Sunday, April 13, 2014

வங்கிகளும் ஏ.டி.எம் களும் தோன்றியது எப்படி? - வரலாற்றுத் தகவல்!

சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னர் என்றோ, இரண்டு யுகங்களுக்கு முன்னர் என்றோ ஆரம்பிப்பதற்கு இதொன்றும் கட்டுக்கதை இல்லை. வரலாறு என்றாலே சுமார் என்றுதான் ஆரம்பிக்க வேண்டுமென்று யாராவது சட்டம் போட்டிருக்கிறார்களா என்ன? அப்படிப் போட்டிருந்தால் போட்டுவிட்டுப் போகட்டுமே? நாம் என்றைக்குச் சட்டங்களைச் சட்டை செய்துள்ளோம்? துணியைச் சட்டை செய்வது தானே நமது வழக்கம்?

வரலாற்றுத் தகவல் என்றாலும் இது முற்றிலும் உண்மைக் கதை. வங்கிகளும், ஏ.டி.எம் செண்டர்களும் இல்லாத ஒரு நாட்டை உங்களால் கற்பனை செய்யமுடிகிறதா? முடிந்தால் கற்பனை செய்து பாருங்கள். சிரமம்தானே?

இன்றைய இயந்திர வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கங்களாக மாறிவரும் பேங்குகளும், ஏ.டி.எம்களும் முதன் முதலில் எங்கே எப்படித் தோன்றின என்று தெரியுமா? தெரியாதவர்கள் தொடர்ந்து படியுங்கள். தெரிந்தவர்களும் தொடர்ந்து படிக்கலாம். ஏனெனில் பேங்க்குகளும் ஏ.டி.எம்களும் உருவான வரலாறென்று நீங்கள் அறிந்திருப்பது அனைத்தும் கற்பனைக் கதைகள். இங்கே சொல்லியிருப்பவை மட்டுமே உண்மை.

கி.பி.1885 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 30 ஆம் நாள் நான், கமல் மற்றும் ரஜினி ( சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. கமல், ரஜினி என்ற பெயரில் உங்கள் சித்தப்பாவோ, பெரியப்பாவோ இருந்தால் இவை அவர்களைக் குறிப்பன அல்ல) ஆகிய மூவரின் தவத்தினை மெச்சி இறைவன் எங்கள் கண் முன்னால் தோன்றினார். ஒவ்வொருவரையும் நலம் விசாரித்துவிட்டு வேண்டும் வரங்களைக் கேட்கச் சொன்னார்.

முதலில் கமலின் முறை. “எனக்கு ஒளிமயமான எதிர்காலம் வேண்டும்” என்று கேட்டார். உடனேயே அங்கொரு குண்டு பல்பு தோன்றியது. கமலைக் காணவில்லை.

ஓரிரு நொடிகளுக்குப் பின்னர்தான் எனக்கு விபரீதம் புரிந்தது. கடவுளை நோக்கி “ யோவ், என்னய்யா பண்ணிவச்சிருக்க?” என்று பல்பைச் சுட்டிக் கேட்டேன்.

தனக்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த குண்டு பல்பைப் பார்த்த கடவுளுக்கும் அதிர்ச்சி. தவறிழைத்தவர் போல நாக்கைக் கடித்துக் கொண்டு “ மந்திரத்த மாத்திச் சொல்லிட்டேன் போல” என்று கூறி மீண்டும் வேறொரு மந்திரத்தை உச்சரித்தார். இப்பொழுது குண்டு பல்பு, சி.எப்.எல் பல்பாக மாறியிருந்தது. ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது “குண்டு பல்பு அதிகமா கரண்ட இழுக்கும்னு பேசிக்கிறாங்க” என்றார் கடவுள். கொஞ்சம் தலை சுற்றுவது போலிருந்ததால் நான் எதுவும் பேசவில்லை. 

அடுத்து ரஜினியின் முறை. தன்னிடம் எந்நேரமும் பணம் இருந்து கொண்டே இருக்க வேண்டுமென்று தனது வரத்தினைக் கேட்டார். உடனே எங்களைச் சுற்றிலும் சுவரும், ஒரு ஏ.டி.எம்.மெஷினும் தோன்றின. கடவுளுக்கும் சென்றாயனுக்கும் வித்தியாசம் இருக்க முடியாதென்று தோன்றியது. ஏ.டி.எம் மெஷினாக ரஜினி மாறியது குறித்து எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் கூடவே ஒரு குறும்புச் சிரிப்பும் ஏற்பட்டது. எவனோ ஒருவன் வந்து இந்த மெஷினில் இருக்கும் பணம் அத்தனையையும் எடுத்துவிடப் போகிறான், பிறகு அந்த மெஷினில் பணம் இல்லாமல் போய், கடவுளின் வரம் கேலிக்கூத்தாகப் போகிறதென்று நினைத்தேன். நான் நினைத்ததைக் கடவுளும் புரிந்து கொண்டிருப்பார் போலும். அவருக்கும் அதே குறும்புச் சிரிப்பு வந்தது. அதே சமயம் மண்டையோட்டுச் சின்னத்துடன் “மெஷின் ரிப்பேர், பணம் வராது” என்று எழுதப்பட்ட அட்டை எங்கிருந்தோ வந்து ஏ.டி.எம் மெஷினின் ஸ்கிரீனினை மூடியது.

