Sunday, July 19, 2015

சிங்கங்கள் கொல்லும்

#CFS -2

உலக வாழ்க்கையை வெறுத்துப் போன இளம் உயிரியல் விஞ்ஞானி மனிதர்களே இல்லாத ஒரு தீவில் குடிபுகுந்தார். உலக வாழ்க்கைதான் வெறுத்துப்போனதே தவிரவும் உயிரைத் துறக்க அவர் விரும்பவில்லை.

காடுகளில் சுற்றித் திரிந்த அவருக்கு ஒரு நாள் அசரீரியின் குரல் கேட்டது. அதன்படி அவரது இறப்பிற்குச் சிங்கங்கள்தான் காரணமாக இருக்குமென்று தெரிந்துகொண்டார். ஆனால் அதனைப் பெரிதாக மதிக்கவில்லை.

அந்தக் காட்டிற்குள் வந்து வருடக்கணக்கில் ஆகியிருந்தாலும் இதுவரையிலும் ஒரு சிங்கத்தைக் கூடப் பார்த்ததில்லை. ஆனால் அசரீரி ஒலித்த அடுத்தநாளே சிங்கக் கூட்டம் ஒன்றினைக் காண நேர்ந்தது. பின்னர் பயமும், அதலிருந்து தப்பிப்பதற்கான யோசனைகளும் உருவாகத் தொடங்கின.

உயிரியல் விஞ்ஞானியென்பதால் சிற்சில மூலிகைகளைக் கொண்டு ஒரு மருந்தினைத் தயாரித்தார். பெருமளவில் தீயினை வளர்த்து, இந்த மருந்தினை அந்தத் தீயில் இட்டுப் புகைப்பதன் மூலம் சிங்கங்களைச் சைவமாக மாற்றிவிடக் கூடிய மருந்து அது. அவ்வாறே செய்தார்.

டெஸ்டோஸ்டிரோனை உறிஞ்சி எடுத்துவிட்டு, ஈஸ்ட்ரோஜென்னை அதிகளவில் சுரக்கச் செய்தால் மேக்கப் ரூமில் முக்கால் மணி இருக்க விரும்புவதும், அதனையே வைஸ் வெர்சாவாகச் செய்தால் Educational Content, God Songs என்ற போல்டர்களை உருவாக்கி Hidden செய்து வைக்க நினைப்பதும் இயல்பானதுதானே? அதைத்தான் சிங்கங்களும் செய்தன.

அந்த மருந்தின் புகை தீவு முழுவதும் பரவி அங்கிருந்த அனைத்துச் சிங்கங்களையும் சுத்த சன்மார்க்க சைவ ஜீவகாருண்ய உயர்தர சைவமாக மாற்றிவிட்டது. எல்லாச் சிங்கங்களும் இலை, தழைகளையும், செடி, கொடிகளையுமே உணவாக உண்ண ஆரம்பித்தன. 

இந்த மாற்றத்தினை விஞ்ஞானி எதிர்பார்த்திருந்தார் என்பதால் பெரிதாக ஆச்சர்யப்படாமல் அந்த அசரீரிக் குரலை நினைத்துச் சற்று ஏளனமாக எண்ணிக் கொண்டிருந்தார்.

ஒரு வாரம் கடந்திருக்கும். எல்லாச் சிங்கங்களும் வேக வேகமாகப் புல்லினை உண்ண ஆரம்பித்தன. சாதாரண சைவப் பட்சிணிகள் தின்பதை விடவும் பல மடங்கு வேகத்தில் புற்களையும், மரம், செடி கொடிகளையும் தின்ன ஆரம்பித்தன. ஒரே மாதத்தில் மொத்தத் தீவிலுமே புல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனது. புல் என்ற பேச்சிற்கே இடமில்லாமல் போனதற்குக் காரணம் சிங்கங்களுக்குப் பேசத் தெரியாது என்று நீங்கள் நினைப்பீர்களானால் கண்ணாடி முன்னால் நின்றுகொண்டு கை தட்டிக் கொள்ளுங்கள். லைட்டாக ஏதோ ஒரு மூலையில் ஒரு புல் ( ஃ போடவில்லை) தென்பட்டாலும் உடனே பத்துச் சிங்கங்கள் ஓடிப்போய் அதனை லபக்கென்று தின்று வெவ்வெவ்வே என்று கோணைவாய் காட்டின. நாளாக நாளாக எல்லாச் சிங்கங்களுக்கும் பசி கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது.

