Monday, September 19, 2011

நேர்த்திக் கடன்

இப்படியொரு வினோதமான வேண்டுதலை திட்டமலை முருகப்பெருமான் அவர் பிறந்ததிலிருந்து கண்டிருக்க மாட்டார். எங்களூருக்குப் பக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயம்தான் இந்த முருகன் கோவில். அதிக உயரம் என்றும் சொல்ல முடியாது, குட்டை என்றும் சொல்லிவிட முடியாது. அளவான 90 படிகள் மட்டுமே கொண்ட மலை. நெட்டை, குட்டை என்றதும் அடுத்து ஒல்லியா, குண்டா என்று கேட்காதீர்கள். ஒல்லியாக இருப்பதற்கு அது என்ன ஏணியா ?  அதெல்லாம் குண்டுதான். சுமார் 3 கி.மீ தூரத்துக்கு பரந்து விரிந்து கிடக்கிறது. ராமாயண காலத்தில் அனுமன் சிரஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்துக் கொண்டுபோனபோது சிதறி விழுந்த துண்டுதான் இந்த மலை என்று பேசிக்கொள்கிறார்கள். அது உண்மையா இல்லை யாரேனும் புழுகினிச்சித்தர் திரித்துவிட்ட கட்டுக்கதையா என்று தெரியவில்லை. ராமன், ராவணன், அனுமன் சண்டை ஒருபுறமிருக்க முருகன் எப்படி இதன் மேல் ஏறிச் சொந்தம் கொண்டாடுகிறார் என்று தெரியவில்லை. எப்படியோ நில அபகரிப்புப் புகார் எழாமல் இருந்தால் சரிதான்.

அனேகமாக இந்தக் கோவிலுக்கு முருகன் வந்தது திருவிளையாடல் நடந்த காலத்திலாகத்தான் இருக்க வேண்டும். திருவிளையாடல் என்றதும் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்த ஸ்ரேயாவைப் பற்றி கற்பனை செய்துகொண்டிருக்காதீர்கள். நான் சொல்லவந்த திருவிளையாடல் ஞானப்பழத்தால் பரமசிவன் குடும்பம் பிரிந்து முருகன் பழநிமலைக்குக் குடிவந்தாரல்லவா அந்தக் காலம். அப்பொழுதுதானே குன்றிருக்குமிடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்ற வரம் கொடுக்கப்பட்டது. உண்மையில் அப்படி ஒரு சண்டை அவர்கள் குடும்பத்தில் வராமலிருந்து இந்த மலையில் முருகன் எழுந்தருளாமல் இருந்திருந்தால் இப்பொழுது நான் இப்படிப் புலம்பியிருக்கத் தேவையிருந்திருக்காது. யார் கண்டார்கள்? இது இல்லாமலிருந்தால் என் விதி வேறு வழியில் விளையாடியிருக்கும். என் போன்ற இளிச்சவாயர்கள் வாழ்க்கையில் விளையாடுவதில் இந்த விதிக்கு அப்படி என்ன சந்தோசமோ தெரியவில்லை. இங்கிலாந்து சென்ற நமது இந்திய கிரிக்கெட் அணிக்குத் துணையாக விளையாடியிருந்தாலாவது ஏதோ ஒரு போட்டியிலாவது ஜெயித்திருப்பார்கள், முட்டாள் விதிக்கு அதெல்லாம் எங்கே தெரிகிறது?

எங்கள் ஊரில் எல்லோருக்குமே இந்தக் கோவிலின் மீது அளவுகடந்த பக்தி. நானும் பக்தியுடன்தான் இருந்திருப்பேன் என் வாழ்வில் அப்படியொரு சதி நடந்திருக்காவிட்டால்! அந்தக் கோவிலின் பேச்சை எடுத்தாலே கோபம் கோபமாக வருகிறது. முருகன் மீது மட்டுமல்ல அனுமார் மீதும் கோபம்தான். ஒரு வேலையைக் கொடுத்தால் ஒழுங்காகச் செய்யாமல் இப்படியா ஊரெல்லாம் ஒழுக விடுவது? இருந்தாலும் வாராவாரம் சனிக்கிழமை கிடைக்கும் ஆஞ்சனேயர் கோவில் பிரசாதம் அமிர்தமாக இருக்கும். அது என்னவோ தெரியவில்லை இந்தக் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம் போல் உலகமெங்கும் சுற்றினாலும் கிடைக்காது. சீச்சீ.. இதென்ன ? எதிரி வீட்டுச் சாப்பாட்டைப் புகழ்ந்து பேச ஆரம்பித்துவிட்டேன். முதலில் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும். சாப்பாடாம் பெரிய சாப்பாடு. இந்தக் கடவுளர்கள் செய்த துரோகத்துக்கு ஏழு ஜென்மம் உட்கார வைத்து உபசரித்தாலும் ஈடாகாது.

