Friday, February 14, 2014

அவதூறு!

அது அவதூறுதான். அதை அவதூறாகத்தான் கருத வேண்டும். அவதூறல்லாமல் வேறென்ன?
செய்யாத ஒன்றைச் செய்ததாகவும்நடக்காத ஒன்றை நடந்ததாகவும் கூறிப் பழி கூறுவதை என்னவென்பது?


எனக்குச் சைவ உணவுகளைக் காட்டிலும் அசைவ உணவுகள் அதிகமாகப் பிடிக்கும்தான். தினமும் மூன்று வேளைக்குமே அசைவ உணவென்றாலும் சந்தோசம்தான். அதற்காக மனிதக் கறியையுமா தின்பேன்?இப்படியெல்லாமா ஊருக்குள் என்னைப் பற்றிச் செய்திகளைப் பரப்புவீர்கள்?உங்களைப் பார்த்து யாராவது மனிதக் கறி வேண்டுமா என்று கேட்டால் நீங்கள் தலையை ஆட்டிக்கொண்டு அவர்கள் பின்னால் செல்வீர்களா என்னஇல்லை ஒரு கிலோ என்ன விலை என்று கேட்டு வாங்கிவந்து வீட்டில் சமைப்பீர்களா ?கொஞ்சமும் இங்கிதம் இல்லாமல் இப்படியா அவதூறு பரப்புவதுஎன்னைப் பற்றி என்னவென்று நினைக்கும் இளைய தலைமுறை?

எனக்கு அவதூறு பரப்புபவர்களைக் கண்டாலே பிடிப்பதில்லை. அதெப்படி ஒருவரைப் பற்றிய கெட்ட விசயங்கள் மட்டும் இவ்வளவு வேகமாகப் பரவி விடுகிறதுநல்ல செய்திகளென்றால் சம்மந்தப்பட்டவர்களே வந்து குறிப்புகளைச் சொல்லி, நெளிந்து பின் இறுதியாக அவர்கள் வாயாலேயே சொன்னால்தான் புரிகிறது. தவறான விசயங்கள் மட்டும் வாயைத் திறக்கும் முன்பே தெரிந்துவிடுவது எப்படி?


எல்லோருக்குமே தவறானது என்று சொல்லப்படுவதைச் செய்யும் ஆவல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் யார் முதலில் செய்கிறதுயாரோ ஒருவர் முதலில் செய்தால்தானே அவன் அவ்ளோ பெரிய தப்புப் பண்ணினான்நான் இந்தச் சின்னத் தப்புத்தானே பண்ணினேன் என்று தப்பிக்க முடியும்.

தவறென்பதும்,சரியென்பதும் நீங்களே உருவாக்கிக் கொண்ட வட்டம்தானேவட்டத்தையும் நீங்களே வரைந்துகொள்கிறீர்கள்பின் அதைத் தாண்டக்கூடாதென்ற விதியையும் உருவாக்கிக்கொள்கிறீர்கள்பின் யார் முதலில் விதியை மீறுவதென்றும் எதிர்பார்க்கிறீர்கள்உங்களுக்கு விதியை மீறும் எண்ணமில்லாவிட்டால் விதியை யார் மீறினால் என்னமீறாவிட்டால் என்ன? இப்படியிருந்துவிட்டால் அவதூறுகள் அவ்வளவு வேகமாகப் பரவிவிடுமா என்ன?

அப்படியென்ன அவதூறு செய்துவிட்டார்கள் என்றா கேட்கிறீர்கள்நீங்கள் யாரோ எவரோஇருந்தாலும் நான் இதைச் சொல்லியாக வேண்டும். நான் மாமிசத்திற்கு ஆசைப்பட்டு அது கிடைக்காமல் போனதால் மாமிசத்திற்காக மனிதனைக் கடித்தேனாம். இப்படித்தான் ஊரெல்லாம் பரப்பிவிட்டிருக்கிறார்கள். இதைப் படித்தபோது எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்ட மிகப் பெரிய பொய் இதுவென்று நான் யாரிடம் சொல்லமுடியும் ?நான் சொல்வதை யார் கேட்பார்கள்?

