Wednesday, April 23, 2014

டிஜிட்டல் உயிர்!

காலை மணி பதினொன்றைத் தொட்டபோது, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருந்த குறிப்பினை, பூஜ்ஜியம் ஒன்றாக மாற்றி, ரேடியோ அலைகளின் வழியாக தரனின் காதுகளில் பொறுத்தப்பட்டிருந்த ஸ்பீக்கரில் “ உங்கள் நண்பர்களைப் பார்க்கப்போவதாகக் கூறியிருந்தீர்கள், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாமா?” என்றவாரு வினவியது 23 ஆம் நூற்றாண்டின் அதிவேகக் கணினி. ஏற்கெனவே தயாராகியிருந்த தரன் தலையை மட்டும் மேலும் கீழுமாக அசைத்தான். தரனின் இந்த ஒப்புதலை சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த கேமராக் கண்களின் மூலமாகப் பெற்ற அந்தக் கணினி தனது வேலைகளை ஆரம்பித்தது.

கணினியிலிருந்து பூஜ்ஜியம் ஒன்றாகப் பெறப்பட்ட தகவலை ”தரன் தயாராகிவிட்டார்; கிளம்பி வரவும்” என்பதாகப் புரிந்துகொண்டு பார்க்கிங்கிலிருந்து கிளம்பி நேராக வாசலில் வந்து நின்றுகொண்டு தரனின் வரவுக்காகக் காத்திருந்தது நியூட்ரினோ என்று பெயரிடப்பட்ட கார்.

தரன் ஏறிக்கொண்டதும் ஏற்கெனவே கணினியிலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஹோட்டல் சுஹில் இண்டர்நேசனலை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்ததுடன், தரனின் மற்ற இரண்டு நண்பர்களின் கார்கள் எங்கே வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், அவை எப்பொழுது ஹோட்டலை வந்தடையும் என்பதையும் தரனின் முன்பாகக் காற்றுத் திரைகளில் அடிக்கடி காட்டிக்கொண்டிருந்தது நியூட்ரினோ. இதனால் “எங்க இருக்கிற, எப்போ வருவ?” போன்ற கேள்விகளும், தொலைபேசி உரையாடல்களும் எப்பொழுதோ ஷிப்ட் டெலிட் செய்யப்பட்டிருந்தன.

தரன்,சிந்தீப்,பரத்,ஆரவ் ஆகிய நால்வரும் கடந்த 25 நாட்களுக்கும் முன்பாக சோசியல் நெட்வொர்க் ஒன்றில் அறிமுகமாகி, பழகி, நண்பர்களாகி இன்று அவர்களது முதல் சந்திப்பை ஹோட்டல் சுஹில் இண்டர்நேசனலில் ஏற்பாடு செய்திருந்தார்கள். 

ஆரவ் ஏற்கெனவே ஹோட்டலுக்கு வந்துவிட்டான் என்ற தகவலையும் கணினியிலிருந்து பெற்று அதையும் தரனின் முன்பாக மின்னிக் காட்டியது.

தரன் ஹோட்டலை அடையும் முன்பே மற்ற மூவரும் ஆஜராகியிருந்தனர்.

“ஹே மச்சி, வாடா வாடா. ஆரம்பிக்கலாமா? “ என்றவாரு தட்டுக்களில் பரிமாறப்பட்டுக் காத்திருந்த உணவு வகைகளைக் காட்டிக் கேட்டான் சிந்தீப்.

“ கண்டிப்பா, பேசுறதெல்லாத்தையும் தான் நாம நிறையப் பேசிட்டோமே?  என்னதான் டிஜிட்டல்ல, 3D ல பார்த்தாலும் நேர்ல பாக்குறது மாதிரி இருக்கிறதில்லைல? “

“ ஆமா மச்சி, இருந்தாலும் இதென்ன பழைய காலமா? நேர்ல வந்து பேசுறது, பழகுறது மாதிரியேயான உணர்வுகளைத்தான் இப்போ இருக்கிற டெக்னாலஜி ரொம்பச் சுலபமா செய்யுதே? இருந்தாலும் ஒரே இடத்துல உட்கார்ந்துட்டு சாப்பிடறது, அரட்டை அடிக்கிற ரியல் ஃபீலிங் வர்றதில்லை” - பரத்.

