Saturday, January 30, 2016

டிஃபன் பாக்ஸ்!

சரியாகப் பதினொரு மணிக்கெல்லாம் மருத்துவமனையில் இருக்க வேண்டும். இந்த நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மனநல மருத்துவமனை அதுதானென்று மகள் சொன்னாள். எங்களுக்கு இந்த ப்ராஜெக்ட் கிடைத்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகியிருக்கிறது. பெரும்பாலும் ஒரு ப்ராஜக்டினை முடிப்பதற்கு குறைந்தபட்சமாக இரண்டு மாதங்களுக்கும் மேலாக எடுத்துக் கொள்வோம். இந்த முறை இரண்டே வாரங்களில் முடிவடைந்துவிடும் போலத்தான் இருக்கிறது.

" மொத்தமா எவ்ளோ பேசிருக்க?"

"எட்டு லட்சம்ப்பா"

"அட்வான்ஸ் கொடுத்துட்டாங்களா?"

"போனவாரத்துலயே 2 லட்சம் கொடுத்துட்டாங்க. ப்ராஜெக்ட் சக்சஸா முடிஞ்சா மீதிப் பணத்தைத் தந்துடறதா சொல்லிருக்காங்க"

இரண்டு வாரங்களில் எட்டு லட்சத்திற்கு அப்படியென்ன ப்ராஜெக்ட், அதுவும் மனநல மருத்துவமனையில்? நானும் என் மகளும் பெரிய பெரிய மருத்துவ உபகரணங்களை விற்பதிலோ அல்லது வேறெதேனும் மருந்துக் கம்பனிகளிலோ வேலை பார்க்கவில்லை.  இத்தனைக்கும் என் மகளும் நானும் சேர்ந்து செய்யும் முதல் ப்ராஜெக்ட் இதுதான். ஏழெட்டு வருடங்களுக்கு முன்னதாக எனக்கு இந்த டிஃபன் பாக்ஸ் கிடைத்து, அதைக் கொண்டு இப்படியும் சம்பாதிக்கலாமென்று தெரியவந்ததிலிருந்து இப்போது வரைக்கும் நான் ஒருவன் மட்டுமே இந்த பிசினஸைச் செய்துவருகிறேன். இதை பிசினஸ் என்று கூறமுடியாதுதான். சேவையென்று கூறலாம். யாரோ ஒருவருக்குப் பயன்பட்டாலும் அது சேவைதானே?

அப்படியென்ன சேவை இது? என்னிடம் ஒரு டிபஃன் பாக்ஸ் இருக்கிறது. இதை ஒரு மூன்று அமாவாசைகள் மூடி வைத்திருந்துவிட்டு, மூன்றாவது அமாவாசை அன்று நண்பகல் பனிரண்டு மணிக்கும் முன்பாகத் திறந்தோமானால் யார் அதைத் திறக்கிறார்களோ அவர்கள் முழுப் பைத்தியமாகிவிடுவார்கள். சந்தேகமே வேண்டாம். உண்மைதான். இது வரையிலும் எத்தனையோ நபர்களை இப்படிப் பைத்தியமாக மாற்றியிருக்கிறேன். கடந்த ஆறேழு வருடங்களாக நானும் என் குடும்பமும் செல்வச் செழிப்பாக வாழ்ந்து வருவதற்கு இந்த டிபஃன் பாக்சின் அதிசயச் சக்திதான் காரணம். டிபஃன் பாக்சைத் திறக்கிறவர் பைத்தியமாகிவிடுவார் என்பதையே நம்பமுடியாதுதான். ஒரு பேச்சுக்கு அதனை நம்பினாலும், இப்படிக் கெட்ட சக்தியைக் கொண்ட ஒரு அதிசயப் பொருளைக் கொண்டு எப்படிச் சம்பாதித்து வாழ முடியும்? உண்மையில், நல்ல பலன்களைத் தரும் அதிசயப் பொருளாக இது இருந்திருந்தால் கூட இத்தனை சம்பாதித்திருப்போமா என்று சந்தேகமாகத்தான் இருக்கிறது. நம் ஊரில் அடுத்தவனின் வளர்ச்சியில் சிரிப்பவர்களைக் காட்டிலும், வீழ்ச்சியில் சிரிப்பவர்கள்தானே அதிகம்? நம்மூரில் மட்டுமில்லை. உலகெங்கிலும் இருக்கும் எல்லா மனிதர்களுமே இப்படித்தான். பொறாமையும் மனித மனத்தில் விளைகிற விசயம்தானே?

