Tuesday, August 31, 2010

மொக்கையும் நானும்

எங்கிட்ட நிறைய பேர் கேட்டுட்டாங்க., " ஏன்டா நீ இப்படி மொக்க போட்டு எங்க உயிரை வாங்குற ..?" நான் என்ன வேணும்னா அப்படி செய்யுறேன். நான் ஏன் இப்படி மொக்க போடுறேன். நிச்சயமா உங்களுக்கு சொல்லியே ஆகணும். சரி வாங்க என்னோட STDகுள்ள போலாம்.

நான் அப்ப இரண்டாவது படிச்சிட்டிருந்தேன். ஒரு நாள் கனவுல ரொம்ப பயங்கரமான உருவம் ஒண்ணு வந்தது. எனக்கு ரொம்ப பயமா போச்சு.
 " யார் நீ " அப்படின்னு கேட்டேன்.
" நான் தான் மொக்கை , இப்ப உன்ன பிடிக்கப் போறேன் " அப்படின்னான்..
 உடனே நான் " தயவு செய்து என்னை பிடிச்சிடாத , எனக்குப் பயமா இருக்கு , விட்டுடு " அப்படின்னு சொல்லிட்டே கட்டில்ல நகர்ந்து படுத்தேன். ஆனா கீழே விழுந்துட்டேன். அப்புறம் அப்படியே மயங்கிப்போயிட்டேன்.
அடுத்த நாள் காலைல யாரோ எழுந்தரிசுப் பாக்குறப்போ என்னோட கால்ல பலமா கட்டி வச்சிருந்தாங்க. என்னனு கேட்டேன் .
" நேத்து நீ கட்டில்ல இருந்து கீழ விழுந்துட்ட , அதனால உன்னோட கால் உடைஞ்சு போச்சு" அப்படின்னாங்க. சரி அப்படின்னு விட்டுட்டேன். அப்ப என்னோட கை மேல ஒரு கொசு வந்து உட்கார்ந்தது. அத பார்த்த உடனே எங்க அம்மா கொசு வர்த்தி சுருள் எடுத்து பத்த வச்சா போய்டும் அப்படின்னு சொன்னாங்க.
ஆனா நான் சொன்னேன் " அம்மா ,' கொசுக்களுக்கு அனுமதியில்லை ' அப்படின்னு ஒரு பேப்பர்ல  எழுதி தொங்க விட்டா கொசு உள்ள வராதுல " அப்படின்னு சொன்னேன்.
 இத கேட்டதுமே எங்க அம்மா அடடா பையன் கீழ விழுந்ததுல பயந்துட்டான் போல அப்படின்னு என்னை கூட்டிட்டுப் போய் தாயத்து கட்டி விட்டாங்க.
வீட்டுக்குள்ள வந்ததுமே நான் சொன்னேன் " அம்மா நான் சொன்னது தப்புத்தான் , பேப்பர்ல எழுதி வச்சாலும் கொசு உள்ள வந்திரும் "அப்படின்னேன்.
இத கேட்ட உடனே எங்க அம்மாவுக்கு சந்தோசம்.
நான் மறுபடியும் சொன்னேன் " படிக்காத கொசுவா இருந்தா உள்ள வந்திடும்ல !" இத கேட்டதும் எங்க அம்மாவுக்கு மறுபடியும் டென்ஷன். ஏன்னா நான் அதுவரைக்கும் அவ்வளவு அறிவாளியா(!?!) பேசினது இல்ல. அப்புறம் அப்படியே அந்த நாள் ஓடிப்போச்சு.

அந்த அன்னிக்கு மறுபடியும் ஒரு கனவு. அதுல தேவதை மாதிரி ஒரு பொண்ணு வந்தாங்க . அவுங்க கிட்ட கேட்டேன் " யார்க்கா நீங்க ..? "
" நான்தான் மொக்கை " அப்படின்னாங்க. அத கேட்ட உடனே எனக்கு ஒரே சிரிப்பு .
" கி கி (சிரிப்பு) போங்க்கா. மொக்கை அவன் குண்டா பன்னி மாதிரி பேயாட்டமா இருப்பான் , நீங்க பொய் சொல்லுறீங்க ."
அதுக்கு அவுங்க சொன்னாங்க " இல்லப்பா நான் ஒருத்தர பிடிக்கர வரைக்கும் அப்படித்தான் தெரிவேன் , ஆனா பிடிச்சிட்டா இப்படி அழகா தெரிவேன் " அப்படின்னாங்க. நான் சொன்னேன் " ஆனா நீங்கதான் என்னை பிடிக்கவே இல்லையே ..? "
" நான் நீ கீழே விழுந்தது பிடிச்சிட்டேன். நான் பிடிச்சதால தான் நீ இன்னிக்கு மொக்க போட்ட" அப்படினாங்க.

நாட்கள் நகர்ந்தன.நான் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துட்டிருந்தேன். என் மொக்கை போடும் திறமையும் கூடவே வளர்ந்தது.அடிக்கடி நான் மொக்கை போடுவது அதனால் நான் வாங்கிக்கட்டிகொள்வதும் , கனவில் அவன் அல்லது அவள் ( மொக்கை ) வருவதும் வழக்கமானது. நான் 5 ஆம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அப்ப எங்க வாத்தியார் மழை எப்படிப் பெய்யுது அப்படின்னு பாடம் நடத்திட்டிருந்தார். ஆனா நானும் இன்னொரு பையனும் பேசிட்டிருந்ததப் பார்த்த அவர் " டேய் என்னடா பேசுறீங்க " அப்படின்னார்.
" சார் மழை சாமி கும்பிடறதால தான் பெய்யுது அப்படின்னு சொல்றான் சார் " அப்படின்னு என்னோட பிரென்ட் போட்டுக்கொடுத்திட்டான்.
" எப்படிடா சாமி கும்பிட்டா மழை வரும் " அப்படின்னு என்னை மிரட்டினார்.
"சார் சாமி வானத்துக்கு மேல ட்ரம்ல தண்ணி ஊத்தி வச்சிருப்பாங்க.நாம சாமி கும்பிடும் போது அவுங்க ட்ரம்ல இருக்குற தண்ணிய ஊத்துவாங்க. அதுதான் மழை. அப்புறம் தண்ணி இருக்குற ட்ரம் தீர்ந்ததும் அதைய உருட்டி விட்டுருவாங்க. அப்படி உருட்டி விடுற ட்ரம் மோதுறதுதான் இடி ,அது இரும்பு ட்ரம்மா இருந்தா அது மோதும் போது தீப்பொறி வரும்ல அதுதான் மின்னல் " அப்படின்னு நான் முடிச்சதும் என் முதுகுல இடி விழுந்தது.
வேற யாரு வாத்தியார்தான் " நான் இங்க காட்டு கத்து காத்திட்டிருக்கேன் , நீ இங்க கதை சொல்லிட்டிருக்கியா ..? " அப்படினார்.ஒரு அறிவாளிய முளையிலேயே கிள்ளிட்டார்.