இப்பொழுது கடவுள் என் பக்கமாகத் திரும்பினார். அடுத்த வரத்தினை நான் தான் கேட்டாக வேண்டும். ஏனெனில் என்னையும் கடவுளையும் தவிர அந்த அறையில் வேறு யாருமில்லை. என் நண்பர்களுக்கு நேர்ந்த கதியைக் கண்டு கதிகலங்கிப் போயிருந்த நானோ வரம் கேட்கும் ஆசையிலிருந்து முற்றிலும் மாறிப்போயிருந்தேன். கடவுள் இங்கிருந்து மறைந்தால் போதுமென்று தோன்றினாலும், எனது நண்பர்களுக்கு ஏற்பட்ட சோதனையை நினைத்துக் கண் கலங்கிக் கொண்டிருந்தேன்.

மீண்டும் தொண்டையைச் செருமியவாரே வேண்டும் வரத்தைக் கேட்கச் சொன்னார். ஏதோ பிளானிங்கில் இருப்பதாகவே தோன்றியது.

“இல்ல எனக்கு வரம் எதுவும் வேண்டாம்”

“நேரில் வந்துவிட்ட பிறகு வரம் கொடுக்காமல் போவது என் குல வழக்கத்திற்கு மாறானது. வேண்டும் வரத்தினைக் கேள் “

மேலும் மறுத்தால் கடவுள் கெட்ட வார்த்தைகளில் என்னை வசைபாடக் கூடுமோ என்ற அச்சத்தில் சிறிது யோசித்து “ அவுங்க ரண்டு பேருக்கும் கொடுத்த வரத்த திரும்ப எடுத்துட்டு அவுங்கள பழையபடி மாத்திடுங்க “ என்று எனது வரத்தினைக் கேட்டேன்.

கையோடு கொண்டுவந்திருந்த பில் (சைனா கம்பெனி) ஒன்றில் இருந்த “ ஒருமுறை விற்கப்பட்ட பொருள் திரும்ப ஏற்கப்படாது. வாங்கும் போதே பொருட்களைச் சோதனை செய்து வாங்கிச் செல்லவும்” என்பதைக் காட்டினார். எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். புரியாவிட்டாலும் ஒன்றும் பிரச்னையில்லை. இதை வைத்து டாக்டர் பட்டமா வாங்கப் போகிறீர்கள்?

எனக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. பின்னே, ஹோட்டலுக்குச் சென்று இட்லி இருக்குதா என்ற கேள்விக்கு தோசை, பூரி, புரோட்டா எல்லாம் இருக்குது சார். அதுவும் சாப்பிடற பொருள்தான் சார் என்றால் உங்களுக்குச் சிரிப்பா வரும் ? எனக்குக் கோபம்தான் வரும்.

கோபத்தைத் தாருமாறாகக் காட்டியிருக்கலாம்தான். ஆனால் என் நண்பர்களுக்காகப் பொறுமை காக்க வேண்டியிருந்தது. சிறிது நேர யோசனைக்குப் பின்னர் “அந்த மெஷின்ல இருக்கிற பணம் எனக்கு வேணும்” என்றேன். இப்படிக் கேட்டால் ரஜினியின் “எந்நேரமும் எங்கிட்ட பணம் இருந்துட்டே இருக்கனும்” என்பதற்காகக் கொடுக்கப்பட்ட வரம் ஓவர் ரூலாகி கடவுள் குழம்பிவிடுவார் என்று நினைத்தேன். அப்படி நேர்ந்தால் ஒருவேளை ரஜினியையும், கமலையும் அவர் பழைய நிலைக்கே மாற்றிவிடலாம் என்பது எனது எண்ணம்.

எனது நோக்கம் கடவுளுக்குப் புரிந்திருக்க வேண்டும்.  இந்தப் பத்தியிலிருந்து மேலாக எண்ணிக் கொண்டே போனால் சரியாக எட்டாவது பத்தியில் கடவுளுக்குத் தோன்றிய குறும்புச் சிரிப்பு இப்பொழுதும் தோன்றியது. உங்களுக்கு எட்டு ராசியான நம்பராக இல்லாவிட்டால் எண்ணிக்கையை ஒன்று என ஆரம்பிக்காமல் வேறு எண்ணில் ஆரம்பிக்கலாம்.

நான் கேட்ட வரத்தினை எனக்கு அளித்ததாகக் கூறிவிட்டுக் கையில் ஒரு ஏ.டி.எம்.கார்டினைக் கொடுத்து “இத வச்சு அந்த மெஷின்ல இருக்கிற பணத்த எடுத்துக்க” என்று கூறி அதிலிருந்து எப்படிப் பணமெடுப்பது என்பதையும் விளக்கிவிட்டு கிளம்புவதற்குத் தயாரானார்.