நாங்கள் போய்க்கொண்டிருக்கும் இந்தப் ப்ராஜெக்டும் கூடப் பொறாமையால் உருவானதுதான். இந்த நகரத்தில் இருக்கும் மிக முக்கியமான, மிகப் பிரபலமான மனநல மருத்துவரான இவரைப் பைத்தியமாக்கிவிடுவதுதான் எங்கள் நோக்கம். அதற்காகத்தான் எட்டு லட்சம் ரூபாய் பிசினஸ் பேசியிருக்கிறோம். எங்களிடம் இருக்கும் இந்த டிபஃன் பாக்ஸைப் பற்றித் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவானவர்களே. நாங்கள் இப்படியொரு சேவையைச் செய்கிறோம் என்று மட்டும் ஒரு சிலருக்குத் தெரியும். எங்களிடம் சொல்லிவிட்டால், அவர்கள் காட்டும் அந்தக் குறிப்பிட்ட நபரை மூன்று மாதங்களுக்குள்ளாக எப்படியும் பைத்தியமாக்கிவிடுவோம் என்பது மட்டுமே எங்களின் க்ளையண்டுகளுக்குத் தெரியும். எப்படிப் பைத்தியமாக்குகிறோம் என்பதோ, எதனால் அவர்களின் எதிரிகள் பைத்தியமாகிறார்கள் என்பதோ என்னையும், என் குடும்ப உறுப்பினர்களையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. எங்களிடம் ஏதோ அதிசயச் சக்தி இருக்கிறது என்று மட்டும் பேசிக்கொள்கிறார்கள். பில்லி, சூனியம், பேய், பிசாசு வேலைகளாக இருக்குமென்றும் கூடச் சிலர் சந்தேகிப்பதுண்டு. ஆனால், டிபஃன் பாக்ஸைப் பற்றி எந்தத் தகவலும் யாருக்கும் தெரியாது. 

ஒரு ப்ராஜெக்டை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாங்கள் யாரைப் பைத்தியமாக்க ஒப்புக் கொண்டோமோ அவர்களுடன் எப்படியாவது நெருங்கிப் பழக ஆரம்பித்துவிடுவோம். இந்த டிபஃன் பாக்ஸின் அதிசயச் சக்தி வேலை செய்ய வேண்டுமானால் மூன்று அமாவாசைகள் வரையிலும் காத்திருக்க வேண்டும். அதற்காகத்தான் ஒரு ப்ராஜெக்டை ஒப்புக் கொண்டதிலிருந்து மூன்று மாதங்கள் காலக்கெடு கேட்பது. அந்த மூன்று மாத காலத்திற்குள் எங்களது டார்கெட்டுடன் நாங்கள் நெருக்கமாகிவிடுவோம். அந்த மூன்றாவது அமாவாசை தினத்தன்று பகல் பனிரண்டு மணிக்கும் முன்பாக எங்களது டார்கெட்டை எப்படியாவது அந்த டிபஃன் பாக்ஸைத் திறக்குமாறு செய்துவிடுவோம். அப்படித் திறந்துவிட்டால் போதும். எங்களின் ப்ராஜெக்ட் முடிவடைந்துவிடும். அந்த டிபஃன் பாக்ஸைத் திறந்த அந்த நபர் அன்றிலிருந்து முழுப் பைத்தியம்தான். கடந்த ஏழு வருடங்களாக டிபஃன் பாக்ஸைத் திறந்துவிட்ட எல்லா மனிதர்களுமே இப்போது வரையிலுமே பைத்தியமாகத்தான் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு சில தடவைகள் மட்டும் எங்களின் திட்டம் பலிக்காமல் போயிருக்கிறது. அதாவது அந்தக் குறிப்பிட்ட நாளில் நாங்கள் எங்களது டார்கெட்டைச் சந்திக்க முடியாமல் போனதாலோ அல்லது வேறெதேனும் காரணங்களாலோ அப்படி நேர்ந்ததுண்டு. அப்படி ஆகிவிட்ட சமயங்களில் அடுத்த மூன்றாவது மாதம் வரையிலும் காத்திருந்து சில ப்ராஜெக்ட்டுகளை முடித்திருக்கிறோம். அதனால்தான் எங்களின் சேவைக் கட்டணம் இப்பொழுதெல்லாம் லட்சங்களில் போய்க் கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக எந்தப் ப்ராஜெக்டும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்காக எங்களுக்கு வருத்தமெல்லாம் இல்லை. ஏனென்றால், அந்த டிபஃன் பாக்ஸிற்குச் சக்தி கிடைப்பதற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கிறபடியால் எப்படியும் ஏதேனுமொரு ப்ராஜெக்ட் கிடைக்குமென்று காத்திருந்தோம். அப்படியாகக் கடந்த வாரத்தில் கிடைத்ததுதான் இந்த மனநல மருத்துவரது ப்ராஜெக்ட். இந்த நகரத்தில் இருக்கும் மற்றொரு மனநல மருத்துவர்தான் எங்களது க்ளையண்ட். எங்களது நகரத்தில் இருக்கும் இரண்டாவது பெரிய மனநல மருத்துவர் அவர். அவர் சொல்லித்தான் இவரைப் பைத்தியமாக்குவதற்காக, முழு அமாவாசை நாளான இன்று, டிபஃன் பாக்ஸுடன் கிளம்பிவிட்டோம்.