 அப்புறம் 8 வகுப்பு படிக்கும்போது .... ( போதுமா ..? ) சரி விடுங்க. இன்னிக்கு இது போதும். ஆனா நான் என்னோட கதைய தொடர்ந்து சொல்லுவேன்.  அப்புறமா இந்த பதிவிற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கு அது என்னனா ,
நம்ம ஜீவன்பென்னி அண்ணா இதுக்கு முன்னாடி ஒரு பதிவுல இப்படி ஒரு கமெண்ட் போட்டிருந்தார். " மொக்கையப் போட்டு இந்தப்பாடு படுத்துறீங்களே பாவம் அத விட்டுடுங்க ......புண்ணியமாப்போகும் " . இந்த கம்மெண்ட படிச்சதுமே எனக்கு பல்பு எரிஞ்சது. மொக்கை அப்படின்னு தனியா ஏதாவது இருந்தா எப்படி இருக்கும்.? அதன் பயன்தான் இந்த பதிவு மற்றும் வரப்போகும் இதன் தொடர்ச்சிகள்.

Wednesday, August 25, 2010

கல்யாணம் பண்ணிக்கலாமா ..??

காலை மணி 6 ஆகியிருந்தது. டிங் டிங் என்ற கடிகாரத்தை தலையில் தட்டியவாறே எதிரேயிருந்த நாட்காட்டியில் தேதியைப் பார்த்தான் ஜெயந்த். தேதி ஜூலை 17 என்றது. 2 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் தான் ஜாதியைக் காரணம் காட்டி மைதிலியின் காதலை உதர வேண்டியிருந்தது. 4 வருடக் காதல். தனது தந்தையின் தீராத ஜாதி வெறியினால் தகர்க்கப்பட்டது. திருமணம் என்பது ஒரு முறை , அதனை ஊர் அறிய செய்திட வேண்டும் என்று நினைப்பவன். இதனால் மைதிலியைக் கூட்டிக்கொண்டு ஓடி விடு என்று நண்பர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அதனை ஏற்க மனம் ஒப்பவில்லை. மைதிலியும் ப்ராக்டிகலான பெண் என்பதால் காதலர்கள் இருவரும் நண்பர்களாகப் பிரிந்தனர். அடுத்த மாதமே மைதிலிக்கு வேறொரு இடத்தில் திருமணமும் முடிந்தது. அதன் பிறகு ஜெயந்தின் பெற்றோர் இவனைத்  திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்தி வந்தனர். இன்று வரை அவனது பதில் கொஞ்ச நாள் போகட்டும் என்பதாகவே இருக்கிறது.பூமிக்கு வந்த பனித்துளி நான் , சூரியனே என்னைக் குடித்து விடு ;யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன் , பனித்துளியே என்னை அணைத்து விடு ; என்ற வைரமுத்துவின் வைர வரிகளை காற்றில் பரப்பியவாறே selva calling என்ற அவனது தொலைபேசியைக் கையில் எடுத்தவாறே நிகழ்காலத்திற்கு வந்தான். 
  
"சொல்லுடா , இந்த நேரத்துல ..?"


"என்னோட வண்டி பஞ்சர் ஆகிடுச்சு , உன்கூடத்தான் வரணும்.." என்றான் செல்வா.ஜெயந்தும் செல்வாவும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிகின்றனர்.


"சரி வா , வெயிட் பண்ணுறேன்.." என்றவாறே தொலைபேசியை வைத்து விட்டு படுக்கையிலிருந்து வெளியே வந்தான்.


செல்வாவும் சரியான நேரத்திற்கு வந்துவிடவே இருவரும் ஒரே வண்டியில் அலுவலகம் கிளம்பினர்.போகும் வழியில்,


"மச்சி , எனக்கு ஒரு சந்தேகம்" என்றான் செல்வா.


"சொல்லு .."


"அங்க ஒருத்தன் uninor இனி என் நம்பர் அப்டின்கிறானே அவன் நம்பர் என்னவாத்தான் இருந்தா நமக்கு என்ன " என்றான் வழியில் வைத்திருந்த விளம்பர பலகையைப் பார்த்துவிட்டு.


"அது விளம்பரம். நீ சொன்னீனா உன் நம்பர் அப்படின்னு வரும் "


" அவன் நம்பர் எப்படி என் நம்பர்னு வரும் ..? " 


"சொல்லிப்பாரு. வரும் "


"uninor இனி அவன் நம்பர் ." என்று சொல்லிவிட்டு "என் நம்பர்னு வரல " என்றான்.


"உன் நம்பர்னு சொல்லு. வரும்" 


"சரி uninor இனி உன் நம்பர்." இப்ப உன் நம்பர்னு வருது , என் நம்பர்னு வரலையே ..?!? "


"இனிமே ஒரு வார்த்த பேசினே என் உயிர் போனாலும் பரவால்லைன்னு ஏதாவது பஸ்ல  மோதிடுவேன். ஆபீஸ் வர வரைக்கும் வாய திறந்திடாத." என்றான் ஜெயந்த்.


"அட ச்சே. உனக்கு பதில் தெரியலைன்னு சொல்லுடா."


"இந்த மாதிரி மொக்கைக்கெல்லாம் பதில் தெரியனும்னு அவசியம் கிடையாது" என்று பேசியபடியே அலுவலகம் வந்து சேர்ந்தனர் இருவரும்.


11 மணியளவில் அவர்களின் மேலாளர் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணை அழைத்து வந்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
"இவங்க பேரு ரம்யா. நம்ம  திவாகருக்குப் பதிலா இனிமே இவுங்கதான். எல்லோரும் அறிமுகம் ஆகிக்கங்க." என்று சொல்லிவிட்டு தனது அறையை நோக்கிச் சென்றுவிட்டார். 


அந்தப் பெண்ணைப் பார்த்ததுமே செல்வா ஜெயந்த்திடம் " செம பிகர் மச்சி., என்ன பொட்டு வச்சிருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருந்திருக்கும் " என்றான்.


"உன் வாய வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா ..? என்று அதட்டினான்.


பின்னர் அனைவரும் அறிமுகம் ஆனவுடன் அவரவர் வேலைகளைக் கவனிக்கத்தொடங்கினர்.அப்படியே அந்த வாரம் நகர்ந்திருந்தது.சனிக்கிழமை மாலை 5 மணி ஆகியிருந்தது.


செல்வா ஜெயந்திடம் " டேய் நாளைக்கு நான் ரம்யாவைப் பார்த்தே ஆகணும் ." என்றான்.


"அவள எதுக்குப் பாக்குற , அதுவுமில்லாம நாளைக்கு லீவாச்சே ..?"


" அவ மேல ஒரு ஒரு , நான் அவள லவ் பண்ணுறேன்னு நினைக்கிறேன் .!"


"நாசமாப்போச்சு .. அவ வந்து இப்பத்தான் 5 நாள் ஆகுது. அதுக்குள்ள லவ்வா ..? " என்றான் ஜெயந்த்.


"லவ் வரதுக்கு ஒரு செகண்ட் போதும் மச்சி , சரி அவள எப்படி பாக்குறது ஒரு ஐடியா குடு ."


"எனக்கு இதுதான் வேலையா ..? "


"சும்மா சொல்லுடா , ஓவர் பில்ட் அப் பண்ணாத ..? "


"சரி அவகிட்ட மொபைல் நம்பர் வாங்கிக்க , போன் பண்ணி வெளிய வரச்சொல்லிப் பார்த்துக்க." 


