Thursday, June 17, 2010

இந்தப் பழம் புளிக்கும்.!

மாலை 5 மணி ஆகியிருந்தது. ரவியும் ராஜாவும் கல்லூரியிலிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தனர்.

"மச்சி , நீ பிரியாவ லவ் பண்ணறேன்ன, சொல்லிட்டியா" என்றான் ராஜா.

"இல்லடா, சரியான சந்தர்ப்பமே கிடைக்க மாட்டேங்குது.."

"டேய் , டேய் அங்க பார்ட , அவ தனியா வந்துட்டிருக்கா , இப்போ போய் சொல்டா.."

"ஆமாண்டா , இதுதான் சரியான சந்தர்ப்பம், இப்பவே சொல்றேன்.."


பிரியா கல்லூரியிலிருந்து தனியாக வந்துகொண்டிருந்தாள். ரவியும் அவள் பக்கமாக சென்று பேச்சுக்கொடுக்க ஆரம்பித்தான்.

"பிரியா , இன்னிக்கு லீவா .?"

"எதுக்கு (லூசு மாதிடி கேக்குறான். காலேஜ் முடிஞ்சு இப்பதான் வெளியே வரோம்)..?"

"ஓ. சாரி., நான் வேற என்னமோ கேக்கலாம்னு வந்தேன்., மாத்தி கேட்டுட்டேன்.(ரவியின் கை கால்கள் உதறல் எடுத்தன )

"என்ன கேக்கலாம்னு வந்தீங்க "

ரவிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

"சும்மா அடி ஸ்கேல் , அழி ரப்பர் இருக்குமான்னு கேக்க வந்தேன் ."

பிரியா மேலும் கீழும் பார்த்தாள். ரவிக்கு மேலும் பயம் அதிகரித்தது.

"இந்தாங்க, நாளைக்கு கொடுங்க " என்று எடுத்துக்கொடுத்துவிட்டு திரும்பிப்பார்க்காமல்   சென்றுவிட்டாள்.


தூரத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்த ராஜா சொல்லிவிட்டான் போலும் என்று நினைத்த படி இவன் வருவதை பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்ன மச்சி , சொல்லிட்டியா..?, கை காலெல்லாம் நடுங்குது , மிரட்டினாளா..?"

"மிரட்டிருந்தாலும் பரவால்லடா , எனக்கு அவ முகத்த பார்த்தாவே பயமா இருக்கு."

"அப்புறம் அவ்ளோ நேரம் என்னடா பேசுனீங்க, அவ என்னமோ உன்கிட்ட கொடுத்தமாதிரி இருந்தது..?"

"எனக்கு என்ன பேசுறதுனே தெரியல., அதான் அடி ஸ்கேல் , அழி ரப்பர் கேக்கவந்தேன் அப்படின்னு சமாளிச்சுட்டேன் ."

"த்து.. நீயெல்லாம் ..??"

"நான் என்னடா பண்ணுறது , அவள எப்படி இம்ப்ரெஸ் பண்ணுறதுனே தெரியலை .,"

"சரி நான் ஒண்ணு சொல்லறேன் , அவளுக்கு கவிதைனா ரொம்ப பிடிக்கும்னு கேள்விப்பட்டேன். பேசாம நாளைக்கு இந்த ஸ்கேல் குடுக்கும்போது அப்படியே ஒரு பேப்பர் ஒரு கவிதை எழுதி அந்த ஸ்கேல் ஓட சுத்தி கொடுத்திடு. அவ அந்த கவிதைய படிசுப்பார்த்து அவளுக்கு பிடிச்சிருந்தா ஒரு வேலை உன்னை பத்தி நல்ல எண்ணம் வர வாய்ப்பிருக்கு."

"தேங்க்ஸ் டா. ட்ரை பண்ணுறேன் "


 அன்று இரவு முழுவதும் ரவி தூங்கவே இல்லை . கண்முழித்து கவிதை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான். என்னதான் முயற்சித்தாலும் கவிதை வருவதாக தெரியவில்லை .இறுதியாக ஒரு வாரப்பத்திரிக்கையில் ஒரு கவிதை ஒன்று அவனை கவர்ந்தது. சரி இந்த கவிதைய ஆட்டயப் போட்டுட்டு போய் நம்ம கவிதைன்னு சொல்லிடலாம் என்று நினைத்து அதனை அப்படியே ஒரு காகிதத்தில் எழுதினான். அந்த காகிதத்தை ப்ரியாவின் ஸ்கேல் மீது சுற்றி எடுத்துக்கொண்டான். அவன் மனதுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு. சந்தோசமும் பயமும் மாறி மாறி வந்துகொண்டிருந்தது.
இந்த கவிதை நம்ம கவிதை இல்லன்னு கண்டுபிடிச்சிடுவாளோ..? என்று ஒரு புறமும் அவ எங்க இந்த கவிதைய படிச்சிருக்க போறா.. படிச்சிருக்க மாட்டா என்று மற்றொரு புறமும் சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன.

