னா அதிகமா பேசினா எங்க லூசு அப்படின்னு நினைச்சிடுவியோ அப்படிங்கிற ஒரு பயம்தான். அத விட உன்னப் பார்க்க வரதுக்கு முன்னாடி நிறைய ஒத்திகை பார்த்துட்டு வருவேன் , ஆனா உன்னப் பார்த்ததுமே எல்லாமே மறந்து போகும். இது வரைக்கும் ஒரு தடவ கூட உன்ன இம்ப்ரெஸ் பண்ணலாம் அப்படின்னு நான் பார்த்த ஒத்திகை எல்லாமே வீண்தான்.

    நானும் எங்க வீட்டுல எதாச்சும் பேசிட்டிருக்கும் போது அடிக்கடி எல்லோரையும் கிண்டல் பண்ணி பேசிட்டிருப்பேன். அப்பவெல்லாம் எங்க அம்மா வர்ற மகராசியும் இப்படியே வந்திட்டா போதும் அப்படின்னு சொல்லுவாங்க , நான் மனசுக்குள்ள நினைச்சுக்குவேன் அவளும் ( நீ ) அப்படித்தான் நிறைய பேசுவா அப்படின்னு. இன்னும் என்ன என்னமோ உன்னப் பத்தி சொல்லனும்னு தோணுது , ஆனா உனக்கு இதெல்லாம் பிடிக்குமோ பிடிக்காதோன்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஒன்னே ஒண்ணு சொல்லுறேன் , நான் உன்ன அவ்ளோ நேசிக்கிறேன்.

    அதே மாதிரி இப்போதைக்கு நான் ஒரு சின்ன கம்பனிலதான் வேலை பார்க்கிறேன். ஆனா சீக்கிரமே பெரிய ஆளா வருவேன். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் இருக்கு. இத ஏன் சொல்லுறேன்னா கொஞ்ச நாளுக்கு அப்புறம் நீ என்னப் பத்தி உங்க வீட்டுல சொல்லும்போது ஒரு பெருமையா சொல்லிக்கிற அளவுக்கு உயர்ந்திடுவேன். 

    நான் இப்படி சொல்லுறதால நீ என்னைய உனக்குப் பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்ல வேண்டாம். உனக்கு என்னைப் பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிடு , நல்ல நன்பர்களாவே இருப்போம். எனக்கு சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன். உண்மைலேயே உனக்கு என் மேல காதல் இல்லைன்னு சொன்னா கொஞ்சம் பீல் பண்ணுவேன் ஆனா சீக்கிரமே அதிலிருந்து மீண்டு வந்திருவேன். இத ஏன் சொல்லுறேன்ன எங்கிட்ட இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு ப்ரொபோஸ் பண்ணிருக்கு. அப்போ எனக்கு அப்படி ஒரு பீலிங் இல்ல , அதனால நண்பர்களா இருப்போமே அப்படின்னு கேட்டுகிட்டேன். இப்பத் தான் எனக்குப் புரியுது, நான் அப்படி சொன்னபோது அந்தப் பொண்ணு எவ்ளோ பீல் பண்ணிருக்கும்னு. உன்ன செல்லமா கூப்பிடனும் , உன்கூடவே இருக்கணும்னு ஆசைதான் , ஆனா முடிவுகள் எல்லாமே உன்னோட கைலதான். 
                                                                           என்றும் நட்புடன் 
                                                                                        XYZ.

--------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர் பதிவுக்கான விசயங்கள் அந்த கோட்டுக்கு மேலேயே முடிஞ்சு போச்சு. இப்போ காதல் பத்தி என்னோட அபிப்பிராயம் அதாவது தற்காலிகக் காதல் பற்றி என்னோட கருத்து அல்லது பயம் பத்தி சொல்லியே ஆகணும். இப்பவெல்லாம் காதல் அப்படின்னு சொல்ல கேட்டாலே பயமா இருக்கு ., துஷ்டரைக் கண்டால் தூர விலகு அப்படிங்கிற மாதிரி தோணுது. உண்மைதாங்க இப்ப அதிகமா நடந்துட்டு இருக்குற விசயங்கள பார்க்கும் போது காதல் அப்படின்னா ஒரு மாயத் தோற்றம் ஏற்ப்பட்டிருக்கு அப்படிங்கிறது ரொம்ப தெளிவா தெரியுது.