" ஏன் நான் நல்லா இருக்கறது உனக்குப் புடிக்கலையா ..?  அவ நம்ம கூட இன்னும் நல்லா கூட பழகல. அதுக்குள்ள போன் பண்ணி வெளிய கூப்பிட்டா வருவாளா ..? "


"அவ்ளோதான் எனக்குத் தெரியும் , வேற ஐடியாவெல்லாம் எனக்குத் தெரியாது " என்று சொல்லிவிட்டு இருக்கைக்குச் சென்றுவிட்டான் ஜெயந்த். 


சரியாக அரை மணி நேரத்திற்குப் பிறகு செல்வா ஜெயந்த் இருக்கைக்கு ஓடி வந்தான். " மச்சி ஒரு ஐடியா உன் ஹெல்ப் வேணும் .."


"சொல்லித்தொலை .." என்றான் ஜெயந்த்.


" நாளைக்கு அவ வீட்டுக்குப் போய் மீட் பண்ணலாம் , ஓகே வா ..? "


" போய் மீட் பண்ணு , அடி வாங்கு இதுக்கு என்னோட ஹெல்ப் எதுக்கு .. ஓ அடி பலமா விழுந்திட்டா ஆம்புலன்ச கூட்டிட்டு வரணுமா ..? "


"இல்ல மச்சி நீயும் வா.. "


"நான் எதுக்கு , சரி அப்படியே வந்தாலும் எதுக்கு வந்தீங்கன்னு கேட்டா என்ன சொல்லுறது ..? "


"இந்தப் பக்கம் வந்தோம் அப்படியே வீட்டுக்கு வந்தோம்னு சொல்லி சமாளிச்சுக்கலாம் டா , ப்ளீஸ் வாடா ..? "


" சரி சரி வந்து தொலைக்கிறேன் ,வீடு எங்க இருக்கு ..? "


"அத இனிமேதான் கண்டுபிடிக்கணும்.! "


" இனிமேதானா எப்படி ..? "


"நம்ம மேனேஜர் ரூம்ல " STAFF'S RECORD " அப்படின்னு ஒரு பைல் இருக்குல்ல., அதுல இருக்கும் . " என்றான் செல்வா.


" ஆனா அத பார்க்கரக்குத்தான் பெர்மிசன் கிடையாதே..? "


" இப்ப மேனேஜர் ரூம்ல இல்ல ., நான் போய் அந்த பைல பாக்குறேன் , நீ இந்த கதவோரமா  நின்னு யாராவது வராங்களா அப்படின்னு எனக்கு சிக்னல் கொடு." என்று கூறிவிட்டு மேனேஜர் அறைக்குள் சென்றான் செல்வா.


ஞாயிறு காலை 11 ஆகியிருந்தது. ஜெயந்த்தும் செல்வாவும் நேற்று Staff's Record இல் பார்த்த அந்த முகவரிக்குச் சென்றுவிட்டனர்.

" மச்சி , இந்த வீடுதான் ." என்று கூறிக்கொண்டே காலிங் பெல்லை அழுத்தினான் செல்வா.


வீட்டிற்குள்ளிருந்து 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கதவைத் திறந்து யார் என்பது போலப் பார்த்தார்.அதனைப் புரிந்து கொண்ட செல்வா ,


" நாங்க A & B கம்பெனில இருந்து வரோம் ., இது ர .... " என்று முடிப்பதற்குள் அந்த பெண் 


"ஓ , வாங்க வாங்க ., " என்று அழைத்து சோபாவில் உட்காருமாறு கூறினார்.


இவர் ரம்யாவின் தாயார் என்று நினைத்துக் கொண்டனர் இருவரும். " அவுங்க இல்லீங்களா .,"  என்றான் செல்வா.


"அவுங்க கடைக்குப் போனாங்க , இப்ப வந்திடுவாங்க . பேசிட்டு இருங்க , இப்ப வந்திடறேன் " என்று கூறிவிட்டு கிச்சனுக்குள் சென்றார் அந்த பெண்.


" என்ன மச்சி ,பெத்த பொண்ணவே இவ்ளோ மரியாதையா கூப்பிடறாங்க .." என்றான் ஜெயந்த்.


" அதான் மச்சி , எனக்கும் புரியல ." என்றான் செல்வா.


" மச்சி அங்க பாரு , அந்த போட்டோல இருக்கிற பசங்கள நாம எங்கயோ பார்திருக்கோம்ல. " என்றான் ஜெயந்த்.


" ஆமா மச்சி , எங்கயோ பார்த்தா மாதிரி இருக்கு , சரி விடு , ரம்யா வந்தா கேக்கலாம்." என்று பேசிக்கொண்டிருந்தவர்ளை " இப்பத்தான் வந்தீங்களா " என்ற ராமையாவின் குரல் திரும்பிப்பார்க்க வைத்தது.


 இருவருக்கும் குழப்பம் , " இவரு எங்க இங்க வந்தாரு " என்று நினைத்துக்கொண்டனர். ராமையாவும் இவர்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் தான் வேலை செய்கிறார். 


"இவ்ளோ நாளாச்சா , எங்க வீட்டுக்கு வரதுக்கு " என்று ராமய்யா கேட்டதும் இருவருக்கும் தூக்கி வாரிப்போட்டது. என்ன இது ராமைய்யா வீடா என்று என்று ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டனர். இப்பொழுதுதான் செல்வாவிற்கு ஒன்று புரிந்தது. தான் RAMAYA என்பதை RAMYA என்று தவறாக எடுத்துக்கொண்டதை உணர்ந்தான். பின்னர் இருவரும் கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்துவிட்டு கிளம்பினர். வெளியே வந்ததும்,


" ஏன்டா , உனக்கு ரம்யாவிற்கும் ராமய்யாவிற்கும்  வித்தியாசம் தெரியாதா ..? " என்று எரிச்சலாக கேட்டான் ஜெயந்த்.


"இல்ல மச்சி , நான் பார்த்திட்டிருக்கும் போது வெளிய யாரோ வர்ற மாதிரி இருந்துச்சு ., அதான் பயத்துல RAM அப்படிங்கிறத படிச்சதும் இதுதான் RAMYA அட்ரஸ் அப்படின்னு நினைச்சு எடுத்திட்டேன்.? ஹி ஹி "  அசடு வழிந்தான் செல்வா.


"உன்னோட வாழ்க்கைல இதுவரைக்கும் ஒரு உருப்படியான காரியமாவது செஞ்சிருக்கியா நீ ..? " என்று கோபமாகக் கத்திகொண்டிருந்த ஜெயந்த்தின் மொபைல் ஒலித்தது. யோகேஷ் அழைப்பிலிருந்தான்.. 


" சொல்டா ...? " 


" இன்னிக்கு மத்தியானம் அபிராமி தியேட்டருக்கு வந்திடு. வரும்போது செல்வாவையும் கூப்பிட்டு வந்திடு , மூணு டிக்கெட் வாங்கிட்டேன். " என்றான் யோகேஷ். யோகேஷ் ,செல்வா , ஜெயந்த் மூவரும் பள்ளிப்படிப்பிலிருந்து கல்லூரி முடியும் வரை ஒன்ன்றாகப் படித்தவர்கள். பின்னர் யோகேஷ் தனியாக தொழில் செய்து வருகிறான்.


"சரி வந்திடறேன் , அதவிட இந்த மொக்கை இன்னிக்கு ஒண்ணு பண்ணுச்சு பாரு அத கேட்டீனா அழுதுடுவ." என்று பேசிக்கொண்டிருந்த ஜெயந்தின் மொபைலை பிடுங்கிய செல்வா 


" ஓகே மச்சி , வந்திடறோம் .." என்று கூறி கட் செய்தான்.