“ஒரு நிமிஷம் நில்லுங்க, நான் ஒருதடவ ட்ரையல் பார்த்துக்கறேன்” - மெஷினிலிருக்கும் எல்லாப் பணத்தையும் எடுத்துவிட்டு மீண்டும் கடவுளின் வரத்தை பொய்யாக்கும் எனது நோக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

நின்றார். 

அவர் கூறியபடியே ஏ.டி.எம்.கார்டினை மெஷினில் தேய்த்து எடுத்துவிட்டு, மெஷினில் மொத்தமாக எவ்வளவு பணம் இருக்கிறதென்று தெரிந்துகொண்டேன். ஏனெனில் அப்பொழுது வங்கிகள் எதுவும் இருக்கவில்லை என்பதால் மெஷினில் எவ்வளவு பணம் இருக்கிறதென்று பார்க்கும் நடைமுறை இருந்தது. இப்பொழுது அந்த வசதிதான் உங்கள் வங்கிக் கணக்கில் எத்தனை பணம் இருக்கிறதென்று பார்ப்பதற்காக மாற்றப்பட்டுள்ளது. அந்த மெஷினில் இருந்த அனைத்துப் பணத்தையும் எடுப்பதற்கான எனது எண்ட்ரியை அழுத்தினேன். உள்ளே “ச்சுர் ச்சுர் ச்சுர்” என்று சக்கரம் சுழல ஆரம்பித்தது. கடவுளுக்கு வயிற்றைக் கலக்கியிருக்க வேண்டும். அவரது முதல் வரம் தனது சாவினை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக எனக்குத் தோன்றியது.

அதுவரையிலும் குறும்புச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்த கடவுள் திடீரென ஏதோ ஒரு மந்திரத்தை உச்சரித்தார். அடுத்த கணமே மெஷின் தனது வேலையை நிறுத்திக் கொண்டு, பத்தாயிரம் ரூபாய் பணத்தினை மட்டும் வெளியே நீட்டியது. மறுமுறை நான் முயற்சித்த போது ” அடுத்த 24 மணி நேரத்திற்கு நீங்கள் பணம் எடுக்க முடியாது” என்ற சீட்டினைத் துப்பியது. நான் கடவுளைப் பார்த்தேன். அவர் எங்கள் ரூமுக்கு வெளியே புதிதாக முளைத்திருந்த வங்கிக் கிளையைப் பார்த்தார்.

”நான் கேட்டபடி எனக்கு அந்த மெஷின்ல இருக்கிற பணம் வேணும். நீங்க கொடுத்த வரம் என்னாச்சு?”

“உன் கைல இருக்கிற பணம் அந்த மெஷின்ல இருந்து வந்ததுதானே?”

“எனக்கு எல்லாப் பணமும் வேணும்”

“அத நீ பேங்க்ல தான் கேக்கணும். ஒரு நாளைக்கு இவ்ளோதான் எடுக்கனும்னு ரூல் வச்சிருப்பாங்க போல; எனக்கும் அவுங்களுக்கும் சம்பந்தம் இல்லை”

அவர் ஜெயித்துவிட்டதாகத் தோன்றியது. வெளியில் கிளம்பியவரிடம் கேட்பதற்கு மேலும் ஒரு கேள்வி பாக்கியிருந்தது.

“அது சரி, இப்போ நான் தினமும் வந்து பணத்த எடுத்துட்டுப் போயிட்டா கடைசில ஒரு நாள் இந்த மெஷின்ல இருக்கிற பணமெல்லாம் தீர்ந்திடுமே. அப்போ ரஜினிக்கு நீங்க கொடுத்த வரம் பொய்யாகாதா?”

“ அதுக்குத்தானே பேங்க்க உருவாக்கியிருக்கேன். இனி அவுங்க இந்த மெஷின்ல பணம் தீராம பார்த்துக்குவாங்க. இந்த மெஷின்ல தீர்ந்தாலும் இதே மாதிரி ஆயிரம் பேங்க்குகள், ஏ.டி.எம்னு ஜெராக்ஸ் எடுத்தாச்சு. அதனால அந்த வரத்துக்கு இனி சாவே கிடையாது. ” என்று கூறிவிட்டு மறைந்திருக்க வேண்டும். ஆனால் அன்று ஏனோ மறையவில்லை. நடந்தேதான் சென்றார்.

இப்படியாகத்தான் பேங்க்குகளும் ஏ.டி.எம்.களும் தோன்றின. எப்பொழுதேனும் நீங்கள் ஏ.டி.எம்.ற்குப் பணம் எடுப்பதற்காகச் சென்றால் என்னையும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரஜினி மற்றும் கமலையும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். அதுவே நீங்கள் எங்கள் தியாகத்திற்குச் செய்யும் நன்றிக்கடனாக அமையும்.

2 comments:

Madhavan Srinivasagopalan said...

superb selva.
fantastic comedy..

செல்வா said...

@மாதவன் : நன்றி நன்றி :)))