Saturday, July 31, 2010

ஒரு கவிதையும் நாலு மொக்கையும்

                
                                      ஒரு கவிதை 
அப்பா குடிக்கிறார் ...
மகனின் சந்தோசம் - காலி பாட்டில்களுக்கு ஐஸ் ..!
தாயின் கண்ணீர் - மகனை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லையே ..!!

                                 நாலு மொக்கை 

1 . இந்த உலகத்தில் என்னைத்தவிர அனைவரும் அறிவாளிகள் ..
 உன் தங்கையைப் பார்த்த பின்பும் உன்னை காதலிக்கிறேன் ..!!

2 . உன்குரலும் குயில் போன்றது என்று தான் நினைத்திருந்தேன் 
அன்றொரு நாள் நீ பாடுகையில் கழுதை வரும் வரை ..!!

3.இந்த பூமிக்கு மழை வேண்டும்போதெல்லாம் என் காதலனை சந்திக்கிறேன்.
அவன் விட்ட ஜொள்ளில் 9 கிரகங்களும் நனைந்து போயின..!

4 . இங்கே இன்னொரு மொக்கை போடப்போவது இல்லை ..

மிரட்டல் 1 : எனது அடுத்த சிறுகதை விரைவில் ...

மிரட்டல் 2 : ஜில்தண்ணியில் நடை பெற்ற மொக்கை பெயர்க்காரணம் பற்றிய முடிவுகள் திங்கள் அன்று இங்கே பதிவிடப்படும் ..!!!

பயனுள்ள குறிப்பு : காலைல எழுந்து brush பண்ணாமலே உங்க பல் சுத்தமாக இருக்கனுமா ...?
காலைல எழுந்ததும் உங்க பல் மேல லேசா தண்ணி தெளிச்சு விளக்குமார எடுத்து ஒரு கூட்டு கூட்டி விட்டுருங்க ..!!

Thursday, July 29, 2010

காதலிக்க மரம் வளர்.!

சிலர் வருவதும் போவதுமாக இருந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அந்த பேருந்து நிறுத்தத்தில் தான் தீபாவும் நின்றுகொண்டிருந்தாள் கையில் சிறிய மரக்கன்றுடன்.
இன்று எப்படியேனும் தீபாவிடம் தனது காதலை வெளிப்படுத்திவிடவேண்டும் என்ற வேகத்தில் வழக்கம் போல அந்தப் பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்து கொண்டிருந்தான் ரியாஸ். இதுவரை ஒரு வார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனாலும் தினமும் அதே பேருந்து நிலையத்தில் இவன் தீபாவை பார்ப்பது வழக்கம். அவளும் அடிக்கடி இவனைப் பார்த்து புன்னகைப்பதால் அவளும் தன்னைக் காதலிப்பதாக இவன் கருதினான். ஆதலால் இன்று எப்படியும் அவளிடம் தனது காதலை சொல்லியே தீருவதென அவளருகில் சென்றான். மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நேரடியாகவே சொல்லிவிடலாமெனத் தீர்மானித்து ,

"தீபா ஐ லவ் யூ" என்றான்..

அதனைக் கேட்டவுடன் தீபா கையிலிருந்த மரக்கன்றினை இவனது கைகளில் கொடுத்து விட்டு " வீட்டுல நட்டு வைங்க, ஒரு மாதம் கழித்துப் பார்க்கலாம் " என்றாள்.

"தீபா எனக்கு புரியல ..? நீ என்ன சொ.." என்று அடுத்த கேள்விக்குப் போவதற்குள் அவளது பேருந்து வந்துவிடவே அவள் இவனிடம் எதுவும் கூறாமல் பேருந்தில் ஏறிச்சென்று விட்டாள். ஆனால்  ரியாசிற்கு குழப்பமாக இருந்தது. இருந்தாலும் அவனுக்கு ஒன்று புரிந்தது. இந்த மரக்கன்றினை வீட்டில் நட்டு வளர்த்தினால் அது ஒரு மாதத்தில் எவ்வளவு வளர்கிறதோ அவ்வளவு அன்பு நான் அவள் மேல் வைத்திருக்கிறேன் என்று கண்டுபிடிக்க இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டான்.

ரியாஸ் மற்றும் நண்பர்கள் ஜெய் , அருண் , சௌந்தர் , விஜய் ஆகியோர் சென்னையில் ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இவர்கள் ஐவரும் சென்னையின் புறநகர்ப் பகுதியொன்றில் ஒரு வீட்டினை வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.

ரியாஸ் சந்தோசத்துடன் வீட்டிற்குள் நுழைவதைப்பார்த்த நால்வரும்
"என்னாச்சு மச்சா ..ஓ கே வா ...?" என்றனர்.
"ஓ கே னு தான் நினைக்கிறேன்." என்றபடி மரக்கன்றினை டேபிள் மேலே வைத்தான்.
"இதெதுக்கு மச்சி ..?" என்றான் சௌந்தர்.
ரியாஸ் அங்கு நடந்தவற்றை விவரித்துவிட்டு " அவ எதுக்கு குடுத்திருப்பான்னு  நினைக்கிற ..? " என்றான்.
" ஓ . என்னமோ ஓகே னு சொன்ன..? " அவ இத கொடுத்ததே உன்ன போட்டு தள்ளுறதுக்குத்தான்.." என்றான் விஜய்.
"என்ன சொல்ற மச்சி ..? " என்று கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டான் ரியாஸ்.
" ஆமா மச்சி ., இத வளர்த்துனா பெருசா வளருமா .. அத வெட்டி அப்படியே உன்ன சுடுகாட்டுல வச்சு எரிசிடுவேன் அப்படின்னு சொல்லிருக்கா..! " புது விளக்கம் தந்தான்.
" ஆமால்ல , மரம் விறகா  கூட பயன்படும் .."
" அப்படியில்ல மச்சி இவன கொன்னு ஒரு சவப்பெட்டிக்குள்ள வச்சு அனுப்பிடுவேன் அப்படின்னு சொல்லிருக்கா.. அதுக்கு சிம்பாலிக்கா தான் இந்த மரக்கன்று. "
" அட ஆமா மரத்துல தான இத்தன பெட்டி , அலமாரி இன்னும் எத்தனையோ சாமான்களெல்லாம் செய்யுறோம். ஆனாலும் மரம் வளர்க்கரக்கு தயங்குறோம்.." என்றான் ரியாஸ்.
"என்னடா ஆச்சு உனக்கு , இப்பூடி எல்லாம் பேசுற..? " என்றான் சௌந்தர்.
"அது ஒண்ணும் இல்ல மச்சி , பயபுள்ள காதலிக்குதாம்ல ..? " இனிமேல் பாரு கவிதை , தத்துவம்னு நம்ம உசுர எடுக்கப் போறான் ." இது ஜெய். பேசியவாறே அனைவரும் உறங்கச்சென்றனர்.