" டேய் என்னமோ ஒரு சின்ன தப்புப் பண்ணிட்டேன் , அதுக்குப் போய் தண்டோரா போட்டு  சொல்லிடுவ போல .. அதும் அவன் கிட்ட சொல்லிட்டா அவன் ஊரு முழுக்கப் பரப்பிடுவான். ஏற்கெனவே நம்மல ஊருக்குள்ள கேனப்பயன்னு நினைச்சிட்டிருக்காங்க" என்றான்.


" பண்ணுறதெல்லாம் கோமாளித்தனம் அப்புறம் கொஞ்சுவாங்களா ..? " என்றான் ஜெயந்த்.




மதியம் மூன்று மணி ஆகியிருந்தது. மூவரும் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது செல்வா " டேய் அந்த கடைசி சீட்ல பாரு , ஒரு ஜோடி " என்றான்.


அதைப்பார்த்த யோகேஷ் " அண்ணன் தங்கச்சி மாதிரி தெரியுது .." 


" இல்ல மச்சி லவ்வர்ஸ் தான் " என்றான் செல்வா.


"எப்டி சொல்ற ..? " என்றான் ஜெயந்த்.


" அந்தப் பையன் எங்க ஊரு தான் , +1 படிக்கிறான் . போன வாரம் கூட என்கிட்டே பேசிட்டிருக்கும் போது ஒரு பொண்ண லவ் பண்ணுறேன் அப்படின்னான் , ஆனா இவ்ளோ ஸ்பீடா இருப்பான்னு நினைக்கலை. "


" நீ என்ன சொன்ன ..? "


" நான் என்னத்த சொல்லுறது , வாழ்த்துக்கள் தம்பி உன் காதல் சீக்கிரமே வெற்றியடையட்டும் .!" அப்படின்னேன்.


" ஏன் அப்படி சொன்ன ..? " இது யோகேஷ்.


" என்ன மச்சி இப்டி கேக்குற , காதல் புனிதமானது , ஜாதி , மதம் பாக்காதது அப்படிங்கிற விஷயம் எனக்குத்தெரியாதா ..? அதனால சரி நல்ல விஷயம் தானே அப்படின்னு அப்படி சொன்னேன் . " என்றான் செல்வா.


" காதல் ஜாதி மதம் பார்க்காது சரி , ஆனா இந்த வயசுல வர்ற ஈர்ப்ப உன்ன மாதிரி ஆளுங்க உசுப்பி விடுறதால ஏழை ஜாதி அப்படின்னு ஒண்ணு உருவாகிட்டிருக்கு தெரியுமா ..? " 


" அதெப்படி சொல்ற மச்சி ..? "


" ஆமா உங்களை மாதிரி ஆளுக காதலும் கடவுளும் ஒண்ணு , அப்படி இப்படின்னு சொல்ல வேண்டியது . அப்புறம் அந்த பசங்களும் இரண்டுங்கெட்டான் வயசுல இருக்கறதால எது சரி , எது தப்புனே தெரியறதில்ல. எங்க ஊர்ல ஒரு பையன் அப்படித்தான் +1 படிச்சிட்டிருந்தான். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சுப் பார்த்தா ஒரு பொண்ண கூட்டிட்டு ஓடிட்டான் அப்படிங்கிறாங்க. இப்ப யோசிச்சுப்பார் . அந்தப்பயனோட வாழ்க்கை என்னாகும்னு , படிப்பும் போச்சு . கொஞ்ச நாள் அத இத பண்ணி அப்படியே காலத்த ஓட்ட வேண்டியது. ஆனா எத்தன நாளுக்குத்தான் அப்படி வாழ முடியும். ஒரு சிலர் நல்லா இருக்காங்க. ஆனா ஒரு சிலர் அவுங்க வாழ்க்கையே கேள்விக்குறியாயிடுது. இங்க இருக்குற ஒரு சில ஏழைகளின் கதை இப்படித்தான் இருக்குது. அதனால தயவுசெய்து ஏழை ஜாதிய உருவாக்காதீங்க.! " என்று முடித்தான் யோகேஷ்.


" அதுக்காக யாரையுமே லவ் பண்ண வேண்டாம்கிறயா ..? "


" நான் அப்படி சொல்லல , லவ் பண்ணுங்க வாழ்கைய தொலைச்சுக்காதீங்க. அதே மாதிரி இந்த மாதிரி சின்னப் பசங்களப் பார்த்தா அவுங்களுக்குப் புரிய வையுங்க. அவுங்கள உசுப்பி விடாதீங்க அப்படின்னு தான் சொல்றேன். அதுக்காக அந்த வயசுல லவ் வரக்கூடாது அப்படின்னு சொல்லல. அந்த வயசுல கண்டிப்பா ஒரு ஈர்ப்பு வரணும். வந்தாதான் நீங்க சரியா இருக்கீங்கன்னு அர்த்தம். அந்த ஈர்ப்பப் பத்தி அவுங்களுக்குப் புரிய வையுங்க. அதத்தான் நான் சொல்லுறேன்.! " 


" ஹே சூப்பர் சூப்பர்.. கை தட்டு கை தட்டு .! " என்றான் செல்வா.


" ஒழுக்கமா படத்தப் பாருங்கடா.. " என்றான் ஜெயந்த்.




படம் முடிந்து மூவரும் வெளியே வந்து கொண்டிருந்தனர். அப்போது ஜெயந்த் ,
" டேய் அங்க பாருங்கடா , நம்ம ரம்யா ஒரு பையனோட வந்துட்டிருக்காங்க..! " என்றான்.


" அட பாவி , எவன் அவன் ..? எனக்கு முன்னாடி முந்திக்கிட்டானா..? " என்றான் செல்வா.


"கொய்யால , அது சின்னப் பையன் , 4 வயசு இருக்கும்.. " இது யோகேஷ்.


" அட ஆமா , சரி வா போய் பேசுவோம் ." என்று சொல்லிவிட்டு ரம்யாவை நோக்கி நகர்ந்தனர் மூவரும்.


இவர்களைப் பார்த்த ரம்யாவும் " கிளம்பியாச்சா ..? " என்றாள்.


" ம் .படம் நல்லா இருந்துச்சா..? " என்றான் செல்வா.


" பட்டைய கிளப்பிட்டாங்க.." 


" அட புதுசா ஒரு பையன் , இது யாருங்க ..? "


" என்னோட பையன் தான்.. " என்றாள் ரம்யா..


செல்வாவிற்குத் தூக்கி வாரிப்போட்டது. என்னடா சொல்லுறா இவ ,கழுத்துல தாலிய காணோம் பையன்கிறா.. ஒரு வேளை அக்கா , தங்கச்சி பையனா இருப்பானோ ..? என்று நினைத்துக்கொண்டான்.


" இவுங்க அப்பா என்ன பண்ணுறார்,"  என்று கேட்டான் செல்வா.


" அவரு இரண்டு வருசத்துக்கு முன்னாடி இறந்துட்டார்.. " என்றாள் ரம்யா.


மூவருக்கும் அதிர்ச்சி." ஓ , சாரி சிஸ்டர் ..தெரியாம கேட்டுட்டேன் " என்றான் செல்வா.பின்னர் நால்வரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடை பெற்றனர்.