” சரி, முதல்ல சாப்பிடலாம்; சாப்பிட்டுட்டே பேசலாம், செம பசி” என்றவாரு உணவுத் தட்டுக்களை இழுத்தான் தரன்.

“ ஹே, நீங்க சாப்பிடுங்க, எனக்கு கொஞ்சம் வயிறு ஒரு மாதிரியா இருக்கு. எதுவும் சாப்பிடுற மூடுல நான் இல்ல”- ஆரவ்.

“ அடங்கொக்கா, நீ தானடா அடிக்கடி சாப்பாட்டு ஐட்டத்தையெல்லாம் போட்டோ எடுத்து அப்லோடு பண்ணிட்டிருப்ப? சொல்லபோனா நம்ம மீட் பண்ணப்போறோம்னு ரிமைண்டர் செட் பண்ணும்போதே உனக்குப் பிடிச்ச சாப்பாட்டு ஐட்டங்களையும், அத ஆர்டர் பண்ணிடட்டுமான்னும் என் கம்ப்யூட்டர் கேட்டுச்சே? “

“ அது அப்டித்தான், இருந்தாலும் இப்போ முடியாது”

“ ஒன்னு பண்ணு, மொதல்ல கொஞ்சம் தண்ணி குடி, அப்புறமா கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்கலாம். நாங்க வேணா வெய்ட் பண்ணுறோம்” - தரன்.

“ இல்ல நீங்க சாப்டுங்க, என்னால கொஞ்சம் கூட சாப்பிட முடியாது”

“ நீங்க ரோபோட்டா- சாரி நீ ஒரு ரோபோட் தானே? “ - கொஞ்சம் கோபமாக தன் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் பரத். பரத் இப்படிக் கேட்டதும் ஏதோ புரிந்ததாகப் பரத்தைப் பார்த்தான் தருன்.

“ ம்ம்ம்” என்றவாரு தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டே இருக்கையிலிருந்து எழுந்தது ஆரவ் என்ற ரோபோட்.“சாரி கைய்ஸ்,எனக்கு ரொம்ப நாளா மனுஷங்க கூடப் பழகனும்னு ஆசை, அதான் ஒரு ஃபேக் ஐடி கிரியேட் பண்ணி மனுஷங்க மாதிரி சில விஷயங்களைச் செஞ்சுட்டு இருந்தேன். பட் நீங்க இப்படி கண்டுபிடிப்பீங்கனு நான் நினைக்கலை. எனிவே இனி என்னை உங்க கூட சேர்த்துக்க மாட்டீங்க, பை!” என்றவாரு பதிலுக்குக் காத்திருக்காமல் அங்கிருந்து அகன்றது ஆரவ்.

“அடப் பாவிங்களா இப்டியெல்லாம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களா? , பாவிங்களா கூட தப்பு, பாவிங்கன்னா மனுஷனைச் சொல்லுறது. பாவிக்கு அஃறிணைல என்ன வரும்?” சிரித்தவாறே சாப்பிட ஆரம்பித்தான் தருன்.

எதையெதையோ பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர் மூவரும். திடீரென பரத்தைப் பார்த்த சிந்தீப் “ ஆமா, அவன் ரோபோட்னு உனக்கு எப்படித் தெரிஞ்சது? “

“ அது பார்த்தாவே தெரியுதே?”

“ எங்களுக்குல்லாம் தெரியலையே? உனக்கு மட்டும் எப்படி?”

” அப்போ நீயும்? “ - சிந்தீப்.