முதலில் நான் யாரென்று உங்களுக்குச் சொல்லவேண்டுமே. உங்களுக்கு இலக்கியத்தில் ஈடுபாடிருந்தால் நகுலனின் “ ஒரு ராத்தல் இறைச்சி” என்ற சிறுகதையைப் படித்திருப்பீர்கள். அக்கதையில் வரும் நவீனன் என்னும் எழுத்தாளர் வளர்த்த நாய்தான் நான். அந்தக் கதையைப் படித்திருந்தால் என் வழக்கு உங்களுக்கு இன்னேரத்திற்கெல்லாம் புரிந்திருக்கும். படிக்காவிட்டால் என்ன நானே என் வாழ்க்கையையும் வளர்ந்தவிதத்தையும் கொஞ்சம் சுருங்கச் சொல்கிறேன்கேட்டுவிட்டு யார் பக்கம் நியாயமிருக்கிறதென்று சொல்லுங்கள்.

என்னை எப்பொழுது என் தாயிடமிருந்து பிரித்து நடுரோட்டில் விட்டார்கள் என்பது எனக்கு ஞாபகமில்லை. அப்பொழுது பசியால் அக்கம்பக்கத்து வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த சிறுவர்களால் துன்புறுத்தப்பட்டது மட்டும் ஞாபகம் இருக்கிறது. சிலர் கல்லால் அடித்தார்கள்சிலர் குச்சியால் விரட்டினார்கள்சிலர் அவர்கள் வைத்திருந்த பெரிய நாயை ஏவி விட்டார்கள்அவையும் தன் இனமான இன்னொரு இளம் தலைமுறை என்பதைக் கூட யோசிக்காமல் தன் எஜமானர்களின் உத்தரவின்படி என்னைக் குதறின. இப்படியாகவும்இன்னும் கொடுமையாகவும் கழிந்தது முதல் சில நாட்கள்.

துன்பங்களே வந்துகொண்டிருந்தால் பூமி உருண்டை என்று கலீலியோ சொன்னது பொய்யாகிவிடுமே. பூமி உருண்டையென்பது மெய்யாகும் விதமாக என்னையும் ஒருவர் தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார்.அவர் வேறு யாருமல்ல;என் மேல் அவதூறு பரப்பியிருக்கும் எழுத்தாளர் நவீனன் தான். என் மேல் அவதூறு பரப்பவே அவர் என்னை வளர்த்தார் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால் அப்படியும் இருக்கலாம்.

எனக்கும் அவருக்குமான உறவுஒரு மனிதன் சாகக் கிடக்கும் நாயின் மேல் காட்டும் பரிதாபமாகத்தான் ஆரம்பித்தது. இவர் இப்படி அவதுறு பரப்புவேன் என்று அன்றே சொல்லியிருந்தாலும் நான் இவரோடுதான் வந்திருப்பேன். பின்னே என்னைத்தான் எல்லோரும் கல்லால் அடித்தார்களே?வேறென்ன செய்யமுடியும் நான்அப்பொழுது எனக்கு உண்ண உணவும் உடுக்க உடையும் கொடுத்ததற்காக இப்படி அவதூறு பரப்பலாமா என்னநாய்க்கு எதற்கு உடையென்றா கேட்கிறீகள்ஒரு கிழிந்து போன சட்டையை என்னிடம் கொடுத்தபோது இதையேதான் நானும் கேட்க நினைத்தேன். ஆனால் வெளியே என் குரலோ வள் வள்” என்று வந்ததாக ஞாபகம்.


எனக்கு ராஜூ என்று கூடப் பெயர் சூட்டியிருந்தார். ஆனால் என்னை ராஜூ என்று அழைப்பதை விடவும் ஸ்கோ ஸ்கோ” என்று அழைப்பதே பெருமையாக இருக்கும். என்னை ராஜூ என்றழைத்தாலும் சரிஸ்கோ என்றழைத்தாலும் சரி நன்றாக வாலையாட்டுவேன். இதற்காகவெல்லாம் நான் வேதனைப்படவில்லை.

அவரோ தனிமையில் இருந்தார். அவரது காதலி அவரைக் கலியாணம் செய்துகொள்ளவில்லை. நான் அவரது வீட்டிற்குச் சென்ற இரண்டாவது வருடத்தில் அவரது பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துபோயினர். இதற்கெல்லாம் அவர் அசந்ததாகத் தெரியவில்லை. அடிக்கடி என்னுடன் பேசவும் செய்தார். அவர் பேசியதில் முக்கியமாக “ மஹாலட்சுமி தியேட்டரில் கைதி வந்திருக்கிறது. பார்க்கலாமாஎன்ன சொல்கிறாய்? “ உனக்குக் கதை பிடிக்குமா?குறுநாவல் பிடிக்குமா? “ என்றெல்லாம் கேட்பார். நானும் அவரின் ஒவ்வொரு கேள்விக்கும் பதிலாக வாலையாட்டுவேன். கேள்விகள் என்றில்லைஎன்னைப் பார்த்து இருமினாலும்தும்மினாலும்விரட்டினாலும்கத்தினாலும் கூடவாலாட்டுவேன். உங்கள் வீட்டு நாயும் இதையெல்லாம் செய்கிறதுதானே?