போகும் வழியில் ஜெயந்த் கேட்டான் , " என்ன மச்சி ., உன் பிகருக்கு கல்யாணம் ஆகிடுட்சுங்கிறா.. ? " 


" டேய் தப்பா பேசாதடா , அவ எனக்குத் தங்கச்சி மாதிரி .. " என்றான் செல்வா.


" அட பாவி அதுக்குள்ள கட்சி மாறிட்டியே , உன்ன மாதிரிதான் நிறைய பேர் அவுங்களைப் பத்தி தெரியாமலே லவ் பண்ண வேண்டியது , அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் தெரிஞ்சா விவாகரத்துப் பண்ண வேண்டியது.. சரி எப்படியோ போங்க . எனக்கு சீக்கிரமே கல்யாணம் ஆகிடும்னு நினைக்கிறேன்..! " என்றான் ஜெயந்த்.


" சந்தோசம் மச்சி , நீ எங்க மைதிலிய நெனைச்சுட்டே இருந்திடுவியோனு பயந்தோம் .. சரி யாரு அந்தப் பொண்ணு .. ? " 


" ரம்யா தான் ..?!? " 


" டேய் என்ன சொல்லுற , அப்ப அவளுக்கு வாழ்க்க குடுக்கப் போறியா ..? " என்றா செல்வா.


" ஏன்டா நீ இன்னும் வளரவே இல்லையா ..? " என்றான் ஜெயந்த்.


" ஏன்டா அப்படி கேக்குற .. ? "


" இல்ல அவளுக்கு வாழ்க்கை கொடுக்கரக்கு நான் என்ன கடவுளா ...? " 


" இல்ல மச்சி , ஒரு விதவைனு தெரிஞ்சும் எப்படி ..? அதான் அப்படி கேட்டேன்.. " 


" அப்படிப் பாத்தா நிறைய ஆம்பளைங்க அவுங்க மனைவி இறந்ததுக்கு அப்புறம் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அவுங்க எல்லோரும் அந்த ஆளுக்கு வாழ்கை கொடுறாங்க அப்படின்னு சொல்லுரதில்லையே.. உங்களுக்கு ஒரு நியாயம் அவுங்களுக்கு ஒரு நியாயமா ..? " என்றான் ஜெயந்த்.


" சரி விடு மச்சி வீடு வந்திடுச்சு , நாங்க கிளம்புறோம் " என்று விடை பெற்றனர் செல்வாவும் , யோகேசும்.


வீட்டுக்கு வந்ததும் அப்பாவிடம் தனக்கு கல்யாணம் செய்ய சம்மதம் என்றும் ரம்யாவைப் பற்றியும் கூறினான் ஜெயந்த். இதைக் கேட்டதும் ஜெயந்தின் அப்பா ,


" நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா போதும் .." என்று தனது முழு சம்மதத்தையும் தெரிவித்தார். அவரது சம்மதத்தில் ஜாதி வெறி அழிந்திருந்தது அகிம்சையாக..!

பின்குறிப்பு : இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் ஜெயந்த் வெறும்பயலையோ , யோகேஷ் ஜில்தண்ணியையோ, செல்வா கோமாளியையோ குறிப்பிடுவன அல்ல. மேலும் இந்த கதையில் காதலைப் பற்றி குறிப்பிட்டிருப்பது அனைத்தும் எனது சொந்த கருத்துக்களே .. அது தவறாகவும் இருக்கலாம். தவறாக இருப்பின் சுட்டிக்காட்டவும்..!  



Saturday, August 14, 2010

பதிவுலகில் கோமாளி.!

 பெரிய வெங்காயத்த சின்ன சின்ன துண்டுகளா வெட்டினா கூட அத சின்ன வெங்காயம்னு யாரும் சொல்ல மாட்டாங்க..! (அட ச்சே .. தத்துவம் கூட மொக்கயாத்தான் வருது.. ) சரி விடுங்க .. நாம நேரா கேள்விக்குப் போய்டலாம். அதுக்கு முன்னாடி நம்ம சௌந்தர் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். மன்னிச்சிருங்க சௌந்தர். ஏன்னா போன பதிவுல என்னால மொக்க போட முடியல.. அதனால அதுல போட வேண்டிய மொக்கையையும் இதுல போட்டுடுவேனோ அப்படின்னு நினைக்கிறேன்.. முதல்ல ஒரு தத்துவம் சொல்லி ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அதுவும் அப்படி ஆகிடுச்சு..!!

1 .) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?
நீங்க எந்த பேர கேக்குறீங்க..? செல்வக்குமாரா., இல்ல கோமாளியா..? சரி எத கேட்டா என்ன ..? இரண்டுமே என் பேரு தான்..!

2 .) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?
என் உண்மையான பெயர் கோமாளி.! ஆனா ஏதாவது புனை பெயர் வச்சு எழுதலாம்னுதான் ப.செல்வக்குமார் அப்படின்னு வச்சுக்கிட்டேன். ஐயோ தப்பா சொல்லிட்டேன்.!?! மாத்தி படிங்க..!

3 .)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ..?
நான் ஒரு முறை சென்னை சென்றிருந்த போது கமல் சார் என்னைப் பார்த்துட்டார்.
அவரு நான் எங்க சினிமா உலகத்துக்கு வந்திடுவேனோ , அப்படி வந்திட்டா அவங்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைகாதுல்ல. அதனால அவர் என்னைப்பார்த்து " செல்வா நீ பதிவுலகத்துக்குப் போய்டு " அப்படின்னு சொன்னார். நானும் அப்ப இருந்து எல்லா விண்வெளி ஆராய்ச்சிப் புத்தகத்தையும் படிச்சேன். ஏன்னா பதிவுலகம்கறது பூமி மாதிரி இன்னொன்னு இருக்கும் அப்படின்னு நினைச்சேன். தேடினேன் தேடினேன் தமிழ்நாட்ட விட்டு கர்நாடகா வரைக்கும் தேடினேன். அப்ப பெங்களூர்ல இருந்த எங்க சம்பத் அண்ணன் தான் தம்பி பதிவுலகம்கறது வேற ஒண்ணு இல்லைப்பா .. அது இங்கதான் இருக்கு . அப்படின்னு சொல்லி ப்ளாக் பத்தி சொன்னதால இந்த கோமாளி உங்க முன்னாடி.! இல்லனா நீங்க தப்பிச்சிருப்பீங்க.. நான் இன்னும் தேடிகிட்டிருப்பேன்.