108 முறை மொட்டை அடிக்கவேண்டுமென்பது அவ்வளவு எளிதா என்ன? வருடம் ஒரு மொட்டை என்று கணக்கிட்டாலும் 108 வருடங்கள் ஆகிவிடுமே? வருடம் ஒரு முறை வரும் தை மாதத் தேர்த்திருவிழாவில் மட்டுமே மொட்டை அடிக்க வேண்டுமாம். ஒரு முறை மொட்டையடித்துவிட்டால் மீண்டும் பழைய நிலையை அடைய எப்படியும் 6 மாதம் பிடிக்கிறது.வருடம் இரண்டுமுறை மொட்டை அடித்தாலும் 54 வருடங்கள் ஆகுமே! 54 வயதுவரை மொட்டையாகவே வாழவேண்டுமா? அறிவியல் வளர்ந்தென்ன பயன்?மொட்டையடித்தவுடன் முடி வளர்ந்துவிடும் அளவுகூட நாம் இன்னும் முன்னேரவில்லையே ? இந்த லட்சணத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் எங்கே செவ்வாய்க்கெல்லாம் போகப்போகிறார்கள்?

பள்ளிப்பருவம் வரை எனக்கு இதொன்றும் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. என் நண்பர்கள் மட்டும் கிண்டல் செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் அழகழகான பட்டப்பெயர்கள். எனக்கு மட்டும் மொட்டத்தலையன் என்ற பெயரே எப்பொழுதும். இருந்தாலும் இதுவும் நன்றாகவே இருந்தது. ஒரே ஒருமுறை மட்டும் உள்ளூர்ப் பிரச்சினை காரணமாக இரண்டுவருடம் தேர்த்திருவிழாவை நிறுத்திவைத்துவிட்டார்கள். அப்பொழுதெல்லாம் மிக்க அவமானமாயிருந்தது. பெண்களைப் போல ஜடை போட்டுக்கொண்டு , ஐயையோ! அதை நினைக்கவே வெட்கமாயிருக்கிறது. சில சமயம் நண்பர்கள் அதில் பூவை வேறு வைத்துவிடுவார்கள். நான் ஆணா இல்லை பெண்ணா என்று ஆசிரியரே ஒரு முறை குழம்பிப்போனார். அந்தச் சமயத்திலெல்லாம் ஊர்த்தலைவரின் மீது கடுங்கோபமாக இருந்தேன். ஒருமுறை கல்லைக்கொண்டு அவரது மண்டையை உடைத்திருக்கிறேன். இப்பொழுதெல்லாம் வழக்கம்போல வருடா வருடம் திருவிழா நடக்கிறது. நானும் வருடாவருடம் மொட்டை அடித்துக்கொண்டுதானிருக்கிறேன்.

நாட்கள் மொட்டையாகவே நகர்ந்தன. மீசை அரும்பத் தொடங்கியிருந்த காலத்தில் இது மிகக் கஷ்டமென்றும் சாபமென்றும் எண்ணத் தொடங்கினேன். என் கஷ்டத்தைப் புரிந்துகொண்ட என் நண்பன் வசந்து ஒரு யோசனை சொன்னான். “ 108 மொட்டை நீ அடிக்கனும் , அவ்ளோதானே? பேசாம மலையடிவாரத்துல ஒரு சலூன் கடை ஆரம்பிச்சு மொட்டையடிப்பதற்கு இலவசம்னு போர்டு போட்டுட்டா எப்படியும் ஒரு வாரத்துல முடிச்சிடலாம்” என்றான். எனக்கும் இது நல்ல யோசனையாகவே பட்டது.