செய்யாவிட்டால் நல்ல மனநல மருத்துவரிடம் கூட்டிச் செல்லுங்கள்.

ஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் புதுப் பழக்கம் வந்தது. ஒருநாள் அவரது வேலைக்காரர் - அல்லது எனக்குச் சோறுபோடுபவர் என்றும் சொல்லலாம் - எனக்கு மாமிசம் வாங்கிவந்திருந்தார். நான் முதல் முதலாகஅன்றுதான் மாமிசத்தைக் கண்ணால் பார்த்தேன் என்று சொல்லவேண்டும். இது ஏதோ புதிய உணவாகத்தான் தெரிந்தது. ஆனாலும் அதன் சுவையை என்னால் மறக்கமுடியவில்லை. இந்த உணவையே தினமும் ஏன் இவர்கள் தருவதில்லை என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனாலும் அவர்கள் போடுவதைத்தானே நான் தின்றாக வேண்டும்அதுதானே ஒரு அடிமையின் மிக முக்கியக் கடமை?

எப்படியோ மாமிசத்தின் சுவை என் வாயில் ஒட்டிக்கொண்டது. அவர்களையும் குறை சொல்வதற்கில்லை. அடிக்கடி மாமிசம் வாங்கிப் போடத்தான் செய்தனர். ஆனால் இதில்தான் என்னைப் பற்றிய அவதூறுக்கான முதல் அத்தியாயம் தொடங்குகிறது.


நவீனன் எழுதியிருக்கும் அந்தக் குறிப்பில் அவர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எனக்கு இறைச்சி நாளாம். இறைச்சி வேண்டித் தவம் கிடந்தேனாம். இறைச்சி கிடைக்கும் வரை நான் அவரையே சுத்திச் சுத்தி வந்தேனாம். எப்படியெல்லாம் திரித்திருக்கிறார்நான் தினமும்தான் அவரைச் சுத்திச் சுத்தி வந்தேன். தினமும்தான் அவரை நக்கினேன். அதையெல்லாம் அவர் எப்படி மறந்தார்இதை விடுங்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் இறைச்சிக்காகக் காத்திருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறாரேநாய்களுக்கு வெள்ளியும் சனியும் எப்படித் தெரியும்அது தெரியாமல் நானெப்படிக் காத்திருக்கமுடியும் ?

நீங்களாக ஒன்றைப் பிறருக்குக் கொடுத்தால் அவர் உங்களிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளக் காத்திருப்பதாகவும்அவரின் ஒவ்வொரு செயலையும் உங்களின் உபகாரத்தோடு சம்மந்தப்படுத்திப் பார்த்து மகிழ்வதும்,உங்களை நீங்களே தர்மப்பிரபுவாக நினைத்துக்கொள்வதும்உயர்ந்தவரென்று பிறர் பாராட்டவேண்டுமென்பதுதானே உங்களின் நோக்கம்?

இதைவிடக் கொடுமையென்னவென்றால் நவீனன் அவரது குறிப்பில்எனக்கு இறைச்சி போடும் முன்னதாக அவருக்குக் காபி கொடுக்கப்படுவதைப் பார்த்து நான் நினைத்துக் கொள்வதாக ஒரு யூகம் செய்திருக்கிறார். அதுவும் தவறு. எனக்கு இறைச்சி வருவதற்கு முன் அந்த வேலைக்காரன் அவருக்குக் காபி கொடுப்பான். அதனை நான் பார்த்துக் கொண்டே இருப்பேன். அப்பொழுது நான் உங்க மனிதஜாதியே இப்படித்தான். எதிரில் ஒரு நாலு கால் மிருகம் பட்டினி கிடப்பது மறந்துவிடும். உங்களுக்கு இரண்டு கால் தான். இருந்தாலும் நீங்கதான் பிரதானம் என்கிற திமிர்” என்று சொல்வதுபோல் இருக்கிறதென்று யூகித்திருக்கிறார். நான் ஒருநாளும் இப்படி நினைத்ததில்லை. சொல்லப்போனால் அவர் காபி குடிக்கும்போது அந்தக் காபியில் எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் நன்றாக இருக்குமென்று வேண்டுமானால் சில சமயம் நினைத்ததுண்டு.