தீவிலிருந்த பழ மரங்களையும், தான் தனியே ஆற்றோரமாக உருவாக்கியிருந்த தோட்டத்தையும் மட்டுமே நம்பி வாழ்ந்துவந்த விஞ்ஞானிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிங்கங்களை மீண்டும் பழையபடியே மாற்றிவிடலாம் என்று நினைத்தாலும் அதற்கான மூலிகை கிடையாது. 

வேறு ஏதேனும் யோசனை செய்யலாம்தான். ஒரு நாள் முழுவதும் பட்டினியால் கிடந்துவிட்டு அடுத்த நாளில் இரண்டையும் இரண்டையும் பெருக்கினால் என்ன வருமென்று கேட்டால் நீங்கள் இட்லியோ, தோசையோ வருமென்றுதானே சொல்வீர்கள்? அப்படியிருக்கையில் அவரால் மட்டும் எப்படிப் புதுப்புது யோசனைகளைச் செய்யமுடியும்?

தொடர் பட்டினியால் பசியாலேயே இறந்துவிட்டார். அவர் உடலிலிருந்து பிரிந்து ஆவி வானுலகம் நோக்கிச் செல்கையில் தற்செயலாகத் தான் வாழ்ந்த தீவினைப் பார்க்க நேரிட்டது. எல்லாச் சிங்கங்களும் HENCE PROVED என்ற வார்த்தைகள் உருவாகும் வண்ணம் அணிவகுத்து நின்று கொண்டிருந்தன.

Friday, July 10, 2015

ஆட்டுக்கல்!

தன்னை எப்பொழுதுமே அறிவாளி என்றுதான் நினைத்துவந்துள்ளான். சிற்சில ஞாபகமறதிகளைக் கலைந்திருந்தால் நிச்சயம் பெரிய அறிவாளியாகியிருக்க வேண்டியவன்தான். ஒருநாள் அவனது அம்மா அவனிடம் அரிசி வாங்கிவரச் சொல்லியிருந்தார். இவன் கோதுமை வாங்கிவந்திருந்தான்.

“அரிசி வாங்கிட்டு வரச்சொன்னா கோதுமை வாங்கிட்டு வந்திருக்கிற? உன்னையைப் பெத்ததுக்கு ஒரு ஆட்டுக்கல்லைப் பெத்திருந்தா மாவாச்சும் ஆட்டியிருக்கலாம்!” இன்னும் சிற்சில வசைகள்.

அடுத்த நாள் காலையில், படித்துக்கொண்டிருக்கும் நீங்களும், எழுதிய நானும், அவரது தாயும் ஆச்சர்யப்படும் வகையில் அந்தப் பையன் ஆட்டுக்கல்லாக மாறியிருந்தான். நமக்கு இது சாதாரணச் செய்திதானென்றாலும் அவனது அம்மாவிற்குப் பெருந்துயரமான ஒரு நாளாக அமைந்துவிட்டது. அழுகைகள், கதறல்கள், புலம்பல்களாக மேலும் சில மாதங்கள் கடந்து சென்றன.

ஆட்டுக்கல்லாக மாறியிருந்த அவரது மகன் என்றாவது ஒருநாள் மீண்டும் மனிதனாக உயிர்ப்பெறுவான் என்ற நம்பிக்கையில் வாழ்ந்துவந்தார் அந்த அம்மா. ஆனால் ஆட்டுக்கல் ஆட்டுக்கல்லாகவே இருந்தது. மகனாக உயிர்த்தெழவுமில்லை, அம்மா என்று அழைக்கவுமில்லை. உங்கள் வாழ்வில் இப்படியொரு நிகழ்வு நடந்தால் அதிலிருந்து மீள என்னவெல்லாம் செய்வீர்களோ அதையெல்லாம் அந்தத் தாயும் செய்தார். எதுவும் தேறவில்லை.