முருகக்கடவுளும் அவ்வளவு பெரிய அறிவாளியொன்றும் கிடையாது. போனவாரம் ராமசாமி மொட்டையடிப்பதாக வேண்டிக்கொண்டதை நம்பி அவனது வேண்டுதலை நிறைவேற்றியிருக்கிறார். போயும் போயும் முழுச்சொட்டையான அவனது வேண்டுதலை எப்படி நம்பினார். அவன் மொட்டையடிப்பதற்கு அவன் தலையில் அப்படி என்னதான் இருக்கிறது? கடவுள் இவ்வளவு முட்டாளாகவா இருப்பது? சரி எப்படியோ அவர் முட்டாளாக இருப்பது எனக்கும் நல்லதென்றே பட்டது.

ஒரு நல்ல நாளாகப் பார்த்து எங்கள் வீட்டில் இதைப்பற்றிச் சொன்னேன். பதறிப்போனார் எனது தாயார். “ மனுசன ஏமாத்தறதே தப்பு சாமி, இதுல சாமிய ஏமாத்துனா என்னாகுறது ? உனக்கு மொட்டையடிக்கிறதாதான் நேந்துக்கிட்டென், நீ மொட்டையடிக்கிறதா இல்ல!அப்படியேதும் குத்தம் நடந்தா அந்தக் கொறையப் போக்க மறுப்டி எத்தன மொட்டையடிக்கிறது?“ என்று புலம்பியழத்தொடங்கினார்.

அவளின் அழுகை கூட என்னைப் பாதிக்கவில்லை. ஒருவேளை இப்படி ஆரம்பித்து இது தெய்வகுத்தம் என்று சொல்லி மீண்டும் முதலிலிருந்து 108 மொட்டைகள் அடிக்கவேண்டுமென்று சொல்லிவிட்டால் ? நினைக்கும்போதே உடல் நடுங்குகிறது. பின் அந்த ஆசையைக் கைவிட்டுவிட்டேன்.

இந்த மொட்டையடிக்கும் வேண்டுதலில் கடவுளை மட்டும் திட்டிப் பயனில்லை. ஏன் கடவுளைத் திட்டுவதே தவறு. இதற்கெல்லாம் காரணம் என் அம்மாவும் அப்பாவுந்தான். மணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தையே இல்லையாம் இவர்களுக்கு. எத்தனையோ கோவில் குளமென்று சுற்றியும் பயனில்லையாம். மிக மனவருத்தமடைந்து தங்களுக்குக் குழந்தை பிறந்தால் இந்தக் கோவிலில் 108 மொட்டைகள் அடிக்கிறேன் என்று வேண்டிக்கொண்டார்களாம். அடுத்த பத்தாவது மாதத்தில் மொட்டையடிக்கச்சொல்லி தலையை நீட்டிகொண்டே நான் பிறந்துதொலைத்துவிட்டேன் போலும். என்ன அராஜகம் இது ? என் அனுமதியில்லாமல் இப்படியொரு வேண்டுதலா ? கடவுளின் பெயரை வைப்பது, மணி வாங்கிக்கொடுப்பது, படி கட்டுவதென்று வேண்டித் தொலைக்கவேண்டியதுதானே ?  அட இதை விடுங்கள். இவர்களுக்குத்தான் புத்தியில்லை.இந்தக் கடவுளுக்குமா புத்தியில்லை. 108 மொட்டையென்றதுமே பல்லை இளித்துக்கொண்டு என்னை இங்கே பிறப்பித்துவிட்டார் போலும். முடியாசை பிடித்த கடவுள்!

கல்லூரிக்குச் சென்ற பின்னர்தான் மொட்டையடிப்பதின் கொடுமையை முழுமையாக உணர்ந்தேன். எப்பொழுதும் மொட்டையாகவே இருப்பதால் ஏனோ வில்லன்களைப் பார்ப்பது போலவே என்னையும் பார்த்தனர். கருமம் பிடித்த திரைப்பட இயக்குனர்கள் வேறு வில்லன்களை மொட்டையாகவே காட்டித்தொலைக்கின்றனர். இப்பொழுது கொஞ்சம் பரவாயில்லை. பெரும்பாலான வில்லன்கள் ஜடையுடன் திரிகிறார்கள். இதுமட்டுமா இந்தக் கல்லூரிப் பையன்கள் வேறு விதவிதமாக கட்டிங் செய்வதும் கலரடிப்பதுமாக வெறுப்பேற்றுகின்றனர். நான் எங்கே கலரடிப்பது? அட இதைக் கூட விட்டுவிடலாம். இந்தக் கணக்கு விரிவுரையாளரெல்லாம் பாக்கெட்டில் சீப்புடன் திரிவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவருக்குத் தலையில் வெறும் நாற்பத்தியிரண்டே முடிகள் தான். தோரயக்கணக்கெல்லாம் இல்லை. துல்லியமான எண்ணிக்கைதான். இரண்டு நாடகளுக்கு முன்னர் எண்ணிவிட்டேன். இன்று ஒன்றிரண்டு குறைந்திருக்கலாம். பஸ் ஸ்டாண்டில் சீப்பு விற்கும் பையன் கூட என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதாகவே தோன்றுகிறது. எனக்கும் ஒரு நாள் முடிவளரும் என்று அவன் சட்டையைப் பிடித்துக் கத்தவேண்டும் போலத் தோன்றும்.