மறுநாள் காலையில் மூவரும் எழுந்து ரியாஸ் எங்கடா போனான் , நம்மளுக்கு முன்னாடி ஒரு நாள் கூட எழுந்திரிக்க மாட்டானே என்று பேசிக்கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் ரியாஸ் கையில் ஒரு பெட்டியுடன் உள்ளே வந்து கொண்டிருந்தான். அதைப் பார்த்த விஜய் " டேய் , என்ன மச்சி இது ..? " என்றான் .
" பிஸ்லேரி வாட்டர் .."
"எதுக்கு ..? நமக்குத்தான் இங்கே தண்ணி வருதுல்ல ..? "
"இது நமக்கு இல்ல மச்சி , செடிக்கு ..! "
அனைவரது முகத்திலும் ஆச்சர்யம் .. " டேய் , லூசாடா நீ ..? செடிக்கெல்லாம் எதுக்குடா பிஸ்லேரி வாட்டர் .. பிஸ்லேரி வாட்டர் தான் குடிப்பேன்னு  அது உன்கிட்ட கேட்டுச்சா..? "
"நீ என்ன வேணா சொல்லிட்டு போ மச்சி , இந்த செடிலதான் என்னோட லைபே இருக்கு .."
"அட விடு மச்சி அவனுக்குத்தான் லவ் வந்திடுட்சுல்ல இனிமேல் பாரு , இன்னும் எத்தனயோ இருக்கு ..? " என்றான் ஜெய்.

இரண்டு நாட்கள் நகர்ந்திருந்தது. காலையில் 5 மணி அளவில் ரியாஸ் அனைவரையும் எழுப்பி " மச்சி செடி ஒரு இலை விட்டுருக்கு " என்றான் சந்தோசமாக.!

இரவு தூங்குவதற்கு நேரமானதால் அனைவரும் தூக்க கலக்கத்தில் இருந்தனர். " டேய் உன் பிகர் , உன் செடி .. அதுல இலை வந்தா என்ன தலை வந்தா என்ன ..? எங்க உசுர ஏன்டா எடுக்குற ..? " என்றான் விஜய்.

"சரி விடு மச்சி .. ஆல் தி பெஸ்ட் .. என்று கைகுலுக்கி விட்டு மீண்டும் தூங்கிவிட்டனர் மற்ற இருவரும்..

"அடச்சே என்னோட பீலிங்க்ஸ யாருமே புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்க. " என்று அலுத்துக்கொண்டே அந்த செடியைப் பார்த்தான் ரியாஸ்.

நாட்கள் நகர்ந்தது. 8 ஆம் நாள் செடி கொஞ்சம் வாடி இருந்தது . அலுவலகத்திலிருந்து வந்த ரியாஸ் " மச்சி , செடி வாடிப் போச்சு .. என்ன பண்ணலாம் ..? " என்றான் .
"டாக்டர் கிட்ட கூட்டிட்டு போ . ஒரு ஊசி போட்டார்னா  சரியாய்டும்  .? " என்று கோபமாக கூறிவிட்டு வெளியே சென்று விட்டன சௌந்தர். அவனது கோபத்திலும் நியாயம் இருந்தது. அந்தச் செடி வந்ததிலிருந்து கடந்த 8 நாட்களாக கவிதை சொல்கிறேன் என்று அனைவரின் உறக்கத்தையும் கெடுத்து வந்தான். இதை விட நேற்று மருத்துவர்கள் பயன்படுத்தும் stethoscope ஐ எடுத்து வந்து அவளது இதயத்துடிப்பினை கேட்கிறேன் என்று சொல்லிக்கொண்டிருந்தது இவர்களிடையே பெரும் எரிச்சலை உண்டாக்கியிருந்தது.

நாளாக நாளாக அந்தச் செடி மேலும் வாடிக் கொண்டிருந்தது . ரியாசும் என்னவெல்லாமோ செய்து பார்த்தான். ஆனாலும் 15 ஆம் நாள் சுத்தமாக வறண்டு போனது . தண்ணீர் அதிகமாக ஊற்றியதால் வேரழுகல் நோயினால் வறண்டு போனது. இதனைப் பார்த்த ரியாசிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
"மச்சி என் லைபே முடிஞ்சு போச்சு மச்சி.." என்று அழுதுகொண்டே அவர்களிடம் வறண்டு போன செடியைக் காண்பித்தான்.

என்னதான் கோபம் இருந்தாலும் அவனைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. " விடு மச்சி .. அவ என்னமோ பிளான் போட்டுத்தான் உன்கிட்ட கொடுத்திருக்கா." என்று ஏதேதோ சொல்லி அவனை தேற்ற முயன்றனர்.
" இல்ல மச்சி .. அவ ஒரு மாசத்துக்கு அப்புறம் வந்து இந்தச் செடியப் பார்த்தா நான் எப்படி காமிக்கிறது . பெருசா வளர்ந்திருந்தா சந்தோசமா காமிக்கலாம் ..என்ன பண்ணுறதுனே தெரியல ..? என்றான்.
"சரி விடு மச்சி .." எதாவது ஐடியா கிடைக்காமலா போய்டும்.." என்று ஆதரவு கூறினான் ஜெய். இரவு உணவிற்குப் பின்னர் அனைவரும் உறங்கச்சென்றனர். இரவு 1 மணியளவில் ரியாஸ் வேகமாக அனைவரையும் எழுப்பினான்.. அனைவரும் தடுபுடளாக எழுந்து என்ன என்ன என்றனர்..
"மச்சி ஒரு சின்ன உதவி . 2 வது வீதில ஒரு மரம் பார்த்தேன் அதைய எப்படியாவது நம்ம வீட்டுக்கு கொண்டு வந்திட்டா போதும் ..!" என்றான்.
"சரி மச்சி காலைல புடுங்கிட்டு வந்திடலாம் .."
"இல்ல .. இப்பவே புடிங்கிட்டு வந்தாத்தான் யாரும் பாக்க மாட்டாங்க .. ப்ளீஸ் மச்சி எனக்காக .." என்றான் கெஞ்சலாக.
"சரி எப்படி பிடுங்கறது .. மண்வெட்டி , கடப்பாரை எல்லாம் வேணும்ல ..?"
" எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன் மச்சி .." என்றான் ஒரு அசட்டுச் சிரிப்புடன்.
"சரி வா போலாம் , சௌந்தர், ஜெய் நீங்க ரூம்ல இருங்க வந்திடறோம் " என்று மூவரும் கிளம்பினர்.