    எங்க ஊருக்குப் பக்கத்து ஊருல ஒரு பொண்ணு +1 படிச்சிட்டு இருந்துச்சு. அந்தப் பொண்ணு அதே பள்ளிக்கூடத்துல படிக்கிற இன்னொரு பையன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுவும் ஓடிப்போய். இதப் பத்தி நான் ஏன் சொல்லுறேன் அப்படின்னா இவுங்களோட எதிர்காலம் பத்தி நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு. நினைச்சுப் பாருங்களேன் , ஒரு பதினாறு பதினேழு வயசு இருக்குற பசங்க எப்படி ஒரு குடும்பத்த கொண்டுபோகப்போறாங்க? இப்படி நிறைய காதலர்கள் இருக்காங்க. இந்த வயசுல வர்ற ஈர்ப்ப காதல் அப்படிங்கிற பேர்ல இவுங்க வாழ்க்கையவே தொலைச்சிக்கிறாங்க.. 

    இந்த காதலால தான் ஏழைகள் அப்படின்னு ஒரு வர்க்கம் மேலும் உருவாகிடுமோ அப்படின்னு நினைக்கத் தோணுது. அப்படின்னா எல்லா காதலர்களுமே உருப்படாதவங்க அப்படின்னு சொல்ல வரல , மொதல்ல எதிர்காலம் பற்றி ஒரு ஸ்டாண்ட் பண்ணிட்டு காதல் பண்ணுங்க. அது எப்படி அப்படியெல்லாம் காதல் வருமா ? அது வருபோதுதான் வரும் , நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் வராது அப்படின்னு சொல்லுவீங்க.

    பொதுவாவே காதல் அப்படிங்கிற விசயம் பெரும்பாலும் அழக பார்த்து வரதுதானே. ஏன் சொல்லுறேன்னா இது வரைக்கும் யாருக்காச்சும் தெருவுல குப்பை பொறுக்குற பொண்ணப் பார்த்து லவ் வந்திருக்கா? மொத்ததுல காதலிக்க நினைக்குறவங்க உங்க வாழ்க்கைல ஸ்டாண்ட் பண்ணிக்கோங்க. அப்பத்தான் உங்க காதலும் இனிக்கும்கறது என்னோட கருத்து. மறுபடியும் வைரமுத்துவோட வரிகள்தான் " காதல் ஒன்னியும் கடவுள் இல்லையாட , அந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா!! "

ஒரு அறிவிப்பு : சொல்லப்போனா இன்னிக்கு இந்த மேட்டர சொல்லனும்னுதான் இந்தப் பதிவே. அதாங்க நம்ம கலைஞ்சர் அடச்சே கலைஞர் டிவி ல தினமும் இரவு 10௦ மணிக்கு " வெற்றிச் சரித்திரம் " அப்படின்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. அத எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா பாருங்க. அதாவது உலகப் போர்கள் பற்றியும் அந்த காலத்துல எடுக்கப்பட்ட வீடியோக்களும் போடுறாங்க. கண்டிப்பா இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்னு நினைக்கிறேன். இத எதுக்காக சொல்லுறேன்னா மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்கள் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாங்க. அத எழுத முடியல , அதனாலதான் அவுங்களுக்குப் பயன்படுமே அப்படின்னு இந்த நிகழ்ச்சி பத்தி சொல்லிருக்கேன். ஹி ஹி 

என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : வந்தியா செல்வா கதைகள் எழுதி நாலு பேர குழப்புனியானு இல்லாம உனக்கு எதுக்கு சமுதாய அக்கறை எல்லாம் ?

பின்குறிப்பு : இதுல காதல் பத்தி சொன்னது எல்லாமே என்னோட கருத்துக்கள் தாங்க. அது தவறா கூட இருக்கலாம்.
    

Monday, January 17, 2011

செல்வா கதைகள்

முன்குறிப்பு : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா முன்குறிப்பு இருக்கும்க.