நான் பெற்ற இந்த அவமானங்கள் என் எதிரிக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது. என் குழந்தைகளுக்கு முழம் முழமாக முடிவளர்த்து அழகு பார்க்கவேண்டுமென்று தோன்றியது. அப்பொழுதுதான் பகீரென்று ஒரு பயம். ஒருவேளை என் வாழ்நாள் முழுவதும் கூடி இந்த 108 மொட்டைகளை அடிக்கமுடியாமல் போயிவிட்டால்? எனது மிச்ச மொட்டைகள் எனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளுக்குச் சென்றுவிட்டால் ? ஆண் குழந்தையென்றால் பரவாயில்லை. பெண் குழந்தையென்றால் நினைத்துப்பார்க்கவே கூசுகிறது. சொத்துச் சேர்த்து வைக்காவிட்டாலும் பரவாயில்லை மொட்டைகளையா சேர்த்துவைத்துவிட்டுப் போவது?

இந்த எண்ணம் வந்தவுடனே இதோ முருகனைப் பார்க்க ஓடோடி வந்துவிட்டேன். இன்று இந்த நேர்த்திக்கடனுக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும். இல்லையென்றால் என் சந்தததியே மொட்டையாக அலைய வேண்டியதுதான்.

இங்கே நிற்பவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேண்டுதல். ஒருவருக்கு வேலை வேண்டுமாம், இன்னொருவருக்கும் கல்யாணம் வேண்டுமாம், இன்னொருவருக்கு குழந்தை வேண்டுமாம். ஒரு வேலைவாய்ப்பு அலுவலகம் , ஒரு கல்யாண புரோக்கிங் அலுவலகம் என்று முருகனுக்குக் கீழ் கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ அலுவல்கள் நடந்துகொண்டிருக்கிறது. என் வயதுப் பையன்கள் எல்லோரும் ஒரு நல்ல காதலி வேண்டுமென்று வேண்டிக்கொண்டிருந்தார்கள். சிலர் அந்த வேலையை ஆரம்பித்தது போல எதிரில் நிற்கும் பெண்களை சைட் அடித்துக்கொண்டிருந்தனர். எனக்கு இதிலெல்லாம் ஆசையே இல்லை. என் சிந்தனை , செயல் லட்சியம் எல்லாமே இந்த மொட்டைகளை எப்படியாவது என் வாழ்க்கை முடிவதற்குள் அடித்து முடித்துவிடவேண்டுமென்பதே.

என் வேண்டுதல் உண்மையில் வினோதமானதுதான். எல்லோருமே தங்களுக்கு இது நடந்தால் இதைச் செய்கிறேன் என்றே வேண்டிக்கொண்டிருந்தனர். எனது வேண்டுதல்களெல்லாம் ஏற்கெனவே வேண்டிக்கொண்டதை திருப்பி வாங்கிக்கொள்ளச் சொல்லி வந்திருக்கிறேன். ஆம் 108 மொட்டைகள் என்ற நேர்த்திக்கடனிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லியே வந்திருக்கிறேன். இதற்கு எப்படி வேண்டுவதென்று தெரியவில்லை. இதற்கு என்னவென்று நேர்ந்துகொள்வது ? எல்லாவற்றிற்குமே நேர்ந்துகொண்டால்தான் வரம் கொடுத்துத் தொலைகிறார்கள் இந்தக் கடவுளர்கள். முதலில் வரம் கொடுக்கும் அதிகாரத்தை அவர்கள் கையில் இருந்து புடுங்கி ஏதேனும் பொது மனிதனிடம் கொடுக்கவேண்டும். வேண்டாம் வேண்டாம். அவர்கள் எல்லா வரத்தையும் எடுத்து சுவிஸ் வங்கிகளில் போட்டாலும் போட்டுத் தொலைத்துவிடுவார்கள்.