4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?
இன்னொரு ப்ளாக் ஆரம்பிச்சு அத பிரபலப் படுத்தி அதுல இருந்து இதைய பிரபலப்படுத்தலாம்னு நினைச்சேன். ஆனா அதைய எப்படி பிரபலப்படுதறது..? அத பிரபலப்படுத்த இன்னொரு ப்ளாக்.. இப்படியே என்னோட ப்ளாக்களின் எண்ணிக்கை 10000000000000 (இது எத்தனை ..?!?) ஆகிடுச்சு.சொன்னா நம்ப மாட்டீங்க. நான் கி.பி 1800 லையே ப்ளாக் எழுத ஆரம்பிச்சிட்டேன். அப்புறமா நான் 1987 ல பிறந்தேனா..? (ஒண்ணும் புரியலைல ) அப்புறமா பாக்குறேன் அத்தன ப்ளாக் ஆரம்பிச்சாலும் இன்னும் ஒரு போஸ்ட் கூட போடல. அப்பத்தான் கண்டுபிடிச்சேன். போஸ்ட் போடாம பிரபலம் ஆக முடியாதுன்னு. நாங்களும் யோசிப்போம்ல. அப்புறம் பிரபலம் ஆகுற ஐடியாவ விட்டுட்டேன். அப்புறம் நம்ம தேவா அண்ணன் வந்ததுக்கு அப்புறம் அவரோட சாட் status ல போட்டார், வலைச்சரத்துல அறிமுகப்படுத்தினார். KRP செந்தில் அண்ணாவும் வலைச்சரத்துல அறிமுகப்படுத்தினார். அப்புறம் தமிழ்மணம் , தமிளிஷ் ல இணைச்சேன். இதபத்தி எனக்கு சொன்னது எங்க பக்க வீட்டு அண்ணா செந்தில்நாதன். அப்புறம் அப்படியே ....??!!!??

5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
சொந்த விசயங்களை இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை . ஏன்னா நாம கற்பனை பண்ணி எழுதறதே இவ்ளோ மொக்கையா இருக்கு . அப்புறம் சொந்த விசயம்னா எப்டி இருக்கும். சரி சரி இப்டி கேட்டதுக்காகவே என்னோட சொந்த விசயங்கள இனிமேல் பகிர்ந்துக்கறேன் . (உங்க தலையெழுத்து ..??!!??)

6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?
 நான் பொழுது போக்கிற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ எழுதவில்லை. தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன். என்ன அப்படி எழுதினதுல உங்களோட நட்பு கிடைச்சது. இதவிட என்ன ஒரு மனுஷனுக்கு என்ன வேணும் ..?

7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?
ஒண்ணுக்கே முடியல ...? ஹலோ முடியலைன்னு சொன்னது எனக்கு நேரமில்லை அப்படின்னு அர்த்தம் கிடையாது .. ஒரு ப்ளாக் எழுதரதுனாலையே இந்த வெப் சர்வர்லாம்
சூடாகி இன்டர்நெட் ஜாம் ஆகிடுது. அத பார்த்த ஒரு குழந்த அந்த ஜாம எடுத்து சாபிட்டுடுது. அதனால இனிமேல் இந்த மாதிரி நடக்கக் கூடாது அப்படிங்கிற நல்லா எண்ணத்துல நான் ஒரு ப்ளாக்கே  போதும் அப்படின்னு நிறுத்திட்டேன் .
அப்புறம் எனக்கு quizfromtbts அப்படின்னு கூகுள் sms சேனல் ஒண்ணு இருக்கு.அதுல இந்தியா முழுக்க 4400 பயனாளிகள் இருக்காங்க.அதுல நான் Punchlins of companies , Abbreviations , Puzzles ,Employment news ..Etc  பத்தி sms அனுப்பிட்டிருக்கேன். ஆனா அது இந்தியாவுல மட்டும் தான் வேலை செய்யும். அதுல நீங்க இணையனும்னு நினைச்சா இங்க கிளிக் பண்ணுங்க .அதுக்காக ஒரு ப்ளாக் இருக்கு. அதோட லிங்க் இங்க . அது சும்மா ஒரு அறிமுகத்துக்காக.

8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?
உங்க பதிவுகள படிக்கும் போது நம்மளுக்கு ஏன் இப்படியெல்லாம் கவுட்டி கவுட்டியா எழுத வரமாட்டேங்குது அப்படின்னு பொறாமையா இருக்கும்க.! ஆனா விதிவசத்தால என்னோட பதிவுகள நானே படிக்கிற துன்பம் நேர்ந்தால் கோபம் வரும்க. அன்னிக்கு ஒரு நாள் இப்படித்தான் எனக்கு பயங்கர பீலிங். என்னடா இப்டி மொக்கையா எழுதறயே ..? நல்லாவே எழுத மாட்டியா அப்படின்னு . அப்ப திடீர்னு என்னோட மனசாட்சி ஒண்ணு சொல்லுச்சு பாருங்க . " அடேய் .. நீ இப்படி மொக்கையா எழுதரதுனாலதான் அவுங்க எழுதறது நல்ல பதிவு அப்படிங்கறது தெரியுது .. நீயும் நல்ல பதிவு எழுதினா அவுங்க எழுதறது நல்ல பதிவு அப்படின்னு மத்தவங்களுக்குத் தெரியாமலே போடிடுமே . நீ அவுங்க பதிவு நல்ல பதிவா வரணும் அப்படிங்கறதுக்காக மொக்கையா எழுதற .அதனால நீ ஒரு தியாகி " அப்படின்னு சொல்லுச்சு .. ! அதிலிருந்து எனக்கு செம சந்தோசம் ..!

9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?
விவேக் அப்படிங்கிற என்னோட நண்பர் முதல் கமெண்ட் போட்டார்.! அவர் ப்ளாக் எழுதறது கிடையாது ..!

10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?
பதிவுலகத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் .!! மின் அரட்டையில் இருக்காங்க.! நான் நினைச்ச மாதிரியே பதிவுலகம் இன்னொரு உலகம் தான் ..!!
கடைசியா உங்களுக்காக ஒரு மொக்கை 
இங்கிலீஷ்ல மொத்தம் எத்தன எழுதுன்னு தெரியுமா ..?
மொத்தம் அப்படிங்கிறது தமிழ் வார்த்தை . அது இங்கிலீஷ் கிடையாது.

அடுத்து இதை தொடர நான் அழைப்பது
1 .) திருஞானசம்பத் அண்ணா.
2 .) கலாநேசன் அவர்கள்.
3 .) எங்கள் சங்க செயலர் TERROR-PANDIAN(VAS).
4 .) விஜய் அண்ணா

Tuesday, August 10, 2010

மன்னாதி மன்னன் - ஜூலியோ - கிளேடியன் பரம்பரை

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் ஜில்தண்ணிக்கு நன்றி.
இந்த தொடர் பதிவின் மூலம் தமிழ் மன்னர்கள் பற்றி என்னை எழுத அழைத்ததும் நான் தமிழ் மன்னர்கள் பற்றி எழுதலாம் என்று எண்ணி விக்கிபீடியாவில் தேட ஆரம்பித்தேன். பெரும்பாலான தமிழ் மன்னர்கள் பற்றிய செய்திகள் பதிவேற்றப்பெற்றிருந்தன. ஆதலின் வேறு ஏதேனும் புகழ் பெற்ற மன்னரைப்பற்றி எழுதலாம் என்று எண்ணி மேலும் தேடினேன். ரோமப்பேரரசு , பைசண்டைன் பேரரசு , அகஸ்டஸ் , ஜூலியஸ் சீசர் , ஜூலியோ - கிளேடியன் பரம்பரை என்று எனது தேடல் தொடர்ந்தது. இதில் ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பற்றி தமிழில் இதுவரை யாரும் தொகுக்கவில்லை. ஆதலால் ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பற்றி விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் இருந்தவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். எனது அலுவலக பணி காரணமாக என்னால் தொடர் பதிவிற்கு அழைத்தவுடனே பதிவேற்ற முடியவில்லை. மேலும் இந்த மன்னர்களைப் பற்றி தேடுவதில் எனது நேரம் செலவானது. இருப்பினும் அதிக மன்னர்களைப் பற்றித்தெரிந்து கொண்டேன். இந்தப்பதிவினைத் தொடங்கும்போது நீரோ மன்னனைப் பற்றி எழுதலாம் என்றே தொடர்ந்தேன். இந்தப் பதிவினைத் தொடர விரும்புவோர் நீரோ , காலிகுலா மன்னரைப் பற்றி எழுதலாம். அவரைப்பற்றிய குறிப்புகள் விக்கிப்பீடியாவில் அதிகம் இல்லை. இந்தப்பதிவில் ஏதேனும் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்.