இரண்டாவது தெருவை அடைந்ததும்
"மச்சி இந்த மரம் தான்டா ..! " என்று ஒரு மரத்தினைக் காட்டினான்.
"அதற்குக் கீழே ஒரு சிறிய செடி ஒன்றும் இருந்தது . அதனைப் பிடுங்கப்போன விஜயை
"அது இல்ல மச்சி , இது ..! " என்றான்.
"அதைப் பார்த்ததும் விஜய்க்கு தூக்கி வாரிப்போட்டது.. அப்படியே இரண்டடி பின்னால் வந்தான் .. டேய் என்ன சொல்ற ..? உனக்கு கிறுக்கு புடிச்சுப்போச்சா..? " என்றான்.
ஆமாம் அவன் காட்டியது ஒரு பெரிய மரம். எப்படியும் 4 வருடம் இருக்கும். ஒரு மின்கம்பத்தின் உயரம் இருந்தது.
" ப்ளீஸ் மச்சி , இத பிடுங்கி கொண்டு போயிட்டா பிரச்சினையே இல்ல ..?"
"போடா வெண்ண , உன்ன நம்பி இத்தன தூரம் வந்தேன் பாரு ..! " என்று கூறி விட்டு அவனையும் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றனர்.

வீட்டிருக்குச் சென்றதும் ரியாஸ் தனது லேப்டாப்பை எடுத்து கூகுளில் எதையோ தேட ஆரம்பித்தான். " டேய் , இனிமேல் ஏதாவது மரத்தைப் புடுங்கலாம் , மயிரப் புடுங்கலாம் அப்படின்னு கூப்பிட்டுப் பாரு ...?? " என்ற படியே உறங்கச் சென்று விட்டனர் இருவரும்.

ரியாஸ் கூகுளில்  மரங்களைப் பற்றித் தேடியது அவனை வியப்பில் ஆழ்த்தியது.
"ஒரு மரம் ஒரு வருடத்தில் 27 kg pollution ஐக் கட்டுப்படுத்தக் கூடியது. நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும் நான்கு சக்கர வாகனமும் அவசியம் என்று நினைக்கிறோம். ஆயினும் அவற்றால் ஏற்படும் மாசினை தடுக்க ஒரு மரம் வளர்ப்பதும் அவசியம் என்பதைப் புரிந்து கொண்டான்." 
மரம் வளர்ப்பதால் நாம் இழப்பது ஒன்றும் இல்லை . வளரும் வரை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது. மேலும் எண்ணற்ற பயன்கள் இருப்பதை உணர்ந்து கொண்டான் .


மறுநாள் காலை ரியாஸ் உற்சாகமாகக் காணப்பட்டான். இதனைப் பார்த்த மற்ற மூவரும் வியப்பில் வாயடைத்துப் போயினர்.
"மச்சி நாளைக்கு உன்னோட பிறந்த நாள் வருதுல்ல ..? ட்ரீட் எங்க வச்சுக்கலாம் ..? " என்றான் விஜய்.
" இந்த பிறந்த நாளுக்கு ட்ரீட் கிடையாது , ஏன் இனி எந்தப் பிறந்தநாளுக்குமே ட்ரீட் கிடையாது..!!" என்றான் ரியாஸ்.
"அட பாவி ., என்னாச்சு மச்சி .. இதுக்கும் அவ ஏதாவது வேட்டு வச்சிட்டாளா  ..? இது சௌந்தர்.
"அது நாளைக்குத் தான் தெரியும் ..! " சிரித்த படியே கூறினான் ரியாஸ்.

மறுநாள் காலை ரியாஸ் ஒரு ஆட்டோவில் 100 மரக்கன்றுகளுடன் வந்திறங்கினான். மூவரையும் எழுப்பிவிட்டு " வாங்கடா , ரோடுக்குப் போய் எல்லாருக்கும் இந்த மரக்கன்றுகளை இலவசமா கொடுக்கலாம் ..! " என்றான்.
"ஓ .. இப்பூடிஎல்லாமா காதல் பேய் பண்ணுது .. பரவால்லியே .." என்றன் அருண்.
 நால்வரும் சாலையில் நின்று சாலையில் வருவோர் போவோருக்கு மரக்கன்றுகளை வழங்கிகொண்டிருந்தனர். தீபாவும் அந்த வழியாக வந்துகொண்டிருந்தாள் . இவர்களைப் பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு அருகில் வந்தாள்.
"வாங்க மேடம் ., இன்னிக்கு எங்க நண்பனோட பிறந்தநாள் . அதுக்காக எல்லோருக்கும் இலவசமா மரக்கன்றுகள தரான். இந்தாங்க " என்று நீட்டினான் சௌந்தர். அதனைப் பார்த்த ரியாஸ் தீபாவின் அருகில் வந்து
" நீங்க கொடுத்த மரம் வறண்டு போச்சு ..! " என்று சோகத்துடன் கூறினான்.
"அப்பா ஊருக்கு போய்ட்டார்.." என்றாள் தீபா .
ரியாசுக்கு ஒன்றும் புரியவில்லை. " அதில்லீங்க , அந்த செடி வறண்டு போச்சுன்னு சொன்னேன் .."
"ஆமா , மீனா என்னோட friend தான் ..! சரி வரேங்க " என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி போய்விட்டாள்.
என்னடா நாம ஒண்ணு சொன்ன இவ ஒண்ணு சொல்லுறா என்று நினைத்துக்கொண்டிருந்தான் ரியாஸ்.
அப்பொழுது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த இன்னொருவர் " இந்தப் பொண்ணுக்கு காது கொஞ்சம் கேக்காது. அந்த மிசின் வச்சிருப்பா மறந்துட்டு வந்திட்டா போல .." என்று கூறிவிட்டு ஒரு மரக்கன்றினை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.
"மச்சி நீ பேசுறதப் பார்த்தா இதுதான் அந்த பிகரா..? " என்றான் ஜெய்.
"ஆமாண்டா..! ஆனா அவளுக்கு காது கேக்காதுன்னு எனக்குத் தெரியாது ..!! "
" அட பாவி ., அப்ப அவ எதுக்கு உன்கிட்ட அந்த செடிய கொடுத்தாளோ...? நீ அத கொண்டு வந்து எங்க உசுர வாங்கிட்டியே ..? "
"விடு மச்சி .. இருந்தாலும் நான் மரங்களோட நன்மைகளைப் பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்ல.. இருந்தாலும் அவ என்ன லவ் பண்ணுறானு தான் நினைக்கிறேன்.."
"ஆமா மச்சி ., அப்படித்தான் தெரியுது.. நாங்களும் உதவி செய்யுறோம் ..! " என்றனர் மூவரும்.!