மொத்தத்தில் நான் இதுவரை 18 மொட்டைகளை அடித்துவிட்டேன். இதை வைத்துக்கொண்டு அந்த மிச்சமுள்ள 90 மொட்டைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுதல். இதற்கு பதிலாக நான் என்ன செய்வது ? காவடி எடுக்கலாமென்றால் ஒருவாரத்திற்கு பட்டினி இருக்கவேண்டுமாம். அது என்னால் முடியும் காரியமில்லை. சரி ஏதாச்சும் வேல் வாங்கிக் கொடுக்கலாமென்றால் உலோகப் பொருட்களின் விலை வேறு தாறுமாறாக ஏறிக்கொண்டுள்ளது. இந்தச் அரைக்காசு பெறாத வரத்திற்கு எதற்கு அத்தனை செலவு செய்யவேண்டும்.

ஆனால் முருகன் ஒன்றும் அவ்வளவு அறிவாளி இல்லையென்றாலும் முருகன் இப்போதுள்ள வேலைப்பளுவில் எனது வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாரா என்று தெரியவில்லை. அதனால்தான் இதோ இப்பொழுது முருகனிடமிருந்து அவரின் அண்ணன் விநாயகரிடம் வந்துவிட்டேன். இவரிடம் தான் எனது குறையை சொல்லி அந்தப் பிரச்சினையிலிருந்து விடுதலை பெற்றுத்தரச் சொல்ல வேண்டும். அண்ணனும் தம்பியுமென்றாலும் இவருக்கு யாருமே மொட்டையடிப்பதில்லை என்ற கவலை இல்லாமலா இருக்கும். அதனால்தான் இவரிடம் இப்படி வேண்டிக்கொள்ளப்போகிறேன். “ முருகனுக்கு அடிக்கிற 90 மொட்டைல இருந்து என்னைய காப்பாத்தினா அடுத்தவருச தேர்த்திருவிழாவுல உனக்கு ஒரு மொட்டை அடிச்சிக்கிறேன்” இப்பொழுது பாருங்கள் முருகனை எப்படியாவது இவர் ஏமாற்றித்தான் விடுவார். ஞானப்பழத்தைப் பெருவதற்காக இவர் செய்த தந்திரம்தான் நமக்கு முன்னரே தெரியுமல்லவா?


பின்குறிப்பு : இலக்கியத்தின் மீதுள்ள ஆசையால் எனது முதல் முயற்சி இது. குறையிருப்பின் தவறாமல் சுட்டுங்கள்.




35 comments:

rajamelaiyur said...

தொடரட்டும் ...

இம்சைஅரசன் பாபு.. said...

டேய் மொட்டை ...நான் சொன்னது சரியா தான் இருக்கு ...என் நாலு முடியையும் பிச்சுக்க வச்சிராதன்னு சொன்னேன் ...இப்ப செய்து விட்டாயே மொட்ட பயலே

கோம்பை சண்முகம் said...

கலக்குங்க செல்வா... நீங்கள் இருக்கும்வரை மொட்டைகளுக்கும், மொக்கைகளுக்கும் பஞ்சமே இருக்காது...தொடருங்கள்...

வெளங்காதவன்™ said...

நல்லா இருக்கு செல்வா!

இதே போல் தொடர வாழ்த்துக்கள்!

#தமிழ் மணம்?

வெளங்காதவன்™ said...

செல்வா உன்னோட இந்த லிங்க் அ என்னோட பேஸ்புக் வால்ல உன்னோட அனுமதி இல்லாம போட்டுட்டேன்...

கேசு போடுறேனா போட்டுக்கோ....

Unknown said...

நல்லாருக்குயா.. நடத்துங்க..

வைகை said...

நல்ல முயற்சி செல்வா... தொடந்து எழுது.. :))

வைகை said...

வர்ணிப்புகள் நல்லாயிருந்தது :))

Unknown said...