ஜூலியோ - கிளேடியன் பரம்பரை ஓர் அறிமுகம்
ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பொதுவாக ரோமப்பேரரசின் முதல் ஐந்து மன்னர்களான அகஸ்டஸ் , டிபேரியஸ்,கலிகுலா, கிளாடியஸ் மற்றும் நீரோ ஆகியோரைக் குறிக்கிறது.இவர்கள் ரோமப்பேரரசின் தொடக்க காலம் முதல் கி.பி 68 வரை அந்தப் பரம்பரையின் கடைசி மன்னனான நீரோ தற்கொலை செய்து கொள்ளும் வரை ரோமப்பேரரசை ஆட்சி செய்தனர். ஜூலியஸ் மற்றும் கிளாடியஸ் ஆகியன ரோமன் குடும்பத்தை சார்ந்த பெயர்களாகும். சில பெயர்கள் தந்தையிடமிருந்து மரபுவழியாக வந்தவை.ஜூலியஸ் சீசர் அவரது சகோதரியின் பேரனான கேயஸ் அக்டேவியஸ் ஐ தத்தேடுத்துக்கொண்டார். அதன் பின்னர் கேயஸ் அக்டேவியஸ்ன் பெயர் கேயஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்டஸ் என்று மாறியது. இவரே ரோமப்பேரரசின் முதல் மன்னராவர். ரோமப்பேரரசை நிறுவியவரும் இவரே.

ஜூலியோ - கிளேடியன் பரம்பரையின் தோற்றமும் வீழ்ச்சியும் 
அகஸ்டஸ் (27 BC–AD 14
ஆண் வாரிசு இல்லாமையால் அகஸ்டஸ் அவரது தங்கையினை அவரது உறவினரான மார்க்ஸ் கிளாடியஸ் மார்சிலஸ் என்பவருக்கு மணமுடித்தார். ஆயினும் மார்சிலஸ் கி.மு 23 ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். பின்னர் தனது விதவைத் தங்கையினை தனது நண்பருக்கு மணமுடித்து வைக்கிறார். இந்தத் திருமணத்தின் மூலம் அவரது தங்கைக்கு மூன்று மகன்கள் மற்றும் 2 மகள்களை பெற்றெடுக்கிறாள்.அகஸ்டஸ் தனது தங்கையின் பிள்ளைகளான கேயஸ் சீசர் மற்றும் லூசியஸ் சீசர் ஆகியோரை தனது வாரிசாக தத்தெடுக்கிறார். மேலும் அகஸ்டஸ் தனது மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்த குழந்தைகளான ட்ருசாஸ் மற்றும் டிபேரியஸ் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளித்தார். ட்ருசாஸ் கி.மு 9 இல் இறந்துவிடுகிறார். மேலும் கேயஸ் சீசர் மற்றும் லூசியஸ் சீசர் ஆகியோரும் சிறு வயதிலேயே இறந்துவிடவே டிபேரியஸ் அகஸ்டசின் அரசியல் வாரிசாகிறார்.

டிபேரியஸ் (கி.பி 14 - 37 )
கி.பி 14 ஆகஸ்ட் 19 இல் அகஸ்டஸ் இறந்ததும் அவரது உயிலில் இருந்தபடி டிபேரியஸ் ரோமப்பேரரசின் மன்னராகிறார். அவர் அகஸ்டசின் கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்தும் அவரது தத்துப்பிள்ளையான ஜெர்மானிகசிர்க்கு சாதகமாகவும் செயல்பட்டார். டிபேரியாசின் வேண்டுகோளின் படி ஜெர்மாநிகாஸ் ஜெர்மநிகாவின் ஆளுநராக பொறுப்பேற்றார்.ஜெர்மாநிகாஸ் கி.பி 19 இல் உயிரிழக்கிறார். ஜெர்மாநிகாசின் உயிரிழப்பிற்குப்பின்னர் டிபேரியஸ் தனது மகனான ட்ருசாசினை ஜெர்மாநிகாவின் ஆளுநராக நியமித்தார். ரோமப்பேரரசின் இரண்டாவது மன்னரான டிபேரியஸ் கி.பி 37 ல் இறந்தார்.

கலிகுலா (கி.பி 37 - 41 ) 
டிபேரியாசின் மரணம் மற்றும் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களின் அழிவினால்  அகஸ்டசின் திட்டங்கள் யாவும் அழிக்கப்பட்டு வந்தன. டிபேரியசின் மரணத்திருக்குப் பின்னர் அவரின் அரசியல் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் கயஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்டஸ் ஜெர்மாநிகாஸ் ஆவார். இவர் அவரது சிறுவயதுப் பெயரான கலிகுலா என்றே அழைக்கப்பட்டார். இவர் ரோமப்பேரரசின் மூன்றாவது மன்னராக கி.பி 37 முதல் 41 வரை இருந்தார்.ஜனவரி 24 , 41 இல் அவரது மெய்க்காப்பாளர் காசியஸ் கரியா என்பவரால் கொலை செய்யப்பட்டார்.

கிளடியாஸ் (கி.பி 41 - 54 )
  கலிகுலாவின் இறப்பிற்குப் பின்னர் அவரது தந்தைவழி மாமாவான கிளாடியஸ் மன்னர் பொறுப்பேற்கும்படி மெயக்காப்பாளர்களால் தூண்டப்பெற்றார். அவருக்கு போதிய அரசில் விழிப்புணர்ச்சி இல்லை என்று மற்றவர்கள் ஏளனம் செய்தாலும் அவர் தனது திறமையை நிரூபித்தார். கி.பி 43 இல் பிரிட்டன் மீது படையெடுத்தார்.அவர் சட்டம் இயற்றுவதில் அதிக கவனம் செலுத்தினார். அவரது நிலையினைத் தக்கவைத்துக்கொள்ள மிகவும் தீவிரமாக செயல்பட்டார். ஆதாலால் அரசியல் தலைவர்களின் இறப்பு அதிகமாக நடைபெற்றது. மேலும் அவர் மனவாழ்கையிலும் வெற்றிபெறவில்லை. அவர் 4 முறை திருமணம் செய்து கொண்டார். அவர் நீரோவை தனது அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்தார். 13 அக்டோபர் 50 இல் க்ளடியாஸ் மரணமடைந்தார்.