பின்குறிப்பு : சிரிப்பு வரும்னு நினைச்சு இவ்ளோ பெரிய கதைய எழுதிட்டேன். சிரிப்பு வந்தா சொல்லுங்க . வரலைனாலும் சொல்லுங்க ..அடுத்த சிறுகதைல வேறமாதிரி முயற்சிக்கிறேன். அப்புறம் இந்த கதைல வர ரியாஸ் இந்த ரியாஸ் கிடையாதுங்க. அதுமாதிரிதான் விஜய் , அருண் , ஜெய் மற்றும் சௌந்தர் அவங்களுக்கும் இந்த விஜய் , அருண்ஜெய்சௌந்தருக்கும்  தொடர்பு இல்லை )

Monday, July 26, 2010

VAS இல் சேர்வதா இல்லை VKS இல் சேர்வதா ..?

இன்னிக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!
எத்தன நாளைக்குத் தான் நம்ம அரசியல் நிலைப்பாட்ட சொல்லாம இருக்குறது..? அதனாலதான் இந்தப் பதிவு.
பதிவுலகுல பிரபலமான இரண்டு சங்கம் இருக்குது. அதுதான்
*.VAS - வெங்கட்டை ஆதரிப்போர் சங்கம்.!
*.VKS - வெங்கட்டை கலாய்ப்போர் சங்கம்.!

அட ஆமாங்க .. நீங்க நினைக்கிறது சரிதான்.! நான் நம்ம கோகுலத்தில் சூரியன்  வெங்கட்டைத்தான் சொல்றேன். அதாங்க சூரியனுக்கு டார்ச் அடிகிறேன்னு சொல்லிட்டு பகல்ல டார்ச்சோட சுத்திட்டிருப்பாரே அவரேதான். அதான பார்த்தேன் பதிவுலகுல அவரப் பத்தி தெரியாட்டியும் இந்தியா முழுவதும் அவரு பிரபலம்ல. ஏன்னா டார்ச் அடிக்கிறேன் அப்படின்னு சொல்லிட்டு வானத்தைப் பார்த்துட்டே நடந்து இந்தியாவுல இருக்குற எல்லோரு மேலயும் முட்டிட்டார்.

சரிங்க நான் VKS ல சேர்ந்து தொல்லை கொடுக்கவா இல்ல VAS ல சேர்ந்து தொல்லை கொடுக்கவா..? ஓ .. சாரி VKS ல சேர்ந்து சேவை செய்யவா இல்ல VAS ல சேர்ந்து சேவை செய்யவா ..? உங்க முடிவ சொல்லுங்க. அப்புறம் இவனுக்கு என்ன தகுதி இருக்குதுன்னு நினைக்காதீங்க. நான் எப்படி என்னோட திறமைய காட்டுறது.. ஆங். சரி .. ஒரு டிப்ஸ் தரேன்.!
நாய ஓநாயா மாத்தணுமா...?
நாய்க்கு முன்னாடி அ , ஆ ... ஒ , ஓ அப்படின்னு சேர்த்துட்டே வாங்க .. ஓ சேர்க்கும் போது உங்க நாய் ஓநாயா மாறிடும்..!
அதுவே இங்கிலீஷ் நாய இருந்தா A, B , C .. N , O அப்படின்னு சேர்த்துட்டே வாங்க.. அதாவது A NAAI , B NAAI , C NAAI ...N NAAI , O NAAI இப்ப பாருங்க உங்க நாய் ஓநாய் ஆகிடுச்சு .!

அப்புறமா வெங்கட் அண்ணன் பத்தி ஒரு விஷயம் :
அவரு பகல்ல மட்டும்தான் டார்ச்சோட சுத்துராருன்னு நினைக்காதிங்க. ராத்திரில கூட அவரு டார்ச் எடுத்துக்கிட்டு கடலுக்குள்ள போய் சூரியனத்தேடி டார்ச் அடிக்கிறாரு..!!

Saturday, July 17, 2010

ஆணாதிக்கம்

எதெல்லாம் ஆணாதிக்கம் என்று குழம்பிப் போயுள்ளீர்களா...? உங்களுக்காகவே இந்தப் பட்டியல் 

*.வரலாறு மற்றும் அறிவியலில் கூட குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான் என்று ஆண் பாலினை மட்டுமே குறிப்பிட்டு சொல்லுவது ..!

*.பேருந்துகளிலோ அல்லது வெளியூர் பயணங்களின் போது பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் தாங்களே டிக்கெட் எடுத்து தங்களது ஆணாதிக்கத்தை காட்டுவது மற்றும் 
மனைவியிடம் பணத்தை கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லி வேலை வாங்குவது.

*.புடவையை சரியாக அடித்து துவைக்காமல் அழுக்குடன் விட்டுவைத்தல் மற்றும் புடவையை அடித்து துவைக்கிறேன் என்று சொல்லி புடவைக்கு வலி உண்டாக்குதல்.

*.சீரியல் பார்த்துக்கொண்டிருக்கும் போது "சமையல் ரெடி" என்று கூறி சாப்பிடக் கூப்பிடுவது மற்றும் சமையல் முடிந்த பிறகும் சீரியல் முடிந்த பின்பு சாப்பிடக் கூப்பிடலாம் என்று அலட்சியாமாக இருப்பது.

*.தாய் வீட்டிற்க்குச் செல்லும் போது "இரண்டு நாளுக்கு இருந்துவிட்டு வா" என்று கூறி வேலையிலிருந்து தப்பிக்கப் பார்ப்பது மற்றும் தாய் வீட்டிருக்கு செல்லும் போது உடனே வந்துவிடு என்று கூறி இரக்கமில்லாமல் நடந்து கொள்வது.

*.மனதிற்குப் பிடித்த சேலையை நிழலில் காயப் போட்டு சீக்கிரம் காய விடாமல் சதித்திட்டம் தீட்டுவது மற்றும் மனதிற்குப் பிடித்த சேலையை வெய்யிலில் காயப்போட்டு கலர் மங்கிவிட சதித்திட்டம் போடுவது.

*.ஏதேனும் சண்டைகளின் போது மீசை வைத்த ஆம்பிளை என்று கூறி பெண்களுக்கு இல்லாத ஒன்றைப் பற்றி பெருமிதம் கொள்வது.

*.ஆண்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆண்கள் அணியும் ஜீன்ஸ் , டி-சர்ட் போன்றவற்றை பெண்கள் அணித்து வெளியே சென்ற போதும் ஆண்கள் பெண்கள் அணியும் சேலை , சுடிதார் போன்றவற்றை அணியாமல் பெண்களுக்கு சம உரிமை கொடுக்காமல் இருப்பது.

*. பெண்களை ஆதிக்கம் செய்து கொண்டு அதன் தலைப்பை ஆணாத்திக்கம் என்று வைத்திருப்பது ஆணாதிக்கத்திலும் ஆணாதிக்கம்.

(என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : மச்சி நீ இப்படியே எழுதிட்டிருந்தீனு வையே ஒரு பிகர் கூட உன்ன மதிக்காது )

மொக்கை : காசு கொடுக்காம மொட்டை அடிக்கணுமா ..?
ஒரு சலூன் கடைக்கு போய்க்கோங்க., அங்க என் தலைய ஷேவிங் பண்ணி விடுங்க அப்படின்னு கேளுங்க. அவரு உங்களுக்கு மொட்டை அடிச்சிடுவார். அடிச்ச பின்னாடி " யோவ் , மீசை எங்கயா..?" அப்படின்னு கேளுங்க. அதுக்கு அவர் " தலைல எப்படிங்க மீசை இருக்கும் ..?" அப்படின்னு சொல்லுவார். "தலைல மீசை இருந்ததனால தான் நான் ஷேவிங் பண்ண சொன்னேன் , இல்லனா மொட்டை அடிச்சிடு அப்படின்னு சொல்லிருப்பேன்ல" அப்படின்னு சொல்லி "உனக்கு காசு தர மாட்டேன்னு "
 சொல்லிடுங்க .. எப்படி நம்ம ஐடியா ...?

Wednesday, July 14, 2010

கவிதையும் கழிதையும்

                                            
                                                       கவிதை 
எங்கிருந்து வந்தாயடி நீ ..
அன்றொரு நாள் அழகிய நந்தவனத்தில் நுழைந்து
அன்றலர்ந்த மலர்களைத் தழுவி வரும் பூந்தென்றல் காற்றாய்
என் மனதை பறித்துச் சென்றாய்..! மனமெங்கும் பூவாசம்..!

நீயும் நானும் சேர வேண்டி
இந்து , கிறித்தவ இசுலாமிய கடவுளர்கள் போதவில்லயடி எனக்கு
ஒவ்வொரு முறை நான் கடவுளை வேண்டும்போதெல்லாம்
அவரும் உன்மேல் காதல் கொண்டு எனக்கு போட்டியாய் வருகிறார் ..
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன் காதல் வயப்படாத ஒரு கடவுளை..!

நீதான் இந்திரன் சபையில் இருக்கும் மேனகையோ
இல்லை ஆதாம் காலத்து ஏவாளோ..?
குழம்பித்தான் போகிறேனடி நானும்..
என்னை குழப்பிய உன்னிடம் நான் எப்போதடி என் காதலை சொல்வது..
பௌர்ணமி நிலவை போன்ற உன் ஒளியில் மயங்கி விடுகிறேன்..!

சொல்லிவிட நினைத்தாலும் வார்த்தைகள் போராட்டம் செய்கின்றன..
வார்த்தைகளும் உன்னை காதலிக்கிறதோ...

                                                        கழிதை 
எங்கிருந்து வந்தாயடி நீ ..?
அன்றொரு நாள் நான் நிம்மதியாய் டீ கடையில் நின்றுகொண்டிருந்த போது
கூவம் ஆற்றில் குளித்து வந்தது போல் என் மனதை நாரடித்தாய்..!

உன்னை மீண்டும் நான் பார்க்க கூடாதென வேண்டி

இந்து , கிறித்தவ இசுலாமிய கடவுளர்கள் போதவில்லயடி எனக்கு
அவர்களுக்கு என்ன பயமோ உன்னை என் தலையில் காட்ட பார்க்கிறார்கள் ..
இன்னமும் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை உன்னிடமிருந்து காப்பாற்றும் ஒரு கடவுளை.. அந்த தேடல் முடிவதற்குள் என்னை நீ முடித்து விடுவாய் போலும் ..

நீ எமனின் வாகனமோ ..
இல்லை அந்த கால ராட்சசிகளின் தலைவியோ ..
நடுங்கித்தான் போகிறேனடி நானும் ..
உன் முகமென்னும் பேயுருவத்தில் பயந்து மயங்கிவிட்டேனடி..!

சொல்லிவிட நினைத்தாலும் வார்த்தைகள் போராட்டம் செய்கின்றன..
அவைகளும் உன்னை பார்த்து பயந்து விடுகின்றன ..

மொக்கை 1 : பாம்புக்கு காது இருக்குதான்னு டெஸ்ட் பண்ணி பார்க்கணுமா..?
ஒரு பாம்ப பிடிச்சுக்குங்க , அப்புறம் உங்களோட முகத்துகிட்ட கொண்டுவந்து " எனக்கு ஒரு முத்தம் கொடு " அப்படின்னு சொல்லுங்க .. அதுக்கு காது இருந்த முத்தம் கொடுக்கும் .. அப்ப கண்டுபிடிச்சிடலாம் ..!!

மொக்கை 2 : இந்த மசுர கட்டி மலைய இழுப்போம் , வந்தா மலை போனா மயிர் அப்படிங்கறாங்களே அப்படி போனா அந்த மயிர் எங்க போகும் ...?

மொக்கை 3 : நமது இந்த முதல் கவிதை இந்த ஆண்டிற்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் நமது கழிதை இந்த ஆண்டிற்கான இலக்கியத்திற்கான  நோபல் பரிசிற்கு பரிந்துரைக்கப்படுகிறது.

Wednesday, July 7, 2010

மொக்கையும் அதன் வரலாறும் - ஓர் ஆய்வுக் கட்டுரை

                                            மொக்கயாண்டவர் துணை.!

அறிமுகம் : 
       இன்றைய சூழலில் மொக்கை பற்றி அறியாதவர் இலர். இருப்பினும் மொக்கை எனப்படுவது யாதெனக் கூறவேண்டியது அவசியம்.  மொக்கை என்பது சமூகத்தில் வாழும் சில விஷமிகளால் மக்களுக்கு இன்னல் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படுவது.மொக்கையை பார்த்தாலோ கேட்டாலோ கண்களிலும் காதுகளிலும் ரத்தம் வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நமது கோபத்தை கிளறச்செய்கிறது.கைதேர்ந்த மொக்கயர்களால் உருவாக்கப்படும் மொக்கயானது தற்கொலை எண்ணத்தினை நமக்குள் விதைக்கிறது என்று அமெரிக்க மொக்கை எதிர்ப்பு கூட்டத்தில் விவாதம் செய்யப்பட்டுள்ளது.மேலும் மொக்கயானது புற்றுநோய் , எய்ட்சு போன்ற உயிர்கொல்லி நோய்களை விடவும் கொடுமையானது என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்திருப்பது வருத்தமளிக்கிறது.இவ்வளவு கொடூரமான மொக்கையை பற்றிய ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கிறது. நமது ஆய்வில் கண்டுபிக்கப்பட்ட தகவல்களை இந்த கட்டுரையில் வழங்கியுள்ளோம்.


மொக்கையின் தோற்றமும் வளர்ச்சியும் : 
      மொக்கை எப்பபொழுது தோன்றியது என்பதற்கான ஆதாரங்கள் தற்பொழுது நமக்கு கிடைக்கவில்லை. அது தமிழ்மொழியுடன் இணைந்தே தோன்றியிருக்கலாம் என ஒரு சிலரும் மொழிகளே இல்லாத காலத்திலேயே மொக்கை தோன்றிவிட்டது என ஒரு சிலரும் வாதிடுகின்றனர். மொக்கையின் வளர்ச்சி பல்வேறு காலங்களில் பல படிகளில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.மேலும் இதிகாச காலங்களிலே மொக்கை பெரும்பங்கு வகித்துள்ளது.
மேலும் கி.மு ஆம் ஆண்டில் மொக்கையனூர் என்ற நாட்டை சார்ந்த மொக்கயரசன் என்பவர் எதிரிகளை பழிவாங்குவதற்காக மொக்கை வளர்ப்பு சங்கம் என்ற ஒரு அமைப்பினை ஏற்படுத்தி அதில் பல்வேறு வகையில் மொக்கை போடுவது எப்படி என்று வகுப்புகள் நடத்தப்பட்டதாக வரலாறு நமக்கு தெரிவிக்கிறது. இவரது இந்த தந்திரத்தை முறியடிக்க பல்வேறு பேரரசுகள் முயன்று தோற்றது மொக்கையின் மீது பெரும் மரியாதையினை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரம்பரையில் வந்தா சிலர் இன்றுவரை மொக்கை போட்டு கொண்டிருப்பது நாம் அறிந்ததே. மேலும் அவர்களது அரசு அதிகப்படியான மொக்கையால் கவிழ்ந்தது அப்போதிருந்த மற்ற நாட்டு அரசர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆங்கிலேயர்கள் காலத்தில் இந்த அரசு இல்லாதது அவர்களுக்கு பெரும் பலமாக அமைந்ததென இங்கிலாந்தின் அப்போதைய அதிபர் கூறியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏனெனில் இந்த அரசு மட்டும் இருந்திருப்பின் ஆங்கிலேயர் இந்தியாவினை பற்றி நினைத்திருக்க முடியாத அளவிற்கு அச்சம் ஏற்பட்டிருக்கும் . மேலும் இந்த அரசு நிலைத்திருப்பின் இந்தியா விண்வெளித்துறையில் மிகப்பெரிய முன்னேற்றம் கண்டிருக்கலாம் என விண்வெளி அறிஞர்கள் பல பேட்டிகளில்  தெரிவித்துள்ளனர். ஏனென்றால் இந்த அரசு மேலும் கொஞ்ச காலம் நிலைத்திருந்தால் இந்திய மக்கள் அனைவரும் வேறு கிரகத்திருக்கு குடி பெயர்ந்திருப்பர். அதனால் பல அறிய விண்வெளி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்பது அவர்களின் வாதமாக இருக்கிறது.
ஆகவே மொக்கயரசர் காலத்தில் மொக்கையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது என்பதை நம்மால் கணிக்க முடிகிறது.


திரைப்படங்களில் மொக்கை :
   இன்றைய திரைப்படங்களில் மொக்கை பெரும்பங்கு வகிக்கிறது. ACTION திரைப்படம் என்று கூறிக்கொண்டு வில்லனின் விமானத்தை கதா நாயகன் மாட்டுவண்டியில் துரத்திப் பிடிப்பதும் , கதாநாயகனை 1000 பேர் சேர்ந்து அடித்தாலும் ஒன்றும் ஆகாமல் இருப்பதும் மேலும் துப்பாக்கியால் சுட்ட போதும் கதாநாயகன் உயிர் வாழ்வதும் திரைப்படங்களில் காணப்படும் மொக்கைக்கு எடுத்துக்காட்டுகள். மேலும் தங்களை MASS HERO என்று கூறிக்கொண்டு சிலர் போடும் மொக்கையால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். இந்த கதாநாயகர்கள் "நான் அடிச்சா தாங்க மாட்ட " என்று பாடுவது "நான் அடிச்சா அடி விழாது இடி விழும் " என்று பஞ்ச் வசனங்கள் பேசுவதும் மக்கள் மத்தில் பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மற்றொரு கதாநாயகர் "அது" என்று பஞ்ச் வசனம் பேசுவதை குழந்தைகளும் பின்பற்றுவதால் மிட்டைகடைக்காறாக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர். ஒரு மிட்டாய் வாங்கிய பின்னர் குழந்தைகள் "அது" என்று மிரட்டுவது போன்ற பாணியில் கூறியவுடன் மிட்டைகடைக்கரர் மற்றோரோ மிட்டாய் எடுத்துக் கொடுக்கும் அவல நிலை காணப்படுகிறது. இந்த கதாநாயகர்களின் திரைப்படங்கள் திரையிடப்படும் தேதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக வேறு ஊர்களுக்கு செல்வது சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது என பொது நல விரும்பி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இது போன்ற கதாநாயகர்களின் படங்கள் திரையிடப்படும் போது மொத்த தமிழக மக்களும் அண்டை மாநிலங்களுக்கு குடி பெயர்ந்துவிடலாம் என்ற அச்சத்தினால் தமிழ்நாட்டின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


சின்னத்திரையில் மொக்கை : 
   திரைப்படங்களைக் காட்டிலும் சின்னத்திரையில் அதிகப்படியான மொக்கை உருவாக்கப்படுகிறது என்பது தொடர் நாடகம் பார்க்கும் பெண்களின் கணவர்களின் கூற்று. மேலும் இது போன்ற மொக்கை தொடர்களை பார்க்கும் பெண்களுக்கு விரைவில் பல நோய்கள் தாக்கும் வாய்ப்பு உள்ளதாக ஒரு அறிஞர் எச்சரித்துள்ளார். அதிலும் தற்பொழுது சில தொடர்கள் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறினால் பரிசுகள் தரப்போவதாக அறிவிப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தொடரை பார்க்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். இதனால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படும் அபய நிலை காணப்படுகிறது.இதனால் இதுபோன்ற மொக்கை தொடர்களை பார்க்க சகிக்காமல் தொலைக்காட்சிப் பெட்டிகளை உடைக்கும் சம்பவங்களும் ஆங்கங்கே நடப்பதும் நாம் அறிந்ததே.!