நீங்க வெங்கட் பிரபு மாதிரி செல்வா ............. ஒண்ணுமே இல்லாத மாதிரி தான் இருக்கு ....... ஆனா என்னமோ இருக்கு

jroldmonk said...

உங்களை நம்பினேன் பாருங்க நீங்க திருந்தவே மாட்டீங்க :-))) சிரித்தேன் மகிழ்ந்தேன் .

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எழுத்து நடை நன்றாக வந்திருக்கிறது. கதைக்கருவும் அருமை. பத்திரிக்கைகளுக்கு அனுப்பலாம்!

வெங்கட் said...

கதை நல்லா இருக்கு செல்வா..!!!
:)

ஒரு சின்ன Suggestion :

// நான் அடிக்க வேண்டிய மிச்சமிருகிற 90 மொட்டையையும்
உன் கணக்குல இருந்து கழிச்சிக்க. அதுக்குப் பரிகாரமா
இந்த வருசம் தேர்த்திருவிழாவுல ஒரு மொட்டை
அடிச்சிக்கிறேன்! “ //

இப்படி முருகன் கிட்ட வேண்டிகிட்டா அவரு
ஒத்துக்கறதுக்கு சான்ஸ் கம்மி..

அதனால அவரோட அண்ணன் விநாயகர்கிட்ட

" அப்பனே விநாயகா.. அந்த 90 மொட்டை அடிக்கிற
வேண்டுதல்ல இருந்து என்னை காப்பாத்து..
அதுக்குப் நேர்த்திகடனா இந்த வருசம் தேர்த்திருவிழாவுல
ஒரு மொட்டை அடிச்சிக்கிறேன்னு! “ வேண்டிகிட்டா..

அந்த மேட்டரை விநாயகர் டீல் பண்ணிட்டு போறாரு..

எப்புடி..?!

இப்படி தான் கேடித்தனமா யோசிக்கணும்..!!

நாய் நக்ஸ் said...

ஐயோ....
ஐயோ ....
ஐ ஐயோ .....

TERROR-PANDIYAN(VAS) said...

நல்லா இருக்குடா... எனக்கு பிடிச்சி இருக்கு.. :)

Madhavan Srinivasagopalan said...

அப்ப நீ மொக்கை செல்வா இல்ல.. மொட்டை செல்வா வா ? ஓகே... ஒகே..

Madhavan Srinivasagopalan said...

ரமேஷ்.. இப்படி வேண்டிகிட்டா உங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆக சான்ஸ் இருக்கு

ரமேஷ் சுப்புராஜ் போஸ்ட்..

மாணவன் said...

முதல் முயற்சி கதை நல்லாவே வந்துருக்கு செல்வா, இதுபோல இன்னும் தொடர்ந்து நிறைய முயற்சி செய்.... சிறந்த படைப்பாளியாக வர வாழ்த்துக்கள்!

HVL said...

சுவாரஸ்யமா இருந்ததுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மொட்டை மாடியில் உக்காந்து எழுதிய கதையா?

பாலா said...

உண்மை கதையான்னு தெரியல... ஆனா செம காமெடி. எங்க ஊர்ல இந்த மாதிரி நேர்த்தி கடன்கள் உண்டு. ஆனால் அவர்கள் ஒருமாதம், இருபது நாளைக்கு ஒருமுறை, முடி கொஞ்சம் அரும்பியவுடன் மொட்டை அடித்து விடுவார்கள்.

பெசொவி said...

I enjoyed each and every line.

Hats off, Selva!

Keep it up!

(but not on that mottaith thalai!)
:))

middleclassmadhavi said...

நல்லா காமெடியாக இருந்தது! :-))

Vinodhini said...

இந்த பதிவை நேற்று படித்தேன், இந்த நொடி வரை மனதை விட்டு அகலவே இல்லை, மொட்டை என்பது இந்த காலத்தில் நாகரிகமாக இருந்தாலும் கூட, விருப்பம் இல்லாமல் செய்யும் எந்த விஷயமும் நாம் நரகத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.. எப்போ தான் நம்ம மக்கள் முன்னேற போகிறார்களோ தெரியவில்லை, ஒரு தனிப்பட்ட நபரின் அனுமதி இல்லாமல் அவர் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தை செய்ய பெற்றோருக்கு கூட உரிமை இல்லை என்பதை எப்போது தான் புரிந்து கொள்வார்களோ...... (மக்கள் + கடவுள் உட்பட)
How can anyone pressure their own blood to do something against their will????

