Showing posts with label தொடர் பதிவு. Show all posts
Showing posts with label தொடர் பதிவு. Show all posts

Tuesday, August 9, 2011

3

முன்குறிப்பு : என்னை இந்தத் தொடர்பதிவுக்கு அழைத்த வெறும்பய அவர்களை மன்னிக்கிறேன்!

1.விரும்பும் 3 விசயங்கள் : 

அ). முதல்ல நான் RJ ஆகனும்.
ஆ). இரண்டாவதும் நான் RJ ஆகனும்
இ). மூனாவதும் நான் RJ ஆகனும்.

2.விரும்பாத 3 விசயங்கள் :

அ). சண்டை போடுறது.
ஆ). கேக்காமயே அறிவுரை சொல்லுறது.
இ). எங்கிட்ட கேக்காமலே தேர்தல் வைக்கிறது.

3.பயப்படும் 3 விசயங்கள் :

அ). கொஞ்ச நாள் முன்னாடி எங்க வீட்டுக்குப் பக்கத்துல ஒரு எறும்பு செத்துப்போச்சா, அது ஆவியா வந்து மிரட்டுமோனுதான் பயமா இருக்கு :(
ஆ). அடுத்து இதுக்கு இன்னொரு பாயிண்ட் எழுதனும்னு பயமா இருக்கு.
இ). முதல்ல நான் எதுக்கு பயந்தேனோ அந்த பயத்துல இது மறந்துபோச்சு.

4.புரியாத 3 விசயங்கள் :

அ). ஒரு தடவ நான் பள்ளிகூடம் போயிட்டிருக்கும்போது 
ஆ). பாபு அண்ணன் எழுதுறது தமிழா ?
இ). முதல்ல நான் என்ன சொல்லவந்தேன்னு புரில.

5.உங்கள் மேசையில் இருக்கும் 3 பொருட்கள் :

அ). நான் இப்ப ஆபீசுல இருக்கேனா, இது ஆபீஸ் மேசைதானே, அதனால இது என்னோடது ஆகாதுல.அதனால எங்க வீட்டுல இருக்கிற மேசை மேல என்ன இருக்குனு தெரியல.
ஆ). இதுக்கும் பதில் சொல்லனுமா?
இ). வேண்டாம்னா விடுங்க.

6.உங்களைச் சிரிக்க வைக்கும் 3 விசயங்கள் :

அ). கவுண்டமனி, வடிவேலு நகைச்சுவைகள்.
ஆ). கும்மி மக்களின் பின்னூட்டங்கள்.
இ).  ரமேஷ் அண்ணன் பதிவு எழுதாம இருக்கிறது. 

7.இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள் :

அ). ஒரு தனியார் நிறுவனத்துல வேலை பார்க்கிறேங்க.
ஆ). அடுத்த வருசம் பிறந்தநாள் வரதுக்காக இப்ப இருந்தே தினமும் ஒவ்வொரு நாளா காலண்டர்ல தேதி கிழிக்கிறேன்.
இ). கோமாளினு ஒரு ப்ளாக் இருக்குனு சொன்னதால அத தேடிட்டு இருக்கேன்.

8.வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள் :

அ). எப்படியாவது ஒரு சிறந்த முழு நீள நகைச்சுவைப் புதினம் எழுதிடனும்.
ஆ).செல்வா கதைகளை முல்லா கதைகள் அளவுக்கு பிரபலப்படுத்தனும்.
இ). எப்பவுமே சந்தோசமா இருக்க கத்துக்கனும்.

9.உங்களால் செய்து முடிக்கக் கூடிய 3 விசயங்கள் :

அ). 8(அ)
ஆ). மொக்கை போடுவது.
இ). செல்வா கதை எழுதுவது.


10.கற்றுக்கொள்ள விரும்பும் 3 விசயங்கள் :

அ). எப்பவும் மொக்கை போட்டு சிரிக்க வைக்கனும்.
ஆ). தமிழ் இலக்கியம்.
இ). இன்னும் கொஞ்சம் தூயதமிழில் எழுத.

11.பிடித்த 3 விசயங்கள் :

அ). காலை உணவு
ஆ).மதிய உணவு.
இ). இரவு உணவு.

12.கேட்க விரும்பாத மூன்று விசயங்கள் : 

அ). இந்தமாதிரி நிறைய கேள்விகள் குடுத்து யாரோ உன்ன தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்காங்க அப்படின்னு.
ஆ). நம்பிக்கைத் துரோகம்.
இ). கார்த்தி இந்த தொடர் பதிவு எழுதிட்டான்னு.

13.அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள் :

அ). அன்பே அன்பே கொல்லாதே ( ஜீன்ஸ்)
ஆ). யாரோ என் நெஞ்சைக் கீறியது ( குட்டி)
இ). சிறகுகள் வந்தது ( சர்வம்)

14.பிடித்த 3 படங்கள் :

அ). அன்பே சிவம்.
ஆ). பசங்க.
இ). இங்கிலீசு படம் எதாச்சும் சொல்லனும்களா ? ( அட இதுக்கு ஒன்னு வெட்டியாப்போச்சே )

15.இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லுற 3 விசயங்கள் :

அ). பூமி.
ஆ). சூரியன்
இ). நான்.

16.இதை எழுத அழைக்கப்போகும் 3 நபர்கள் :

அ). அதான் அன்னிக்கு ஒருநாள் செத்துப்போச்சுல அந்த எறும்பு. ( பாவம் இதையாச்சும் செய்யலாம்னுதான். )
ஆ). நேத்திக்கு எனக்கு 50 பைசா கொடுக்காத கண்டக்டர்.
இ). உங்க சொந்தக்காரங்க யாராச்சும் இருந்தா சொல்லி எழுத சொல்லுறீங்களா?

பின்குறிப்பு : உங்களுக்கு ஒன்னு தெரியுமா நான் முதல்ல பின்குறிப்புதான் எழுதினேன். அப்புறம்தான் முன்குறிப்பெல்லாம் எழுதினேன். ஆனா நீங்க முதல்ல இருந்து படிச்சிட்டு வந்து நான் முதல்ல எழுதினத கடைசியா படிக்கிறீங்க :)


Wednesday, January 19, 2011

செல்லத்திற்கு ஒரு கடிதம்

 முன்குறிப்பு : கொஞ்ச நாள் முன்னாடி நம்ம இந்திரா அக்கா இந்தப் பதிவுல ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாங்க. அவர்களின் அழைப்பிற்கு இணங்க இந்த காதல் கடிதம் அப்படிங்கிற தொடர் பதிவிற்கான பதிவு இது.