                    மாட்டுப் பொங்கலும் செல்வாவும் 

    கடந்த மாட்டுப் பொங்கல் தினத்தன்று செல்வா அவரது மாடுகளை குளிப்பாட்டி விடும்படி அவரது தந்தையாரால் பணிக்கப்பட்டார். செல்வாவும் சரி என்று மாடுகளைக் குளிப்பாட்டி விட்டு தந்தையிடம் அடுத்து என்ன செய்வது என்று கேட்டார்.

    அவற்றைக் கொண்டு சென்று தோட்டத்தில் கட்டிவிட்டு அவற்றின் கொம்புகளில் இந்த பெயிண்டினைப் பூசிவிடு என்று கூறி அனுப்பினார். அதைப் பெற்றுக்கொண்ட செல்வா மாடுகளை காட்டிற்கு ஓட்டிச்சென்றார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு மிகத் துள்ளலுடன் மகிழ்ச்சி பொங்க வந்தார். வீட்டிற்குள் நுழையும் முன்ன்பே அப்பா அப்பா என்று கத்திக்கொண்டே வந்தார்.

"ஏன்டா, இப்படி கத்துற ? "

" அன்னிக்கு எதிர்த்த வீட்டுக் காரங்க நம்ம மாட்டுக்கு வச்சிருந்த தீன எடுத்து அவுங்க மாட்டுக்குப் போட்டு நம்மல ஏமாத்தினாங்கல்ல , அதே மாதிரி இன்னிக்கு நான் அவுங்கள ஏமாத்திட்டேன் ? " என்றார் மகிழ்ச்சியாக.

செல்வாவின் அறிவு ஜீவித்தனத்தை உணர்ந்த அவரது தந்தை "என்ன பண்ணித் தொலைச்ச ? " என்றார் கோபமாக.

"நம்ம மாட்டுக்கு வச்சிருந்த பெயிண்ட் எடுத்து அவுங்க மாட்டுக்கு அடிச்சு விட்டுட்டேன் , இப்ப அவுங்க வச்சிருக்கிற பெயிண்ட் வேஸ்ட் ஆகிடும்ல , எப்படி ஐடியா ? அவுங்களுக்கு அப்படித்தான் வேணும்!" என்று மகிழ்ச்சிப் பூரிப்பில் இருந்தார்.

இதைக் கேட்ட அவரது தந்தை " நீ திருந்தவே மாட்டியா ? " என்றார் எரிச்சலுடன்.


                        FANCY நம்பரும் செல்வாவும்

    ஒரு முறை செல்வாவின் நண்பர் செல்வாவிடம் தனக்கு ஒரு சிம் கார்டு வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டார். செல்வாவும் சரி நான் நம்பியூர் செல்லும் போது வாங்கி வருகிறேன் என்று கூறியிருந்தார். பின்னர் நம்பியூர் செல்கையில் செல்வா அந்த நண்பருக்கு அழைத்து தான் நம்பியூர் செல்ல இருப்பதாக கூறினார்.

   உடனே அவரது நண்பரும் சிம் வாங்குவதற்குத் தேவையான ஆவணங்களை  எடுத்துக்கொண்டு செல்வாவிடம் கொடுத்தார். மேலும் செல்வாவிடம் "நல்ல பேன்சி நம்பரா பார்த்து வாங்கிட்டு வா" என்று கூறினார். சரி என்று கூறிவிட்டு செல்வாவும் கிளம்பினார்.

   இரண்டு மணிநேரம் கழித்து வீட்டிற்கு வந்த செல்வாவிடம் அவரது நண்பர் " சிம் என்ன ஆச்சு ? " என்று ஆவலாக கேட்டார். அதற்கு செல்வா " நானும் நம்பியூர்ல இருக்குற எல்லா பேன்சிலயும் போய் கேட்டேன் , அவுங்க அவுங்களோட போன் நம்பர தர மாட்டோம்னு சொல்லிட்டாங்க! " என்றார் வெகுளியாக. இதைகேட்ட அவரது நண்பர் " உன்கிட்டப் போய் உதவி கேட்டேன் பாரு ? " என்று புலம்பியபடியே சென்றுவிட்டார்.