************
கதை சொல்லியின் மகளான நான் கடந்த ஒரு வாரத்திற்கும் முன்பாக எங்களது டார்கெட் என்று கதை சொன்னவர் கூறிய, இந்த நகரத்திலேயே மிகவும் புகழ்பெற்ற மனநல மருத்துவரைச் சந்தித்தேன்.

" எனக்கு எதும் பிரச்சினை இல்ல டாக்டர். எங்க அப்பாவுக்குத்தான்"

" என்ன பிரச்சினை? "

" அது வந்து... அவருக்கு என்னமோ ஆகிடுச்சு டாக்டர். திடீர் திடீர்னு என்னென்னமோ ஒளர்றாரு.."

" என்ன ஒளர்றாரு? "

" அடிக்கடி ஏதோ டிபஃன் பாக்ஸைப் பத்திச் சொல்றாரு.."

" டிபஃன் பாக்ஸைப் பத்தியா? உங்க வீட்டுல டிபஃன் பாக்ஸ் எதுவும் காணாம போயிடுச்சா? தெளிவா, பொறுமையா சொல்லுங்க."

" அதில்ல டாக்டர். அவர்கிட்ட எதோ டிபஃன் பாக்ஸ் இருக்கிறதாகவும், அதைத் திறக்கிறவங்க பைத்தியம் ஆகிடுவாங்கன்னும் சொல்லுறாரு டாக்டர். அடிக்கடி வீட்டுல இருக்கிற ஒரு டிபஃன் பாக்ஸை எடுத்து வந்து முன்னாடி நீட்டி, இதத் திறந்திடாத, திறந்துட்டா பைத்தியம் பிடிச்சுக்கும்னு சொல்றார். குறிப்பா அமாவாசைல அந்த டிபஃன் பாக்ஸைத் திறக்கறவங்க பைத்தியம் ஆகிடறதாகவும், அத வச்சு நாம மத்தவங்க கிட்ட அவங்களோட எதிரிகளைப் பைத்தியம் ஆக்குறதுக்கு பணம் வாங்கிக்கலாம்னு சொல்றார். எனக்கு ஒரே பயமா இருக்கு. பைத்தியம் ஆகிட்டு வர்றாரோன்னு டென்சனா இருக்கு டாக்டர்."

" ரொம்பவே கவனமா பாத்துக்க வேண்டிய கன்டிசன்தான். எத்தன நாளா இப்படி நடந்துக்கிறாரு?"

" இப்ப ஒரு ரண்டு மாசமாத்தான் . அந்த டிபஃன் பாக்ஸை வச்சு லட்ச லட்சமா சம்பாதிச்சதாகவும், அதன் மூலமா நாங்க வசதியா வாழ்றதாகவும் சொல்றார். அந்த டிபஃன் பாக்ஸோட அந்த கெட்ட சக்தி மூலமா ஏழெட்டு வருசமா இப்படி நிறையப் பேரைப் பைத்தியமாக்கினதாகவும், அத ஒரு பிசினசாகவே செஞ்சுட்டு வர்றதாகவும் அடிக்கடி ஒளர்றாரு டாக்டர். அவரு பைத்தியமாகிட்டாரா டாக்டர்?"

" கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுத்துக்க வேண்டிய சிச்சுவேசன்தான். இப்படியே விட்றாதீங்க. எங்க இருக்கார் அவர்? ஏன் கூட்டிட்டு வரலையா? "

" வீட்லதான் டாக்டர் இருக்காரு. இப்படி சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கவுன்சிலிங்குக்குப் போகனும்னு கூப்பிட்டா கண்டிப்பா வரமாட்டார் டாக்டர்."