பிரியா வந்துகொண்டிருந்தாள். பக்கத்தில் தோழிகள் யாரும் இல்லை . இதுதான் சரியான சமயம் என்று ரவி ப்ரியாவை நோக்கி நடந்தான்.

"என்னங்க , ஸ்கேல்க்கு கவர் போட்டிருக்கீங்க."

"ஓ. சாரி பிரியா, ஒரு கவிதை எழுதினேன் , மறந்தாப்பல அப்படியே மடிச்சு
கொடுத்திட்டேன்" என்று பிடுங்குவது போல பிடுங்கிக்கொண்டான்.

"நீங்க கவிதை எல்லாம் எழுதுவீங்களா .. குடுங்க படிச்சிட்டு தரேன்"

"வேண்டாம் ப்ரியா., இது நல்ல இருக்காது பஸ்ல வரும்போது கிறுக்கியது.!"

"பரவால்ல குடுங்க." என்றாள்.

ராஜாவும் இதை எதிர்பார்த்துதானே வந்தான். அதனால் " சரி படிச்சுப் பார்."
அதனை படித்து கொண்டிருந்த ப்ரியாவின் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது.
முக மாற்றத்தை கண்ட ராஜாவை மீண்டும் பயம் தொற்றிக்கொண்டது. இது வரைக்கும் நல்லாத்தானே போச்சு என்ற வடிவேலு வசனம் நியாபகத்திற்கு வந்தது .

"இது நீங்க எழுதினதா." என்றாள் கோபமாக.

"(உண்மை தெரிஞ்சு போச்சா).. ஆ, ஆ , ஆமாம் ப்ரியா நானேதான் எழுதினேன். அதான் சொன்னேன்ல நல்லா இருக்காதுன்னு." சமாளித்தான்.

"இது நான் எழுதின கவிதை , போனவாரம் வார மலர்ல வந்திருந்தது. எதுக்கு போய் சொன்னீங்க."

"அது வந்து சாரி ப்ரியா , சும்மா தான் ..??.." இழுத்தான்..

"என்ன லவ் பண்ணுறீங்களா ..?"

"(ஆஹா . அவளே கேட்டுட்டா இனிமேல் தலையே போனாலும் பரவால்ல.). ஆமாம் ப்ரியா . நான் உன்ன மொதல்ல பார்த்தப்பவே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஆனா
உன்ன பார்க்கும் போதெல்லாம் பயமா இருந்ததால என்னால சொல்ல முடியல"

"அப்படின்னா ஒரு 2 கேள்வி இருக்கு அதுக்கு சரியா பதில் சொல்லிட்டிங்கன்னா நான் லவ் பண்ணுரதப் பத்தி யோசிக்கலாம்."

"(விட்ட இண்டர்வியூவ் வச்சிடுவா போலிருக்கு) சரி ப்ரியா, கேள் .! "

"இப்ப திடீர்னு எனக்கு காய்ச்சல் வந்திடுது . நீங்க என்ன பண்ணுவீங்க ..?"

"(அப்பிடியே டச் பண்ணற மாதிரி பதில் சொல்லணும் என்ன சொல்லலாம் ..? ) நானும் வெங்காயத்த எடுத்து என்னோட அக்குள்ல வச்சு எனக்கும் காய்ச்சல் வார மாதிரி செஞ்சிப்பேன்."

"ஓ , அப்படின்னா எனக்கு கால் ஒடஞ்சு போச்சுன்னா நீங்களும் கால ஓடசுக்குவீங்க அப்படித்தானே.?"

"(ஆள போட்டு தள்ளிடுவா போலேயே) உனக்கு அப்படியெல்லாம் ஆகாது ப்ரியா." வழிந்தான்.

"கேள்விக்கு பதில் , கால ஓடசுக்குவீங்களா மாட்டிங்களா ..?"

"(ஐயோ இவளே ஓடச்சுடுவா போலிருக்கு ) கண்டிப்பா ஒடச்சுக்குவேன்..!"

"அப்ப என்ன யாரு ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போவாங்க..? அறிவே கிடையாதா..?"

"இல்ல அதுவந்து .. வந்து .."

"சரி அடுத்த கேள்வி கேக்குறேன் .. நான் நடந்து போயிட்டிருக்கேன் , அப்ப அந்த வழில
ஒரு முள் கிடக்குது , நான் அத பாக்காம நடந்து போறேன் , நீங்க என்ன பண்ணுவீங்க ..?"

"(இந்த தடவ அறிவுப்பூர்வமா பதில் சொல்லணும்). நீ நடந்து போறது எனக்கு தெரியாதுல"

"என்ன கிண்டலா , நாம ரண்டு பேரும் தான் போயிட்டிருக்கோம்."

"அப்படினா நீ கால் வைக்கும் போது என்னோட கைய்ய அந்த முள் மேல வச்சு உன்ன காப்பாத்திடுவேன்.(இந்தத் தடவ மாட்டுவா)"

"ஏன் எனக்கு அறிவில்லையா , ஏழு கழுத வயசாச்சுல எனக்கு பாத்து போக தெரியாதா ..? நீங்க எத்தன நாள் என்கூட வருவீங்க .?"

"இப்பிடி கேட்டா நான் எப்டி பதில் சொல்ல முடியும் ..?"

"பதில் சொல்ல முடியாதுல அப்ப மறந்துடுங்க. அதவிட நீங்க இன்னும் பாரதி ராஜா காலத்துலேயே இருக்காதீங்க , சசிகுமார் காலத்துக்கு வாங்க " என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள் .


அவள் செல்வதற்கும் ரவி வருவதற்கும் சரியாக இருந்தது .

"மச்சி பிரியா கிட்ட என்னமோ பேசிட்டிருந்த சொல்லிட்டியா..? என்ன சொன்னா..?"
ராஜா நடந்தவற்றை விளக்கினான்.இவர்கள் பேசிகொண்டிருந்த போது சேகர் வந்து சேர்ந்தான்.

"யாரு அந்த B .Com செகண்ட் இயர் ப்ரியாவா...? என்றான் சேகர்
"ஆமாண்டா ."

"2 கேள்வி கேட்டிருப்பாளே,..?"

"ஆமா உனக்கு எப்பிடி தெரியும் ...?"

"அதான் நான் உனக்கு முன்னாடியே ஏமாந்துட்டேன்ல .."

"ஆமா நீ அந்த ரண்டு கேள்விக்கு என்ன பதில் சொன்ன...?

"முதல் கேள்விக்கு என்ன பதில் சொன்னேன்னு நியாபகம் இல்ல , ஆனா ரெண்டாவது கேள்விக்கு " முள்ள பார்த்தாலும் சொல்ல மாட்டேன் , ஏன்னா நான் எல்லா நேரத்திலும் உன்கூட வர முடியாதுல , உன் பாதைய நீதான் பார்த்து போகணும்." அப்படின்னு சொன்னேன் மாப்ள .."

" இததானே அவளும் எதிர்பார்க்கிறா , சூப்பர் னு சொன்னாளா ..?"

"க்கும்.. மண்ணாங்கட்டி, அவ என்ன சொன்ன தெரியுமா ..? " அப்படின்னா எதிர்ல கார் வந்தா கூட கண்டுக்க மாட்டிங்க , போனா போகட்டும்னு விட்டுருவீங்க .. அப்புறம் நீங்க என்கூட வந்து என்ன பயன். போங்க நீங்க இன்னும் வளரணும்." அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டா.."

"டேய் , என்னடா லூசா இருப்பா போல.. என்கிட்டே அப்படி சொன்னா, உன்கிட்ட இப்டி சொல்லிருக்கா.."

"சரி விடு மச்சி , இந்த பழம் புளிக்கும்னு விட்டறலாம்.." என்று பேசியவாறே மூவரும் வகுப்பறைக்குள் சென்று கொண்டிருந்தனர்.

3 comments:

வால்பையன் said...

யாருப்பா அந்த பிரியா, எனக்கு இண்ட்ரோ கொடுங்க நான் ட்ரை பண்ணி பாக்குறேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நேத்து வாலி படம் பார்த்தா எபக்டோ

சௌந்தர் said...

இது உங்க அனுபவம் தானே