Wednesday, March 21, 2012

கோழிக்கிறுக்கல் - தமிழர்கள் மறந்துவிட்ட ஒரு வரலாறு!


வரலாற்றினை மறந்துவிடுவது தமிழர்களாகிய நமக்கொன்றும் புதிதில்லை. போற்றி வளர்க்க வேண்டிய வரலாறுகளைக் கேலிக்குரியதாக்கி, வரலாறு படிப்பவர்களைக் கண்டால், "வரலாறு படிப்பதை விட்டுவிட்டு வரலாறு படைக்கக் கற்றுக்கொள்" என்றவொரு இலவச அறிவுரையை வழங்கிவிட்டுப் பரிகசித்துச் செல்லக்கூடிய ஒரு சூழலில், எந்த ஒரு வரலாற்றுத் தகவலும் அழிந்து போவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. 

ராஜ ராஜ சோழனையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும் மதிப்பெண்களாக்கி பாடப்புத்தங்களில் உறங்க வைத்துவிட்டோம். எமி ஜேக்சன்கள் வந்து “மறண்டுட்டியா?” என்று கேட்காமலோ, நமீதாக்கள் வந்து தங்களின் திரையுல அனுபவத்தை மச்சான்களிடம் சொல்லாமலிருந்தாலோ சுதந்திர தினத்தைக் கூட மறந்துவிடும் நிலையில்தான் இருக்கிறோம். சரி போனது போகட்டும். கோழிக் கிறுக்கல் என்றவொரு பதத்திற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் உள்ள நெடும் வரலாற்றுத் தகவலை உங்களிடம் சேர்ப்பிக்கவே இவ்வளவு பீடிகை போட வேண்டியிருந்தது.

கோழிக் கிறுக்கல் என்றால் கிறுக்கர்கள் கிறுக்குத்தனமாய் எழுதுவது என்பதே பலரது எண்ணமாயிருக்கிறது. உண்மையில் கோழிக் கிறுக்கலுக்கும் கிறுக்குத் தனத்திற்கும் அணுவளவு கூட, ஏன் அணுக்கரு அளவிற்குக் கூடச் சம்பந்தம் இல்லை. இனி வரலாற்றுக்குள்...

பல நூறு கோடியாண்டுகளுக்கு முன்னர் உலகைக் கோழிகளே ஆதிக்கம் செலுத்தி வந்தன. கோழிகளே மன்னர்களாக உலகை ஆண்டுவந்தன. அந்தக் காலகட்டங்களில் கோழிகள் பேசும் திறமையுடையவையாகவும், பாடும் திறமையுடையவையாகவும் திகழ்ந்து வந்தன. மனிதர்கள் அவர்களுக்கு அதாவது அவைகளுக்குச் சேவகம் செய்யும் அடிமைகளாக வாழ்ந்துவந்தனர்.
பல நூறு ஆண்டுகள் கோழிகளின் அரசாட்சியே நடைபெற்று வந்தது. கோழிகளும், அவற்றின் அடிமைகளான மனிதர்களும் இன்புற்று வாழ்ந்துவந்தனர். வானம் பெய்யெனப் பெய்தது என்பதைக் காட்டிலும் கோழி கொக்கரித்தாலே பெய்தது என்று சொல்வது சரியாக இருக்கும். தற்பொழுது வாழும் கோழிகளின் வாழ்க்கையைப் பார்த்தால் இவைகளா ஒரு ராஜ்ஜியத்தைக் கட்டிக் காத்து ஆண்டுவந்தன என்று நம்புவதற்கு சற்றுச் சிரமமாகவே இருக்கும். இருந்தாலும் வரலாறு என்ற ஒன்று நமக்குக் கற்றுக் கொடுத்தது என்னவென்றால்... மன்னிக்கவும்; அது என்ன கற்றுக் கொடுத்ததென்று நான் மறந்துவிட்டேன்.