" வேற எதாச்சும் சொல்லிக் கூட்டிட்டு வரப் பாருங்க. பேசண்ட்ட நேர்ல பார்த்து விசாரிச்சாத்தான் என்னால எதுவும் சொல்லமுடியும். நேர நேரத்துக்கு சாப்பாட்டுக்கிறாரா? சரியா தூங்குறாரா?"

" சாப்பாடு, தூக்கமெல்லாம் நார்மலாத்தான் இருக்கு டாக்டர். ஆனா, ஏன் இப்படிப் பண்ணுறார்னுதான் தெரியல. ரொம்ப பயமா இருக்கு டாக்டர்."

" ஒன்னும் பயப்பட வேண்டாம். நாளைக்குக் காலைல அவரைக் கூட்டிட்டு வாங்க. ஒரு நாலஞ்சு நாள் இங்க இன்பேசண்ட்டா வச்சு கவனிச்சுக்கிட்டா சரி பண்ணிடலாம். இதவிட மோசமான கேசெல்லாம் பாத்திருக்கோம்."

" நாளைக்குக் கூட்டிட்டு வர்றது சிரமம் டாக்டர். என்னதான் க்ளினிக் வாசல் வரைக்கும் வந்தாலும், அதுக்கு அப்புறம் தெரிஞ்சுட்டு, எங்கிட்ட சண்டைப்போட்டுட்டு திரும்பிப் போய்டுவார் . இதுக்கு முன்னாடி ஒரு தடவ வேறொரு சைக்யாட்ரிஸ்ட் கிட்டப் போகும்போது அப்படித்தான் நடந்துக்கிட்டாரு."

" அவர அப்படியேவும் விட முடியாதே? "

" மயக்க மாத்திரை, தூக்க மாத்திரை எதுவும் கொடுத்து தூக்கிட்டு வந்துடலாமா டாக்டர்? "

" அந்த லெவலுக்கெல்லாம் போக வேண்டாம். ஒன்னு பண்ணுங்க. அவரு வழிலையே போய் கூட்டிட்டு வாங்க. அவர் எதோ டிபஃன் பாக்ஸ்ஸ வச்சு பைத்தியமாக்கி சம்பாதிக்கறதா ஒளர்றாருன்னு சொன்னீங்கள்ல, அப்படி ஒருத்தரப் பைத்தியமாக்கனும்னு சொல்லி, அந்த டிபஃன் பாக்ஸையும் எடுத்து அவர் கைல கொடுத்துட்டு இங்க கூட்டிட்டு வந்துடுங்க. அப்புறம் நான் பார்த்துக்கிறேன். டோன்ட் வொர்ரி"

" அப்படியே சொன்னாலும் அவர் அமாவாசை அன்னிக்குத்தான் அந்த டிபஃன் பாக்ஸோட சக்தி வேலை செய்யும்னு சொல்லி, அமாவாசையன்னிக்குப் போலாம்னு சொல்லுவார் டாக்டர்." 

" அப்டியா. இருங்க, இன்னும் ஒரு வாரத்துக்குள்ள அமாவாசை வருதான்னு பார்ப்போம். இல்லன்னா தூக்க மாத்திரை கொடுத்து தூக்கிட்டு வந்துடலாம். உங்களுக்குப் பின்னாடி இருக்கிற காலண்டர்ல எப்போ அமாவாசைன்னு பாருங்க."

" இன்னும் ஒரு வாரத்துல அமாவாசை வருது டாக்டர். ஃப்ரைடே"

" குட். அப்போ ஒன்னும் பிரச்சினையில்லை. ஃப்ரைடே அன்னிக்கே கூட்டிட்டு வாங்க. மயக்கப்படுத்திக் கூட்டிட்டு வர்றது பெரிசில்ல. ஆனா, அதனாலயே அவர் மேலும் பயந்துக்கலாம். அதுக்காகத்தான் இப்படி."

"தேங்க் யூ டாக்டர். நீங்கதான் அவரோட டார்கெட்டுனு சொல்லித்தான் கூட்டிட்டு வரப்போறேன். தப்பா நினைச்சுக்காதீங்க டாக்டர். எனக்கு வேற வழி தெரியல"

" டோன்ட் வொர்ரி. இந்த மாதிரி நாங்க நிறையப் பார்த்திருக்கோம்."