இறுதியாக, ஆட்டுக்கல்லை எதற்கும் பயன்படுத்தாமல் மூடி வைத்திருப்பதற்குப் பதிலாக மாவாட்டிப் பார்க்கலாம் என்று ஒரு யோசனை தோன்றியது. அதனைச் செயல்படுத்தவும் முடிவு செய்து அரிசியினை ஊறவைத்தார். ஆனாலும் பயம் அவரை விட்டதாகத் தெரியவில்லை. ஒருவேளை மாவாட்டுவதால் ஆட்டுக்கல் வடிவில் இருக்கும் தன் மகனுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டுவிட்டால்? அல்லது கை, கால்களில் ஏதேனும் ஊனம் ஏற்பட்டுவிட்டால்? இப்படி எத்தனையோ விட்டால்களைக் கடந்து இறுதியில் தனது யோசனையினைச் செயல்படுத்தினார்.

ஆட்டுக்கல்லாய் மாறியிருந்த தன் மகனின் மீது அரிசியினைப் போட்டு மாவாட்ட ஆரம்பித்தார். சிறுது நேரத்தில் அந்த ஆட்டுக்கல்லில் இருந்து கோதுமை மாவு வந்தது.

( CFS - Childish Fantasy Series)

Tuesday, March 3, 2015

வலி - ஒரு சிலாகிப்பு!

சமீபமாக சிறகு இணைய இதழில் வலி என்றொரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக ரியலிசம் அதாவது எதார்த்தம் சார்ந்த கதைகளைப் படிப்பதென்றால் எனக்குப் பிடிக்காது. ஏனோ தெரியவில்லை. பிடிக்காது. ஓரிரு சமயங்களில் படிக்க நேரும் சிறுகதைகளின் கதைக்கருவோ அல்லது எழுத்து நடையோ கூடக் காரணமாக இருக்கலாம். அப்படிச் சில சமயங்களில் படித்த கதைகளால் எதார்த்தக் கதைகளின் பக்கமாகப் போவதில்லை. அதுவுமில்லாமல் எனக்குக் கற்பனை அல்லது மிகை கற்பனை வகையிலான கதைகள் எழுதுவதில் அதிக விருப்பமென்பதாலும் இந்த ஒவ்வாமை இருந்திருக்கலாம். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் படித்த வலி சிறுகதை அதை விமர்சிக்கும் அளவிற்குக் கொண்டுவந்துள்ளது. பொதுவாக சீரியசாக எழுதுவது எனக்கு வராதென்பதால் இதுபோன்ற விபரீத முயற்சிகளைச் செய்வதில்லையென்றாலும் இந்தச் சிறுகதை எனக்குள்ளும் ரியலிசம் சார்ந்த கதைகளை வாசிக்கவும், எழுதவும் தூண்டியதாலும் இந்தச் சிலாகிப்பு.

ஹரிஷ் கணபதி எழுதிய வலி சிறுகதை சிறகு இதழில் வெளியாகியிருந்தது. ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட ஒரு சிறுகதை. பெண்களின் menturation period சார்ந்த சிறுகதை. ஆனால், கதை அவர்கள் எதிர்கொள்ளும் உடலியல் வலி சார்ந்ததல்ல. உடலியல் வலியினை மையப்படுத்தியிருக்குமானால் இந்தச் சிலாகிப்பு தேவையில்லை. காரணம், அது இயற்கை. அது எதிர்கொண்டே ஆக வேண்டிய ஒன்று. 

செக்ஸ் குறித்தும், சக மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் எந்தவிதமான புரிதலும் இல்லாமல்தான் பெரும்பாலான திருமணங்கள் நடந்தேறுகின்றன. பெரும்பாலான என்பதை அழுத்தியே சொல்லலாம். இந்தக் கதையின் மையமும் அதுவாகத்தான் இருக்கிறது.

menturation சமயத்தில் உறவுக்கு அழைக்கும் தன் கணவன் பிரபாவின் கையைத் தட்டிவிடுவதிலாகட்டும், அதனால் மறுநாள் எந்தத் தொடர்புமில்லாமல் சுடுசொற்களை வாங்கிக் கொள்வதிலாகட்டும், மறுநாள் இரவும் அதே தொல்லையினால் மறுபடியும் கையைத் தட்டிவிடும்போது பிரபா கேட்கும் கேள்வியும் நமக்கு வலியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ரகுவின் நினைவு குறித்த கனவும், அதில் பிரபா சமையல் செய்வதான காட்சியும்தான் என்னை இந்தச் சிலாகிப்புக்கு இழுத்துவந்தது. menturation நாட்களில் ஒரு பெண் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளை விடவும் அவளைப் புரிந்துகொள்ள வேண்டிய கணவனின் புரியாமைதான் இங்கே மையப்படுத்த வேண்டிய விசயமாகிறது. அதே நாட்களில் அவள் மேற்கொள்ளும் அன்றாடக் கடமைகளையும், சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக, குழப்பாமல், வலிந்து சோகத்தைத் திணிக்காமல் இயல்பாக எழுதப்பட்டிருப்பதே இந்தக் கதையின் வெற்றியாக நான் கருதுகிறேன்.