இப்படியொரு பொற்கால ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேதான் அந்த பானம் அறிமுகமாகியிருந்தது. அந்தப் பானத்திற்கு நாடு நகரத்தில் இருந்த அனைத்து ஜீவ ராசிகளும் அடிமைப்பட்டுப் போயிருந்தன. மனிதர்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்த கோழிகளும் கூட அப்பானத்திற்கு அடிமையானதென்று தெரிகிறது. கோழியும் இதற்கு விதிவிலக்கல்ல. விதியில் நம்பிக்கை இல்லாதவர்களுக்காக இந்தவரி. கோழியும் இதற்கு அடிமையாகிவிட்டது. 

சில வாரங்களுக்குப் பிறகு கோழி அரசன் அலுவலக நேரத்திலே கூட சோமபானம் செய்யத் தொடங்கிவிட்டான். நாடு நகரமெல்லாம் இதே பேச்சாயிருந்தது. சோமபானத்திற்கு அடிமைப்பட்டிருந்த கோழியின் ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டாலும் மக்களும், கோழிகளும் சோமபானத்திற்கு அடிமையாக இருந்தபடியால் யாருக்கும் மன்னரை எதிர்த்துப் போரிட விருப்பமில்லை. இந்தச் சமயத்தில்தான் கடவுள் தான் படைத்த கோழியூர் அரசாட்சியைப் பார்வையிட தமது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார்.

அந்தச் சமயத்தில் ஆட்சியிலிருந்த கோழியானது அதிகப்படியாக சோமபானம் செய்ததால் அரியணையிலிருந்து மேலே எழ முடியாமல் மயங்கி விழுந்தது. ஆனால் இந்த இடத்தில் விழுந்தான் என்று சொல்வதே சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவைகள் அப்பொழுதெல்லாம் ஆறறிவு கொண்டு உயர்திணை உயிர்களாக வாழ்ந்துவந்தன.

கடவுளும் நேராக அரச தர்பாருக்கு வந்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைத்தன. ஆனால் அரசரோ சோமபானத்தால் மயங்கிக் கிடக்கிறார். இப்படியொரு அரசரைப் பார்த்தால் கடவுள் உடனே சிரச்சேதம் செய்யச் சொல்லிவிடுவாரே என்று பயந்த கோழி தமக்குப் பதிலாக சிறிது நேரம் யாரையேனும் அரியணையில் அமர்த்திவிட எத்தனித்தது. அந்த நேரம் பார்த்து அரசவையில் எந்த ஒரு கோழியும் இருக்கவில்லை. ஆனால் கடவுள் நெருங்கிவிட்டார். இந்தச் சமயத்தில்தான் அந்தப் புத்திசாலிக் கோழி ஒரு முட்டாள் தனத்தைச் செய்தது. ஆம்; அப்பொழுது தனது அடிமைகளில் இருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து, கடவுள் அரசவையிலிருந்து வெளியேறும் வரையில் அரியணையில் அமர்ந்து தன்னைப் போல் நடிக்குமாறு கூறி, தன் தலையில் இருந்த கிரீடத்தையும், சில கோழிப் பொங்குகளையும் அணிவித்துவிட்டு அரியணையிலிருந்து எழுந்து.., இல்லை விழுந்து வழிவிட்டு அருகில் இருந்த அறையில் சென்று ஒளிந்து கொண்டது.

கடவுளும் வந்தார். சிறிது நேரம் மனித அடிமையும் கோழியைப் போல நடித்தது. இறுதியில் கடவுள் விடைபெறும் தருணத்தில், நாட்டில் ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை ஒரு ஓலையில் எழுதித் தன்னிடம் கொடுக்கும்படிக் கேட்டுக்கொண்டார். அரசனாக நடித்துக் கொண்டிருந்த மனித அடிமையும் ஏற்கெனவே கோழி சொன்னதைப் போல ஒரு ஓலையினை எடுத்துக் குறைகள் எதுவுமில்லையென்று எழுதிக் கடவுளிடம் நீட்டினான். ஆனால் கையெழுத்து அழகாயிருந்தால் எங்கே தன்னை ஒரு மனிதன் என்று கண்டுபிடித்துவிடுவாரோ என்றஞ்சி கோழியின் கையெழுத்தைப் போல கிறுக்கிக் கிறுக்கி எழுதிக் கொடுத்தான்.