நீதி : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா நீதி இருக்கும்க.

பின்குறிப்பு : செல்வா கதைகள் பதிவுனா கண்டிப்பா பின்குறிப்பு இருக்கும்க.

Monday, January 10, 2011

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : திங்கள் கிழமை வந்தா செல்வா கதைகள் வந்தே தீரும் , அவன ( திங்கள் கிழமைய ) நிறுத்த சொல்லுங்க , நான் நிறுத்துறேன்!

                                       செல்போனும் செல்வாவும் 

    ஒரு முறை செல்வாவும் அவரது நண்பரும் விடுமுறை நாள் ஒன்றில் பூங்காவிற்கு சென்றிருந்தனர். சிறிது நேரம் சுற்றிப்பர்த்தவர்கள் ஒரு நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 

    அப்பொழுது நண்பரின் தொலைபேசி ஒலித்தது. இவர்களின் மற்றும் ஒரு நண்பர் அழைத்திருந்தார். இதைப்பார்த்த அவரது நண்பர் " ஐயோ இவன் கூப்பிடுறானே , நாம் பார்க் வந்தோம்னு சொன்னா என்னைய ஏன் கூப்பிடலைன்னு கேப்பானே ? " என்றவாறு அழைப்பினை தவறவிட்டார். "ஆனா இப்ப போன எடுக்காட்டியும் ஏன்டா போன எடுக்கலைன்னு கேப்பான் ,என்ன பண்ணலாம்.? " என்று செல்வாவிடம் கேட்டார். 

   அதற்கு செல்வா " போன கொடு ஒரு ஐடியா இருக்கு! " என்று அவரது தொலைபேசியை வாங்கி , அதே நண்பருக்கு அழைத்தார். அந்த நண்பரிடம் " நீங்கள் அழைக்கும் எண் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளது , தயவு செய்து சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தவர் " ஹா ஹா , நல்லா ஏமாந்திட்டான்! " என்றார். இதைப் பார்த்த அவரது நண்பர் " நமக்குன்னு வந்து வாய்க்குதுக பாரு " என்றவாறே தலையில் அடித்துக்கொண்டார். 


                                         எண்ணெய் வாங்கச்சென்ற செல்வா 

    ஒரு முறை செல்வாவின் தாயார் அவரிடம் கேன் ஒன்றினைக்கொடுத்து அருகில் இருக்கும் மளிகைக்கடையில் கடலை எண்ணெய் வாங்கி வருமாறு அனுப்பினார்.செல்வாவும் கடைக்கு சென்றுகொண்டிருந்தார். அப்பொழு அவரது தாயார் "ஒரு லிட்டர் எண்ணெய் வாங்கிக்க , அப்புறம் அரை லிட்டர் தேன்  வாங்கிட்டு வந்திடு" என்றார்.

   கடைக்கு சென்ற செல்வா தான் கொண்டு வந்திருந்த கேனை கடைக்காரரிடம் கொடுத்து " ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கொடுங்க " என்றார். ஒரு லிட்டர் கடலை எண்ணெயை வாங்கியவர் அந்த கேனை வாங்கி அருகில் இருந்த சாக்கட்டியை எடுத்து எண்ணெய் இருந்த அளவிற்கு ஒரு கோடு போட்டார். பின்னர் கடைக்காரரிடம் அதே கேனைக்கொடுத்து " அரை லிட்டர் தேன் , கொடுங்க" என்றார்.

    இதைப் பார்த்த கடைக்காரர் இரண்டும் கலங்கிடும் என்றார். அதெல்லாம் கலங்காது , அதுக்குத்தான் கோடு போட்டிருக்கேன் , நீங்க குடுங்க " என்று அவரிடம் சண்டை போட்டு வாங்கி வந்தார். வீட்டிற்கு வந்ததும் கடையில் நடந்தவற்றை விளக்கினார். அதற்கு அவரது தாயார் " ஏன்டா , இப்படி பண்ற , ஒண்ணு கூட உருப்பிடியா பண்ண மாட்டியா ? " என்றார் கோபமாக. இதைக்கேட்ட செல்வா நான் கோடு போட்டுத்தானே வாங்கிட்டு வந்தேன் , அந்தக் கோட்டுக்கு மேல இருக்குறது தேன் , கீழ இருக்குறது கடலை எண்ணெய் " என்றார் அப்பாவியாக.