எனக்கு வயதாக வயதாக என் எஜமானனின் மேல் அதிக பற்றுதல் உண்டானதென்னவோ உண்மைதான். அடிக்கடி அவரது காலை நக்குவது எனக்கு மிகப்பிடிக்க ஆரம்பித்தது. அவரது காலை நக்காவிட்டால் எதையோ இழந்ததாகவே உணர்வேன். இதைப் பற்றியும் ஒரு யூகம் செய்திருக்கிறார். அதுதான் அவர் என்னைப் பற்றிச் செய்த மிகச் சரியான யூகம். அதையும் அந்தக் குறிப்பிலேயே எழுதியிருக்கிறார். நான் அவரது காலை நக்குவதையும்அவர் அதைச் சகிக்காமல் என்னை அடிப்பதையும் பற்றி அந்தக் குறிப்பில் நீ ஏன் என்னை அடிக்கிறாய்? நீ இறைச்சி வாங்கித் தருவதற்கென்றா நான் இதைச் செய்கிறேன்நானோ நாய் ஜென்மம். மனிதன் காலை நக்குவதில் அதுவும் உன்னைப் போல் தயை காட்டுபவர்களின் காலை நக்குவதில் எங்களுக்கு ஒரு தனி ருசி. நீ இதைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றவாறு எழுதியிருக்கிறார். இது உண்மைதான். எல்லா நாய்களுமே தன் எஜமானனை நக்கத்தானே செய்கின்றன.

ஆனால் அதற்குப் பிறகு அவர் ஏனோ எப்பொழுதுமே கான்வாஷ் ஷூ அணிந்து கொண்டேயிருந்தார். அவரது ஷூவையும் நான் நக்கத்தான் செய்தேன். அவரது காலைக் காட்டிலும் அவரது ஷூ இன்னும் நன்றாகவே இருந்தது. இது இப்படியே போய்க்கொண்டிருந்தது.

இதற்குப் பிறகுதான் என் மீதான அவதூறின் இறுதிக்கட்டம் தொடங்கியது. ஒருநாள் அவரது நண்பரொருவர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். இருவரும் என்னென்னவோ பேசிக்கொண்டேயிருந்தார்கள். நீண்ட நேரத்திற்குப் பிறகு அவரது நண்பர் என்னைப் பார்த்து எதையோ சொன்னார். பின் இருவரும் சென்றுவிட்டனர்.


அதற்குப் பிறகு ஒருவாரம் நான் அந்த வீட்டில் இருந்தேன். பின் எங்கிருந்தோ வந்த ஒரு வண்டியில் நிறைய நாய்கள் அடைக்கப்பட்டிருந்தன. அந்தக் கூண்டில் என்னையும் ஏற்றிவிட்டார்கள். எதற்காக என்று இதுவரைக்கும் தெரியவில்லை.


நடந்தது இதுதான்.

ஆனால் நவீனனின் குறிப்பில் அந்த நண்பர் வந்தது வெள்ளிக் கிழமை என்றும்,அன்று எனக்கு இறைச்சி நாளென்றும்நீண்ட நேரமாகியும் எனக்கு இறைச்சிபோடாததால் நான் என் எஜமானனான நவீனனை இறைச்சிக்காகக் கடித்து விட்டதாகவும் எழுதியிருக்கிறார். எத்தனை பெரிய அவதூறுஇறைச்சிக்காகச் சொந்த எஜமானனையே கடித்துவிடும் அளவிற்கா நான் மோசமாகிப் போனேன். என் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்தப் பழியை நான் எப்படிப் போக்குவது?

கடந்த 45 வருடங்களாக என்னைப் பற்றி மக்களிடம் பரவியிருக்கும் இந்த
மாயப்பிம்பத்தை நான் எப்படி உடைத்தெரியப் போகிறேன்எனக்கு யார் நீதி சொல்லப் போகிறார்கள்நீங்களா ?


பின்குறிப்பு : இக்கதை வெட்டிபிளாக்கர்ஸ் நடத்திய சிறுகதைப்போட்டிக்காக எழுதப்பட்டது. இக்கதையில் வரும் ஒரு ராத்தல் இறைச்சி கதையைப் படிக்க இங்கே தொடவும்! 

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : காக்கையும் குருவியும் எங்கள் ஜாதி