அதை வாங்கிப் பார்த்த கடவுள் ” என்ன கோழி கிறுக்கினாப்ல இருக்கு? “ என்றாராம். 

கோழியாக நடித்துக் கொண்டிருந்த மனித அடிமைக்குத் தூக்கிவாரிப்போட்டது. கடவுள் எப்படி தான் ஒரு கோழி அல்ல என்பதைக் கண்டுபிடித்தார் என்று யோசித்துக் கொண்டிருந்த போதே உள்ளே சோமபான மயக்கத்திலிருந்த கோழியானது ஓடோடி, பறந்தோடி, உருண்டோடி வந்து கடவுள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி “ மகா பிரபோ! என்னை மன்னித்தருளுங்கள்! சோமபான மயக்கத்தில் செய்யக்கூடாதது செய்தேன். என்னைக் காத்தருளுங்கள்” என்றவாறு கதறத் தொடங்கியது. அதன் கதறலில் அண்ட சராசரங்கள் நடுநடுங்கின. கேலக்சிகள் எனப்படும் பெருவெடிப்புகள் வெடித்தன. எரிமலைகள் வெடித்தன. தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த கொள்ளுப்பட்டாசுகள் வெடித்தன. 

சாந்தமே உருவான கடவுளுக்கு எல்லாம் விளங்கியது. அவர்தானே இந்தத் திருவிளையாடைலை நிகழ்த்தியது. சிவாஜியோ, தனுசோ இல்லாததால்தான் கடவுளே திருவிளையாடல் நிகழ்த்தினார் என்று நீங்கள் இப்பொழுது எண்ணினால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு நேரமில்லை. 

அதே சமயம் கடவுள் பெருங்கோபம் கொண்டெழுந்தார். கோழி எத்தனையோ பிரயாசைப்பட்டும் அவரின் கோபத்தை அடக்கமுடியவில்லை. இறுதியாக அவரின் சாபத்திற்கு ஆளானது கோழி. அவரின் சாபத்தினாலேதான் இப்பொழுது கோழிகள் மனிதனின் அடிமைகளாகவும், அல்லது வளர்ப்புப் பிராணிகளாகவும் வாழ்ந்துவருகின்றன. 

இந்த வரலாற்றினைச் சிலர் நம்ப மறுக்கின்றனர். ஆயினும் இதுவே உண்மை என்பதற்குச் சில உதாரணங்களை என்னால் சொல்லமுடியும்.

*.பண்டைய மன்னர்கள் தங்கள் தலைகளில் கோழிப் பொங்கினை வைத்துக் கொண்டிருப்பதைப் படங்களில் பார்த்திருப்பீர்கள். அந்த வழக்கம் இந்த நிகழ்வுக்குப் பிறகே வந்தது.

*.கோழிகளின் கால் விரல்கள் இப்பொழுதும் நமது கை விரல்களைப் போலவே, அதாவது நமது உள்ளங்கைகளைப் போலவே காணப்படுகின்றன.

*. கோழிகள் எதையாவது , எப்போதும் தனது கால்களால் கிளறிக் கொண்டே இருக்கின்றன. அதற்குக் காரணம் அவற்றின் மரபணுவில் பதிந்துள்ள எழுதும் கலையே.

*.பண்டைய காலத்துத் தலைவர்களும் கோழிப் பொங்கினை தலையில் சூடியிருப்பது போன்ற சித்திரங்களும், திரைப்படங்களும் இந்த வரலாற்றுக்கு வலுச் சேர்க்கின்றன.

வரலாறுகளை மறவாதீர். வரலாறுகளே நாம் கடந்து வந்த பாதையைக் காட்டுகின்றன. எனவே வரலாறுகளைப் படியுங்கள். படிக்க விருப்பமில்லாதவர்கள் இதுபோன்ற வரலாறுகளைக் கற்பனையாகவாவது படைத்து அடுத்தவரின் கண்களையும், நேரத்தையும் வீணடியுங்கள். நன்றி.

இந்த வரலாற்றின் நீதி : பணியின் போது சோமபானம் செய்வதைத் தவிர்ப்பீர்!

28 comments:

மாலுமி said...

/// இந்த வரலாற்றின் நீதி : பணியின் போது சோமபானம் செய்வதைத் தவிர்ப்பீர்!///

ங்கொய்யால........யாருகிட்ட ??? :)))

செல்வா said...

உங்ககிட்ட இல்லைணா :))))))

Prabu Krishna said...

ஆமா அது யாரு சோமா?

செல்வா said...

அது சோமா இல்லை. சோமபானம் :))

Madhavan Srinivasagopalan said...

// பல நூறு கோடியாண்டுகளுக்கு //

'ஸ்பெக்ட்ரம்' வந்த பின்பும் நூறிலேயே இருக்கிறாயே..
லட்சியத்திற்கு.. சாரி.. சாரி.. லட்சத்திற்கு எப்போது வருவாய்..?

பதிவின் நீதி : கோழி வலைப்பூவிலும் கிறுக்கும்..

நவின் குமார் said...

டிராவல்ஸ் ஆப் கலிவர்ல குதிரைங்களுக்கு மனுசங்க அடிமையா இருப்பாங்க ஒரு அத்தியாயத்தில் அது மாதிரி இருக்கு கோழிக்கு மனிதன் அடிமை.,...

நவின் குமார் said...

//கோழிவேந்தனும்// அண்ணே சோழர்கள பாரட்டுற பட்டங்களில் ஒண்ணு கோழிவேந்தர் அத காமெடியாக்கிட்டிங்க #கண்டனம்.....

நவின் குமார் said...

// சோமபானம்//எவ்ளோ யோசிச்சும் புரியல அது என்ன சோம பானம்?

செல்வா said...

// //கோழிவேந்தனும்// அண்ணே சோழர்கள பாரட்டுற பட்டங்களில் ஒண்ணு கோழிவேந்தர் அத காமெடியாக்கிட்டிங்க #கண்டனம்.....//

ஐயோ.. இது முன்னமே தெரியாம போச்சே. இப்போ மாத்திட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்..

வைகை said...

நல்ல வேளை..இந்த பதிவு கோழி கிறுக்குன மாதிரி இல்லை :-)

செல்வா said...

// டிராவல்ஸ் ஆப் கலிவர்ல குதிரைங்களுக்கு மனுசங்க அடிமையா இருப்பாங்க ஒரு அத்தியாயத்தில் அது மாதிரி இருக்கு கோழிக்கு மனிதன் அடிமை.,...//

உண்மையிலேயே இப்படியெல்லாம் கதை எழுதுறாங்களா ?

வைகை said...

ஆமா..அது யாரு கோழி? நம்ம விராட் கோழியா? :-)

செல்வா said...

// / சோமபானம்//எவ்ளோ யோசிச்சும் புரியல அது என்ன சோம பானம்?//

சரிதான். அது சோம பானம் தான். இம்சை அரசன் படத்துல சொல்லுவாங்களே. சோம பானம் னா ஆல்கஹால் :))

செல்வா said...

// 'ஸ்பெக்ட்ரம்' வந்த பின்பும் நூறிலேயே இருக்கிறாயே..
லட்சியத்திற்கு.. சாரி.. சாரி.. லட்சத்திற்கு எப்போது வருவாய்..?//

இல்லை. நான் இன்னும் சின்னப்பையன்கிறதால அப்படிணா :)))

செல்வா said...

// நல்ல வேளை..இந்த பதிவு கோழி கிறுக்குன மாதிரி இல்லை :-)//

ஏன்னா இதக் கிறுக்கினது கோழி இல்லை :))

நாய் நக்ஸ் said...