செல்லத்திற்கு  அன்புள்ள ABCD,
    எனக்கு இத எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல. ரொம்ப நாளா உங்கிட்ட சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்குற விசயம்தான். நான் இத நேர்லயே சொல்லனும்னு ஆசைதான். ஆனா நேர்ல பார்க்கும் போது உன்ன இம்ப்ரஸ் பண்ணுறேன் பேர்வழி அப்படின்னு கண்டத ஒளறி வழியுரதுக்கே நேரம் பத்த மாட்டேங்குது. அதுலயும் இரண்டு மாசத்துக்கு ஒரு தடவதான் பார்க்கிறோம். சத்தியமா இரண்டு மாசத்துக்கு அப்புறம் உன்னப் பார்க்கப் போறோம்னு ஒரு வாரக்கணக்கா உன்னையே நினைச்சிட்டு இருப்பேன், அப்புறம் உன்ன பார்க்கும் போது ஒரு பத்து நிமிஷம் படபடப்புலையே போய்டுது.

   அதிலும் அதிக நேரம் உங்கூடப் பேசிட்டு இருந்தா எங்க வழியுறது மாதிரி ஆகிடுமோன்னு ஒரு பக்கம் எச்சரிக்கை மணி ஒலிக்குது. அப்புறம் எப்படி நேர்ல சொல்லுறது. இப்பக்கூட இத எழுதி உன்கிட்ட கொடுக்கிறேனா இல்ல தைரியம் இல்லாம கிழிச்சுப் போட்டுடப்போறேனா அப்படின்னு தெரியல. அப்படி தைரியம் வந்து உங்கிட்ட கொடுத்திட்டேன்னா வடிவேலு கணக்கா நானும் ரவுடிதான்.

     இப்ப கூட ஆரம்பிச்சு என்னென்னமோ சொல்லுறேன் , ஆனா மேட்டர் எண்ணனு  சொல்லல. ஒரே வரில சொல்லுறதுனா உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. நம்ம சந்திக்கிற மனிதர்கள் நிறைய இடங்களில் நிறைய பேர நமக்குப் பிடிக்கும். அது வேற விசயம். ஆனா நான் உன்கிட்ட சொல்லுற பிடிச்சிருக்கு அப்படிங்கிற வார்த்தையோட அர்த்தம் வேற.

    என்னமோ தெரியல உன்னப் பார்க்கும்போது வர்ற உணர்வு வேற பொண்ணுகளைப் பார்க்கும் போது வர்றதில்லை. அப்படி உங்கிட்ட என்ன பிடிச்சிருக்குன்னு தெரியல. மத்த பொண்ணுகள மாதிரிதான் நீயும் இருக்க. ஆனா உன்னப் பார்க்கும் போது , உன்னப்பத்தி நினைக்கும் போதெல்லாம் எனக்குள்ள ஒரு இனம்புரியாத உணர்வு வருது. அது சந்தோசமா , இல்ல ஏக்கமா இல்ல வேற எதாவதா அப்படின்னு தெரியல. அப்பவெல்லாம் வைரமுத்துவோட " வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருவமும் உருளுதடி " அப்படிங்கிற வரிகள்தான் நியாபகம் வருது.

    பஸ்ல போகும்போது சில பொண்ணுக காதுல EAR PHONE மாட்டிக்கிட்டு குசுகுசுனு பேசுறதப் பார்த்தா ஒருவேளை நீயும் நாளைக்கு என்கூட இப்படித்தான் பேசுவியோ அப்படின்னு உன் நியாபகம்தான் வருது. நான் தினமும் சாமி கும்பிடும்போதெல்லாம் உனக்கு என்மேல காதல் வரணும் , நீ எனக்கானவளா இருக்கணும் அப்படிங்கிறதையும் சேர்த்தே வேண்டிக்கிறேன்.

   எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் சாதரணமா பேசுற நான் உன்கிட்ட மட்டும் என்னமோ கடன் வாங்கிப் பேசுறது மாதிரி பேசுறேன். ஏன்னா அதிகமா பேசினா எங்க லூசு அப்படின்னு நினைச்சிடுவியோ அப்படிங்கிற ஒரு பயம்தான். அத விட உன்னப் பார்க்க வரதுக்கு முன்னாடி நிறைய ஒத்திகை பார்த்துட்டு வருவேன் , ஆனா உன்னப் பார்த்ததுமே எல்லாமே மறந்து போகும். இது வரைக்கும் ஒரு தடவ கூட உன்ன இம்ப்ரெஸ் பண்ணலாம் அப்படின்னு நான் பார்த்த ஒத்திகை எல்லாமே வீண்தான்.

    நானும் எங்க வீட்டுல எதாச்சும் பேசிட்டிருக்கும் போது அடிக்கடி எல்லோரையும் கிண்டல் பண்ணி பேசிட்டிருப்பேன். அப்பவெல்லாம் எங்க அம்மா வர்ற மகராசியும் இப்படியே வந்திட்டா போதும் அப்படின்னு சொல்லுவாங்க , நான் மனசுக்குள்ள நினைச்சுக்குவேன் அவளும் ( நீ ) அப்படித்தான் நிறைய பேசுவா அப்படின்னு. இன்னும் என்ன என்னமோ உன்னப் பத்தி சொல்லனும்னு தோணுது , ஆனா உனக்கு இதெல்லாம் பிடிக்குமோ பிடிக்காதோன்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஒன்னே ஒண்ணு சொல்லுறேன் , நான் உன்ன அவ்ளோ நேசிக்கிறேன்.

    அதே மாதிரி இப்போதைக்கு நான் ஒரு சின்ன கம்பனிலதான் வேலை பார்க்கிறேன். ஆனா சீக்கிரமே பெரிய ஆளா வருவேன். அந்த நம்பிக்கையும் அதற்கான முயற்சியும் இருக்கு. இத ஏன் சொல்லுறேன்னா கொஞ்ச நாளுக்கு அப்புறம் நீ என்னப் பத்தி உங்க வீட்டுல சொல்லும்போது ஒரு பெருமையா சொல்லிக்கிற அளவுக்கு உயர்ந்திடுவேன். 