******

எவ்வளவு பெரிய மருத்துவமனை! எத்தனை எத்தனையோ மனநலம் குன்றியவர்களைத் தேற்றி அனுப்பியவரென்று பெயரெடுத்தவர். பாவம். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவரே பைத்தியமாகப் போகிறார். இத்தனை நாளும் எத்தனையோ மனிதர்களை இந்த டிபஃன் பாக்ஸைத் திறக்க வைத்துப் பைத்தியமாக்கியிருக்கிறேன். ஆனால், இன்று மட்டும் ஏனோ கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் செய்துதானே ஆக வேண்டும். காசு வாங்கியாயிற்றே. அடுத்தது எங்கள் டோக்கன்.

" குட்மார்னிங் டாக்டர். இவர்தான் எங்க அப்பா"

" வாங்க வாங்க. ப்ளீஸ் சிட் டவுன். என்ன விசயம்? "

" தெரில டாக்டர். அப்பாதான் உங்களப் பார்க்கனும்னு சொன்னார். " 

என் மகள் டாக்டரிடம் ஏதோ சைகை செய்யவும், அவரும் தலையசைத்துக் கொண்டு என்னிடம், " சொல்லுங்க சார், என்ன விசயம்?"

" அது வந்து... எதுக்கு உங்களப் பார்க்கனும்னு சொன்னேன்னா... வந்து வந்து.. மறந்துடுச்சு.."

" நல்லா யோசிச்சுப் பாருங்க."

" ஒரு நிமிசம் டாக்டர். உங்களப் பார்க்கனும்னு தோணினவுடனே ஒரு காகிதத்தை எடுத்து எதுக்காகப் பார்க்கனும்னு நினைக்கிறேன்னு ஒரு பேப்பர்ல எழுதினேன். அத எங்க வச்சேன்? பாக்கெட்லயும் காணோம். ஆ, இந்த டிபஃன் பாக்ஸ்ல வச்சேன். இருங்க திறந்து எடுத்துப் பார்க்கிறேன்."

" ஹவ் ஸ்வீட் யூ ஆர். வெரி ப்ரேவ்" என்று கூறிக் கொண்டே என் மகளைப் பார்த்துக் கண் ஜாடை காட்டிக் கொள்கிறார். பாவம். இப்பொழுது இந்த டிபஃன் பாக்ஸை அவரிடம் நீட்டித் திறக்கச் சொல்லப் போகிறேன். அப்புறம் முழுப் பைத்தியம்தான்.

" என்னால் திறக்க முடியல டாக்டர். நீங்க திறந்து பாருங்களேன்"

" குடுங்கப்பா நான் திறக்கறேன்... "

"நோ.. டாக்டர் தான் திறக்கனும். உங்கிட்டவெல்லாம் காட்டமாட்டேன்.."

என் மகள் டாக்டரைப் பார்க்க, டாக்டரும் என் மகளைப் பார்த்து மீண்டும் கண் ஜாடையில் பொறுமையாக இருக்கச் சொல்கிறார். 

" குடுங்க சார். நானே திறந்து பார்க்கிறேன்... அவ்ளோ டைட்டாவா இருக்கு..?"

******

நான்கைந்து நாட்களுக்குப் பிறகு ஒருநாள் காலையில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தபோது அந்தச் செய்தியைப் பார்க்க நேரிட்டது. எங்கள் நகரின் பிரபல மனநல மருத்துவர் என்று பெயரெடுத்த அந்த மருத்துவர் கடந்த இரண்டு தினங்களாக வினோதமாக நடந்து கொள்வதாகவும், என்ன காரணமென்றே தெரியாமல் அவர் மனநலம் பாதிக்கப்பட்டு, நகரின் இரண்டாவது பெரிய மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஒரு பெட்டிச் செய்தி கண்ணில் பட்டது.

" அப்பா, நம்ம ரண்டு பேரும் சேர்ந்து பண்ணின முதல் ப்ராஜெக்ட் க்ரேட் சக்ஸஸ். பேலன்ஸ் ஆறு லட்சம் கிரெடிட் ஆகிடுச்சு. அந்த டிபஃன் பாக்ஸ வழக்கம்போலவே அன்டர்கிரவுண்ட்ல வச்சுப் பூட்டிட்டேன். அடுத்த ப்ராஜெக்ட் கிடைச்சு, மூனு மாசம் ஆகுற வரைக்கும் அது அங்கயே இருக்கட்டும்." என்று சிரிக்கிறாள் மகள்.

No comments: