Tuesday, March 3, 2015

வலி - ஒரு சிலாகிப்பு!

சமீபமாக சிறகு இணைய இதழில் வலி என்றொரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக ரியலிசம் அதாவது எதார்த்தம் சார்ந்த கதைகளைப் படிப்பதென்றால் எனக்குப் பிடிக்காது. ஏனோ தெரியவில்லை. பிடிக்காது. ஓரிரு சமயங்களில் படிக்க நேரும் சிறுகதைகளின் கதைக்கருவோ அல்லது எழுத்து நடையோ கூடக் காரணமாக இருக்கலாம். அப்படிச் சில சமயங்களில் படித்த கதைகளால் எதார்த்தக் கதைகளின் பக்கமாகப் போவதில்லை. அதுவுமில்லாமல் எனக்குக் கற்பனை அல்லது மிகை கற்பனை வகையிலான கதைகள் எழுதுவதில் அதிக விருப்பமென்பதாலும் இந்த ஒவ்வாமை இருந்திருக்கலாம். ஆனால், இரண்டு நாட்களுக்கு முன்னர் படித்த வலி சிறுகதை அதை விமர்சிக்கும் அளவிற்குக் கொண்டுவந்துள்ளது. பொதுவாக சீரியசாக எழுதுவது எனக்கு வராதென்பதால் இதுபோன்ற விபரீத முயற்சிகளைச் செய்வதில்லையென்றாலும் இந்தச் சிறுகதை எனக்குள்ளும் ரியலிசம் சார்ந்த கதைகளை வாசிக்கவும், எழுதவும் தூண்டியதாலும் இந்தச் சிலாகிப்பு.

ஹரிஷ் கணபதி எழுதிய வலி சிறுகதை சிறகு இதழில் வெளியாகியிருந்தது. ஃபேஸ்புக்கில் மேய்ந்து கொண்டிருந்தபோது கண்ணில் பட்ட ஒரு சிறுகதை. பெண்களின் menturation period சார்ந்த சிறுகதை. ஆனால், கதை அவர்கள் எதிர்கொள்ளும் உடலியல் வலி சார்ந்ததல்ல. உடலியல் வலியினை மையப்படுத்தியிருக்குமானால் இந்தச் சிலாகிப்பு தேவையில்லை. காரணம், அது இயற்கை. அது எதிர்கொண்டே ஆக வேண்டிய ஒன்று. 

செக்ஸ் குறித்தும், சக மனிதர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் எந்தவிதமான புரிதலும் இல்லாமல்தான் பெரும்பாலான திருமணங்கள் நடந்தேறுகின்றன. பெரும்பாலான என்பதை அழுத்தியே சொல்லலாம். இந்தக் கதையின் மையமும் அதுவாகத்தான் இருக்கிறது.

menturation சமயத்தில் உறவுக்கு அழைக்கும் தன் கணவன் பிரபாவின் கையைத் தட்டிவிடுவதிலாகட்டும், அதனால் மறுநாள் எந்தத் தொடர்புமில்லாமல் சுடுசொற்களை வாங்கிக் கொள்வதிலாகட்டும், மறுநாள் இரவும் அதே தொல்லையினால் மறுபடியும் கையைத் தட்டிவிடும்போது பிரபா கேட்கும் கேள்வியும் நமக்கு வலியை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக ரகுவின் நினைவு குறித்த கனவும், அதில் பிரபா சமையல் செய்வதான காட்சியும்தான் என்னை இந்தச் சிலாகிப்புக்கு இழுத்துவந்தது. menturation நாட்களில் ஒரு பெண் எதிர்கொள்ளும் மற்ற பிரச்சினைகளை விடவும் அவளைப் புரிந்துகொள்ள வேண்டிய கணவனின் புரியாமைதான் இங்கே மையப்படுத்த வேண்டிய விசயமாகிறது. அதே நாட்களில் அவள் மேற்கொள்ளும் அன்றாடக் கடமைகளையும், சமூகம் சார்ந்த பிரச்சினைகளையும் மிகத் தெளிவாக, குழப்பாமல், வலிந்து சோகத்தைத் திணிக்காமல் இயல்பாக எழுதப்பட்டிருப்பதே இந்தக் கதையின் வெற்றியாக நான் கருதுகிறேன்.

என்னளவில் இந்தச் சிறுகதை சர்வநிச்சயமாகக் கொண்டாடப்பட வேண்டியது. அதற்கான எல்லாத் தகுதிகளும் இருப்பதாகவே தோன்றுகிறது. குறிப்பாக வலி என்பது மனம் சார்ந்த ஒன்று. இயல்பாகக் கிடைக்க வேண்டிய ஆறுதல் கிடைக்குமாயின் உடல் சார்ந்த எந்த வலியையும் சர்வசாதாரணமாகக் கடந்துவிடமுடியும். அதுதான் இங்கே சிக்கல். அதிலும் மூடி மறைக்கப்பட்ட, வெளியில் பேசக்கூடாத விசயமாக மறைத்து வைக்கப்படும் - அதே வேளை ஒவ்வொரு ஆணும் மிகச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டிய - இந்த விசயங்கள் புரிதலில்லாத ஆண்களைக் கணவர்களாகப் பெற்ற ஒவ்வொரு பெண்ணையும் எவ்விதத்தில் பாதிக்கிறது என்பது மிகத் தெளிவாகவே விவரிக்கப்பட்டுள்ளது. இக்கதை பேசும் உளவியல் விசயங்களும், கதை தாண்டிய சிந்தனையும் குறிப்பிடத்தகுந்தவை.

கதையை வாசிக்க - வலி - எழுதியவர் - ஹரிஷ் கணபதி.