Ennaaaathu ithu...??????
Aduthu....palli...oonaan...
Kathai....sollunga.....

middleclassmadhavi said...

சிரிக்க வைத்ததற்கு நன்றி!! (நீதி வேற!!)

//சிவாஜியோ, தனுசோ இல்லாததால்தான் கடவுளே திருவிளையாடல் நிகழ்த்தினார் என்று நீங்கள் இப்பொழுது எண்ணினால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள். // :-))

முத்தரசு said...

கோமாளி கோழி கிறுக்கல் செய்துள்ளது.

முத்தரசு said...

கோமாளி....சோமபானம் ஓவரோ?

ஆர்வா said...

அட... அட... அட... என்ன கதை! என்ன மாரல்! செல்வா எங்கேயே போறீங்க...

நட்புடன்
கவிதை காதலன்

எஸ்.கே said...

அருமையான கதை:-) ஆள்மாறாட்டம் செய்வது கோழிகிட்ட கூட இருக்குது...

நவின் குமார் said...
This comment has been removed by the author.
நவின் குமார் said...

//ஐயோ.. இது முன்னமே தெரியாம போச்சே. இப்போ மாத்திட்டேன். தவறுக்கு மன்னிக்கவும்..// நன்னீஸ்.... பொன்னியின் செல்வன்ல வருமே....

சீரான்மல்கு தில்லைச் செம்பொன் அம்பலத்தாடி தன்னைக்
காரார் சோலைக்கோழி வேந்தன் தஞ்சையர்கோன் கலந்த
ஆராவின் சொற் கண்டராதித்தன் அருந்தமிழ் மாலை வல்லவர்
பேரா உலகிற் பெருமை யோடும் பேரின்ப மெய்துவரே!”
விஜயாலயனுக்குப் பிற்பட்ட சோழ மன்னர்கள் பழையாறையிலும் தஞ்சையிலும் வசித்தபோதிலும் பூர்வீகச் சோழத் தலைநகர் உறையூர் என்னும் பாத்தியதையை விட்டுவிடவில்லை. உறையூருக்கு இன்னொரு பெயர் கோழி என்பதாகும். ஆகையால் சோழ மன்னர்கள் தங்களைக் “கோழி வேந்தர்” என்று சொல்லிக் கொண்டார்கள்.

நவின் குமார் said...

//உண்மையிலேயே இப்படியெல்லாம் கதை எழுதுறாங்களா ?//

செம பிரபலமான நாவல் ஸ்கூல் புக்குல கூட வருது இப்போ....ஜோனதன் ஸ்விப்ட் எழுதினது....

His fourth voyage is to the land of the Houyhnhnms, who are horses endowed with reason. Their rational, clean, and simple society is contrasted with the filthiness and brutality of the Yahoos, beasts in human shape. Gulliver reluctantly comes to recognize their human vices. Gulliver stays with the Houyhnhnms for several years, becoming completely enamored with them to the point that he never wants to leave. When he is told that the time has come for him to leave the island, Gulliver faints from grief. Upon returning to England, Gulliver feels disgusted about other humans, including his own family.

நவின் குமார் said...

//சரிதான். அது சோம பானம் தான். இம்சை அரசன் படத்துல சொல்லுவாங்களே. சோம பானம் னா ஆல்கஹால் :))//

ஹிஹி சும்மா விளையாட்டுக்கு கேட்டேன் தமிழ் நாட்டுல பொறந்துட்டு சோம பானம் பத்தி தெரியாம இருக்குமா...

கோவை நேரம் said...

இந்த வாரம் என் விகடன் ..உங்களோட அறிமுகம்

கோவை நேரம் said...

வாழ்த்துகள் நண்பரே..என் விகடன் இடம் பெற்றமைக்கு ...

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

கோவை விகடனில் இடம் பெற்ற தரமான வலைப்பதிவரே வாழ்த்துக்கள் பல