    நான் இப்படி சொல்லுறதால நீ என்னைய உனக்குப் பிடிச்சிருக்கு அப்படின்னு சொல்ல வேண்டாம். உனக்கு என்னைப் பிடிக்கலைனா பிடிக்கலைன்னு சொல்லிடு , நல்ல நன்பர்களாவே இருப்போம். எனக்கு சொல்லனும்னு தோனுச்சு சொன்னேன். உண்மைலேயே உனக்கு என் மேல காதல் இல்லைன்னு சொன்னா கொஞ்சம் பீல் பண்ணுவேன் ஆனா சீக்கிரமே அதிலிருந்து மீண்டு வந்திருவேன். இத ஏன் சொல்லுறேன்ன எங்கிட்ட இதுக்கு முன்னாடி ஒரு பொண்ணு ப்ரொபோஸ் பண்ணிருக்கு. அப்போ எனக்கு அப்படி ஒரு பீலிங் இல்ல , அதனால நண்பர்களா இருப்போமே அப்படின்னு கேட்டுகிட்டேன். இப்பத் தான் எனக்குப் புரியுது, நான் அப்படி சொன்னபோது அந்தப் பொண்ணு எவ்ளோ பீல் பண்ணிருக்கும்னு. உன்ன செல்லமா கூப்பிடனும் , உன்கூடவே இருக்கணும்னு ஆசைதான் , ஆனா முடிவுகள் எல்லாமே உன்னோட கைலதான். 
                                                                           என்றும் நட்புடன் 
                                                                                        XYZ.

--------------------------------------------------------------------------------------------------------------------------

தொடர் பதிவுக்கான விசயங்கள் அந்த கோட்டுக்கு மேலேயே முடிஞ்சு போச்சு. இப்போ காதல் பத்தி என்னோட அபிப்பிராயம் அதாவது தற்காலிகக் காதல் பற்றி என்னோட கருத்து அல்லது பயம் பத்தி சொல்லியே ஆகணும். இப்பவெல்லாம் காதல் அப்படின்னு சொல்ல கேட்டாலே பயமா இருக்கு ., துஷ்டரைக் கண்டால் தூர விலகு அப்படிங்கிற மாதிரி தோணுது. உண்மைதாங்க இப்ப அதிகமா நடந்துட்டு இருக்குற விசயங்கள பார்க்கும் போது காதல் அப்படின்னா ஒரு மாயத் தோற்றம் ஏற்ப்பட்டிருக்கு அப்படிங்கிறது ரொம்ப தெளிவா தெரியுது.

    எங்க ஊருக்குப் பக்கத்து ஊருல ஒரு பொண்ணு +1 படிச்சிட்டு இருந்துச்சு. அந்தப் பொண்ணு அதே பள்ளிக்கூடத்துல படிக்கிற இன்னொரு பையன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. அதுவும் ஓடிப்போய். இதப் பத்தி நான் ஏன் சொல்லுறேன் அப்படின்னா இவுங்களோட எதிர்காலம் பத்தி நினைச்சாலே ரொம்ப பயமா இருக்கு. நினைச்சுப் பாருங்களேன் , ஒரு பதினாறு பதினேழு வயசு இருக்குற பசங்க எப்படி ஒரு குடும்பத்த கொண்டுபோகப்போறாங்க? இப்படி நிறைய காதலர்கள் இருக்காங்க. இந்த வயசுல வர்ற ஈர்ப்ப காதல் அப்படிங்கிற பேர்ல இவுங்க வாழ்க்கையவே தொலைச்சிக்கிறாங்க.. 

    இந்த காதலால தான் ஏழைகள் அப்படின்னு ஒரு வர்க்கம் மேலும் உருவாகிடுமோ அப்படின்னு நினைக்கத் தோணுது. அப்படின்னா எல்லா காதலர்களுமே உருப்படாதவங்க அப்படின்னு சொல்ல வரல , மொதல்ல எதிர்காலம் பற்றி ஒரு ஸ்டாண்ட் பண்ணிட்டு காதல் பண்ணுங்க. அது எப்படி அப்படியெல்லாம் காதல் வருமா ? அது வருபோதுதான் வரும் , நம்ம இஷ்டத்துக்கு எல்லாம் வராது அப்படின்னு சொல்லுவீங்க.

    பொதுவாவே காதல் அப்படிங்கிற விசயம் பெரும்பாலும் அழக பார்த்து வரதுதானே. ஏன் சொல்லுறேன்னா இது வரைக்கும் யாருக்காச்சும் தெருவுல குப்பை பொறுக்குற பொண்ணப் பார்த்து லவ் வந்திருக்கா? மொத்ததுல காதலிக்க நினைக்குறவங்க உங்க வாழ்க்கைல ஸ்டாண்ட் பண்ணிக்கோங்க. அப்பத்தான் உங்க காதலும் இனிக்கும்கறது என்னோட கருத்து. மறுபடியும் வைரமுத்துவோட வரிகள்தான் " காதல் ஒன்னியும் கடவுள் இல்லையாட , அந்த எழவு எல்லாம் ஹார்மோன் செய்யும் கலகம் தானடா!! "

ஒரு அறிவிப்பு : சொல்லப்போனா இன்னிக்கு இந்த மேட்டர சொல்லனும்னுதான் இந்தப் பதிவே. அதாங்க நம்ம கலைஞ்சர் அடச்சே கலைஞர் டிவி ல தினமும் இரவு 10௦ மணிக்கு " வெற்றிச் சரித்திரம் " அப்படின்னு ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்புறாங்க. அத எல்லோரும் முடிஞ்ச அளவுக்கு கண்டிப்பா பாருங்க. அதாவது உலகப் போர்கள் பற்றியும் அந்த காலத்துல எடுக்கப்பட்ட வீடியோக்களும் போடுறாங்க. கண்டிப்பா இது உங்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்னு நினைக்கிறேன். இத எதுக்காக சொல்லுறேன்னா மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்கள் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தாங்க. அத எழுத முடியல , அதனாலதான் அவுங்களுக்குப் பயன்படுமே அப்படின்னு இந்த நிகழ்ச்சி பத்தி சொல்லிருக்கேன். ஹி ஹி 

என் புத்தி எனக்கு கூறிய அறிவுரை : வந்தியா செல்வா கதைகள் எழுதி நாலு பேர குழப்புனியானு இல்லாம உனக்கு எதுக்கு சமுதாய அக்கறை எல்லாம் ?

பின்குறிப்பு : இதுல காதல் பத்தி சொன்னது எல்லாமே என்னோட கருத்துக்கள் தாங்க. அது தவறா கூட இருக்கலாம்.
    

Monday, December 6, 2010

சமகாலக் கல்வி

முன்குறிப்பு : சமகாலக் கல்வி குறித்து தொடர் பதிவு எழுத அழைத்த நம்ம தேவா , எஸ்.கே மற்றும் பாபு அண்ணன்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பதிவில் கூறியிருப்பது அனைத்தும் இன்றைய கல்வியின் நிலையைப் பற்றிய எனது கருத்துக்கள் மட்டுமே. அது தவறாகவும் இருக்கலாம்.!

இன்றைய காலகட்டங்களில் கல்வி என்பது மதிப்பெண்களாலேயே மதிப்பிடப்படுகிறது.
LKG முதல் PG வரை என அனைத்து நிலைகளிலும் மதிப்பெண்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதிக மதிப்பெண் வாங்குபவரே அறிவாளி என்ற என்ற எண்ணமும் அதிகரித்து வருகிறது. மதிப்பெண் பெறுவதென்பது அவரவர் நியாபக சக்தியைப் பொறுத்தே அமைகிறது.மேலும் செய்முறைத் தேர்வுகள் பெரும்பாலும் கற்றுத்தரப்படாமல்   அநேக பள்ளிகள் செயல்படுகின்றன. போதிய உபகரணங்கள் இல்லாமை மற்றொரு காரணமாகும்.!

  பள்ளிக்கல்வியைப் பற்றிப் பார்க்கலாம். பள்ளிக்கல்வியைப் பொறுத்த வரையில் தற்பொழுது தனியார் பள்ளி மோகம் பெற்றோரிடம் அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும் என்ற எண்ணம் பரவிவருகிறது. ஆனால் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஒருவித மிரட்டலுக்கு உட்பட்டே பாடங்களை  மனப்பாடம் செய்கின்றனர். பத்தாம் வகுப்புப் பாடங்களை ஒன்பதாம் வகுப்பிலேயே எடுப்பதும் , பனிரண்டாம் வகுப்பு பாடங்களை பதினொன்றாம் வகுப்பிலிருந்து எடுப்பதும் இப்பொழுது நடைமுறையில் உள்ளது. ஒரே பாடங்களை இரண்டு வருடம் போதித்து மாணவர்களை மனப்பாட இயந்திரமாக மாற்றவும் தயங்குவதில்லை.!

  பொதுவிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் இதுதான் உனது வாழ்க்கை , இந்தத் தேர்வுகள்தான் உனது எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன என்று மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துகிறேன் பேர்வழி என்று அவர்களை போருக்கு தயார் படுத்துவது போன்று ஒரு வித அச்சத்தை அவர்களிடம் தோற்றுவித்து விடுகின்றனர். பெரும்பாலும் மாணவர்கள் தேர்வுகளில் தோற்றுப்போவதற்கும் இது போன்ற அறிவுரைகள் காரணமாக அமைந்து விடுகிறது. ஏனென்றால் இது போன்ற அறிவுரைகள் அச்சத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன. மேலும் தங்களுக்குத் தெரிந்த மாணவர்கள் தெருவிலோ அல்லது விளையாடுவதையோ பார்த்தால் " உனக்கு இந்த வருஷம் பப்ளிக் எக்ஸாம் , படிக்கறத விட்டுட்டு இங்க என்ன பண்ணுற " என்று அந்த மாணவர்களை எங்கு பார்த்தாலும் அறிவுரை மழை பொழிவதை தவிர்த்தாலே அவர்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைக்கும்.!

  தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் காட்டும் அக்கறைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களை காலை 4 மணிக்கே எழுப்பி படிக்க சொல்லுவதும் , இரவு 11 மணிவரை படிக்கச் சொல்வதும் பெரும்பாலான பள்ளிகளில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு படிக்கும் மாணவர்கள் மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் மனமுடைந்து போகின்றனர். இவர்கள் மாணவர்களிடம் உள்ள அக்கறை காரணமாக இருப்பதைக் காட்டிலும் இந்த வருடம் எங்கள் பள்ளியில் இவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளோம் என்று விளம்பரம் செய்வதற்கே அதிக அக்கறை காட்டுகின்றனர். மேலும் சில பள்ளிகளில் சேர்வதற்கே ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு மேல் இருந்தாலே சேர்த்துக்கொள்கின்றனர். அப்பாடி மதிப்பெண்கள் இல்லாத மாணவர்களிடம் லட்சக்கணக்கில் உதவித்தொகை பெறுவதும் சில பள்ளிகளில் இருப்பதாக செவிவழி செய்தி.! பள்ளிப்படிப்பிற்கே இவ்வளவு நன்கொடையை என்று சற்று ஆச்சர்யமாகவே இருக்கிறது.

  தனியார் பள்ளிகளை குற்றம் சொல்லுவதை விட இன்றைய பெற்றோர்களின் தவறை நாம் பார்த்தால் போதுமானது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் மகனோ அல்லது மகளோ குறிப்பிட்ட தனியார் பள்ளியில் படிக்கின்றனர் என்று கூறிப் பெருமைப் பட்டுக்கொள்ளும் நிலையில் இருக்கின்றனர். மொத்தத்தில் இவர்களது பெருமைக்காக தங்களது பிள்ளைகளை மனப்பாட இயந்திரமாக மாற்றும் பள்ளிகளைத் தவிர்த்தாலே போதுமானதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரையில் எதிர்காலங்களில் அரசுப் பள்ளிகள் நிச்சயம் சிறந்த கல்வியினை அளிக்கக்கூடியதாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால் இனிவரும் காலங்களில் அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக வரப்போவது தற்போதுள்ள இளைஞர்களே.! நிச்சயம் இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரம் மேம்பட்டே இருக்கும்.!

பெற்றோர்களுக்கு ஒரு வேண்டுகோள் :
  சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை 2.5 வயதிலேயே PRE KG என்ற வகுப்பில் சேர்த்து விடுகின்றனர். சிலரைக் கேட்டால் இப்பொழுதிருந்தே பள்ளிக்குச் சென்றால்தான் படித்துப்பழகுவர்கள் என்கின்றனர். இன்னும் சிலர் வீட்டில் செய்யும் குறும்புகளுக்காகவே பள்ளிக்கு அனுப்புகிறோம் என்கின்றனர். பொதுவாகவே இந்த வயதில் நிச்சயம் பள்ளிக்கு அனுப்புவதைக் குறைத்துக்கொள்வது நல்லது. இதிலே சில நல்ல விஷயங்களாகத் தோன்றினாலும் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமையாகும். மேலும் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் திருக்குறளை ஒப்பிக்கின்றனர் என்று பெருமைப் பட்டுகொள்வதும் உண்டு. அதைப் பார்த்து சிலர் தங்களது குழந்தைகளையும் திருக்குறள் போன்ற விசயங்களை மனப்பாடம் செய்யச் சொல்வதும் அதற்காக தனிப்பயிற்சி அனுப்புவதும் காணப்படுகிறது. பொதுவாகவே திருக்குறளை ஒப்புவிப்பதிலோ அல்லது வேறு சிலவற்றை மனனம் செய்வதிலோ குழந்தைகளின் அறிவுத்திறனோடு ஒப்பிடாதீர்கள். அதே போல உங்களது பெருமைக்காக சில பெயர்பெற்ற பள்ளிகளில் சேர்ப்பதும் ,  விடுதியில் விடுவதையும் முடிந்த அளவு தவிர்க்கப்பாருங்கள்.மொத்தத்தில் ஏட்டுக்கல்வியை விட உங்கள் வாழ்கைக்கல்வியைக் கற்றுக்கொடுங்கள். பெற்றோர்களை விடச் சிறந்த ஆசியர்கள் இருக்க முடியாது.!  

நீதி : நானும் என்னால முடிஞ்சா அளவுக்கு சீரியஸ் ட்ரை பண்ணிப் பார்த்தேங்க , முடியல.! 

பதிவின் முடிவு : இங்க சமகாலக் கல்வி பத்தி எழுத சொன்னாங்க ., ஆனா நான் பள்ளிக்கல்வியப் பத்தி மட்டுமே எழுதிருக்கேன். அதனால இது பற்றி நம்ம எஸ்.கே அண்ணனும் பாபு அண்ணனும் என்னை விட ரொம்ப ரொம்ப நல்லா எழுதிருக்காங்க.போய் பார்த்துகோங்க. இந்தப் பதிவினைத் தொடர மேட்டுப்பாளையம் பள்ளி மாணவர்களை அழைக்கிறேன் .!

பின்குறிப்பு : எனது ஐம்பதாவது பதிவில் வெறும் பத்து எழுத்துக்களை மட்டுமே கொண்டு நான் செய்த அறிய முயற்சியைப் பார்த்து நமது சௌந்தர் காறித்துப்பியதாலோ அல்லது எனது புதிய முயற்சியைக் கண்டு பலர் எனது ப்ளாக் படிக்கவே பயப்படுவதாலோ இந்த இந்தப் பதிவினை நான் எழுதவில்லை. ஐம்பது பதிவுகளுக்குப் பின்னர் சில நல்ல(?)  பதிவுகள் எழுதலாம் என்று எண்ணத்தில் இருந்தேன். ஆயினும் எனது கனவில் தோன்றிய மொக்கயரசர் அவ்வாறு எழுதுதல் கூடாது என்றும் , வேண்டுமானால் ஒரு நல்ல பதிவு எழுதிக்கொள் என்று அனுமதி வழங்கியதுடன் ஒரு பொன்மொழியும் அருளிசென்றார். அவர் அருளிய பொன் மொழிதான் மேலே உள்ளது என்பதையும் தெரிவிக்கக்  கடமைப்பட்டுள்ளேன்.! மேலும் அவரது வேண்டுகோளுக்கினங்க அடுத்த பதிவாக மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத் தகவல் என்ற பதிவு வரும் என்பதையும் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துகொள்கிறேன்.!

இதையும் படிங்க : 

Saturday, August 14, 2010

பதிவுலகில் கோமாளி.!

 பெரிய வெங்காயத்த சின்ன சின்ன துண்டுகளா வெட்டினா கூட அத சின்ன வெங்காயம்னு யாரும் சொல்ல மாட்டாங்க..! (அட ச்சே .. தத்துவம் கூட மொக்கயாத்தான் வருது.. ) சரி விடுங்க .. நாம நேரா கேள்விக்குப் போய்டலாம். அதுக்கு முன்னாடி நம்ம சௌந்தர் இந்த தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருந்தார். மன்னிச்சிருங்க சௌந்தர். ஏன்னா போன பதிவுல என்னால மொக்க போட முடியல.. அதனால அதுல போட வேண்டிய மொக்கையையும் இதுல போட்டுடுவேனோ அப்படின்னு நினைக்கிறேன்.. முதல்ல ஒரு தத்துவம் சொல்லி ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன். அதுவும் அப்படி ஆகிடுச்சு..!!

1 .) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?
நீங்க எந்த பேர கேக்குறீங்க..? செல்வக்குமாரா., இல்ல கோமாளியா..? சரி எத கேட்டா என்ன ..? இரண்டுமே என் பேரு தான்..!

2 .) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?
என் உண்மையான பெயர் கோமாளி.! ஆனா ஏதாவது புனை பெயர் வச்சு எழுதலாம்னுதான் ப.செல்வக்குமார் அப்படின்னு வச்சுக்கிட்டேன். ஐயோ தப்பா சொல்லிட்டேன்.!?! மாத்தி படிங்க..!

3 .)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ..?
நான் ஒரு முறை சென்னை சென்றிருந்த போது கமல் சார் என்னைப் பார்த்துட்டார்.
அவரு நான் எங்க சினிமா உலகத்துக்கு வந்திடுவேனோ , அப்படி வந்திட்டா அவங்களுக்கு நடிக்க சான்ஸ் கிடைகாதுல்ல. அதனால அவர் என்னைப்பார்த்து " செல்வா நீ பதிவுலகத்துக்குப் போய்டு " அப்படின்னு சொன்னார். நானும் அப்ப இருந்து எல்லா விண்வெளி ஆராய்ச்சிப் புத்தகத்தையும் படிச்சேன். ஏன்னா பதிவுலகம்கறது பூமி மாதிரி இன்னொன்னு இருக்கும் அப்படின்னு நினைச்சேன். தேடினேன் தேடினேன் தமிழ்நாட்ட விட்டு கர்நாடகா வரைக்கும் தேடினேன். அப்ப பெங்களூர்ல இருந்த எங்க சம்பத் அண்ணன் தான் தம்பி பதிவுலகம்கறது வேற ஒண்ணு இல்லைப்பா .. அது இங்கதான் இருக்கு . அப்படின்னு சொல்லி ப்ளாக் பத்தி சொன்னதால இந்த கோமாளி உங்க முன்னாடி.! இல்லனா நீங்க தப்பிச்சிருப்பீங்க.. நான் இன்னும் தேடிகிட்டிருப்பேன்.

4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?
இன்னொரு ப்ளாக் ஆரம்பிச்சு அத பிரபலப் படுத்தி அதுல இருந்து இதைய பிரபலப்படுத்தலாம்னு நினைச்சேன். ஆனா அதைய எப்படி பிரபலப்படுதறது..? அத பிரபலப்படுத்த இன்னொரு ப்ளாக்.. இப்படியே என்னோட ப்ளாக்களின் எண்ணிக்கை 10000000000000 (இது எத்தனை ..?!?) ஆகிடுச்சு.சொன்னா நம்ப மாட்டீங்க. நான் கி.பி 1800 லையே ப்ளாக் எழுத ஆரம்பிச்சிட்டேன். அப்புறமா நான் 1987 ல பிறந்தேனா..? (ஒண்ணும் புரியலைல ) அப்புறமா பாக்குறேன் அத்தன ப்ளாக் ஆரம்பிச்சாலும் இன்னும் ஒரு போஸ்ட் கூட போடல. அப்பத்தான் கண்டுபிடிச்சேன். போஸ்ட் போடாம பிரபலம் ஆக முடியாதுன்னு. நாங்களும் யோசிப்போம்ல. அப்புறம் பிரபலம் ஆகுற ஐடியாவ விட்டுட்டேன். அப்புறம் நம்ம தேவா அண்ணன் வந்ததுக்கு அப்புறம் அவரோட சாட் status ல போட்டார், வலைச்சரத்துல அறிமுகப்படுத்தினார். KRP செந்தில் அண்ணாவும் வலைச்சரத்துல அறிமுகப்படுத்தினார். அப்புறம் தமிழ்மணம் , தமிளிஷ் ல இணைச்சேன். இதபத்தி எனக்கு சொன்னது எங்க பக்க வீட்டு அண்ணா செந்தில்நாதன். அப்புறம் அப்படியே ....??!!!??

5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
சொந்த விசயங்களை இதுவரை பகிர்ந்து கொள்ளவில்லை . ஏன்னா நாம கற்பனை பண்ணி எழுதறதே இவ்ளோ மொக்கையா இருக்கு . அப்புறம் சொந்த விசயம்னா எப்டி இருக்கும். சரி சரி இப்டி கேட்டதுக்காகவே என்னோட சொந்த விசயங்கள இனிமேல் பகிர்ந்துக்கறேன் . (உங்க தலையெழுத்து ..??!!??)

6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?
 நான் பொழுது போக்கிற்காகவோ சம்பாதிப்பதற்காகவோ எழுதவில்லை. தமிழ் இலக்கியத்தின் இன்னொரு பிரிவான மொக்கையை வளர்த்தே தீருவேன் என்ற உயரிய லட்சியத்திற்காகவே எழுதுகிறேன். என்ன அப்படி எழுதினதுல உங்களோட நட்பு கிடைச்சது. இதவிட என்ன ஒரு மனுஷனுக்கு என்ன வேணும் ..?

7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?
ஒண்ணுக்கே முடியல ...? ஹலோ முடியலைன்னு சொன்னது எனக்கு நேரமில்லை அப்படின்னு அர்த்தம் கிடையாது .. ஒரு ப்ளாக் எழுதரதுனாலையே இந்த வெப் சர்வர்லாம்
சூடாகி இன்டர்நெட் ஜாம் ஆகிடுது. அத பார்த்த ஒரு குழந்த அந்த ஜாம எடுத்து சாபிட்டுடுது. அதனால இனிமேல் இந்த மாதிரி நடக்கக் கூடாது அப்படிங்கிற நல்லா எண்ணத்துல நான் ஒரு ப்ளாக்கே  போதும் அப்படின்னு நிறுத்திட்டேன் .
அப்புறம் எனக்கு quizfromtbts அப்படின்னு கூகுள் sms சேனல் ஒண்ணு இருக்கு.அதுல இந்தியா முழுக்க 4400 பயனாளிகள் இருக்காங்க.அதுல நான் Punchlins of companies , Abbreviations , Puzzles ,Employment news ..Etc  பத்தி sms அனுப்பிட்டிருக்கேன். ஆனா அது இந்தியாவுல மட்டும் தான் வேலை செய்யும். அதுல நீங்க இணையனும்னு நினைச்சா இங்க கிளிக் பண்ணுங்க .அதுக்காக ஒரு ப்ளாக் இருக்கு. அதோட லிங்க் இங்க . அது சும்மா ஒரு அறிமுகத்துக்காக.

8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?
உங்க பதிவுகள படிக்கும் போது நம்மளுக்கு ஏன் இப்படியெல்லாம் கவுட்டி கவுட்டியா எழுத வரமாட்டேங்குது அப்படின்னு பொறாமையா இருக்கும்க.! ஆனா விதிவசத்தால என்னோட பதிவுகள நானே படிக்கிற துன்பம் நேர்ந்தால் கோபம் வரும்க. அன்னிக்கு ஒரு நாள் இப்படித்தான் எனக்கு பயங்கர பீலிங். என்னடா இப்டி மொக்கையா எழுதறயே ..? நல்லாவே எழுத மாட்டியா அப்படின்னு . அப்ப திடீர்னு என்னோட மனசாட்சி ஒண்ணு சொல்லுச்சு பாருங்க . " அடேய் .. நீ இப்படி மொக்கையா எழுதரதுனாலதான் அவுங்க எழுதறது நல்ல பதிவு அப்படிங்கறது தெரியுது .. நீயும் நல்ல பதிவு எழுதினா அவுங்க எழுதறது நல்ல பதிவு அப்படின்னு மத்தவங்களுக்குத் தெரியாமலே போடிடுமே . நீ அவுங்க பதிவு நல்ல பதிவா வரணும் அப்படிங்கறதுக்காக மொக்கையா எழுதற .அதனால நீ ஒரு தியாகி " அப்படின்னு சொல்லுச்சு .. ! அதிலிருந்து எனக்கு செம சந்தோசம் ..!