க.பாலாசி said...

நல்லாருக்குங்க செல்வா... எடுத்துகொண்ட விசயமும், அதற்காக சொல்லப்பட்டவைகளும் நகைச்சுவையுடன் சுவாரசியமாக இருந்தது..

செல்வா said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல :))

செல்வா said...

// பாலா said...
உண்மை கதையான்னு தெரியல... ஆனா செம காமெடி. எங்க ஊர்ல இந்த மாதிரி நேர்த்தி கடன்கள் உண்டு. //

உண்மைலாம் இல்லைங்க :) கற்பனைதான்!

செல்வா said...

//
கோம்பை சண்முகம் said.
மொட்டைகளுக்கும், மொக்கைகளுக்கும் பஞ்சமே இருக்காது...தொடருங்கள்...//

ரொம்ப நன்றிங்க :))

செல்வா said...

வெளங்காதவன் said...
செல்வா உன்னோட இந்த லிங்க் அ என்னோட பேஸ்புக் வால்ல உன்னோட அனுமதி இல்லாம போட்டுட்டேன்...///

சரினா :) என்னனு கேசு போடனும் ?

செல்வா said...

// trichy royal ranger said...
நீங்க வெங்கட் பிரபு மாதிரி செல்வா ............. ஒண்ணுமே இல்லாத மாதிரி தான் இருக்கு ....... ஆனா என்னமோ இருக்கு//

ஹா ஹா :) ரொம்ப நன்றிங்க!

செல்வா said...

@ வெங்கட் :

தல சூப்பர் ஐடியா :)

இருங்க மாத்துறேன்!

செல்வா said...

// Vinodhini said...
இந்த பதிவை நேற்று படித்தேன், இந்த நொடி வரை மனதை விட்டு அகலவே இல்லை, மொட்டை என்பது இந்த காலத்தில் நாகரிகமாக இருந்தாலும் கூட, விருப்பம் இல்லாமல் செய்யும் எந்த விஷயமும் நாம் நரகத்தில் இருப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும்.. //

ரொம்ப நன்றிங்க :) ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கண்டிப்பா விருப்பம் இல்லாமல் செய்கின்ற விசயங்கள் நிச்சயம் பாதிக்கும்!

செல்வா said...

// பெசொவி said...
I enjoyed each and every line.
//

ரொம்ப ரொம்ப நன்றினா :))

செல்வா said...

தலைவர் வெங்கட் அவர்களின் ஆலோசனைப்படி இப்படி இருந்த இக்கதையின் முடிவு மாற்றப்பட்டுள்ளது!


// இப்படி வேண்டிக்கொள்ளப்போகிறேன “ அய்யனே முருகா! நான் இதுவரைக்கும் 108 மொட்டைல 18 மொட்டை அடிச்சிட்டேன். என் நிலையையும் கொஞ்சம் நினைச்சுப் பாரு. உனக்கு மொட்டையடிக்க 1000 பேரு இருக்காங்க. எல்லா மொட்டையையும் என் தலைலயே அடிக்கனும்னா நான் தாங்குவேனா ? அதனால நான் அடிக்க வேண்டிய மிச்சமிருகிற 90 மொட்டையையும் உன் கணக்குல இருந்து கழிச்சிக்க. அதுக்குப் பரிகாரமா இந்த வருசம் தேர்த்திருவிழாவுல ஒரு மொட்டை அடிச்சிக்கிறேன்! “ இது எளிமையானதுதானே ? மொட்டைக்கு ஆசைப்படும் இந்த முருகன் இதையும் ஏற்றுக்கொள்வான் பாருங்களேன். அவனுக்கு கணக்கெல்லம் தெரியாது!
//

raja said...

ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு தாண்டா உன் ப்ளாக் படிச்சேன் ... சூப்பர் டா ...............................

ம.தி.சுதா said...

ஃஃஃஃமொட்டையடித்தவுடன் முடி வளர்ந்துவிடும் அளவுகூட நாம் இன்னும் முன்னேரவில்லையே ? இந்த லட்சணத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் எங்கே செவ்வாய்க்கெல்லாம் போகப்போகிறார்கள்?ஃஃஃஃ

அது சரிதாங்க எதையும் அழிக்கிறது இலக ஆக்குவத ரொம்ப சிரமமல்லவா...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்