வலைப்பூக்களில் மொக்கை :
   வலைப்பூக்களில் பெரும்பாலும் மொக்கை போடப்படுகிறது. புதிய பதிவர் முதல் பழைய பதிவர் வரை அனைவரும் மொக்கை போடுவதில் அதிக கவனம் செலுத்துவது தற்பொழுது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சில பதிவர்கள் மொக்கை போடுவதாக தெரியவில்லை.(எ.கா:தேவா ).இருப்பினும் வலைப்பூக்களில் மொக்கை போடுவதற்காகவே சிலர் முயற்சித்து (கோமாளி)வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மொக்கையின் விளைவுகள்  :
   மொக்கயானது ஒரு தோற்று நோய் போல விரைவில் பரவக்கூடியது. இதனை உருவாக்குபவரே இந்நோய்க்கு ஆளாவது பரிதாபத்திற்கு உரியது.மேலும் ஆண்டுக்கு ஆண்டு  மொக்கையல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மொக்கைக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படாதது மக்கள் மத்தியில் பேரும் கிலியை ஏற்படுத்தியுள்ளது.சில மொக்கைகள் சிரிப்பினை உருவாக்குவதால் மொக்கைகளை வேறுபடுத்தி அழிப்பதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்புகள் தெரிவித்துள்ளன. விரைவில் இது போன்ற மொக்கைகளுக்கு ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதே நமது அவா..!

Friday, July 2, 2010

பேனா கொண்டுவாங்கப்பா

"இந்தாடா.. உனக்கு சாப்பாடு ரெடி." என்று சாப்பாட்டு பையை நீட்டினாள் ரமேஷின் தாயார்.
"டேய் ரமேஷ் ஆபீசுக்கு போகும் போது அப்படியே பேங்குக்கு போய் பணம் எடுத்துட்டு போய்டுடா.." இது ரமேஷின் அப்பா.
"நானா ..?"
"ஆமா நீதானே A.T.M கார்ட தொலைச்சே..!"
" நான் ஒண்ணும் தொலைக்கல , இங்க தான் வச்சேன். எலி எதாவது எடுத்துட்டு போயிருக்கும்.."
"ஆமா எலி எடுத்துட்டு போய் முறுக்கு வாங்கி சாப்பிட்டிருக்கும்..!" இது அம்மாவின் குரல்.
"இல்ல அது பூனைக்கு மணி கட்டலாம்னு பேசிட்டிருந்துச்சு.. மணி வாங்க பணம் வேணும்ல அதனாலதான் A.T.M கார்ட திருடிட்டு  பணம் எடுக்க போயிருக்கும்..சரி விடுமா.. அதுதான் புது A.T.M கார்டுக்கு அப்பளை பண்ணியாச்சுல , ஒரு வாரத்துல வந்திடும் " என்று சிரித்துக்கொண்டே விடை பெற்றான்.

வங்கியில் பணமெடுக்கும் படிவம் பூர்த்தி செய்து விட்டு வரிசையில் நின்றுகொண்டிருந்தான் .. அப்போது அங்கு வந்த ஒருவர்.,

"சார் , கொஞ்சம் பெண் கொடுக்குறீங்களா..?" என்றார்.
(இங்கே பெண் என்பதை ஆங்கில உச்சரிப்பாக படிக்கவும். !! )

ரமேஷ் வழக்கம் போலவே மூடியை மட்டும் கொடுத்துவிட்டு போதும்களா என்றான்..

"விளையாடாதீங்க சார் ..!"

"நீங்கதானே கொஞ்சம்னு கேட்டீங்க அதான் அப்படி .சரி இந்தாங்க ." என்று நீட்டினான்.

அவரும் பேனாவை வாங்கிக்கொண்டு " சார் 5 நிமிசத்துல கொடுத்திடறேன் " என்றார்.

"சரிங்க .." என்ற ரமேஷ் வரிசையில் ஐக்கியமானான்.


பணம் எடுத்துக்கொண்டு வெளியில் வருவதற்குள் வைபரெட் செய்து வைத்திருந்த ரமேஷின் தொலைபேசி இரண்டு முறை சும்மா அதிருதுள்ள என்பது போல அதிர்ந்தது.
அவசர அவசரமாக வங்கியை விட்டு வெளியே வந்தா ரமேஷ் தொலைபேசியை எடுத்து பார்த்தான்.அதற்குள் அடுத்த அழைப்பும் வந்தது.

"பாஸ் ., வந்திட்டே இருக்கேன்.." அவனது முதலாளி அழைப்பில் இருந்தார்  .

"எங்க இருக்கப்பா ..?" என்றார் முதலாளி ..

"நான் பஸ் ஸ்டாண்ட் பக்கமா வந்துட்டிருக்கேன் பாஸ்.."

'சரி , நல்லதா போச்சுப்பா.. நம்ம நண்பர் ஒருத்தர் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கார் , அவர அப்படியே கூட்டிட்டு வந்திடு.. அவர் போன் நம்பர் தர்றேன் எழுதிக்க.." என்றது ரமேஷ் சட்டைப்பையை துழாவினான்.. அப்பொழுதுதான் வங்கியில் கடன் கொடுத்த பேனாவை திரும்பி வாங்காமல் வந்துவிட்டது நினைவிற்கு வந்தது.சரி என்னை செய்வது...?

"சரி சொல்லுங்க பாஸ் .." என்று அப்படியே தனது தொலைபேசியிலே அவர் சொல்ல சொல்ல அழுத்திக்கொண்டான்.

"சரிங்க பாஸ் , நான் கூட்டிட்டு வந்திடறேன்.." என்று கூறிவிட்டு பழக்க தோஷத்தில் சிவப்பு பட்டனை அழுத்தி விட்டான்.. தொலைபேசியில் இருந்த அந்த நண்பரின் எண்கள் அழிந்து விட்டன.
"அடச்சே.. சரி இருந்தாலும் அவர் சொன்ன நம்பர் கொஞ்சம் பேன்சி இருந்ததால பரவாயில்ல." என்று அலுத்துக்கொண்டு அவர் சொன்னதாக இவன் நம்பிய அந்த எண்களுக்கு  தொலை பேசினான்.

"சார்.. நான் ரமேஷ் பேசுறேன்.. உங்களை எங்க பாஸ் கூட்டிட்டு வர சொன்னார் .. எங்க இருக்கீங்க ..?"

'நான் பஸ் ஸ்டாண்ட் ல இருக்கேன் , அந்த தண்ணி தொட்டி பக்கத்துல , பச்சக்கலர் சர்ட் போட்டிருக்கேன்.." என்றார்.