9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?
விவேக் அப்படிங்கிற என்னோட நண்பர் முதல் கமெண்ட் போட்டார்.! அவர் ப்ளாக் எழுதறது கிடையாது ..!

10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?
பதிவுலகத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள் .!! மின் அரட்டையில் இருக்காங்க.! நான் நினைச்ச மாதிரியே பதிவுலகம் இன்னொரு உலகம் தான் ..!!
கடைசியா உங்களுக்காக ஒரு மொக்கை 
இங்கிலீஷ்ல மொத்தம் எத்தன எழுதுன்னு தெரியுமா ..?
மொத்தம் அப்படிங்கிறது தமிழ் வார்த்தை . அது இங்கிலீஷ் கிடையாது.

அடுத்து இதை தொடர நான் அழைப்பது
1 .) திருஞானசம்பத் அண்ணா.
2 .) கலாநேசன் அவர்கள்.
3 .) எங்கள் சங்க செயலர் TERROR-PANDIAN(VAS).
4 .) விஜய் அண்ணா

Tuesday, August 10, 2010

மன்னாதி மன்னன் - ஜூலியோ - கிளேடியன் பரம்பரை

என்னை இந்த தொடர் பதிவிற்கு அழைத்த நண்பர் ஜில்தண்ணிக்கு நன்றி.
இந்த தொடர் பதிவின் மூலம் தமிழ் மன்னர்கள் பற்றி என்னை எழுத அழைத்ததும் நான் தமிழ் மன்னர்கள் பற்றி எழுதலாம் என்று எண்ணி விக்கிபீடியாவில் தேட ஆரம்பித்தேன். பெரும்பாலான தமிழ் மன்னர்கள் பற்றிய செய்திகள் பதிவேற்றப்பெற்றிருந்தன. ஆதலின் வேறு ஏதேனும் புகழ் பெற்ற மன்னரைப்பற்றி எழுதலாம் என்று எண்ணி மேலும் தேடினேன். ரோமப்பேரரசு , பைசண்டைன் பேரரசு , அகஸ்டஸ் , ஜூலியஸ் சீசர் , ஜூலியோ - கிளேடியன் பரம்பரை என்று எனது தேடல் தொடர்ந்தது. இதில் ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பற்றி தமிழில் இதுவரை யாரும் தொகுக்கவில்லை. ஆதலால் ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பற்றி விக்கிபீடியாவில் ஆங்கிலத்தில் இருந்தவற்றைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். எனது அலுவலக பணி காரணமாக என்னால் தொடர் பதிவிற்கு அழைத்தவுடனே பதிவேற்ற முடியவில்லை. மேலும் இந்த மன்னர்களைப் பற்றி தேடுவதில் எனது நேரம் செலவானது. இருப்பினும் அதிக மன்னர்களைப் பற்றித்தெரிந்து கொண்டேன். இந்தப்பதிவினைத் தொடங்கும்போது நீரோ மன்னனைப் பற்றி எழுதலாம் என்றே தொடர்ந்தேன். இந்தப் பதிவினைத் தொடர விரும்புவோர் நீரோ , காலிகுலா மன்னரைப் பற்றி எழுதலாம். அவரைப்பற்றிய குறிப்புகள் விக்கிப்பீடியாவில் அதிகம் இல்லை. இந்தப்பதிவில் ஏதேனும் பிழை இருப்பின் சுட்டிக்காட்டவும்.

ஜூலியோ - கிளேடியன் பரம்பரை ஓர் அறிமுகம்
ஜூலியோ - கிளேடியன் பரம்பரை பொதுவாக ரோமப்பேரரசின் முதல் ஐந்து மன்னர்களான அகஸ்டஸ் , டிபேரியஸ்,கலிகுலா, கிளாடியஸ் மற்றும் நீரோ ஆகியோரைக் குறிக்கிறது.இவர்கள் ரோமப்பேரரசின் தொடக்க காலம் முதல் கி.பி 68 வரை அந்தப் பரம்பரையின் கடைசி மன்னனான நீரோ தற்கொலை செய்து கொள்ளும் வரை ரோமப்பேரரசை ஆட்சி செய்தனர். ஜூலியஸ் மற்றும் கிளாடியஸ் ஆகியன ரோமன் குடும்பத்தை சார்ந்த பெயர்களாகும். சில பெயர்கள் தந்தையிடமிருந்து மரபுவழியாக வந்தவை.ஜூலியஸ் சீசர் அவரது சகோதரியின் பேரனான கேயஸ் அக்டேவியஸ் ஐ தத்தேடுத்துக்கொண்டார். அதன் பின்னர் கேயஸ் அக்டேவியஸ்ன் பெயர் கேயஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்டஸ் என்று மாறியது. இவரே ரோமப்பேரரசின் முதல் மன்னராவர். ரோமப்பேரரசை நிறுவியவரும் இவரே.

ஜூலியோ - கிளேடியன் பரம்பரையின் தோற்றமும் வீழ்ச்சியும் 
அகஸ்டஸ் (27 BC–AD 14
ஆண் வாரிசு இல்லாமையால் அகஸ்டஸ் அவரது தங்கையினை அவரது உறவினரான மார்க்ஸ் கிளாடியஸ் மார்சிலஸ் என்பவருக்கு மணமுடித்தார். ஆயினும் மார்சிலஸ் கி.மு 23 ஆம் ஆண்டு இறந்துவிடுகிறார். பின்னர் தனது விதவைத் தங்கையினை தனது நண்பருக்கு மணமுடித்து வைக்கிறார். இந்தத் திருமணத்தின் மூலம் அவரது தங்கைக்கு மூன்று மகன்கள் மற்றும் 2 மகள்களை பெற்றெடுக்கிறாள்.அகஸ்டஸ் தனது தங்கையின் பிள்ளைகளான கேயஸ் சீசர் மற்றும் லூசியஸ் சீசர் ஆகியோரை தனது வாரிசாக தத்தெடுக்கிறார். மேலும் அகஸ்டஸ் தனது மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்த குழந்தைகளான ட்ருசாஸ் மற்றும் டிபேரியஸ் ஆகியோருக்கும் முக்கியத்துவம் அளித்தார். ட்ருசாஸ் கி.மு 9 இல் இறந்துவிடுகிறார். மேலும் கேயஸ் சீசர் மற்றும் லூசியஸ் சீசர் ஆகியோரும் சிறு வயதிலேயே இறந்துவிடவே டிபேரியஸ் அகஸ்டசின் அரசியல் வாரிசாகிறார்.