நீதி : செல்வா போன்ற அறிவாளிகளை உலகம் மதிப்பதும் இல்லை , ஏற்றுக்கொள்வதும் இல்லை!

பின்குறிப்பு : இத படிச்சுட்டு சந்தோசத்துல வாரம் முழுக்க திங்கள் கிழமை வரணும்னு நீங்க வேண்டுறது தெரியது. ஆனா ஒரு வாரத்துல ஒரு தடவைக்கு மேல செல்வா கதைகள் போட்டா உலகம் தாங்காது. உலக நலன் கருதி வாரத்துல ஒரு தடவயோட இத நிறுத்திக்கிறேன்.

Friday, January 7, 2011

எப்பொழுது வரும்.?

இரண்டுநாட்களில் சொல்வதாகச் சொன்னார்கள்
இருபதுவருடம் காதலித்த பெண்ணிடம் காதலை சொல்லிவிட்டு
முடிவிற்கு காத்திருப்பதை விட நூறு மடங்கு படபடப்பாக உணர்கிறேன்!என்னை அழைப்பார்களா மாட்டார்களா.?

தொலை. பேசியை தொல்லையாக உணர்ந்து தூரத்தில்
வைத்திருந்தது ஒரு காலம் ,நேற்று முதல் எனது தொடுதல் இல்லாமல்
தொலைபேசி இருக்கவில்லை!
கோழிமுட்டையாக இருந்திருந்தால் இந்நேரம் குஞ்சு பொறித்திருக்கும்!

காதலிக்காக காத்திருக்கும்போது நிமிடமுள் மணி முள்ளாக
நகர்வதாக சொல்கிறான் நண்பன்! என் விசயத்தில்
ஒவ்வொரு நொடியும் வருடமாக நகர்கிறது!
அவன் விசயத்தில் காதலி நிச்சயம் வருவாள்
ஆனால் என் விசயத்தில் என்னை அழைப்பார்களோ , மாட்டார்களோ?

தினமும் எனது தொலைபேசியின் தவறிய அழைப்புகளில்
மிக நெருக்கமானவர் அழைத்திருந்தாலும் திருப்பி கூப்பிடுவதில்லை!
ஆனால் இன்று யாரோ ஒரு தெரியாத எண்ணில் இருந்து தவறிப்போன
எண்ணிற்கு கூட அழைத்துப் பேசி WRONG NUMBER என்ற போது கொஞ்சம் வலித்தது!

கடவுளிடம் நேர்ந்து கொள்வதை எப்பொழுதுமே நான் ஏற்றுக்கொண்டதில்லை,
ஆனால் நேற்று நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றால் பூக்குழி இறங்குவதாக வேண்டிக்கொண்டேன்!பசியால் மட்டுமே பத்தும் பறப்பது இல்லை,நாம் மிகவும் நேசிக்கும் ஒன்று கிடைக்கவேண்டும் என்றாலும் பதினாறும் பறக்கிறது!

சிலசமயங்களில் எனது தொலைபேசி ஒலித்தாலும் வேறு யாரோ
எனது RING TONE வைத்துள்ளார்கள் என்று சாவகாசமாக இருப்பேன்!
ஆனால் நேற்று முதல் எனது அருகில் இருப்பவரின் தொலைபேசி ஒலித்தாலும் ஒரு விதப் பதற்றத்துடன் எனது தொலைபேசியைப் பார்க்கிறேன்!அவர்கள்தான் அழைக்கிறார்களோ என்று?

விரைவில் அழைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அலுவலகத்திலும்
போனும் கையுமாக இருக்கிறேன்! ஏமாற்றமாட்டார்கள் என்ற நம்பிக்கையில்!