“ இதுக்கு மேல நானும் தாக்குப்பிடிக்க முடியாது. நானும் ரோபோட் தான். நானும் அதே காரணத்துக்காகத்தான் உங்க கூட பழகினேன். எச்சரிக்கையாத்தான் இருந்தேன். ஆனா! இட்ஸ் ஓகே. இப்போ சாப்பிட்டதெல்லாம் ஏற்கெனவே தனித்தனித் தனிமங்களா பிரிஞ்சு அது அதுக்கான பெட்டில சேர்ந்துடுச்சு. அத முதல்ல கிளியர் பண்ணனும்.பை ”

” ஆரவ் ரொம்ப பழைய ரோபோட் போல, பரத் கொஞ்சம் புதுசு. ஏன்னா ஆரவ் ஒரு ரோபோட்னு பரத் மொதல்லையே கண்டுபிடிச்சிட்டான். பட் பரத் ஒரு ரோபோட்னு ஆரவால கண்டுபிடிக்க முடியல. அதோட இப்போ வர்ற ரோபோட்டுகள் எல்லாம் அதி நவீனமா வருதுங்க. மனுசனுக்கும் அதுக்கும் வித்தியாசமே கிடையாது. இன்னொரு ரோபோட்டால நம்ம எதிர்ல இருக்கிற மனுஷனா ரோபோட்டானு கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கெல்லாம் வர்றதா சொல்லுறாங்க. இது எங்க போய் முடியுமோ? “ கவலைப் படுவதைப் போன்ற முகபாவத்துடன் கூறினான் சிந்தீப்.

“ என்ன எழவுடா இது? மனுஷங்க எல்லாரும் எங்கதான் போனாங்க?”

“ ஒருவேளை நம்ம ரண்டுபேரு மட்டும்தான் பூமில மிச்சமிருக்கிற மனுஷங்களோ? “ - சிந்தீப்.

“ க்க்கும்.” என்று முனகிக்கொண்டே மிச்சமிருந்த உணவுகளையும் உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான் தரன்.

கொஞ்சம் அரசியல், கொஞ்சம் காதல், கொஞ்சம் பிகர் கரக்ட் செய்தல் என்றவாரு மீண்டும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும். இவர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்த அறையில் சிறு சண்டை ஏற்பட்டு, எங்கிருந்தோ வந்த பீங்கான் தட்டு சிந்தீப்பின் தலையை நோக்கி வந்தது. அப்பொழுது டேபிளில் இருந்த சிந்தீப்பின் கர்சீப் கீழே விழவும், அதை எடுக்கக் குனிந்ததும் மிக இயல்பாய் இருந்தபோதும் தரனுக்கு செயற்கையாகவே தோன்றியது.

“ஒருவேளை?” குழம்பினான் தரன்.

தரனின் சந்தேகம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. சந்தீப்பும் தான் ஒரு ரோபோட் என்று ஒப்புக்கொண்டான்( ஒப்புக்கொண்டது).

“ நானும் ஆரவை ஒரு ரோபோட்னு முதல்லயே கண்டுபிடிச்சிட்டேன். ஏன்னா அது ரொம்ப பழைய மாடல். சுமார் 4 மாசத்துக்கு முன்னாடி தயாரிக்கப்பட்டது. அதுல எங்கள மாதிரி, ஐ மீன் என்னையும் பரத்தையும் மாதிரி மனுஷங்க சாப்பிடுற சாப்பாட்டு ஐட்டங்களை சாப்பிட்டு அதுல இருக்கிற தனிமங்களைத் தனித்தனியா பிரிச்சு சேமிச்சு அப்புறம் டிஸ்போஸ் பண்ணுற வசதி இல்லை. அப்புறம் பரத்தும் எனக்கு முந்தைய மாடல்தான். அதான் அதுவும் இவ்ளோ நேரம் தாக்குப்பிடிக்கலை. எனிவே நான் ஒரு மனுஷனைப் பார்க்கனும், பழகனும்னு நினைச்சேன். உங்கிட்ட பழகினது மூலமா எனக்கு அது கிடைச்சிடுச்சு!’

“ உன் விருப்பம் நிறைவேறிடுச்சு, ஆனா என்னால ஒரு மனுஷனைப் பார்க்க முடியலையே, எல்லாமே உயிரிள்ளாத மெஷின்களாத்தானே இருந்துட்டு இருக்கு. நான் எப்பத்தான் ஒரு மனுஷனைப் பார்க்கப்போறேன்? ச்சே. வாழ்க்கையே வெறுத்திடுச்சு” என்றவாறு இருக்கையிலிருந்து எழுந்து வாசலுக்கு வந்தான் தருன். நியூட்ரினோ அவனை மீண்டும் வீட்டிற்குச் சுமந்து வந்தது.