டிபேரியஸ் (கி.பி 14 - 37 )
கி.பி 14 ஆகஸ்ட் 19 இல் அகஸ்டஸ் இறந்ததும் அவரது உயிலில் இருந்தபடி டிபேரியஸ் ரோமப்பேரரசின் மன்னராகிறார். அவர் அகஸ்டசின் கொள்கைகளுக்கு மதிப்புக் கொடுத்தும் அவரது தத்துப்பிள்ளையான ஜெர்மானிகசிர்க்கு சாதகமாகவும் செயல்பட்டார். டிபேரியாசின் வேண்டுகோளின் படி ஜெர்மாநிகாஸ் ஜெர்மநிகாவின் ஆளுநராக பொறுப்பேற்றார்.ஜெர்மாநிகாஸ் கி.பி 19 இல் உயிரிழக்கிறார். ஜெர்மாநிகாசின் உயிரிழப்பிற்குப்பின்னர் டிபேரியஸ் தனது மகனான ட்ருசாசினை ஜெர்மாநிகாவின் ஆளுநராக நியமித்தார். ரோமப்பேரரசின் இரண்டாவது மன்னரான டிபேரியஸ் கி.பி 37 ல் இறந்தார்.

கலிகுலா (கி.பி 37 - 41 ) 
டிபேரியாசின் மரணம் மற்றும் பெரும்பாலான குடும்ப உறுப்பினர்களின் அழிவினால்  அகஸ்டசின் திட்டங்கள் யாவும் அழிக்கப்பட்டு வந்தன. டிபேரியசின் மரணத்திருக்குப் பின்னர் அவரின் அரசியல் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர் கயஸ் ஜூலியஸ் சீசர் அகஸ்டஸ் ஜெர்மாநிகாஸ் ஆவார். இவர் அவரது சிறுவயதுப் பெயரான கலிகுலா என்றே அழைக்கப்பட்டார். இவர் ரோமப்பேரரசின் மூன்றாவது மன்னராக கி.பி 37 முதல் 41 வரை இருந்தார்.ஜனவரி 24 , 41 இல் அவரது மெய்க்காப்பாளர் காசியஸ் கரியா என்பவரால் கொலை செய்யப்பட்டார்.

கிளடியாஸ் (கி.பி 41 - 54 )
  கலிகுலாவின் இறப்பிற்குப் பின்னர் அவரது தந்தைவழி மாமாவான கிளாடியஸ் மன்னர் பொறுப்பேற்கும்படி மெயக்காப்பாளர்களால் தூண்டப்பெற்றார். அவருக்கு போதிய அரசில் விழிப்புணர்ச்சி இல்லை என்று மற்றவர்கள் ஏளனம் செய்தாலும் அவர் தனது திறமையை நிரூபித்தார். கி.பி 43 இல் பிரிட்டன் மீது படையெடுத்தார்.அவர் சட்டம் இயற்றுவதில் அதிக கவனம் செலுத்தினார். அவரது நிலையினைத் தக்கவைத்துக்கொள்ள மிகவும் தீவிரமாக செயல்பட்டார். ஆதாலால் அரசியல் தலைவர்களின் இறப்பு அதிகமாக நடைபெற்றது. மேலும் அவர் மனவாழ்கையிலும் வெற்றிபெறவில்லை. அவர் 4 முறை திருமணம் செய்து கொண்டார். அவர் நீரோவை தனது அரசியல் வாரிசாக தேர்ந்தெடுத்தார். 13 அக்டோபர் 50 இல் க்ளடியாஸ் மரணமடைந்தார்.

நீரோ (கி.பி 54 -68 )
நீரோ அவரது 17 ஆம் வயதிலேயே ரோமப்பேரரசின் மன்னராகப் பொறுப்பேற்றார் . நீரோவும் அகஸ்டசின் நேரடி பரபரையில் வந்தவராவார்.55 களில் நீரோ மிகசிரந்தமுரையில் நிரவாக்த்தை கவனித்துக்கொண்டார்.கி.பி 64 இல் ரோம் நகரம் எரிந்தது. ரோம் நகரில் ஏற்ப்பட்ட தீ விபத்தில் ஏற்பட்ட இழப்புகளுக்கு ஈடுகட்ட சட்டமியற்றினார். அதன் படி அதிக வரி வசூல் செய்யப்பட்டது. 67 , 68 களில் கிளர்ச்சியாளர்கள் நீரோவின் அதிக வரி வசூலிக்கும் சட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.  68 இல் நீரோ ஒரு தேசிய குற்றவாளி என்று சட்ட சபையால் அறிவிக்கபட்டார். நீரோ அவரது சட்ட ஆலோசகர் எபப்ரோடிடோஸ் என்பவரின் உதவியால் தற்கொலை செய்து கொண்டார். நீரோவின் இறப்புடன்  ஜூலியோ - கிளேடியன் பரம்பரை முடிவுக்கு வந்தது.

தொடர்பதிவு 
விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தில் தமிழ் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் முயற்சியாக இந்த தொடர்பதிவு திட்டமிடப்பட்டுள்ளது. விருப்பமிருப்போர் மன்னாதி மன்னன் என்ற தலைப்பில் தொடரலாம்.


1)வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்,ராணிகளையும் இதில் எழுதலாம்.

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.


 இதைத்தொடர நான் அழைப்பது
தேவா அண்ணா.
KRP செந்தில் அண்ணா. 
பின்குறிப்பு : இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 5 மன்னர்களில் அகஸ்டஸ் மன்னருக்கு மட்டுமே தமிழில் அதிக தகவல்கள் இருக்கின்றன. மற்ற 4 மன்னர்களைப்பற்றி அதிக தகவல்கள் தமிழில் இன்னும் தொகுக்கப்படாமல் இருக்கின்றன.