உனக்குக் கிடைக்கும் , நீ நிச்சயம் ஜெயிப்பாய் , உனக்கு அந்தத் தகுதிகள் இருக்கிறது என்று நண்பர்கள் கூறும்போது சந்தோசமாக உணர்கிறேன்! இருந்தும் முடிவு என்ன ஆச்சு என்று கேட்கும்போது இன்னும் இரண்டுநாட்கள் என்று பதில் கூறும்போது ஒரு வித ஏக்கத்தை உணர்கிறேன்! இன்னமும் எனது பதற்றம் நின்றபாடில்லை, அழைப்பு வரும்வரை நிற்கப்போவதும் இல்லை!

Monday, January 3, 2011

செல்வா கதைகள்

 முன்குறிப்பு : எதாவது முன்குறிப்பு எழுதனுமே.? என்ன எழுதலாம் .? சரி இந்தப் பதிவுல பின்குறிப்பு இருக்கு.!

                                           புத்தாண்டு தினத்தில் செல்வா 

    கடந்த சனிக்கிழமை புத்தாண்டு தினத்தன்று காலை 10 மணியளவில் செல்வா தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரது நண்பர் ரமேஷ் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக தொலைபேசி வழியே அழைத்தார்.

"செல்வா!, HAPPY NEW YEAR! "

"Thanks anna!, உங்களுக்கும் வாழ்த்துக்கள்.!

அப்பொழுது அவரது பின்னால் வந்த வண்டி ஒன்று பெரிய ஒலியுடன் விலகிச்சென்றது, அப்பொழுது இணைப்பில் இருந்த ரமேஷ் சொன்னது இவருக்கு சரியாக கேட்கவில்லை . இருந்தாலும் செல்வா அவர் புத்தாண்டு வாழ்த்துகள்தான் சொல்லி இருப்பார் என்று மீண்டும் " உங்களுக்கும்!" என்றார்.

இதைக்கேட்ட ரமேஷ் , " எனக்கு எதுக்குடா சொல்லுற , ரேடியோ ஜாக்கி ஆக வாழ்த்துக்கள்னு சொன்னா திருப்பி உங்களுக்கும்னு சொல்லுற.? " என்றார்.

இதைக்கேட்டவுடன் செல்வா "ஹி ஹி ஹி! THANKS அண்ணா , கண்டிப்பா இந்த வருடம் ரேடியோ ஜாக்கி ஆகிடுவேன் என்று கூறி இளித்துக்கொண்டே சமாளித்தார்.!

                                             திருமணப் பரிசு 

   ஒரு முறை செல்வாவின் உறவினர் ஒருவருக்கு திருமணம் நடந்தது. அதற்க்கு செல்வாவும் அழைக்கப்பட்டிருந்தார். திருமணத்திற்கு செல்லும்போது அவர்களின் தொழிலுக்கு உதவுவது போல எதாவது பரிசுப்பொருளை வாங்கிச்செல்வது அவரது வழக்கம்.

   திருமணத்திற்கு சென்றுவிட்டு முகம் வாடியவாறு வீட்டிற்குள் நுழையும் செல்வாவைப் பார்த்து அவரது தந்தை " ஏன்டா , என்ன ஆச்சு.? " என்றார்.

    " நான் கல்யாணத்துக்குப் போகும்போது அவனுக்கு ஒரு பரிசு வாங்கிட்டுப் போனேனா , அந்தப் பரிசு பிடிக்கலைன்னு என்னைய அடிச்சு தொரத்திட்டாங்க!" என்றார் சோகமாக.

" அப்படி என்ன பரிசு வாங்கிட்டு போன .? "

" அவன் போலீசுதானே , அதான் அவன் திருடனைப் பிடிக்கும்போகும் போது பயன்படுமேனு வலை வாங்கிட்டுப் போனேன்!. திருடனை வலை வீசிப்பிடிக்கும் போது பயன்படும்ல!" என்றார் அப்பாவியாக.

நீதி : இதுல முதல் கதை முற்றிலும் உண்மை , இரண்டாவது கதை முற்றிலும் கற்பனை.!

பின்குறிப்பு : பின்குறிப்பு எதாச்சும் எழுதனுமே, சரி இந்தப்பதிவுல முன்குறிப்பு இருக்கு.