"அங்கேயே நில்லுங்க .. ஒரு நிமிசத்துல வந்திடறேன்.." தொலை பேசியை வைத்துவிட்டு அவர் இருக்கும் இடத்தை அடைந்தான் .. அங்கே ஒரு 20 வயது தோற்றத்தில் ஒரு வாலிபர் பச்சைகலர் சட்டையுடன் நின்றுகொண்டிருந்தார்.அவரை பார்த்ததும் ரமேஷுக்கு ஒரு சிறிய சந்தேகம். நம்ம பாசுக்கு இந்த வயசுல கூடவா நண்பர் இருக்கார்..? சரி போய் பார்ப்போம்.ரமேஷ் பைக்கினை அந்த பையனின் பக்கத்தில் நிறுத்தினான்.

அவனும் இவனை பார்த்ததும் "நீங்க தான் ரமேஷா..?" என்றான்.

"ஆமாங்க , உங்க பேர் என்னனு எங்க பாஸ் சொல்லவே இல்ல , உங்க பேர் என்னங்க..?"

"நான் சௌந்தர், மேட்ச் ஆரம்பிச்சிருப்பாங்களா...?" என்றான்.

இப்படி கேட்டதும் ரமேஷுக்கு சந்தேகம் மேலும் அதிகரித்தது..
"நீங்க எதுக்கு வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..?"

"நான் கபடி மேட்ச்சுக்காக வந்திருக்கேன் , ஏன் தேவா இத உங்க கிட்ட சொல்லவே இல்லையா ..? , அவன்தான் என்கிட்டே ரமேஷுங்கரவர அனுப்பிருக்கேன் அவர் பஸ் ஸ்டாண்ட்ல வந்து உன்ன பிக்கப்  பண்ணிக்குவார் அப்படின்னான் " என்றான்.

அப்பொழுதுதான் ரமேஷுக்கு தெரிந்தது இது வேறு யாரோ என்று.
"சாரிங்க நான் அந்த ரமேஷ் இல்ல." நம்பர் தப்பா போட்டுட்டோமோ..? சரி பாஸ் கிட்டவே கேக்கலாம் என்று தனது முதலாளிக்கு கால் செய்தான். Busy  என்று வந்தது.சரி கொஞ்ச நேரம் கழித்து கூப்பிடலாம் என்று நின்றுகொண்டிருந்தான்.. சிறிது நேரத்தில் முதலாளியிடமிருந்து அழைப்பு வந்தது.

"சொல்லுங்க பாஸ்., அவர் நம்பர் இன்னொரு தடவை தரீங்களா..? "

"அத சொல்லத்தான் கூப்பிட்டேன் , உன்கிட்ட ஒரு வேலைய கொடுத்தா எப்பவுமே உருப்படியா செய்ய மாட்டியா..? என்றார் கோபமாக.

"சா , சாரி பாஸ். அவர் நம்பர் தப்பா போட்டுட்டேன் , இன்னொருதடவ சொல்லுங்க."

இந்த முறை பேனாவில் எழுதிக்கொள்ளலாம் என்று நினைத்தான். அதனால் பக்கத்தில் ஒரு பெரியவர் சட்டையில் பேனாவுடன் நின்றிருப்பதை பார்த்தான் .
"சார் கொஞ்சம் பேனா தரீங்களா..?"

அந்தப் பெரியவர் மேலும் கீழும் பார்துதுவிட்டு பேனாவை எடுத்து நீட்டினார்.

"சொல்லுங்க பாஸ், அப்படியே அவர் பேரும் சொல்லிடுங்க " அவரிடம் பேசி முடித்தவுடன் தான் கவனித்தான் சென்ற முறை 877 ற்கு பதிலாக 887 போட்டுவிட்டதை..
சரி என்று நினைத்தபடி அந்த பெரியவரிடம் ,

"தேங்க்ஸ் சார்." என்று பேனாவை நீட்டினான் .

அதனை பெற்றுக்கொண்ட பெரியவர் " ஏன் தம்பி ஒரு பேனா கொண்டு வர மாட்டியா..? பான்ட் மட்டும் இத்தன வால் தொங்குற மாதிரி போட்டிருக்கரீங்க .." என்றார் கோபமாக.

ரமேஷ் ஒன்றும் பேசாமல் முதல்ல பேனா வாங்கணும் என்று நினைத்த படியே பைக்கை நோக்கி திரும்பிய ரமேஷின் கண்களில் அந்த பெட்டிக்கடை தென்பட்டது.. சரி இங்க போய் ஒரு பேனா வாங்கிட்டு போலாம் என்று பெட்டிக்கடை நோக்கி நடந்தான் .
அங்கு வயதான ஒரு பாட்டி இருந்தார் .

"பாட்டி CELLO பேனா இருக்குமா..?"

"செல் போடற மாதிரி பேனா இல்ல தம்பி , சாதா பேனா தான் இருக்கு 2 ரூவா .!" என்றார்.

(சுத்தம்.. ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது. சரி அந்த 2 ரூபா பேனாவுல தான் ஒருதடவ எழுதிப்பார்ப்போம்.)

"சரி ஒண்ணு குடுங்க " என்று வாங்கி சட்டை பையில் வைத்துக்கொண்டு இனி அந்த ஆளை தேடுவோம் என்றபடி முதலாளி சொன்ன அந்த எண்களுக்கு அழைத்து அவர் இருக்கும்  இடத்திற்கு சென்றான்.

"சார் நீங்க தான் அருணா , நான் ரமேஷ் .எங்க பாஸ் உங்களை கூட்டிட்டு வர சொன்னார் "

"ஓ , அது நீங்க தானா ..?" என்றவருக்கு ஒரு அழைப்பு வந்தது ..
"சொல்லுங்க.." என்று உரையாடலை தொடர்ந்த அவர்  ரமேஷை பார்த்து பேனா இருக்கா  என்று கேட்டார். ரமேசும் தனது சட்டையிலிருந்து அந்த பேனாவை கொடுத்தான். எதோ எழுதிவிட்டு அழைப்பை துண்டித்த அவரது கைகளில் INK லீக் ஆகி வழிந்து  கொண்டிருந்தது. இதை பார்த்த அவர்,

"ஒரு நல்ல பேனா வச்சுக்க மாட்டிங்களா ..?" என்றார் .

ரமேஷுக்கு நீ ஒரு நல்லா பேனா வச்சுக்க வேண்டியதுதானே என்று கேட்க வேண்டும் போல இருந்தது .. இருந்தாலும் கோபத்தை அடக்கிக்கொண்டு
"போலாம் சார் .." என்றவாறே வண்டியை ஸ்டார்ட் செய்தான்.

(பின்குறிப்பு : இந்த கதையில் வரும் ரமேஷ் என்பவர் சிரிப்புபோலீஸ் ரமேஷ் அல்ல என்பதை கவனமுடன் தெரிவித்துக்கொள்கிறேன் .. நீங்கள் எதாவது கற்பனை செய்து கொண்டு எதையும் திரித்து விட வேண்டாமெனவும் தெரிவித்துக்கொள்கிறேன் )