என்னளவில் இந்தச் சிறுகதை சர்வநிச்சயமாகக் கொண்டாடப்பட வேண்டியது. அதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக வலி என்பது மனம் சார்ந்த ஒன்று. இயல்பாகக் கிடைக்க வேண்டிய ஆறுதல் கிடைக்குமாயின் உடல் சார்ந்த எந்த வலியையும் சர்வசாதாரணமாகக் கடந்துவிடமுடியும். அதுதான் இங்கே சிக்கல். அதிலும் மூடி மறைக்கப்பட்ட, வெளியில் பேசக்கூடாத விசயமாக மறைத்து வைக்கப்படும் - அதே வேளை ஒவ்வொரு ஆணும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய - இந்த விசயங்கள் புரிதலில்லாத ஆண்களைக் கணவர்களாகப் பெற்ற ஒவ்வொரு பெண்ணையும் எவ்விதத்தில் பாதிக்கிறது என்பது மிகத் தெளிவாகவே விவரிக்கப்பட்டுள்ளது. இக்கதை பேசும் உளவியல் விசயங்களும், கதை தாண்டிய சிந்தனையும் குறிப்பிடத்தகுந்தவை.

கதையை வாசிக்க - வலி - எழுதியவர் - ஹரிஷ் கணபதி.

Sunday, February 8, 2015

எலி - முதல் நாவல்

"நினைவழுத்தச் சுழல் வெளிகளின் எல்லையில்லா வெம்பரப்பில்" என்று ஆரம்பித்து எனது முதல் நாவலை எழுதிக் கொண்டிருக்கும்போது என் வலது கன்னத்தில் யாரோ சடாரென்று அறைந்தார்கள். அறைந்தால் சடாரென்று கேட்க வாய்ப்பில்லை என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. ஒரு கன்னத்தில் அறைந்தால் எதற்கு அறைந்தார்கள் என்று கேட்பதற்கு முன்னதாகவே அடுத்த கன்னத்தைக் காட்ட வேண்டுமென்று எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருப்பதால் அறை வந்த திசையில் எனது வலது கன்னத்தைக் காட்டியவாறே எழுதுவதைத் தொடர்ந்தேன். சில நொடிகள் தாமதத்திற்குப் பிறகு மீண்டும் வலது கன்னத்திலேயே அறை விழுந்தது. இந்த முறை சடாரில்லை. இதென்ன புதுப் பழக்கம்? ஒரு கன்னத்தில் அறைந்தால் அடுத்த முறை மறுகன்னத்தில் அறைய வேண்டும் என்ற இலக்கணம் கூடத் தெரியாத மூடன் எவன் என்றறிவதற்காக எழுதுவதை நிறுத்திவிட்டுத் திரும்பினேன். யாருமில்லை. உண்மையிலேயே யாருமில்லை; ஆனால், அடித்தது உண்மை. வலித்ததும் உண்மை. நான் என் நாவல் எழுதும் வேலையில் அதிகக் கவனத்துடன் இருந்ததால் அதிசயமாக விழுந்த இந்த அறையினைப் பற்றிக் கவலை கொள்ளாமல் அருகிலிருந்த ஹெல்மெட் ஒன்றினை எடுத்துத் தலையில் கவிழ்த்துவிட்டு மீண்டும் எழுதுவதைத் தொடர்ந்தேன்.

"அகப்படிம காட்சிச் சித்திரங்களின் கூரிய நனவோடையின்" - மறுபடியும் அதே வலது கன்னத்தில் சடார். ஹெல்மெட்டைத் தாண்டியும் சாத்தியமாகியிருந்தது. என்னுடைய பிரச்சினையெல்லாம் ஏன் வலது கன்னத்தில் மட்டுமே அறை விழுகிறது என்பதாக இருந்தது. இடது கன்னத்தைத் தொட்டுப் பார்த்தேன். அங்கே இடது கன்னம் இல்லை. இந்த இடத்தில் பெருமளவில் அதிர வேண்டும். நான் ஏற்கெனவே அதிர்ந்து முடித்துவிட்டதால் இப்பொழுது உங்கள் முறை. என்னுடனேயே இருந்த இடது கன்னம் எங்கே போயிருக்கும்? கண்ணாடியில் பார்த்தேன். அங்கே இடது கன்னம் இருந்த இடத்தில் " என்னை எழுதுவதாக இருந்தால் தமிழில் எழுது. வேறொரு பாஷையில் எழுதாதே" என்ற வார்த்தைகள் மட்டும் ப்ளாஷ் ஆகிக் கொண்டிருந்தன. ஆமாம், எலி நாவல் தான் எப்படி எழுதப்பட வேண்டுமென்று தானே முடிவெடுத்துக் கொண்டது. அதன் பிறகாகத்தான் எலியை எளிய வடிவில் எழுத ஆரம்பித்தேன்.


மேற்சொன்ன கதை நம்பும்படியாக இல்லை; அதுதானே? நம்பும்படியாக இருந்தால் அது எப்படி Fantasy ஆகும்? எலி கற்பனை மற்றும் மிகு கற்பனை வகையினைச் சார்ந்த நாவல். கொஞ்சம் நகைச்சுவை, கொஞ்சம் தத்துவம் கலந்த த்ரில்லர் கதை. முற்றிலும் குழந்தைகளுக்கான கதைக்களமென்றாலும் அனேக இடங்களில் Black humor வகையில் முயற்சித்திருக்கிறேன். முதல் நாவல் என்பதால் நிச்சயமாய்க் குறைகளும் கலந்தே இருக்கலாம். அந்த வகையிலும் இது முக்கியமானது. ரியல் டைம் நாவல் என்றும் கூறலாம். 

முதல் நாவல் என்பதால் எனக்குத் தெரிந்த ஒரே மொழியான தமிழில்தான் எழுதியிருக்கிறேன். உங்களுக்குத் தமிழ் தெரிந்திருக்காவிட்டாலும் வாங்கிப் படிக்கலாம். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழைக் கற்றுக் கொண்டு படிப்பதானாலும் மகிழ்ச்சியே.



இணையம் சார்ந்தே எனது வாசிப்பும் எழுத்தும் ஆரம்பமானது என்பதால் இணையத்தில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் பரிசல்காரன் முன்னுரை எழுதியுள்ளார். எலி நாவலில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான பகுதி அது. முன்னுரை என்பதால் நாவலின் துவக்கத்திலேயே பதிப்பித்துள்ளோம். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் எலி நாவலை நீங்கள் வாசிக்கலாம். பின் அட்டைக்குப் பிறகாக வேறெதையும் பதிப்பிக்க வேண்டாமென்பதில் பதிப்பாளர் தீவிரமாக இருந்ததால் பின் அட்டைக்கு முன்பாகவே நாவலை முடித்திருக்கிறேன். தமிழில் இது ஏற்கெனவே செய்யப்பட்ட முயற்சிதானென்றாலும் எலி நாவலில் இது கச்சிதமாகப் பொருந்திப் போயிருக்கிறது.

எலி நாவல் கடந்த 7-02-2015 அன்று திருப்பூர் புத்தகக் கண்காட்சியில் சாரு அவர்களால் வெளியிடப்பட்டது. வா.மு.கோமு உடனிருந்தார்.



இனி புத்தகத்தைப் படிக்கப்போகும் உங்களின் விமர்சனங்களை எதிர்நோக்கியபடி காத்திருப்பதுதான் எனக்கு அழகு. எலி நாவலினைப் புத்தகமாக உருவாக்கியதில் என் பங்கினை விடவும் அனேகம் பேரின் உழைப்பும், வாழ்த்தும் இருக்கிறது. எல்லோரைப் பற்றியும் தனியாகப் பதிவதே நான் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். எலி நாவல் தற்பொழுது விற்பனையாகிவருகிறது.

எலி நாவலினை வாங்க - இங்கே கிளிக் செய்யவும்.

பதிப்பகம் :  நடுகல்.
பக்கங்கள் : 152.
விலை : Rs.130/-