“மனுஷங்களே இல்லையா? மனுஷங்களைப் பார்க்கவே முடியாதா? எல்லா மனுஷங்களும் செத்துப் போயிட்டாங்களா? ஒருவேளை மனுஷ இனமே அழிஞ்சுடுச்சா? இங்க நான் மட்டும் இருந்து என்ன செய்யப்போறேன்? செத்தே போலாம்” என்ற சிந்தனைகள் தரனுக்குள் ஓட கயிற்றினை எடுத்துக்கொண்டு வாசலில் இருந்த மரத்தில் தூக்கிட்டுக்கொண்டான். அவனது கழுத்து நெறிபட்டு அழுந்த, அவனது மொத்த உடல் எடையும் புவியீர்ப்பினால் இழுக்கப்பட்டு, கழுத்து அறுபட்டு, அறுபட்ட இடத்தில் பச்சை நிறத்தில் சிலிக்கான் தகடுகளும், ஒயர்களும் பிய்ந்து தொங்கின.


தரன் வீட்டை விட்டுப் புறப்பட்டதிலிருந்து, திரும்ப வீட்டிற்கு வந்து தூக்கிட்டுக் கொண்டது வரை அனைத்தையும் கவனித்துவந்த டாக்டர்.கோவிந்த் தனது பிரத்யேக அறையிலிருந்துகொண்டு கீழ்க்கண்டவாறு பேச ஆரம்பித்தார். அவர் பேசுவதை அருகிலிருந்த கணினி தனது திரையில் எழுதிக்கொண்டிருந்தது.

“ மதிப்பிற்குரிய ஐ.ஜி. அவர்களுக்கு,

முன்னாள் அமைச்சரின் மகனான தரன் தற்கொலை குறித்து தாங்கள் என்னிடம் அளித்திருந்த வேலை நிறைவடைந்துவிட்டதாக நினைக்கிறேன். தரனைப் பற்றித் தாங்கள் கொடுத்த தகவல்களையும், தரனின் மூளையிலிருந்து பெறப்பட்ட சில நினைவுகளையும், அவரது ஹார்மோன் லெவல்களையும் வைத்து நாங்கள் உருவாக்கிய ரோபோட் இன்றும் தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்துகொண்டது. இது நான்காவது முறை. மொத்தமாகச் செய்யப்பட்ட ஐந்து சோதனைகளில் நான்கு முறை தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்திருக்கிறது.தரனிற்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டிருந்தால் அவர் நிச்சயமாக தூக்கிட்டுத்தான் தற்கொலை செய்திருப்பார். வேறு வழிகளில் இறந்திருந்தால் அது கொலையாகவோ, விபத்தாகவோ இருக்கலாம். நன்றி.”

திரையில் எழுதியிருந்த வாசகங்களைப் படித்துவிட்டு, திரையின் கீழே அவரது கை ரேகையையும் பதித்து செண்ட் இட் டூ ஐ.ஜி என்று கட்டளையிட்டுவிட்டு வெளியேறினார் டாக்டர். கோவிந்த்.

7 comments:

rajamelaiyur said...

செம கதை பாஸ் ... இதுபோல பல கதைகள் எழுதுங்கள் .

rajamelaiyur said...

உங்களை சின்ன சுஜாத்தா என அழைக்கலாம் போல உள்ளது

செல்வா said...

//செம கதை பாஸ் ... இதுபோல பல கதைகள் எழுதுங்கள் .//

நன்றிங்க :))))

தமிழ்மணி said...

Supper selva.... Arumaiyana kathai.... valthukkal

Madhavan Srinivasagopalan said...

என்ன செல்வா, மறுபடியும் கதையளக்க ஆரம்பிச்சிட்டியா ?

Unknown said...

VERY NICE

பிரதீபா said...

Super Selva..Nallaa irukkunga.. Sci-Fi yosikkavum moolai venume, neenga robo-vaa? :)