நீரோ (கி.பி 54 -68 )
நீரோ அவரது 17 ஆம் வயதிலேயே ரோமப்பேரரசின் மன்னராகப் பொறுப்பேற்றார் . நீரோவும் அகஸ்டசின் நேரடி பரபரையில் வந்தவராவார்.55 களில் நீரோ மிகசிரந்தமுரையில் நிரவாக்த்தை கவனித்துக்கொண்டார்.கி.பி 64 இல் ரோம் நகரம் எரிந்தது. ரோம் நகரில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடுகட்ட சட்டமியற்றினார். அதன் படி அதிக வரி வசூல் செய்யப்பட்டது. 67 , 68 களில் கிளர்ச்சியாளர்கள் நீரோவின் அதிக வரி வசூலிக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.  68 இல் நீரோ ஒரு தேசிய குற்றவாளி என்று சட்ட சபையால் அறிவிக்கபட்டார். நீரோ அவரது சட்ட ஆலோசகர் எபப்ரோடிடோஸ் என்பவரின் உதவியால் தற்கொலை செய்து கொண்டார். நீரோவின் இறப்புடன்  ஜூலியோ - கிளேடியன் பரம்பரை முடிவுக்கு வந்தது.

தொடர்பதிவு 
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தமிழ் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் முயற்சியாக இந்த தொடர்பதிவு திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமிருப்போர் மன்னாதி மன்னன் என்ற தலைப்பில் தொடரலாம்.


1)வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்,ராணிகளையும் இதில் எழுதலாம்.

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.


 இதைத்தொடர நான் அழைப்பது
தேவா அண்ணா.
KRP செந்தில் அண்ணா. 
பின்குறிப்பு : இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 5 மன்னர்களில் அகஸ்டஸ் மன்னருக்கு மட்டுமே தமிழில் அதிக தகவல்கள் இருக்கின்றன. மற்ற 4 மன்னர்களைப்பற்றி அதிக தகவல்கள் தமிழில் இன்னும் தொகுக்கப்படாமல் இருக்கின்றன.   

Friday, August 6, 2010

மொக்கை பதிவர் பேட்டி

கடந்த ஜூலை 29 அன்று நமது ஜில்தண்ணியில் மொக்கை பதிவர் மான் ஆடு நடைபெற்றது.
அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு இல்லம் திரும்பிக்கொண்டிருக்கையில் பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பட்டனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட பேட்டி இதோ உங்களுக்காக :
கேள்வி : மொக்கைப்பதிவர் மாநாடு சிறந்தமுறையில் நடந்ததா ..?
பதில் : நன்றாகவே நடந்தது. இவ்வாறு ஏதேனும் சந்தேகங்கள் எழும்பக்கூடும் என்ற காரணத்திற்காக நாங்கள் மாநாட்டின் தலைப்பையே மான் - ஆடு என்று வைத்தோம். ஏனெனில் மானும் ஆடும் நிச்சயம் நடக்கும் அல்லவா.?

கேள்வி : மூன்று நாள் நடக்கவிருந்த மாநாடு ஒரே நாளில் முடித்துக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே ..?
பதில் : நிதிப்பற்றாக்குறை காரணமாக முடித்துக்கொள்ளப்பட்டது.அமெரிக்க அதிபர் நமது மொக்கை வளர்ப்பு சங்கத்திற்காக வழங்கிய நிதியினைப் பெற்று வருவதற்காக நமது TERROR-PANDIYAN(VAS) அவர்கள் சென்றுள்ளார்கள். அவர் வந்தவுடன் மாநாடு மீண்டும் நடைபெறும்.ஆதலால் பொதுமக்கள் வருத்தப்பட வேண்டாம்.

கேள்வி : மொக்கையை வளர்க்க வேண்டியதன் அவசியமென்ன ..?
பதில் : மொக்கை என்பது சாதாரண வாரத்தை மட்டும் அல்ல. அது நமது வாழ்வோடு இணைந்த ஒன்று.ஆதலால் அதனை பேணி பாதுகாத்தல் நமது தலையாய கடமையாகும்.

கேள்வி : மொக்கையை வளர்க்க மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன ..?
பதில் : மொக்கையை வளர்ப்பதற்காக மாநாட்டில் 5 பாடத்திட்டங்கள் அறிவிக்கப்பெற்றன. அவை :
1.CCMT - Certificate course in Mokkai Technician.
2.DMT - Diploma in Mokkai Technology.
3.B.Sc - Mokkai Science.
4.B.Tech - Mokkai Technology.
5.Ph.D -  Mokkai.

கேள்வி : இந்த பாடத்திட்டங்களில் சேர்வதற்குத் தகுதிகள் என்னென்ன ..?
பதில் : இதில் சேர விரும்பும் பதிவர் அவரது பதிவுகளில் பாதியளவாவது மொக்கைப் பதிவுகள் இட்டிருக்க வேண்டியது கட்டாயம். இந்த தகுதிகள் இல்லையெனில் அவர்களது வலைப்பூக்கள் தீவிரமாக அலசப்பட்டு அவரது மொக்கை போடும் திறமையை ஆராய்ந்து சேர்த்துக்கொள்ளப்படுவர்.

கேள்வி : பதிவர் அல்லாதோர் இந்த படிப்புகளில் இணைய என்ன செய்திட வேண்டும் ..?
பதில் : அவர்களுக்கு நமது மொக்கை வளர்ப்பு சங்கத்தின் சார்பில் நாடுதழுவிய நுழைவுத்தேர்வு நடைபெறும்.அதில் கலந்து கொண்டு வெற்றிபெறுவோர் இப்பாடத்திட்டங்களில் சேர்ந்து பயனடையலாம்.

கேள்வி : இந்த படிப்புகளுக்காங்க கட்டணங்கள் எவ்வாறு இருக்கும் ..?
பதில் : நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவோருக்கு அனைத்தும் இலவசம். Management Seat மூலம் வருவோர் கட்டணமாக 1000 மொக்கைகள் இட வேண்டும்.

கேள்வி :  மொக்கை பெயர்க்காரணம் குறித்து எழுதிய பதிவு அழிக்கப்பட்டுவிட்டதே..?
பதில் : அது எதிர்பாராத விதமாக நடைபெற்று விட்டது. மொக்கையின் பெயர்க்காரணம் குறித்து அறிந்திட விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.

கேள்வி : மொக்கையின் பயன்கள் குறித்து ஓரிரு வார்த்தைகள் ...?
பதில் : மொக்கை நமது இலக்கியத்தில் இணைக்கப்பட வேண்டிய ஒன்று. மொக்கையின் பயன்கள் எண்ணிலடங்காதது. உங்களுக்கு பிடிக்காதவர் யாரேனும் வந்தால் அவர்களிடம் நீங்கள் சிறிது நேரம் மொக்கயிட்டாலே போதுமானது. அவர் தலைதெறிக்க ஓடிவிடுவார். மொக்கையின் பயன்களைப்பற்றி கூற வேண்டுமானால் தனி பதிவு தான் போட வேண்டும். இத்துடன் நமது பேட்டியை முடித்துக்கொண்டோம்.

எச்சரிக்கை : அடுத்து இரண்டு தொடர் பதிவுகள் பதிவிடப்படும். மன்னாதி மன்னன் மற்றும் பதிவுலகில் நான்.

அதிபுத்திசாலித்தனத்தின் வெளிப்பாடு : கொஞ்ச நாள் முன்னாடி என்னோட நண்பர் ஒருத்தர் " வர்ற திங்கள் கிழமை  நீ இருக்குற இடத்துக்கு பூரான் வரும் " அப்படின்னு சொன்னார். இத கேட்ட உடனே நான் இங்கிலாந்து போயிட்டேன். ஏன்னு தெரியுமா ..?
ஏன்னா இங்கிலாந்துல திங்கள் கிழமை வராதுல்ல. Monday தான வரும்..!?!